Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஓவியம்:அரஸ்

செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்பார்களே... இதற்கும் அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பனின் அரசியல் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது. இன்று அவர் வாழும் வாழ்க்கையைத் தனது உயிரைக் கொடுத்து வாங்கித் தந்தவர், மறைந்த முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன். உள் பகை காரணமாகப் பழி தீர்க்கப்பட்ட அவரது கொலை ஏற்படுத்தியஅதிர்ச்சிக் குப் பரிகாரமாக, இவருக்குப் பதவியைக் கொடுத்து தலைமை சமாதானப்படுத்த நினைத்ததால்... கேபினெட்டுக்குள் நுழைந்தவர் பெரிய கருப்பன்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் இருக்கும் அரளிக்கோட்டை, பெரிய கருப்பனின் பூர்வீகம். இவரோடு மல்லுக்கு நிற்கும் ராஜ கண்ணப்பனின் மாமனார் ஊரும் இதுதான். இருவரும் ஒரு வகையில் உறவுக்காரர்களும்கூட. 'சொந்த ஊரில் இருக்கையில், பெரிய கருப்பன் அ.தி.மு.க. அனுதாபி' என்று சொல்பவர்களும் உண்டு. பிழைப்பு தேடி 80-களில் சென்னைக்கு வண்டி ஏறியவருக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது பிராட்வே ஏரியா.

திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகில் சின்னதாக ஒரு டீக் கடை போட்டார் பெரிய கருப்பன். மாஸ்டர் வராத நேரங்களில், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பாய்லர் அருகே வந்துவிடுவார். தன்னுடைய உழைப்பால் டீக் கடையை கேன்டீன் லெவலுக்கு வளர்த்தார். அந்த நேரங்களில் தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த சைதை கிட்டு வட்டாரத்தினருடன் நெருக்கமானார். சைதை கிட்டுவுக்குச் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்பதால், மண்ணின் மைந்தர்கள் இருவருக்கும் மனம் ஒட்டிக்கொண்டது. ஒயின்ஸ் ஷாப் வர்த்தகம் அளவுக்கு அதிகமான பணத்தை பெரிய கருப்பனின் கரங்களில் தவழ விட்டது. பணமும் கிட்டுவின் நெருக்கமும், மற்ற தி.மு.க. வி.ஐ.பி-க்களிடமும் நட்பை ஊன்றிக்கொள்ளக் காரணம் ஆனது. ஒரு கட்டத்தில் ஸ்டாலின் வீட்டுக் குள் சென்று வரும் அளவுக்குச் செல்வாக்கு. கழக வி.ஐ.பி-க்கள் வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை சப்ளை செய்து, அவர்களின் அன்பைத் தக்கவைத்துக்கொண்டார்.

அப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்த பெரியகருப்பனுக்கு, 'நமக்கும் இப்படி ஒரு காலம் வருமா?' என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்தது. சென்னையில் இருந்தால் அது நடக்காது என்று, சொந்த ஊர்ப் பக்கம் பார்வையைத் திருப்பினார். 89-ம் வருட தி.மு.க. ஆட்சியின்போதுதான் பெரிய கருப்பன், வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தார். அப்போதெல்லாம் ஸ்டாலினோ, அமைச்சர்களோ, சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தால், பெரிய கருப்பனின் போஸ்டர்கள் பளிச்சிடும். ஒரு கட்டத்தில் 'போஸ்டர் பெரிய கருப்பன்' என்று புகழாரம் சூட்டும் அளவுக்குப் பிரபலமானார்.

இந்த போஸ்டர் புரட்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. கழகத் தேர்தல் வந்தபோது, பெரிய கருப்பனை சிவகங்கை மாவட்ட கோட்டாவில் பொதுக் குழு உறுப்பினர் ஆக்கும்படி மாவட்டச் செயலாளராக இருந்த தா.கிருட்டிணனுக்கு ஸ்டாலினிடம் இருந்து தாக்கீது போனது. பொதுக் குழு உறுப்பினரும் ஆனார். ஆனாலும், சென்னையைவிட்டு வராமல், போஸ்டர்களை மட்டும் அனுப்பிக்கொண்டு இருந்தார்.

93-ம் ஆண்டு வைகோ பிரிந்த நேரம், இளைஞர் அணி பாசறைக் கூட்டத்தை தேவகோட்டை அருகில் உள்ள அமராவதி புதூரில் நடத்தினார் ஸ்டாலின். இதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டவர் சைதை கிட்டு. அந்த நேரத்தில், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வரை ஆர்ச்சு களையும் கட்-அவுட்களையும் நிறுத்தி, ஸ்டாலினையே அட்ரா சக்கை போட வைத்தார் பெரிய கருப்பன்.

96-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க-வில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். அதன்படி, மக்கள் பிரதி நிதிகள், அமைச்சர்கள், மூன்று முறை பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருக்க முடியாது என்ற நிலை வந்தது. அந்த நேரத்தில், தா.கிருட்டிணன் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் சிவகங்கை மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். கட்சி அறிவிப்பின்படி விலக வேண்டிய நிர்பந்தம். அவர் விலகினால், அந்த இடத்தில் தனது விசுவாசியான இராம.சிவராமனை உட்காரவைக்கத் துடித்தார் அழகிரி. அதற்கு இடம் கொடுக்காமல், தன்னுடைய கைபாணம் ஒருவரை பெயருக்கு மாவட்டச் செயலாளராக உட்காரவைத்து, அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்ளத் திட்டம் போட்டார் தா.கிருட்டிணன்.

யாரையாவது தா.கி. கை காட்டுவார் என்று அவரது விசுவாசிகளும் சொந்த பந்தங்களும் நினைத்துக்கொண்டு இருந்தார்கள். 'அவர்களை விட்டால், நம்மை அட்ரஸ் இல்லாமல் செய்துவிடுவார்கள்' என்று நினைத்த தா.கிருட்டிணன், சிவகங்கை தி.மு.க-வினருடன் தொடர்பே இல்லாத பெரிய கருப்பனிடம் செங்கோலைக் கொடுத்தார். அவர் நினைத்ததுபோலவே, சொன்னதை (மட்டும்) செய்யும் கிளிப்பிள்ளையாகவே இருந்து வந்தார். தனக்கு அமைச்சர் பொறுப்பு இல்லாத பிறகும் பெரிய கருப்பனையே மாவட்டச் செயலாளர் பதவியில் தொடரவிட்டார் தா.கி. இந்த நிலையில்தான், 2005-ம் வருடம் அந்தக் கொடூர சம்பவம் நடந்தது.

அரசியல் எதிரிகளின் கூட்டுச் சதி, தா.கிருட்டிணனை நடுரோட்டில் வெட்டிக் கொன்றது. அந்தச் சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டார் பெரிய கருப்பன். தன்னைத் தேற்றிக்கொண்டு, தா.கிருட்டி ணன் குடும்பத்தாருக்கு நிழலாக நின்றார். அதன் பிறகு பதவி ஆசை, விசுவாசத்தை விலை பேசிய சம்பவங்களும் நடந்தன.

தா.கிருட்டிணன் மறைவுக்குப் பிறகும், தீவிர அழகிரி ஆதரவாளரான திருப்பத்தூர் சிவராமனுக் கும் பெரிய கருப்பனுக்கும் இடையில் முட்டல் மோதல்கள் நடந்துகொண்டேதான் இருந்தன. 2006 சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி சிவராமனுக்கா, பெரிய கருப்பனுக்கா என்று சேஸிங் நடந்தபோது, மாவட்டச் செயலாளர் என்ற முறையில், பெரிய கருப்பன் முந்திக்கொண்டார். தா.கிருட்டி ணனே அமைச்சராக வருவதற்கு 30 வருடங்களுக்கு மேல் போராட வேண்டி இருந்தது. ஆனால், எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் எம்.எல்.ஏ-வாகி, எடுத்த எடுப்பிலேயே அமைச்சரவையிலும் இடம் பிடித்தார் பெரிய கருப்பன். இவை அனைத்தும் தா.கிருட்டிணன் இவருக்கு செத்துக் கொடுத்தவை.

