மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/09/2010)

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ரசியல் அறிந்தவர்களுக்கும் தி.மு.க. பிரமுகர்களுக்கும்கூட, மிக நீண்ட நேரம் யோசித்தால் தான் இவரை அமைச்சர்கள் வரிசையில் சொல்ல முடியும். அந்த அளவுக்கு அடக்கமானவர். அமைதி யானவர். வெளியுலகத்துக்குத் தெரியாதவர். தஞ்சை மாவட்டத்துக்குள் சும்மா இருந்தால் போதும் என்று தனக்கெனக் கட்டுப்பாடு வைத்துக்கொண்டு, சுகமாக இருப்பவர்தான், வணிக வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா!

"மக்களோடு மக்களாக இறங்கி வந்து பழக வேண்டிய கவுன்சிலர்கள், இன்றைக்கு வசதியாக சொகுசு வாகனங்களில் பயணிக்கிறார்கள். கால்நடையாகவோ, சைக்கிளிலோ பயணித்தால்தானே, மக்களின் சிரமங்கள் தெரிய வரும்?" - என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி ஆதங்கத்தோடு சொன்னார். இதை கவுன்சிலர்கள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ, அமைச்சர் உபயதுல்லா இதில் சின்சியர். சனி, ஞாயிறுகளில் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, கையில் ஒரு மஞ்சள் பையுடன் நகரை வேடிக்கை பார்த்தபடியே நடைபோடுவது உபயதுல்லாவின் வழக்கம். அந்த வழியே அவருக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றைச் சுற்றி வரும்போது மிகுந்த அமைதியோடு தனி ஆளாகத்தான் வருவார். யாராவது வணக்கம் வைத்தால், அவர்களைவிடப் பவ்யமாக இவர் வணக்கம் வைப்பார்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க. அழகிரியின் அதி தீவிர ஆதரவாளரான ஜாஃபர் அலிக்குத்தான் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று கட்சியினர் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். முதல்வரிடமும் அழகிரி உரிமையோடு அந்தக் கோரிக்கையை வைத்தார். தேர்தல் பிரசாரத்தின்போதும், 'ஜாஃபர் அலியை நிச்சயம் அமைச்சர் ஆக்குவேன்' என அழகிரியே சபதம் போட்டார். ஆனால், தேர்தலில் ஜாஃபர் அலி தோற்க, முஸ்லிம் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சர் யோகத்துக்கு உபயதுல்லா டிக் செய்யப்பட்டார். 'இது எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய பதவி இல்லை' என நெருங்கிய நண்பர்களிடம் இன்னமும் மனம்விட்டுச் சொல்கிறார் உபயதுல்லா. உபயதுல்லா சிறு வயதில் மிகுந்த சிரமத்தில் இருந்தவர். தஞ்சை கோர்ட் ரோடு வாசலில் அவரது அம்மா அவித்துத் தரும் இட்லியைத் தினமும் விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை. ஆனால், நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை தொழில்களிலும் கால் வைத்துப் போராடி உயர்ந்த உபயதுல்லாவின் சொத்து மதிப்பு இன்றைக்கு அளவிட முடியாதவை. லாட்டரி பிசினஸ் முதல், ஒயின் ஷாப்ஏலம் வரை கோலோச்சத் தொடங் கினார். வறுமை துடைத்தெறியப்பட்டது. அடுத்து, அரசியலைக் குறிவைத்து ஓடத் தொடங்கினார். இலக்கிய ஆர்வமும் இருந்ததால் விழாக்களை நடத்தி, நகரில் முக்கியப் பிரமுகர் ஆனார். 'என் வாழ்க்கையை மாற்றிய புத்தகங்களில் ஒன்று... திருக்குறள்' என்பார். 'குறள் நெறிச் செல்வர்' என்றே அந்த வட்டாரத்தினர் அழைக்கும் அளவுக்கு, திருக்குறள் ஆர்வம். அந்தப் பற்றும் ஆர்வ மும்தான் இவரை கருணாநிதியின் கவனிப்பைப் பெறவைத்தது. முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தபோது, கருணாநிதி உபயதுல்லாவிடம் கேட்ட கேள்வி, 'செலவு பண்ணப் பணம் இருக்கா?' அதற்கு உபயதுல்லா, 'இருக்கு தலைவரே! தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும் நானே செலவு செய்றேன். அவங்களையும் ஜெயிக்கவைக்கிறேன்' என்றார். கருணாநிதிக்கு இது போதாதா?

