மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

வீராசாமி... பிரஸ்காரங்களைக் கூப்பிட்டு இந்த அறிக்கையைப் படிய்யா!' என்று கருணாநிதி சொன்னதும், பத்திரிகையாளர்கள் முன்பாக உட்கார்ந்தாராம் ஆற்காடு வீராசாமி.

'ஆற்காடு வீராசாமி என்கிற நான், இன்று முதல் தி.மு.க-வைவிட்டு விலகிக்கொள்கிறேன்!' என்று வாசித்தாராம். பதறிய பத்திரிகையாளர்கள், 'என்ன சார் ஆச்சு உங்களுக்கு? அதிர்ச்சியான நியூஸை இவ்வளவு அமைதியா சொல்றீங்க?' என்று ஒரு நிருபர் கேட்டாராம். 'அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தலைவர் கூப்பிட்டு, இந்தக் காகிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். நான் படிச்சேன். அவ்வளவுதான்!' என்று சொல்லிவிட்டு உள்ளே போன ஆற்காடு, 'சொல்லியாச்சு தலைவரே!' என்று சொல்லி, கருணாநிதிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாராம்!'

ஆற்காடு வீராசாமிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குமான அந்நியோன்ய நட்பு குறித்து அறிவாலயம் வட்டாரத்தில் சொல்லப்படும் ஜோக் இது. அந்த விசுவாசம் இன்று வரை மாறாமல் இருவரும் இருக்கிறார்கள் என்பது அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் அதிசயமான ஒன்றுதான்!

"ஆற்காடு வீராசாமியைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். அந்த அளவுக்குத் தொண்டு உள்ளம், தியாக மனப்பான்மை, உழைக்கும் திறன், இந்த இயக்கத்தை உயிர்மூச்சாகக் கருதுகின்ற நெஞ்சுரம்கொண்டவர். என்.வி.நடராஜனுக்குப் பிறகு, எறும்பின் சுறுசுறுப்பும், தேனியின் அக்கறையும், இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றும் மனப்பான்மையும்கொண்டவர் யாராவது இருக்கிறார்களா என்று அண்ணாவும், பேராசிரியரும், நானும் எண்ணியபோது, கிடைத்த புதையல்தான்... ஆற்காடு வீராசாமி!" என்று கருணாநிதியால் மனம் திறந்த பாராட்டைப் பெற்ற பாக்கியம் இவருக்கு உண்டு. இந்த மாதிரியான வார்த்தைகள் இன்றைய கேபினெட்டில் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது!

வீராசாமியின் சொந்த ஊர், ஆற்காடு அருகில் உள்ள குப்பாடிச்சத்திரம் கிராமம். மின்சார வாரியத்தின் ஸ்டெனோகிராஃபராக வேலை கிடைத்ததால், சென்னை வந்து புரசைவாக்கம் பகுதியில் குடியிருந்தார். அதே பகுதியில், வெள்ளாளர் தெருவில் பேராசிரியர் அன்பழகனின் வீடு இருந்தது. அவரது அறிமுகம் வீராசாமிக்குக் கிடைத்தது. பேரறிஞர் அண்ணா சென்னை வரும்போது, அன்பழகனின் வீட்டில்தான் அதிகம் தங்குவார். அண்ணாவின் அறிமுகமும் வீராசாமிக்கு வாய்த்தது. கருணாநிதிக்கு அத்தியந்த நண்பராக ஆவதற்கு முன்பே, அன்பழகனுக்குத்தான் வீராசாமி நெருக்கமாக இருந்தார். அதைவிட முக்கியமாக, கருணாநிதி - அன்பழகன் இருவருக்கும் கசப்பு ஏற்படும் சூழல் நிலவினால், அதை இரண்டு தரப்புக்கும் இணக்கமாக எடுத்துச் சொல்லி, குழப்பங்களைத் தவிர்ப்பவரும் இவரே. "நானும் அன்பழகனும் இவ்வளவு நெருக்கமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் கேட்பார்கள். அதற்கு ரகசியமான காரணம்... ஆற்காடு வீராசாமிதான்!" என்று கருணாநிதியே ஒரு கல்யாண வீட்டில் போட்டு உடைத்தார். அதாவது, யாருக்கும் நோகாமல் தீர்ப்பு சொல்லி, இரண்டு தரப்பையும் ஏற்றுக்கொள்ளவைப்பதில் சமர்த்தர் ஆற்காடு.

தி.மு.க. ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றிய முதல் தேர்தலான 1967-ம் ஆண்டில், ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ-வாக வீராசாமி வென்றார். அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் வென்றார். அதை அடுத்த 10 ஆண்டுகள் மேலவை உறுப்பினராக இருந்தார். 89 தேர்தலில் புரசைத் தொகுதியைக் கைப்பற்றினார். அடுத்த தேர்தலில் தோல்வி. அடுத்து நடந்த மூன்று தேர்தல்களிலும் அண்ணா நகர் தொகுதியில் நின்று வென்றார். ஆறு முறை எம்.எல்.ஏ-வாகவும், மூன்று முறை அமைச்சராகவும் வலம் வந்தார்.

முதல்முறை உணவுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை அமைச்சர் வீராசாமி சரியாகக் கவனிக்கவில்லை என்று கணித்த கருணாநிதி, கல்தா கொடுத்தார். 'ஆற்காட்டாரையே நீக்கிவிட்டாரே' என்று கருணாநிதியைப் பார்த்து அத்தனை மந்திரிகளும் பயந்தார்கள். 'உணவுத் தட்டுப்பாட்டுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏதோ பெர்சனல் கோபம்' என்றும் சொன்னார்கள். ஒரு சில மாதங்களில் மறுபடியும் மந்திரி ஆனார் ஆற்காடு.

96 - 2001 காலகட்டம்தான் அவர் 'நிழல் முதலமைச்சர்' என்று சொல்லும் அளவுக்குக் கொடி கட்டிப் பறந்த காலகட்டம். கோபாலபுரம் வீட்டில் நிற்பதைவிட அதிகமான கார்கள் அதிகாலை முதலே வீராசாமியின் அண்ணா நகர் வீட்டில் நிற்கும். இந்த அரசாங்கத்தை நகர்த்துபவரே ஆற்காட்டார் என்று பெயர் வாங்கினார். அவர் நினைத்தால் மட்டுமே ஆட்சியிலும் கட்சியிலும் எதையும் செய்ய முடியும் என்ற சூழ்நிலை நிலவியது. முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் போன்றவர்களே இவரது வளர்ச்சியைப் பார்த்து பொருமினார்கள். "தலைவருக்குப் பின்னால் வேட்டியைப் பிடித்துக்கொண்டு அலைவதைவிட, நிர்வாகத்தை அவர் ஒழுங்காகக் கவனிக்க வேண்டும்!" என்று முரசொலி மாறனே நிர்வாகக் குழுவில் கர்ஜித்தார்.

தி.மு.க. உள்கட்சித் தேர்தல் குழப்பங்களைத் தன்னுடைய சாமர்த்தியத்தால் ஆற்காடு தவிர்த்து வந்தார். இது பலரையும் கோபப்படுத்தியது. "என்ன தேர்தல் நடத்துகிறீர்கள்? தலைமைக் கழகத்தில் உட்கார்ந்துகொண்டு இன்னாரை ஜெயிக்க வை என்று வீராசாமி சொல்கிற ஆளை ஜெயிக்கவைக்கிறீர்கள்? இதற்குப் பெயர் ஜனநாயகத் தேர்தல் அல்ல; வீராசாமி பாணித் தேர்தல். அவர் கையில் இருக்கிற போனைப் பிடுங்கினால்தான், கட்சி உருப்படும்!" என்றும் முரசொலி மாறன் குற்றம் சாட்டினார்.