தொடக்கத்தில் குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சராக இருந்தார். சில நாட்களிலேயே பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இறந்ததால், அவரிடம் இருந்த அறநிலையத் துறை பெரிய கருப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. அதற்குப் பிறகே அழகிரியின் ஆதரவாளராக மாறத் தொடங்கினார்.

இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கோயில் புனரமைப்புப் பணிகள் நடப்பது பெரிய கருப்பனுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தாராளமாக நிதிகளை வாரி வழங்குவதும் இதற்கு முக்கியக் காரணம். சுமார் `550 கோடி மதிப்பீட்டில் 6,000 கோயில்கள் இவரது காலத்தில் குடமுழுக்கு கண்டதாக புள்ளிவிவரம் கொடுக்கிறார்கள். குத்தகைதாரர்களிடம் சிக்கிக்கிடந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு, அறநிலையத் துறைக்கு வருவாய் சேர்த்து இருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் குளங்களைச் செப்பனிட்டதும், சுமார் 150 தேர்களை மராமத்து செய்ததும் பெரிய கருப்பனின் சாதனைதான். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தென் மாவட்ட மணல் வருமானத்தை முறையாக வரவு - செலவு பார்த்துக் கொடுக்க வேண்டிய பெரிய பொறுப்பும் இவருக்கு. மணலை எண்ணிக் காசு பார்க்கும் பெரும்புள்ளியும் இவரது ஊர்க்காரர்!

துறை சார்ந்த பணிகளில் இவ்வளவு அக்கறை காட்டுபவர், தொகுதி சார்ந்த பணிகளில் ரொம்பவே பின்தங்கி நிற்கிறார். மற்றவர்களைப்போல கட்சிக்காரர்கள் யாரையும் இவர் அடக்கி ஆள நினைப்பது இல்லை. அதனால், கட்சிக்காரர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், இவரது இந்த அணுகு முறையால் ஊர் ஊருக்கு பலர் மாவட்டச் செயலாளர்களைப்போல் ஆக்ட் கொடுத் துத் திரிவது, கட்சி இவரது பிடிக்குள் இல்லை என்பதையே காட்டுகிறது.

கேன்டீன் நடத்திய காலத்தில், இரவு ஒரு மணிக்குப் படுத்து காலையில் லேட்டாக எழும் பழக்கம் இன்னும் தொட்டுக்கொண்டே வருகிறது. பெரும்பாலான நேரங்களில் துயில் எழுவதே காலை 10 மணிக்கு மேல்தான் என்கிறார்கள். இதனால் காலை நிகழ்ச்சிகளுக்கு காலம் கடந்து வருவதையும் தவிர்க்க முடியவில்லை, பாவம்!

ஆக்ஸிடென்டல் அரசியல்வாதி என்பதால், மக்களுக்கும் இவருக்கும் நிறைய இடைவெளி. 'இருக்கச் சொன்னால், இருப்போம்... இறங்கச் சொன்னால், இறங்குவோம்' என்று டேக் இட் ஈஸி பாலிஸியில் இருப்பதால், இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாத பெரிய கருப்பன், ஒவ்வொரு நாளும் உற்சாகத்துக்குக் குறைவு இல்லாமல் உலா வருகிறார். 'இந்தத் துறை கடவுளாப் பார்த்து எனக்குக் கொடுத்தது. அதுக்குப் புண்ணியம் செய்திருக்கணும்' என்பார். அந்தப் புண்ணியத்தை எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார் என்பது தேர்தல் முடிந்தால்தான் தெரியும்!

                            
        

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சிறுகதை: அப்பு
ஒபாமாவின் ஆட்டம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை!”
Advertisement
[X] Close