பாலுமகேந்திரா... தமிழ் சினிமாவின் வீடு!

இயக்குநர் ராம்

எங்கள் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும். சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. 'வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கியபோது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் 'வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான்.

 

அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீடு மட்டுமல்ல... பல உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஜாம்பவான்கள், இயக்குநர்கள், மாபெரும் நடிகர்கள், நடிகைகளின் வீடு. மொத்தத்தில் அது தமிழ் சினிமாவின் வீடு.

அங்கே இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கலிங்க பாகவதர் மகன் வந்தபோது, தனது தந்தையின் போட்டோ ஹாலில் மாட்டியிருப்பதைப் பார்த்து கண் கலங்கினார். அந்த வீட்டுக்கு அணில்களும் பூனைக் குட்டிகளும் அனுதினமும் வரும். அவற்றுக்குத் தினமும் உணவு வைக்கும் அவர், 'இன்று முதல் இல்லை’ என்கிற செய்தியை அவற்றுக்கு யார் சொல்லுவார்? இனிமேல் என் மனம் கனக்கும்போது, யாரிடம்போய் நான் அழ முடியும்?

நான் இந்தியில் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷியிடம் வேலை பார்த்தேன். அதன்பின் தனியாகப் படத்தை டைரக்ஷன் செய்ய இறங்கினேன். நான் பாலுமகேந்திரா சாரின் கேமராவுக்கு அடிமை. அதனால் என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அவரை அணுகினேன். அப்போது 'அது ஒரு கனாக் காலம்’ படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். கவிஞர் நா.முத்துக்குமார் அறிமுகத்தோடு டைரக்டரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது என் கையில் சுத்தமாக பணமில்லை. முகத்தைக் கணித்து மனதைப் படிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. என் முகத்தைப் பார்த்தவுடன் ''சாப்பிட்டியா...?'' என்று அக்கறையாகக் கேட்டவர், உடனே தன் கையால் பிரெட்டும் சிக்கனும் வைத்து சாப்பிடக் கொடுத்தார். இன்னொரு நாள் அலுவலகத்துக்குப் போனேன். அப்போதும் என்னைக் கணித்தவர் உடனே தனது பர்ஸிலிருந்த 1,000 ரூபாயை எடுத்தார். 'இந்தா எனக்கு 500, உனக்கு 500 ஓகே-வா?’ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் சட்டைப் பையில் பணத்தைத் திணித்தார். நான் அவரது அன்பில் கரைந்து போனேன். அதன்பின், 'அது ஒரு கனாக் காலம்’ படத்தில் சில நாள் உதவியாளராக வேலை பார்த்தேன். பிறகு நான் 'கற்றது தமிழ்’ இயக்கும்வரை அவரோடுதான் இருந்தேன்.

இப்போது குடியிருக்கும் சாலிகிராமம் வீடுகூட அவராக விரும்பி வாங்கியது இல்லை. அவரிடம் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தவர் சண்டை போட்டுப் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த வீடு. சொந்த ஊரைவிட்டு ஓடிவந்து திரிந்த முருகன் என்பவரை அழைத்துவந்து வீட்டில் சோறு போட்டு கல்யாணம் செய்துவைத்து, இப்போது தனது தயாரிப்பு நிர்வாகி பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திக்கு தெரியாமல் திண்டாடிய பாஸ்கரன் என்பவரை வளர்த்து வந்தார்.          

'கோவையில் குடும்பத்தோடு என் மகள் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன். அதற்கு நீங்கள் வரவேண்டும்...’ என்று கேட்டேன். 'பேத்தி பிறந்தநாளுக்கு தாத்தா வராமல் இருப்பேனா...’ என்று உரிமையாகச் சொன்னதோடு, கோவைக்கும் தேடிவந்து என் உறவினர்கள் மத்தியில் எனக்கு சிறப்புத் தேடித் தந்தார். என் வீட்டுக்கு வந்தபோது என் மகளை அவரே தனது கேமராவால் குழந்தை மாதிரி விதவிதமாய் ரசித்து ரசித்து போட்டோ எடுத்துக் கொடுத்தார். அவர் எடுத்த போட்டோதான் இப்போதும் என் வீட்டை அலங்கரிக்கிறது.

கடந்த தி.மு.க ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம்  நடந்த முதல் நாள் இயக்குநருக்குக் கடுமையான காய்ச்சல். அதைப் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் யார் சொல்லியும் கேட்காமல் 3 மணி நேரம் நின்றார்.

கடந்த 11-ம் தேதி அன்று எப்போதும் போல் அலுவலகம் வந்திருக்கிறார். அன்று தன்னுடைய மாணவர்களோடு இணைந்து அவரது சினிமா பட்டறையில் அவர் இயக்கிய முதல் படமான 'அழியாத கோலங்கள்’ படம்தான் அவர் கண்கள் பார்த்த கடைசி படம். திரைப்படத்தைப் பார்த்து முடித்தவர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்பு இயல்புக்கு வந்தவர், தன் மாணவர்களிடம், ''சினிமா கலைஞன் சினிமாவில் தன்னுடைய பலம் உச்சத்தில் இருக்கும்போதே மரணித்துப் போக வேண்டும்'' என்று உருக்கமாகச் சொன்னார். 12-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கிறார். அதிகாலை 5 மணிக்கு அகிலா அம்மா எழுப்பியிருக்கிறார். சுயநினைவில்லாமல் இருந்த இயக்குநரைப் பார்த்துப் பதறிப்போய் வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார். டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் 13-ம் தேதி காலை 11-30 மணிக்கு உயிர்பிரிந்துவிட்டது.

சினிமாவை சுவாசித்த ஒரு திரைக் கலைஞனின் உடல் அவரது சினிமா பட்டறையிலேயே கிடத்தப்பட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு சினிமாவை நேசித்தார் என்பதற்குச் சான்று. தமிழ் சினிமாவுக்கு சினிமா மொழியை சொல்லிக் கொடுத்தவர் இன்று பேசா மௌனத்தோடு நிரந்தர உறக்கத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என் கண்களை மறைக்கிறது கண்ணீர் திரை.

படம்: ப.சரவணகுமார்  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick