Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழகிய மலையில்... வற்றாத கங்கை!


பெங்களூருவில் இருந்து சுமார் 66 கி.மீ. தொலைவில் உள்ளது கோலார் நகரம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அந்தர கங்கை. கோலார் பெட்டா, கோலார் மலை, சதஸ்ரிங்க பர்வதம் (நூறு முகடுகள் கொண்ட மலை) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது அந்தர கங்கை!

மலையடிவாரத்தில் இருந்து சுமார் 215 படிகளையும், அதன் பிறகு படிகள் இல்லாத மலைப் பாதையையும் கடந்து சென்றால், ஓங்கி உயர்ந்த மலையை அடையலாம். அங்கிருந்து மொத்த ஊரையும் பார்க்கும்போது ஏற்படுகிற பரவசத்துக்கு அளவே இல்லை.

மலையில் சதுர வடிவக் குளம் ஒன்று உள்ளது. குளக்கரையில் சிறியதொரு மாடம். அந்த மாடத்தில் உள்ள சுவரில் அழகிய சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அது, அழகிய கருங்கல் நந்தி. அந்த நந்தியின் வாயில் இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. வருடம் முழுவதும் வற்றாத ஜீவ ஊற்று இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்! இந்த சுனை நீர், எங்கிருந்து உற்பத்தியாகி, எந்த வழியாக வந்து, நந்தியின் வாயில் இருந்து வந்துகொண்டே இருக்கிறது என்பது எவருக்கும் தெரியவில்லை.

சுரபி எனும் தெய்வப் பசுவுக்காக மன்னன் கார்த்தவீர்யனுடன் ஸ்ரீபரசுராமர் சண்டையிட்ட சம்பவத்துடன் தொடர்பு கொண்ட இடம் இது என்று சொல்கிறார்கள்.

வற்றாத இந்தப் புனித நீர், கங்கைக்கு நிகரானது என்றும், இதில் நீராடினால் பெரும் புண்ணியம் என்பதும் இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.  மலையடிவாரத்தில் உள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள், கேன்களிலும் குடங்களிலும் தினமும் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.

அந்தர கங்கையின் கரையோரத்தில் அழகிய சிவலிங்கத்தின் சந்நிதி உள்ளது. புனித நீரில் நீராடி, சிவனாரைத் தொழுதால் எந்தக் கவலையும் விலகிவிடும் என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர், பக்தர்கள்.

அந்தர கங்கையைத் தரிசிக்க படிகளில் ஏறிச் செல்லும்போது, கவனமாகச் செல்ல வேண்டும். அங்கே, குரங்குகளின் தொல்லை அதிகம். வெறுங்கையை வீசிக்கொண்டு மலையேறினால், குரங்குகள் நம் அருகில் வரவே வராது.

அடிவாரத்தில் வெள்ளரி, பொரி, வாழைப்பழம் மற்றும் கோன் ஐஸ் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. காபி- டீ போன்ற சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள், கோலார் நகருக்கு வந்தால்தான் கிடைக்கும்.  

கோலார், கூடுமலை, முல்பாகல் ஆகிய தலங்களுக்குச் செல்லும்போது, அப்படியே அந்தர கங்காவுக்கும் சென்று நீராடி, சிவனாரை வணங்குங்கள்; சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வீர்கள்!

படங்கள்: ச.வெங்கடேசன்

கங்கையும் கங்காதரனும்!

'’இந்த கங்கை, மலை உச்சியில் எங்கோ பாறைக்கடியில் உள்ள சுனையில் ஊற்றாக உற்பத்தியாகி, மலைக்குள்ளாகவே பாதை அமைத்துக்கொண்டு கீழிறங்கி வந்து, நந்தி அருகே உள்ள துவாரம் வழியா வெளிப்படுது. காலம் காலமா இது அந்தர கங்காவாகப் பிரவகித்தாலும், இதன் 'மூலம்’ எது என்று யாராலும் இன்னும் கண்டறியப்படவில்லை!

இந்த சுத்தமான ஜலத்துக்கு சகல வியாதிகளையும் குணப்படுத்தும் மகிமை உண்டு. மலையடிவாரத்து மக்கள் இந்த கங்கா தீர்த்தத்தை எடுத்துச் சென்று, குடிநீரா பயன்படுத்தறாங்க.

இங்கே இருக்கும் சிவன் ரொம்பச் சக்தி வாய்ந்தவர். கங்கையைத் தலையிலே சூடிக்கொண்டிருப்பவர் அல்லவா சிவபெருமான்? இவரைத் தொழுதால், பிணிகள் யாவும் நீங்கும்; வற்றாத கங்கையைப் போல செல்வம் எப்போதும் பெருகிக் கொண்டே இருக்கும்; குடும்ப வாழ்க்கை குதூகலமாகச் செழித்து ஓங்குவது நிச்சயம்!'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் அந்தர கங்கா ஆலயத்தின் அர்ச்சகர் சந்திரசேகரன்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கோவிந்தபுர கன்றுக்குட்டி!
ஆலயம் தேடுவோம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close