Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன் நம்பர் 1

ம.கா.செந்தில்குமார்

மிழ் சினிமாவின் கோடி லேடி, சிங்கிள் பெண் சிங்கம், ட்ரெண்டிங் பியூட்டி, மாயாவன தேவதை, தனி ஒருத்தி... அவ்வளவும் நயன்தாராதான்!

ஒரு ஹீரோயினாக 10 வருடங்கள் கடந்தும் படபடக்கிறது நயன்தாரா கிராஃப். அடுத்தடுத்து ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் ஹிட்ஸ் தட்டியவர். காதல் தோல்விகள், வீண் வம்புகள், உள்ளடி வேலைகள் கடந்தும் ஒரு படத்தின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் நயன். மாஸ் நடிகர்களே நயன் கால்ஷீட்டுக்காக மல்லுக்கட்டுகையில், ‘ரெஜினா’, ‘மாயா’, ‘மஹிமா’, ‘காதம்பரி’... என கதைக்குள் தன்னைக் கரைத்துக்கொள்கிறார். இந்த அசாத்தியம் எப்படி சாத்தியமானது?

‘‘என் ‘குடைக்குள் மழை’க்காக நடிக்க வந்தவங்கதான் டயானா. அன்னைக்கு காலையில ஒன்பது மணிக்கு வரணும். ஆனா, எட்டு மணிக்கு போன் பண்ணி, ‘இன்னைக்கு வர முடியலை. நாளை மறுநாள் வரட்டுமா?’னு கேட்டாங்க. கோபத்துல, ‘நீங்க வரவே வேணாம்... ரொம்ப தேங்க்ஸ்’னு சொல்லி போனை கட் பண்ணினேன். நான் வேண்டாம்னு சொன்ன அன்றைய டயானாதான், இன்றைய நயன்தாரா.’’ - தன் பழைய பாதையைத் திரும்பிப் பார்க்கிறார் பார்த்திபன்.

‘‘நயன்தாராவின் இந்தத் தொடர் வெற்றி அவங்க புத்திசாலித்தனத்தை மட்டுமே வெச்சு தேர்வு பண்ணின விஷயங்களால் நடந்தது கிடையாது. எனக்குத் தெரிஞ்சு நிறைய விஷயங்கள்ல ‘அமையுறது’னு ஒண்ணு இருக்கு. அப்படி நயன்தாராவுக்கு எல்லாமே அமையுதுனு நினைக்கிறேன். ஏன்னா எல்லா வெற்றியும் திட்டமிட முடியாது என்பது என் அனுபவத்தின் மூலம் கிடைச்ச தாழ்மையான எண்ணம். தவிர  வெற்றி கொடுக்கும்  நம்பிக்கையும் வேகமும் வேற எதுவும் கொடுக்காது. அதனால இப்ப அவங்க வெற்றியோட இருக்கிறதால, அவங்க சிந்திக்கிறதும் ரொம்பச் சரியா இருக்கலாம்.

அடுத்து, ‘பெர்சனல் லைஃபை சினிமாவுடன் போட்டுக் குழப்பி காம்ப்ளிகேட் பண்ணிக் காதீங்க. செட்டுக்கு வந்தோமோ நடிச்சோமானு இருங்க.’ இதுதான் அவங்க வாழ்க்கை. இதெல்லாம் அவங்க பேசுற விஷயம் கிடையாது. சொல்லாமலேயே உணர்த்தும் விஷயங்கள். தவிர இத்தனை வருஷங்கள் தந்த வெற்றி, தோல்வியின் மூலம் அவங்களே தன்னை உருவத்தில், புத்திசாலித்தனத்தில் ஷேப்அப் பண்ணியிருக்காங்க. சிலர், ‘அதெல்லாம் ஒண்ணும் இல்லை, ஓடுற வரைக்கும் ஓடிட்டு இருப்போம்’னு நினைக்கலாம். ஆனால் நயன்தாரா அப்படி இல்லை. கதைத்தேர்வு, அழகைப் பராமரிக்கிறதுனு எல்லாத்திலும் பிரத்யேகக் கவனம் எடுத்துப்பாங்க. அந்த வகையில் நயன்தாராவின் வெற்றி பாராட்டுக் குரியது. மத்தபடி ‘நானும் ரௌடிதான்’ செட்ல நானும் ‘சிவனே’னுதான் இருந்தேன்’’ என்கிறார் பார்த்திபன்.

