Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மந்திரி தந்திரி ! - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், சுரேஷ்

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

துரை செல்லூரின் மிகக் குறுகிய சந்துக்குள் இருக்கிறது அந்த வீடு. எப்போதும் அந்த வீட்டுக்குள் இருந்து வெளிவரும் புகை மண்டலம், காற்று மண்டலத்தோடு கலந்தபடியே இருக்கும். அதோடு உச்சஸ்தாயியில் மந்திர உச்சாடனங்களும் ஒலிக்கும். இது அந்த ஏரியாவாசிகளுக்குப் பழகி அலுத்துப்போன காட்சி என்பதால், சின்ன முணுமுணுப்போடு கடந்து செல்வார்கள். 

குட்டி கார்கூட நுழைய முடியாத அந்தக் குறுகிய தெருவில் அப்படி யாக வேள்விகளும் புகை மண்டலமுமாக இருக்கும் வீடு, தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்             கே.ராஜூவுடையது. வீட்டில் அடிக்கடி அக்னிக் குண்டம் வளர்த்து பூஜைகள் நடக்கும். பூஜை முடிந்த பிறகு அக்னிக் குண்டத்தில் இருக்கும் சாம்பலை, ஒரு சிறு புட்டியில் நிரப்பித் தருவார்கள். கார்டனுக்குள் நுழையும்போதோ, கோட்டைக்குக் கிளம்பும்போதோ அந்தச் சாம்பலில் ஒரு சிட்டிகை எடுத்து, மையாகக் கரைத்து, தலையில் தடவிக்கொள்வார் ராஜூ. அந்த மகி'மை’தான் தன் அரசியல் வளர்ச்சிக்குக் காரணம் என்பது மாண்புமிகு அமைச்சரின் மனதில் இருக்கும் நினைப்பு!

பழக்கடை டு அமைச்சரவை!

மதுரை யானைக்கல் ஏரியாவில் சாலை ஓரத்தில் பழக்கடை வைத்திருந்தவர்கள் ராஜூவின் பெற்றோர். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.எஸ்சி படிக்கும்போது மாலை நேரத்தில் பழக்கடை வியாபாரத்தில் பரபரப்பாக இருப்பார் ராஜூ. வருமானத்துக்காக துணிக்கடையில் வேலைபார்த்த அனுபவமும் உண்டு. பழ மார்க்கெட் பிஸ்தாவான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் 'பழக்கடை’ பாண்டியின் அறிமுகம் கிடைத்தது ராஜூவுக்கு. கொஞ்சமும் தாமதிக்காமல் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகி கட்சிக் கூட்டங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கினார். ராஜூவை கணக்குப்பிள்ளையாகவும் நம்பகமான ஆளாகவும் வைத்துக்கொண்டார் 'பழக்கடை’ பாண்டி. அந்த நம்பகத்தன்மை, செல்லூர் வட்டச் செயலாளர் பதவியை ராஜூவுக்குப் பரிசளித்தது. அவரின் அடுத்தடுத்த அரசியல் பதவிகளுக்கு அதுதான் தாயம்.

அதுவரை சைக்கிளில் வலம் வந்துகொண்டிருந்த ராஜூ, செகண்ட்ஹேண்டு லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார். லோக்கல் அரசியலில் அதிகாரப் பரிமாற்றங்கள் நிகழ, மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பாவோடு ஒட்டிக்கொண்டார். அவரின் கார் கதவைத் திறந்துவிடுவது தொடங்கி, அத்தனை வேலைகளையும் செய்தார். அந்த விசுவாசம், மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ராஜூவுக்கு வழங்கியது. பழக்கடையில் இருந்து அந்த இடத்துக்கு வந்ததையே ராஜூவால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், ராஜூவிடம் வசீகரப் பேச்சு கிடையாது; பொருளாதார வசதி கிடையாது; அரசியல் குடும்பப் பாரம்பர்யப் பின்னணி கிடையாது. இப்படி ஏகப்பட்ட 'கிடையாது’கள். ஆனால், அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற வெறி மட்டும் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்தது.  

