மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/09/2010)

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நாகர்கோவில் பிரபு ஹோட்டலுக்கு அருகில் இருந்த சுரேஷ் ஃபைனான்ஸ், அன்றைய வாலிப தி.மு.க-வினர் வந்து போகும் இடமாக இருந்தது. ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த ஃபைனான்ஸில், 20 ஆயிரம் ரூபாய்க்கான ஏலச் சீட்டு விமரிசையாக நடக்கும். கஷ்டப்பட்ட தி.மு.க-வினருக்கு அதுதான் அமுதசுரபி. அதை நடத்தி வந்தவர் சுரேஷ் ராஜன். அதன் மூலம் பணம் புரள ஆரம்பிக்க, அரசியல் ஆசையும் துளிர்த்தது. நண்பர் அறிவுநிதியிடம் தனது விருப்பத்தை சுரேஷ் ராஜன் சொன்னார்.

அன்றைக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த ரத்தினராஜ் வீட்டுக்கு சுரேஷ் ராஜனை அழைத்துப் போனார் அறிவுநிதி. அப்போது, அங்கே இருந்த நாஞ்சில் சம்பத்தின் அறிமுகம் சுரேஷுக்குக் கிடைத்தது. தி.மு.க-வில் ஏதாவது ஒரு பதவி வாங்கித் தரக் கேட்டார்.

பொதுவாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவர் - கிறிஸ்துவர் அல்லாதவர், நாடார் - நாடார் அல்லாதார் ஆகிய இரண்டும்தான் அத்தனை அரசியலுக்கும் அடித்தளம். நாஞ்சில் சம்பத் நினைத்தால் தனக்குப் பதவி வாங்கித் தர முடியும் என்று நினைத்தார் சுரேஷ் ராஜன். அன்றைக்கு தி.மு.க-வில் முக்கியப் பேச்சாளராக மட்டுமல்ல, மு.க.ஸ்டாலினுக்கு நன்கு அறிமுகமானவராகவும் இருந்த சம்பத், தனது கொஞ்சு தமிழ் நடையில் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்ப... அதன் மூலமாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவி கிடைத்தது. அடுத்த சில நாட்களில் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்காக சென்னைக்குப் புறப்படத் தயாரானார் சுரேஷ் ராஜன்.

"தலைவரோட பிறந்த நாளுக்கு நீங்க வரலையா?" என்று இவர் கேட்க, "என் தலைவன் கலிங்கப்பட்டியில் இருக்கார்" என்றார் சம்பத். அதை அப்படியே ஸ்டாலின் காதுக்குக் கொண்டுபோய் சுரேஷ் சேர்க்க... அரசியல் விளையாட்டு ஆரம்பமானது.

நாஞ்சில் சம்பத்தைப் பார்த்தால் தலையைத் திருப்ப ஆரம்பித்த ஸ்டாலினுக்கு, புதிய நண்பர் ஆனார் சுரேஷ் ராஜன். இரண்டு முறை அமைச்சரானதற்கும் அடித்தளமாக அமைந்தது அந்தச் சம்பவம். திருவனந்தபுரம் 'வேலி' ஐலண்ட் வரை நெருக்கமானது அந்த நட்பு. ஆனாலும், மைனாரிட்டி சமூகத்தவர் என்ற எண்ணம் சுரேஷ் ராஜனைக் குடைந்து கொண்டே இருந்தது. ரத்தினராஜ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட மாவட்டப் பிரபலங்கள் வைகோ வுடன் பிரிந்து சென்றது வசதியாகப் போனது.