தொடர்ந்து ஐந்து தேர்தல்களி லும் தஞ்சாவூர் தொகுதி உபய துல்லாவுக்கு வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி இறந்த நேரத்தில் நடந்த 1991 தேர்தல் தவிர, நான்கு முறை வெற்றி பெற்றார். இத்தனைக்கும் தஞ்சாவூர் தொகு தியில் முக்குலத்தோர் வாக்குகள் தான் அதிகம். சாதி, மத வேறு பாடு பார்க்காமல் பழகுவதால், உபயதுல்லாவை யாரும் மத வளையத்தில் வைத்துப் பார்ப்பது கிடையாது. வியாபாரி என்பதால் தான் உன்னை வணிக வரித் துறைக்கு நியமிக்கிறேன் என சொல்லிப் பதவி கொடுத்த கருணாநிதிக்கு, இன்றைக்குச் சரியான முறையில் விசுவாசம் பாராட்டி வருகிறார். ஆதாயத்தில் துளி அளவைக்கூடத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் அப்படியே தலைமைக்கு அனுப்பும் நல்ல பிள்ளை என அமைச்சர்களுக்குள் இவருக்கு நல்ல பெயர் உண்டு!

பெரிய அளவில் சாதனைகள் எதுவும் நிகழ்த்த முடியாத துறை என்றாலும், வாட் வரி விதிப்பின் சலசலப்புகளை அடக்கிய பெருமை உபயதுல்லாவுக்கு உண்டு. அதே நேரம், வணிக வரித் துறையை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. வணிக வரித் துறையில் காலி இடங்கள் நிரப்பப்பட்டதில், காசு பணம் பெரிதாகப் புழங்கிய தாகச் சொல்லப்படுகிறது. துறையில் மட்டுமல்ல... தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களிலும் உபயதுல்லா பெரிய அக்கறை எதுவும் காட்டவில்லை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தத் திட்டத்தையும் தஞ்சை மண்ணுக்குக் கொண்டுவரவில்லை. விவசாயம் சம்பந்தமான தொழிற்சாலை வேண்டும் என்பது தஞ்சை மண்ணின் கால் நூற்றாண்டுக் கனவு. ஆனால், அதற்கான முயற்சியில் உபயதுல்லா தவறியும் ஆர்வம் காட்டியதில்லை. பெயர் சொல்லும்விதமாக தஞ்சாவூருக்கு பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு சிறப்பை அரசு சார்பில் கொண்டாட முதல்வரைச் சம்மதிக்கவைத்தது இவரின் பெரிய சாதனை. சென்டிமென்ட் விஷயங்களைக் கடந்து, தஞ்சை பெரிய கோயில் மீது பெரிய அளவில் பிரியம் கொண்டவர் உபயதுல்லா.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை அமைச்சர் கோ.சி.மணியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் உபயதுல்லா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்யாண சுந்தரம் என்பவருக்கு சீட் கொடுக்க கோ.சி.மணி வலியுறுத்தியதாக இவருக்குத் தகவல் கிடைத்தது. உபயதுல்லாவோ, பழனி மாணிக்கத்துக்கு சீட் கிடைக்கப் போராடினார். இறுதியில், பழனி மாணிக்கத்துக்கே சீட் கிடைத்தது. ஆனால், அதன் பின்பு நடந்ததுதான் கவலையான திருப்புமுனை. தேர்தலில் ஜெயித்து மத்திய மந்திரியான பழனி மாணிக்கம், கோ.சி.மணியின் ஆதரவுடன் உபயதுல்லாவை எதிர்க்கத் தொடங்கினார். இந்த இருமுனைத் தாக்குதலை உபயதுல்லாவால் சமாளிக்க முடியவில்லை. உட்கட்சித் தேர்தலின்போது நகரச் செயலாளர் பதவிக்கு உபயதுல்லாவை எதிர்த்து பழனி மாணிக்கம், தனது தம்பி ராஜ்குமாரை நிறுத்திப் போட்டியிடும் சூழலை உருவாக்கினார். விஷயம் தலைமை வரை போய், விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, 'என் அமைச்சர் பதவியை வேண்டுமானாலும் பறித்துக்கொள்ளுங்கள். ஆனால், 25 ஆண்டுகளாக நான் வகிக்கும் தஞ்சை நகரச் செயலாளர் பதவியைப் பறித்துவிடாதீர்கள். அமைச்சர் பதவியைக் காட்டிலும், இதைத்தான் நான் அதிகம் நேசிக்கிறேன்' என உபயதுல்லா சொல்ல, கருணாநிதி போட்டியே இல்லாமல் அவரை நகரச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கவைத்தார். கூடவே, 'நீ கட்சி மேல் வைத்திருக்கும் மரியாதை என்னைச் சிலிர்க்க வைக்கிறதய்யா' என்ற கருணாநிதியின் பாராட்டும் கிடைத்தது.