ஆனாலும் அரசியலில் ஒருகட்டத்துக்கு மேல் வளர்ச்சி இல்லாமல் தேக்கம் உண்டானது. அப்போது 'மன்னார்குடி லாபி’ கை கொடுத்தது. ஏதேதோ செய்து டி.டி.வி தினகரனின் மனதில் இடம்பிடித்தார். தன் உறவினர் ஒருவர் மூலமும் 'மன்னார்குடி மக்களிடம்’ நல்ல பெயர் வாங்கினார். அதே சமயம் பொருளாதாரரீதியாகவும் தன்னை வளப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார். மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்பு வைக்கும் இடம் குத்தகை, கோரிப்பாளையத்தில்  மதுக்கடை, ஜி.ஹெச் அருகே மெடிக்கல் ஷாப், மணல் வியாபாரம் என, பல கிளைகளில் விரிந்தது ராஜூவின் வியாபாரம். அதில் வந்த லாபத்தை அரசியல் நண்பர்களான தங்கம், அவனியாபுரம் ராஜா ஆகியோர் மூலம் ஃபைனான்ஸில்விட்டுப் பெருக்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனுடன் நெருக்கமானபோது, பகுதிச் செயலாளர் பதவி கிடைத்தது. பின்னர் 'மன்னார்குடி’ ரூட் மூலம் கட்சியின் சீனியர்களை ஒதுக்கிவிட்டு மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்தார். அதோடு கடந்த சட்டசபைத் தேர்தலில் ஸீட் கிடைத்து வெற்றியும் பெற, 'மன்னார்குடி ரூட்’ மூலமே மந்திரியும் ஆனார். ஆனால், அமைச்சரான கொஞ்ச நாளிலேயே ராஜூவின் நடவடிக்கை பிடிக்காமல் மா.செ பொறுப்பில் இருந்து அவரை நீக்கினார் ஜெயலலிதா. அதுவும் கொஞ்சம் நாட்கள்தான். ஏதேதோ தாஜா செய்து மீண்டும் மா.செ போஸ்டிங் வாங்கிவிட்டார்.

அதே சமயம் தன் வளர்ச்சிக்கு அரசியல் வியூகங்களை மட்டும் நம்பாமல், மந்திர தந்திரங்களையும் கையில் எடுத்தார் ராஜூ. காரணம், இவருடைய மனைவியின் பூர்வீகம், கேரளா. அதனால் யாகங்கள், பூஜைகள்... என கேரளத் தாந்திரீகர்கள் மதுரையில் ராஜூ வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடித்தார்கள்!

வாயில் சனி!

செல்லூர் ராஜூவின் மிக முக்கியமான மைனஸ்... அவருடைய வாய்தான். யாராக இருந்தாலும் வார்த்தைகளில் வறுத்தெடுத்துவிடுவார். எவரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவது அவருடைய இம்சை இயல்பு. அமைச்சரான பிறகு கட்சியின் சீனியர்களையே 'வாயா... போயா...’ என அதட்டத் தொடங்கினார். 'காளிமுத்து அண்ணன், சேடப்பட்டி, பரமசிவம் மாதிரி பண்பட்ட ஆட்களோடு அரசியல் செஞ்சுட்டு, இப்போ இவர்கூட வேலைபார்க்க வேண்டியிருக்கே...’ என நொந்துகொள்கிறார்கள் லோக்கல் புள்ளிகள். அரசாங்க நிகழ்ச்சிக்கோ விழாவுக்கோ அமைச்சர் வந்தால், பஞ்சாயத்து நியூஸ் நிச்சயம்!

அரசு விழா ஒன்றில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் வந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர் ஏக குஷியில், 'வி.ஏ.ஓ-வைப் பார்த்தா ஆர்.ஐ-யைப் பார்க்க முடியாது, ஆர்.ஐ-யைப் பார்க்கப்போனால் வி.ஏ.ஓ-வைப் பார்க்க முடியாது. இதைத்தான் கல்லைக் கண்டா நாயைக் காணோம்... நாயைக் கண்டா கல்லைக் காணோம்னு சொல்வாங்க. ஆனா, இங்கே இப்போ எல்லாரும் வந்திருக்கீங்க... சந்தோஷமா இருக்கு’ என வார்த்தைகளைவிட, வருவாய்த் துறை சங்கத்தினர் பொங்கிப் பொருமிவிட்டனர். அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதிக்க, கலெக்டர் மூலம் மன்னிப்புக் கேட்டு விஷயத்தை அமுக்கினார் ராஜூ.