96-ம் ஆண்டு ஸ்டாலினை நம்பியே தொகுதியைக் கேட்டார் சுரேஷ் ராஜன். சென்னைக்கு வந்து சீட் கேட்டுவிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் திரும்பிக்கொண்டு இருந்தவரை, விழுப்புரம் ஸ்டேஷனில் நாகர்கோவில்காரர்கள் சிலர் தற்செயலாகப் பார்த்தார்கள். 'எங்கே போயிட்டு வர்றீங்க?' என்று அவர்கள் கேட்க, "கன்னி யாகுமரி எம்.எல்.ஏ. தொகுதியில் நிக்கிறதுக்கு சீட் கேட்டுட்டு வர்றேன்' என்று சுரேஷ் சொல்ல, சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்களாம். 'உங்க ஆட்கள் அங்கே கிடையாதேப்பா? எந்த நம்பிக்கையில் சீட் கேட்கிறீங்க?' என்று அவர்கள் கிண்டலடிக்க... இவருக்கு முகம் சுண்டிப் போனதாம். 'இந்தத் தடவை சீட் கிடைக்கலேன்னா, அரசி யலைவிட்டு ஒதுங்கி, பிசினஸ் பார்க்கப் போக வேண்டியது தான்' என்று முடிவெடுத்தார். நாகர்கோவில் பகுதியில் முக்கிய மானவராக இருந்த சங்கரலிங்கம் இவருக்குக் கொஞ்சம் உறவு. அவரிடம் தனக்குப் பரிந்துரை செய்யச் சொல்ல... இந்தத் தொகுதியைக் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகவன் என்பவர் வேண்டாம் என்று முடிவெடுக்க... சுரேஷ் ராஜனுக் குக் கஷ்டமே இல்லாமல் தொகுதி யும், ஸ்டாலின் அறிமுகத்தால் அமைச்சர் பதவியும் வந்து வாய்த்தது.

அதற்குப் பிறகு என்ன? எல்லாம் அவர் ராஜ்யம்தான்! 'நெல்லை நமது எல்லை; குமரி நமது தொல்லை' என்பது கழகத் தலைமை ஒரு நேரத்தில் உச்சரித்த வாசகம். கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகள் நமக்கா அல்லது கேரளாவுக்கா என்ற சிக்கலை வைத்து அது சொல்லப்பட்டாலும், நெல்லை வரைக்கும் நடப்பதைத்தான் கண்டுகொள்வோம், அதைத் தாண்டி என்ன நடந்தாலும் அதைப்பற்றிக் கவலை இல்லை என்று ஓர் அர்த்தம் இருப்பதாகவும் இன்னொரு தரப்பார் சொல்வார்கள். மதம், சாதியைத் தாண்டிய கோஷ்டிப் பூசல்தான் வெந்த நிலையில் இந்த வார்த்தைகளைச் சொல்ல இப்போதும் காரணமாக இருக்க முடியும்.

வைகோ பிரிவுக்குப் பிறகு கன்னியாகுமரியில் தி.மு.க-வே இல்லை என்று எதிர்க் கட்சிகள் கிண்டல் அடித்தபோது, 100 தொடர் கூட்டங்களை நடத்தி கட்சி உயிரோட்டமாக இருக்கிறது என்று காட்டியவர் நாகர்கோவில் நகரச் செயலாளராக இருந்த ராஜன். இன்றைக்கு நாகர்கோவில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அவரை சுரேஷ் ராஜனுக்குப் பிடிக்காமல் போக, அவருக்குப் பதிலாக வளர்க்கப்பட்டார் மகேஷ். அடுத்தடுத்துப் பல உச்சங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. அதன் பிறகு, மகேஷ§ம் கசந்து போனார். அதனாலேயே பதவிகள் பறிக்கப்பட்டன. பத்மநாபபுரம் எம்.எல்.ஏ-வான ரெஜினால்டுக்கும் அமைச்சருக் கும் ஆவதில்லை என்பதே பெரும்பாலானவர்கள் கருத்து. சுரேஷ் ராஜன் மாவட்டச் செயலாளர் தேர்தலில் நின்றபோது, எதிர்த்துக் களம் கண்டவர் இந்த ரெஜினால்டு. இப்படி குமரி தி.மு.க-வில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் அனைவரையும் தனக்கான தொல்லையாக அமைச்சர் நினைப்பதால்தான், கட்சியில் தேய்மானம் அதிகமாகவே தெரிகிறது.