ஜீவா, நயன்தாரா நடிப்பில் ‘திருநாள்’ இயக்கி வரும் ராம்நாத், நயன் ஸ்பெஷல் சொல்கிறார். ‘‘சில ஹீரோயின்களிடம் காஸ்ட்யூம் சேஞ்ச் சொல்லவே பயமா இருக்கும். ஏன்னா, அவ்வளவு நேரம் எடுத்துப்பாங்க. ஆனா நயனிடம் பிரமிக்கிற விஷயம், காஸ்ட்யூம் சேஞ்சுக்கு அவங்க எடுத்துக்கிற நேரம்தான். நான்கூட, ‘ரெண்டு நயன்தாரா இருக்கீங்களா, கேரவனுக்குள்ள போனதும் வேறொரு நயன்தாராவை அனுப்பிடுவீங்களா...  சந்தேகமா இருக்கு’ன்னேன். ஏன் இந்த வேகம்னு கேட்டதுக்கு, ‘ஒரு ஷூட்ல டைம் எடுக்கக் கூடிய இடம் காஸ்ட்யூம் சேஞ்ச்தான். இங்க கால்ஷீட், பேட்டா, செட்டில்மென்ட்னு எல்லாமே பணம் சம்பந்்தப்பட்டது. அப்ப காஸ்ட்யூம் சேஞ்சுக்கு டைம் எடுத்துக்கிட்டா, அதுவும் ஒரு கவுன்ட்தானே’ன்னாங்க. ஒரு இயக்குநரின் சிரமம் அறிந்து அவ்வளவு கால்குலேட்டிவா அதைப் பண்றாங்க. நமக்கு உண்மையிலேயே ஆச்சர்யமா, பிரமிப்பா இருக்கும்.

ஒரு சீன் சொன்னா, ‘இதை இப்படிப் பண்ணிக்கவா?’னு கேட்டு இன்வால்மென்ட்டோட நிப்பாங்க. அடுத்து தன்னை ஸ்பாட்ல தனிமைப்படுத்திக்க மாட்டாங்க. அவங்களைச் சுத்தி எல்லாருமே இருந்தாலும் தன் வேலையில அவ்வளவு கான்சியஸா இருப்பாங்க. நம்ம சைடுல எல்லாம் கரெக்ட்டா இருந்துச்சுன்னா அவங்களால எந்தப் பிரச்னையும் இருக்காது சார். ஆமாம் சார், அவங்க டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்.’’

நயனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் முக்கியமானவர்கள் இயக்குநர் விஷ்ணுவர்தனும் அவரின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான அனு வர்தனும். ‘‘அவங்க பெர்சனல் காரணங்களுக்காக ஓரிரு வருஷங்கள் சினிமாவுல இல்லாமலேயே இருந்திருக்காங்க. எப்ப வந்தாலும் திரும்ப நம்பர் ஒன் வந்திருவாங்க. ஹீரோயின்ல சூப்பர் ஸ்டாருக்கான தாக்கம் அவங்களுக்கு மட்டும்தான் இருக்கு. ஆனாலும் இன்னைய வரையிலும்  நயனைத் தவிர அதை யாராலயும் தாக்குப்பிடிக்கவோ தக்கவைக்கவோ முடியலை. அதுக்கு காரணம் அவங்களோட அந்த டெடிகேஷன்.