இன்னொரு சம்பவம், அதைவிடக் களேபரம். மகளிர் அணிக் கூட்டம் ஒன்றில் பேசியபோது, 'அம்மாவின் சாதனைகளை இவ்வளவு சொல்றேன். யாரும் கை தட்ட மாட்டேங்கிறீங்க. என்ன மகளிர் அணி நீங்க..? விசில் அடிக்கப் பழகிக்கங்க’ என்றார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதன்பிறகு, 'நாளைக்கு கோயில்ல அம்மாவுக்காக பால் காவடி எடுக்கிறோம். எல்லோரும் சுத்தபத்தமா வந்திருங்க’ என அழுத்தமாகச் சொல்ல, அரங்கிலேயே அமைச்சரைத் திட்டித்தீர்த்தன பல உதடுகள்.

ராஜூவின் பேச்சு, மாவட்ட எல்லை தாண்டியும் பயங்கரவாதத்தைப் பற்றவைத்திருக்கிறது. மதுரையில் நடந்த அரசு விளையாட்டு விழாவில், பரமக்குடி அணி கோப்பையைக் கைப்பற்றியது. பரிசளிப்பு விழாவில் பேசிய ராஜூ, 'நாம குடிச்ச வைகைத் தண்ணியோட மிச்சத் தண்ணியைத்தான் பரமக்குடிக்காரங்க குடிக்கிறாங்க. மிச்சத் தண்ணி குடிச்சவங்க இன்னைக்கு கப் வாங்கியிருக்காங்க. மதுரைக்காரங்க என்ன பண்றீங்க?’ என உற்சாகப்படுத்துகிறேன் பேர்வழியில் என உளற, கொதித்துவிட்டார்கள் ராமநாதபுரத்து மக்கள். ராஜூவின் உருவபொம்மை எரிக்க முடிவு செய்தவர்களிடம், உள்ளூர் பிரமுகர்களை வைத்து பஞ்சாயத்துப் பேசி அமைதியாக்கினார்கள். இதனால் ராஜூ கலந்துகொள்ளும் எந்த விழாவுக்கும் 'வம்பு கன்ஃபார்ம்’ மனநிலையிலேயே வருவார்கள் ர.ர-க்கள்!

துறையில் சாதித்தது என்ன?

கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் ஆகிய துறைகள் செல்லூர் ராஜூ வசம். இதில் கூட்டுறவுத் துறைதான் இவரின் அடையாளம். ஆனால், அந்தத் துறையில் அவருடைய சாதனை எனச் சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. அக்கப்போர், குளறுபடி முறைகேடுகள் அரங்கேறாத நாளே இல்லை எனலாம்.

கூட்டுறவுச் சங்கங்களின் 3,589 உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் மோசடி மேளாவே நடந்தது. 'உதவியாளர் பணியிடம்’ என அறிவித்துவிட்டு, ஒரே வேலைக்கு 17 விதமான சம்பளம் நிர்ணயித்தார்கள். அதிக சம்பளப் பதவிக்கான போஸ்ட்டிங் பெற கரன்சி ஏகமாகக் கை மாறியது. ஆனால், அது தொடர்பான புகார்களை அமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அதில் 10 கோடி ரூபாய் பாக்கியை இன்னும் அ.தி.மு.க அரசு வழங்கவில்லை. கூட்டுறவுச் சங்கங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளைபோவதைத் தடுக்க, உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை ஒழுங்காக வழங்கப்படவில்லை. அங்கு வரும் பொருட்களின் அளவும் பெரும்பாலும் குறைந்தே இருக்கும். அதாவது, ஏற்கெனவே திருடப்பட்ட நிலையில்தான் பொருட்கள் கடைகளுக்கு வந்து இறங்கும். ஆனால், 'பொருட்களின் அளவு குறைகிறது’ என நியாயவிலைக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். காரணம், அத்தியாவசியப் பொருட்களின் இழப்பு மற்றும் முறைகேடுகளால், அரசுக்கு ஏற்படும் இழப்பை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைப் பணியாளர்களிடமே வசூலிக்க வேண்டும் என்ற அரசாணை. அது பல நியாயவிலைக் கடை ஊழியர்களை மரண வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனெனில், விதிக்கப்படும் அபாரதம், பொருட்களின் மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்த நெருக்கடி காரணமாக வண்ணாரப்பேட்டையில் இளங்கோ, திருவாரூரில் சாமிநாதன் என நியாயவிலைக் கடை ஊழியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் கோயில் கோயிலாகக் காவடி தூக்கிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜூ.

உள்ளூரின் உள்குத்துப் பஞ்சாயத்து!

அமைச்சர் செயல்பாட்டில்தான் டம்மியே தவிர, லோக்கல் பாலிட்டிக்ஸில் ராஜூ கில்லி. மதுரையில் பல்லாண்டு சீனியர்கள் மேயர் ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே.ஜக்கையன், ஏ.கே.போஸ், ராஜாங்கம்... என எவருக்கும் கார்டனின் நல்லாசி கிடைக்கவிடாமல் காய் நகர்த்திவருகிறார். 'எதிரிக்கு எதிரி நண்பன்’ என இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால்கூட, ராஜூவை அசைக்க முடியவில்லை. ஆனாலும், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் எம்.பி முத்துமணி, பகுதிச் செயலாளர் சாலைமுத்து... என ஒரு பெரும்பட்டாளமே ராஜூவுக்கு எதிராக, கண்ணிவைத்துக் காத்திருக்கிறது.

அவை எதிலும் இப்போதைக்கு சிக்காமல் தாவித் தாவி சமாளித்துக்கொண்டிருக்கிறார் செல்லூரார்! 

அழகிரி, ஸ்டாலின்... இருவருமே ஃப்ரெண்ட்ஸா?

அ.தி.மு.க புள்ளிகள் அழகிரியைத் திட்டாமல் மதுரையில் அரசியல் பண்ண முடியாது. ஆனால், அங்கும் செக் வைத்திருக்கிறாராம் செல்லூர் ராஜூ. 'அழகிரியைக் கடுமையாக விமர்சித்து பொதுக் கூட்டங்களில் அமைச்சர் பேச மாட்டார். அவரோடு நட்பு பாராட்டுகிறார்’ என லோக்கல் ரத்தத்தின் ரத்தங்களே புலம்புவார்கள். 'அது எப்படிச் சாத்தியம்?’ எனக் கேட்டால், 'தி.மு.க ஆட்சிக் காலத்தில் அழகிரி மதுரையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த சமயத்தில் ராஜூவுக்கு எதிராக அ.தி.மு.க-வில் அரசியல் செய்தவர்கள் மீது வழக்கு, வம்புதும்பு பஞ்சாயத்துகள் கிளம்பின. அதனால் வேறு வழியே இல்லாமல் அவர்கள் அனைவரும் சைலன்ட் மோடுக்குச் சென்றார்கள். ஆனால், செல்லூர் ராஜூ மீது பழிவாங்கல் அவ்வளவாக இல்லை!’ என லாஜிக் சொல்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களுக்கு முன் மதுரை வந்த மு.க.ஸ்டாலின் காலை வேளையில் பூங்காவில் வாக்கிங் போனார். அதே நேரம் மனைவியுடன் அங்கே வந்தார் செல்லூர் ராஜூ. 'ஸ்டாலினைத் தனியா பார்த்தாரு... சிரிச்சுப் பேசிக்கிட்டாரு!’ எனத் தகவல் காட்டுத்தீயாகப் பரவ, கதிகலங்கித்தான் போனார் ராஜூ. கார்டனுக்குத் தகவல் சென்று எந்த நடவடிக்கையும் இல்லை என அறிந்த பிறகுதான், அமைதியானார் ராஜூ!

 

துக்க அனுஷ்டிப்பு மேளா!

செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி, சாலை விபத்து ஒன்றில் உயிர் இழந்தார். அந்த அனுதாபம்தான் ராஜூ மீதான கட்சியினரின் புகார்களைக் கண்டுகொள்ளாமல் வைத்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், தன் மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை, பிரமாண்டமாக நடத்தி அசரடித்தார் ராஜூ. பிரமாண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், பளபள பேனர்கள், லோக்கல் சேனல்களில் செய்தி, நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம், அன்னதானம்... என ஒட்டுமொத்த மதுரை மீதும் துக்கப் போர்வை போத்தினார்.

அந்தத் துக்க அனுஷ்டிப்பு மேளாவுக்கான செலவுகளை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் செய்தார்கள் என்றொரு பேச்சும் கிளம்பியது. வழக்கம்போல இது பற்றிய புகாரையும் தலைமை கண்டுகொள்ளவில்லையாம்! 

கரன்சி மழையில் காவடி!

'அம்மா’வின் நலனுக்காகக் காவடி எடுப்பது, பால் குடம் தூக்குவது, வேல் குத்துவது... என எப்போதும் மதுரையை அலங்கமலங்க அடித்துக்கொண்டிருப்பார் செல்லூர் ராஜூ. இலவச சில்வர் குடம், ஒரு பாக்கெட் பால், தேங்காய், 100 ரூபாய் கொடுத்து தாய்க்குலங்களைத் திரட்டி நடத்திய காவடித் திருவிழா மதுரையைத் திமிறச் செய்தது. வண்டியூர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் 5,000 பெண்களைத் திரட்டினார். அவர்களுக்கு ஒரே நிறத்தில் கேரளப் பாரம்பர்ய சேலை, பொங்கல் பானை வழங்கி ஏக தடபுடல். பால்குட வைபவத்துக்கு 200 ரூபாய், வேல் குத்தினால் 2,000 ரூபாய், பறவைக் காவடிக்கு 10 ஆயிரம், மொட்டை போட 500 ரூபாய் என 'ஃபிக்ஸட் ரேட்’ போட்டு ஆட்களைத் திரட்டுவார். ஒருமுறை தமுக்கம் மைதானத்துக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை வரவழைத்து, பிரமாண்ட சண்டியாகம் நடத்தினார். 108 அக்னிக் குண்டங்களுடன் பிராந்தியத்தில் அனலைக் கிளப்பியது அந்த யாகம்.

ஆனால், இத்தனை பிரமாண்டங்களை அரங்கேற்ற ஏது கரன்சி? அமைச்சராகும் முன்னர் செல்லூர் ராஜூ காட்டிய ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 2 லட்சத்து 63 ஆயிரத்து 50 ரூபாய். ஆனால், இப்போது காவடி புராஜெக்ட்டுக்கு நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்! 

கோணிப்பை கோக்குமாக்கு!

கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் 31,863 நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை போன்றவை கோணிப் பைகளில்தான் விநியோகிக்கப்படும். பொருட்கள் விற்கப்பட்ட பிறகு, காலி கோணிப் பைகள் விற்பனை செய்யப்பட்டுவிடும். கூட்டுறவுத் துறையால் நிர்ணயிக்கப்படும் விலைக்குக் குறையாமல் அந்தக் காலிக் கோணிகளை விற்க, டெண்டர் மற்றும் ஏலம் விடப்படும். கடந்த தி.மு.க ஆட்சியில் 16 ரூபாய் வரை விலைபோன கோணிகள் இந்த ஆட்சியில் 11 ரூபாய் வரை மட்டுமே விலைபோனது. காரணம், துறையினரின் ஆசியோடு டெண்டர் எடுப்பவர்கள் அமைத்துக்கொண்ட சிண்டிகேட் என்கிறார்கள். 31,863 நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு மாதத்தில் லட்சக்கணக்கில் கோணிப்பைகள் சேரும். அவற்றை விற்பதன் மூலம் கோடிகளில் வருமானம் கிடைக்கும். ஆனால், அது நெல்லுக்குப் பாயாமல், புல்லுக்கே பாய்ந்துகொண்டிருக்கிறது!

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நல்ல சோறு - 5
குலசாமியைக் கொன்றவன்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை!”
Advertisement
[X] Close