தீவனப் பயிர்கள்... புல்வெட்டும் கருவி...

அத்தனைக்கும் உண்டு, மானியம்! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

திட்டம்

 

தமிழ்நாட்டில் கால்நடைகளைப் பெருக்கவும், பால் உற்பத்தியை அதிகப்படுத்தவும் 'தீவனப் பயிர்கள் அபிவிருத்தித் திட்டம்’ என்ற திட்டத்தை 2011-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறது, தமிழக அரசு. இது மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டத்துக்காக, ஆண்டுதோறும் தமிழக அளவில் சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து, நம்மிடம் விரிவாகப் பேசுகிறார், தஞ்சாவூர், கால்நடைப் பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தித் திட்ட உதவி இயக்குநர் டாக்டர். சவுந்திரபாண்டியன்.

''தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பெருக்கம் மற்றும் தீவனப்பயிர்கள் அபிவிருத்தி அலுவலகம், கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகம் என ஏதாவது ஒரு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், இதற்கான வழிகாட்டல்கள் கிடைக்கும்!

தீவன சாகுபடிக்கு மானியம்!

இறவை சாகுபடியில் அதிக விளைச்சல் தரக்கூடிய கோ-4 ரக புல், வேலிமசால், முயல்மசால் ஆகியவற்றைக் கலந்து சாகுபடி செய்ய, கால் ஏக்கருக்கு 2 ஆயிரத்து 590 ரூபாய் மானியம் உண்டு. இந்தத் தொகை முழுவதும் விவசாயிகளுக்கு ரொக்கமாகக் கிடைக்காது. உழவுக்காக 600 ரூபாய்; தொழுவுரத்துக்கு 700 ரூபாய்; மற்றச் செலவுகளுக்கு 200 ரூபாய் என மொத்தம்

1,500 ரூபாய் மட்டும்தான் ரொக்கமாகக் கிடைக்கும். கூடவே... 600 ரூபாய் மதிப்புள்ள தரமான கோ-4 ரக புல் கரணைகள், 250 ரூபாய் மதிப்புள்ள வேலிமசால் மற்றும் முயல்மசால் விதைகள்,

240 ரூபாய் மதிப்புள்ள ரசாயன உரங்கள் போன்றவற்றை வழங்குகிறோம். இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி, ஒரு ஏக்கர் வரையிலான நிலத்துக்குப் பயன் பெற முடியும். கால்நடை வளர்ப்பவர்கள், சொந்த நிலம் உள்ளவர்கள், குத்தகை நிலம் உள்ளவர்கள் அனைவரும் பயன் பெறத் தகுதியானவர்கள்.

மானாவாரியில் மக்காச்சோளம் மற்றும் தட்டைப்பயறு ஆகியவற்றைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள விதைகள், தொழுவுரத்துக்கு 350 ரூபாய் ரொக்கம், உழவு, விதைப்பு உள்ளிட்ட இதரச் செலவுகளுக்கு 800 ரூபாய் ரொக்கம், என, கால் ஏக்கருக்கு

1,350 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

தெளிப்பானுக்கு 100% மானியம்!

குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் அளவு நிலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தீவனப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் (25 ஆயிரம் ரூபாய்) இயந்திர நீர்த் தெளிப்பான் கருவி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் 75% மானியம் கிடைக்கிறது.

சிறு-குறு விவசாயிகள் வட்டாட்சியரிடம் சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். 25 ஆயிரம் விலையுள்ள புல் அறுக்கும் கருவிக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. இதைக்கொண்டு களையும் எடுக்கலாம். 4 மாடுகள் அல்லது 25 ஆடுகள் வைத்திருப்பதோடு, குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் தீவனப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெற முடியும்.

புல் நறுக்கும் கருவி!

கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்தால், அவற்றைக் கழிக்காமல் கால்நடைகள் சாப்பிட்டுவிடும். இப்படி கொடுப்பதால் சீக்கிரம் செரிமானமும் ஆகிவிடும். இதனால், தீவனம் வீணாவதைத் தவிர்க்க முடியும். இதற்காக 8 ஆயிரத்து

550 ரூபாய் மதிப்புள்ள கையால் இயக்கக்கூடிய புல் நறுக்கும் கருவிக்கும், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சக்தியில் இயங்கக்கூடிய புல் நறுக்கும் கருவிக்கும் 75% மானியம் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை விவசாயி பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 மாடுகள் வைத்திருப்பதோடு... தொடர்ச்சியாக தீவனப்பயிர் சாகுபடி செய்பவராகவும் இருக்க வேண்டும்'' என்று திட்டங்கள் பற்றி விரிவாகச் சொன்ன சவுந்திரபாண்டியன்... நிறைவாக,

தீவனங்களைச் சேமித்து வைக்க மானியம்!

''தீவனங்கள் அதிகமாகக் கிடைக்கும்போது அவற்றை வறட்சிக் காலங்களில் பயன்படுத்தும் வகையில் குழி வெட்டி சேமித்து வைக்கலாம். இதற்கு ஊறுகாய்ப்புல் தயாரித்தல் என்று பெயர். இதற்கும் குழி வெட்ட, தீவனம், வெல்லம், உப்பு நிரப்புதல் உள்ளிட்டச் செலவுகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதோடு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புல் நறுக்கும் கருவியும் 100% மானியத்தில் வழங்கப்படுகிறது. இதைப் பெறுவதற்கு, குறைந்தப்பட்சம் 4 கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். குறைந்தப்பட்சம் ஒரு ஏக்கரில் தீவனப்பயிர் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 டன் முதல் 5 டன் தீவனத்தை எப்போதும் உபரியாகக் கையிருப்பில் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும், மேலே சொன்ன திட்டங்கள் மூலமாக பயன்பெற்று, தங்களது பொருளாதார வளத்தையும், நாட்டின் பொருளாதார வளத்தையும் முன்னேற்ற முன் வரவேண்டும்'' என்று அழைப்பு வைத்தார்!

 தொடர்புக்கு,
சவுந்திரபாண்டியன்,
செல்போன்: 94431-84974.
முகமது செரீஃப், செல்போன்: 94881-24132
லூர்துசாமி, செல்போன்: 90424-63808


''100 சதவிகித மானியத்தில் நீர்த் தெளிப்பான்!''

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் முகமது செரீஃப் நம்மிடம் பேசியபோது, ''இந்த மருத்துவமனையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள்ல மட்டுமே, தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 19 விவசாயிகளுக்கு 75% மானியத்துலயும், 10 விவசாயிகளுக்கு 100% மானியத்துலயும் நீர்த் தெளிப்பான் கொடுத்திருக்கோம். இந்தத் திட்டத்தின் கீழ் 8 விவசாயிகள் 6 ஏக்கர்ல தீவனப்பயிர் செய்ய தொடங்கியிருக்காங்க. இங்க உள்ள மானாவாரி விவசாயிகள், 200 ஏக்கர்ல தீவனப்பயிர் சாகுபடி செய்யப் போறாங்க. 31 பேருக்கு புல் நறுக்கும் கருவியும்,  26 பேருக்கு புல் அறுவடை இயந்திரமும் தரப் போறோம். 2 விவசாயிகள் ஊறுகாய் புல் தயாரிப்புல இறங்கப் போறாங்க'' என்று வரிசையாக அடுக்கினார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய மாதாக்கோட்டை, லூர்துசாமி, ''நான் 4 பசுமாடு வளர்க்கறேன். முன்னயெல்லாம் வெளியிலதான் காசு கொடுத்துத் தீவனம் வாங்கிப் போட்டுக்கிட்டு இருந்தேன். கடந்த ஜனவரி மாசத்துல இருந்து தீவனப்பயிர் அபிவிருத்தித் திட்டம் மூலமா அரை ஏக்கர்ல நானே பசுந்தீவனத்தை சாகுபடி செய்ய ஆரம்பிச்சுட்டேன். 100% மானியத்துல நீர்த் தெளிப்பானும் வாங்கியிருக்கேன்'' என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!