பார்க்க இளைஞராக இருக்கிறார், பழக இனிமையானவராகத் தெரிகிறார் என்றெல்லாம் சொல் லப்பட்ட சுரேஷ் ராஜனின் பெயரை, அதிரடியாகக் கவனிக்க வைத்த சம்பவம் ஜனார்த்தனம் விஷயத்தில் இருந்துதான்!

கன்னியாகுமரி மாவட்டத் தனி துணை ஆட்சியராக இருந்தவர் செ.ஜனார்த்தனம். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழக்கும் திட்டப் பிரிவைக் கவனித்து வந்த இவர், அமைச்சர் மீது கொடுத்த அடி தடிப் புகார், தமிழ்நாட்டையே கன்னியாகுமரிப் பக்கமாக கவனிக்கவைத்தது. வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் வைத்து தன்னைச் சாதியைச் சொல்லித் திட்டி அடிக்க வந்த தாகவும், அவருடன் இருந்தவர்கள் சேர்ந்து ஜனார்த்தனனை இடதுபுற நெஞ்சில் குத்தியதாகவும், இன்னும் சிலர் இவரது காலை ஓங்கி மிதித்ததாகவும், இதைப் பார்த்து ஓடி வந்த கவுன்சிலர் ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும் ஜனார்த்தனம் தனது புகாரில் சொல்லி அதிர்ச்சியைக் கிளப்பினார். அவரே, தனது மனுவில் இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளமடத்தில் சுரேஷ் ராஜனால் ஒரு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகவும் சொன்னார். வடசேரி காவல் நிலையத்தில் இந்தப் புகார் பதிவானதும் கன்னியாகுமரி கொந்தளிப்பானது. அரசு ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். ஓர் அமைச்சரை எதிர்த்து அரசு ஊழியர்கள், சொந்த மாவட்டத்திலேயே போராடிய சம்பவம், 'சாந்தமானவர்' என்று பெயரெடுத்த சுரேஷ் ராஜன் விஷயத்தில்தான் நடந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வலியுறுத்தும் மனு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது. அதற்குப் பிறகு கொஞ்சம் அடங்கிவிட்டார் என்பது அமைச்சரை அறிந்தவர் கள் சொல்லும் தகவல்!

சுற்றுலா மற்றும் பத்திரப் பதிவு ஆகிய இரண்டு துறைகள் இவரது வசம் இருக்கின்றன. தி.மு.க. ஆட்சி ஆரம்பிக்கும்போது சுற்றுலாவை மட்டும்தான் வைத் திருந்தார். அப்போது பத்திரப் பதிவு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வசம் இருந்தது. சுகாதாரம் அவருக்கு வந்து சேர்ந்தபோது, பத்திரப்பதிவை எடுத்து சுரேஷ் ராஜனிடம் ஒப்படைத்தார் கருணாநிதி. தமிழ்நாட்டில் அதிக அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் ரெய்டு பத்திரப் பதிவுத் துறையில்தான் நடக்கிறது. தவறு கள் நடக்காமல் இருக்கக் கண்காணிப்பை அதிகப்படுத்துவதில் ஆரம்பித்து... ஏழை, எளியவர்கள் தங்களது மிகச் சிறு சொத்துக்களைப் பதிய வந்தால் கட்டணம் இல்லை என்று வரையறுத்தது வரை, சில ஆக்கபூர்வமான விஷயங்கள் செய்யப்பட்டாலும், துறையில் முழுமையாக முறைகேடுகளைக் களைய முடியவில்லை. மேல்கொண்டு பணம் கொடுத்தால் எந்த முறைகேடுகள்கொண்ட பத்திரத்தையும் பதிவு செய்துவிடலாம் என்ற சூழ்நிலை நிலவுவதாகச் சொல்கிறார்கள். இந்த முறைகேடு காரணமாக சப் ரிஜிஸ்டர்கள் சஸ்பெண்ட் ஆவதும் அதிகமாக நடக்கிறது. இப்படி நடக்கும் இடங்களில் புதிய சப் ரிஜிஸ்டர்கள் நியமிக்கப்படுவதும் இல்லை. இரண்டு மூன்று இடங்களுக்கு இன்ஸ்டால்மென்ட்டில் சப் ரிஜிஸ்டர்கள் வந்து போகும் நிலைமை பல இடங்களில் இருக்கிறது. இப்படிப்பட்டவர்களால் குற்றங்கள் நடக்காமல் தடுக்க எப்படி முடியும்? வடக்கு மாவட்ட பத்திரப் பதிவு அலுவகத்தின் மிக மிகச் சாதாரண ஊழியர் ஒருவரின் சட்டைப் பையில் இருந்து அலுவலகம் தொடங்கிய அரை மணி நேரத்தில் சுமார் 7 ஆயிரம் எடுத்து கைது செய்தது போலீஸ். அப்படியானால், ஒரு முழு நாள் வசூல் என்ன? அதுவே மேல் அதிகாரியாக இருந் தால் எவ்வளவு? இதுவும் தமிழகம் முழுவதுமான தொகை எவ்வளவு? கூட்டிப் பார்த்தால் கண்ணைக் கட்டிவிடும்!