அவங்க வளர்ச்சியை யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்க வேணும்னா பாருங்க... அந்தப் பொண்ணு இன்னும் இன்னும் உயரங்களுக்குப்போவாங்க. ‘யே... துண்டைக் காணோம்... துணியைக் காணோம்னு எல்லாரையும் ஓடவிடுறியேப்பா...’ம்பேன். அது சாதாரண விஷயம் இல்லை. லவ் பிரேக்கப் அது இதுனு எல்லாத்துலயும் மீறி வந்து திருப்பி ஓடவிடுறாங்க பாருங்க. அதுதான் அந்தப் பொண்ணோட பவர்!’’ என்கிறார் விஷ்ணுவர்தன்.

`` `பில்லா’வுலதான் அறிமுகம். நான் ரொம்ப கரெக்ட்டா இருக்கணும்னு நினைப்பேன். அவங்களும் அப்படியே. அதனால எங்க இருவருக்கும் வேவ்லெங்த் எளிதா செட் ஆகிடுச்சு. சின்சியரானவங்க. எதையுமே நேர்த்தியாகப் பண்ணணும்னு நினைப்பாங்க...  ஃபிட்னெஸ், டயட்னு எல்லாமும். அதனாலதான் இத்தனை பிரேக்குக்குப் பிறகு வந்தும் அவங்க இடத்தை யாராலயும் எடுத்துட்டுப் போக முடியலை. கேரவன் போக மாட்டாங்க. காஸ்ட்யூம்ஸ் கரெக்ட்டா இருக்கணும். டைமிங்ல அப்படி இருப்பாங்க. ஃப்ரெண்ட்ஸ்னா உயிரை விடுவாங்க. எமோஷனல் கேரக்டர். குழந்தை மாதிரி எளிதா எமோஷனாயிடுவாங்க, எக்சைட்டும் ஆகிடுவாங்க. ரொம்ப கேரிங். நயன் என் நல்ல பெருமையான ஃப்ரெண்ட்!’’ என்கிறார் அனு வர்தன்.

நயன் நயன்

1) அப்பா-அம்மா ரொம்ப இஷ்டம். எங்கு சென்றாலும் தான் எங்கு இருக்கிறேன் என்பதை ஒருநாளைக்கு 10 முறையாவது  அவர்களுக்கு அப்டேட்டிவிடுவார்.

2) அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், பல மாநில பயணத்தால் மலையாளத்தைவிட ஆங்கிலம், இந்தி நன்றாகப் பேசுவார். இப்போது தமிழும்.

3) சிக்கன் ஸ்னாக்ஸ், ஃபிஷ் என நன்றாக சமைப்பார். ஆனால் அது மற்றவர்களுக்குத்தான். தனக்கு எப்பவும் காய்கறி, பழங்கள் என டயட்தான்.

4) பயணம் மிகப் பிடிக்கும். அதுவும் தன் நெருக்கமான நண்பர்களுடன் என்றால், டபுள் கொண்டாட்டம்!


5) உலக சினிமா, அனிமேஷன் படங்கள் பிடிக்கும். ரிலாக்ஸ் டைமில் சினிமா பார்ப்பதுதான் இஷ்டம்.

6) பிடித்த நடிகர், சல்மான் கான். பிங்க் கலர் பிரியை.

7) காஸ்ட்லியான தங்க நகைகள் பிடிக்கவே பிடிக்காது. எப்போதும் எளிமையாக இருக்கவே விருப்பம்.

8) ‘முடியாது, நடக்காது’ என எப்போதும் ஆரம்பத்திலேயே நெகட்டிவாகப் பேசுவதைத் தவிர்ப்பார். எந்தக் கதையாக இருந்தாலும், ‘ஸ்கிரிப்ட் நல்லா இல்லை’ என்ற வார்த்தை வரவே வராது. ‘எனக்கு செட் ஆகாது’ என்று தவிர்ப்பார்.

9) ‘நானும் ரௌடிதான்’-ல் இளம் பெண்ணாக நடித்தவர், மலையாளத்தில் எட்டு வயது குழந்தையின் தாயாக நடிக்கிறார். ஸ்கிரிப்ட், கேரக்டர் பிடித்து விட்டால் போதும், கமிட் ஆகிவிடுவார்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
“நதியா தமிழ் ரொம்பப் பிடிக்குதே!”
இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close