கோ.சி.மணி, பழனி மாணிக்கம் என இரு ஜாம்பவான்களையும் சமாளிக்க முடியாமல் திண்டாடும் உபயதுல்லா, சமீப காலமாக அழகிரியுடன் நெருக்கம் பாராட்டுவதாக ஒரு கருத்து உலவுகிறது.

உபயதுல்லாவிடம் இருக்கும் வணிக வரித் துறை, மிக மிக முக்கியமானது. மத்திய தர வர்க்கத்தினருக்கு அதிக துன்பத்தைக் கொடுத்து, தீராத கஷ்டத்தைக் கொடுத்து வரும் 'விலைவாசி' என்ற அரக்கனை இந்தத் துறையால் தடுக்க முடியவில்லை. முன்பெல்லாம் வரி போடும் காலகட்டத்திலோ அல்லது பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போதோதான் விலைவாசி உயரும். ஆனால், இன்று மாதம் முதல் தேதி ஆனாலே, விலையை உயர்த்திவிடுவது வணிக நிறுவனங்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதனால், அடித்தட்டு மக்கள் அடையும் துன்பம் சொல்லி மாளாதது. 'மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால், இது ஒரு பிரச்னை அல்ல' என்று முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் இதற்கான விளக்கம் சொன்னாலும், விலைவாசி உயர்வை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆண்டுதோறும் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை அரசாங்கம் குறைக்கிறது அல்லது எடுக்கிறது. ஆனால், விலையை யாரும் குறைப்பதே இல்லை. அதைக் கண்காணிக்க வேண்டிய அரசாங்கம், அதுபற்றிக் கவலைப்படுவதே இல்லை. விற்பனை வரி மூலமாக கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சியில் கூடுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது என்பது சாதனையாக இருந்தாலும், விலைவாசி மூன்று முதல் ஐந்து மடங்கு வரை உயர்ந்தது வேதனை! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கொடுத்துவிட்டு, இரண்டு இட்லியை 20 ரூபாய் கொடுத்து ஹோட்டல்களில் சாப்பிட வேண்டிய நிலை... சாதனையா, வேதனையா? இன்றைக்கு மத்திய அரசாங்கத்துடன் இணக்கமாக மாநில அரசாங்கம் இருக்கிறது. ஆனால், வாட் என்ற பெயரால் வசூலிக்கப்படும் பணத்தை மத்திய அரசாங்கத்திடம் இருந்து போராடியோ, வாதாடியோ, வாங்க முடியாத நிலைமை. அமைச்சரே ஒரு பேட்டியில் சொன்னது மாதிரி, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசிடம் இருந்து வாட் வரி பாக்கி நமக்கு வந்து சேரவில்லை. கூட்டணியில் இருப்பதால் சீக்கிரமே கிடைத்தாக வேண்டுமே தவிர, ஏமாறும் நிலை ஏன் இருக்க வேண்டும்? மேலும், மாநிலத்தில் வரி ஏய்ப்பு என்பதும் அதிகமாகி வருகிறது. அப்படி ஏய்ப்பவர்களைக் கறாராகக் கண்காணித்து வாங்கும் வசதியும் இல்லை. இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்க வேண்டிய துறைக்கு கறாரான ஒருவர் அமைச்சராக இல்லாமல் சாந்த சொரூபியை உட்காரவைத்ததுகூட சாதனைகளுக்குத் தடையாக இருக்கலாம்.

ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை தாக்கல் செய் வதற்கு முன்னதாக, தொழிலதிபர்களைச் சந்தித்து, முதலமைச்சர், நிதி அமைச்சர், நிதித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள். அப்போது மட்டுமே அமைச்சர் உபயதுல்லாவும் அங்கீகாரம் பெற்ற மனிதராக அமர்ந்து இருப்பார். மற்ற நேரங் களில் சாதாரண மனிதராக மாறிவிடுவார். ஒரு வேளை... இந்த அமைதிக்காகத்தான் அமைச்சராக் கப்பட்டாரோ என்னவோ!

                            
        

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க