'சுத்தப்படுத்த முடியாத துறை' என்று பெயரெடுக்க வைத்திருப்பது சுரேஷ் ராஜனுக்குப் பெருமையைத் தராது. இதில் தனி ஆதிக்கம் செலுத்துவதாகக் குறிப்பிடப்படும் 'ஒரு நபர்' யாரென்று நாம் சொல்லி அமைச்சர் அறிய வேண்டியது இல்லை. இன்று இல்லாவிட்டாலும், விடாது கருப்பாகத் தொடரும் வில்லங்கங்கள் அந்த நபரால் செய்யப்படுவதாகக் கோட்டை வரை குமுறல் கேட்கிறது.

அடுத்துச் சொல்ல வேண்டியது சுற்றுலாத் துறையைப்பற்றி! உண்மையில், ஓர் அமைச்சர் தன் தனி உழைப்பால் ஊரே வியக்கும் வண்ணம் பேரும் புகழும் அடைய முடியுமானால் அது சுற்றுலாத் துறை தான். மாமல்லபுரம் தொடங்கி கன்னியாகுமரிக் கடற்கரை வரை தமிழகம் மிகப் பெரிய சுற்றுலாத் தலம். பாரம்பர்யம் மிக்க இடங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், மலை வாசஸ்தலங்கள், அருவிகள் எனத் தனித்தனி சுற்றுலாப் பயணத் திட்டங்களைப் போட்டு, சிறுசிறு குறைபாடுகள் இருந்தாலும் பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால், இந்தத் தலங்களைப் பராமரிப்பது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஊழியர்களின் குறைபாடா, அல்லது அதற்காக ஒதுக்கும் நிதிப் பஞ்சமா? ஆர்வக் குறைபாடா எனத் தெரியவில்லை. தமிழ்நாடு ஹோட்டல்களின் நிலைமைதான் பரிதாபம். தனியார் முதலாளிகளுக்குப் பெரும் லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் ஹோட்டல் தொழிலை, அரசாங்கத்தால் மட்டும் ஏன் நடத்த முடியவில்லை? சில இடங்களில் தமிழ்நாடு ஹோட்டல்கள் தனியாருக்கு லீஸுக்குக் கொடுக்கப்பட்ட கதைகளும் உண்டு. இதைவிடக் கொடுமை என்ன இருக்க முடியும்? இந்தத் தொழிலை ஒழுங்காக நடத்தினால், பெருமளவிலான லாபத்தை அது அரசாங்கத்துக்கு ஈட்டித் தந்திருக்கும். மிகச் சிறு விஷயங்களில் காட்டப்படும் அலட்சியங்கள், ஒரு துறையையே காலப்போக்கில் சவலைப் பிள்ளையாக மாற்றிவிடுகிறது.

எதிரிகளைக் கண்காணிப்பதிலும் துணை முதல் வரைக் கவனிப்பதிலும் காட்டுகிற அக்கறையில், கொஞ்சமேனும் துறைக்கும் செலுத்தப்பட்டு இருந் தால், சுரேஷ் ராஜனுக்குப் பெருமைகள் ஒருவேளை வரக்கூடும்!

                            
        

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க