யார் எதைச் சொன்னாலும், ஆற்காட்டாருக்குக் கோபமே வராது. "தலைமை கட்டளையிடுவதை நான் செய்கிறேன்!" என்று மட்டும் சொல்வாரே தவிர, விளக்கம் தர மாட்டார். அதாவது, கருணாநிதி தான் செய்ய வேண்டியது அனைத்தையும் வீராசாமி மூலம் செய்வார். அதனால் ஏற்படும் கெட்ட பெயர் அனைத்தும் வீராசாமியைச் சாரும். அதுபற்றிய கவலையும் அவருக்கு இருந்தது இல்லை!

'தலைவருக்கு அருகில் ஆற்காடு இருந்த காலம் தொண்டர்களின் பொற்காலம்தான். தலைமைக்கு ஒரு கருத்து போக வேண்டும் என்று நினைத்து அவரிடம் சொன்னால், நிச்சயம் கொண்டுபோவார். தலைமையிடம் இருந்து அவர் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது தொண்டர்களுக்குத்தான் இழப்பு!' என்ற கருத்து, தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது. வீராசாமியை அந்நியப்படுத்தியதும் இந்தக் குணம்தான். 'அப்பாவிடம் எல்லா விஷயத்தையும் போய் சொல்லிவிடுகிறார்' என்ற மகன்களின் கோபமும், அழகிரி - மாறன் தகராறுகளை ஆற்காடு வீராசாமிதான் அதிகப்படுத்திவிட்டார் என்ற மாறன் சகோதரர்களின் வருத்தமும், கருணாநிதியின் காரில் இடம் பிடிக்க பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா நடத்திய கூத்துக்களும் இணைந்து, ஆற்காடு வீராசாமியை அண்ணா நகர் வீட்டுக்குள் முடக்கிவைக்கக் காரணமாகிவிட்டன!

2001 தேர்தலில் தி.மு.க. தோற்று, கருணாநிதியைக் கழுத்தைப் பிடித்து ஜெ. போலீஸ் தூக்கியபோது, அந்த நியூஸே தெரியாமல், அப்போலோ மருத்துவமனையில் இருந்தார் ஆற்காடு. ஒரு திருமணத்துக்காக மும்பை சென்றிருந்தவர் ஹோட்டலில் விழுந்து இடுப்பை ஒடித்துக்கொண்டார். அப்போலோவில் வலதுபுற இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூன்று நாட்கள் மயக்க நிலையில் இருந்தார். சிறையில் இருந்து விடுதலையான கருணாநிதியும் அப்போலோவுக்கு சிகிச்சைக்குச் செல்ல... ஆற்காட்டாரைப் பார்த்தார். "என் வாழ்நாள் முழுக்க உங்க பக்கத்துலயே இருந்தேன். இப்படி ஒரு அநியாயம் நடக்கும்போது உங்க பக்கத்துல இல்லையே!" என்று இவர் அழ... பதிலாக அவர் அழ... குணச்சித்திரக் காட்சியாக இருந்தது அந்த நேரம். அதன் பிறகு, ஸ்டிக் ஊன்றித்தான் நடந்து வந்தார்.

இம்முறை மந்திரி ஆன முதல் இரண்டு ஆண்டுகள் ஆக்டிவ்வாகத்தான் இருந்தார். ஆனால், அடுத்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதும், அவரால் துறையைக் கவனிக்க முடியவில்லை. அனைவரும் அவரை விலகி இருக்கவே சொன்னார்கள். கருணாநிதியின் ஆசையும் அதுவாகத்தான் இருந்தது. ஆனால், வீராசாமியால் பதவியை விட்டுத்தர முடியவில்லை. "அடுத்த தடவை நான் ஸீட் கேட்கலை... அதனால, இந்த முறை கடைசி வரைக்கும் மந்திரியா இருந்துடுறேன் தலைவரே!" என்று ஆற்காட்டார் வைத்த கோரிக் கையை கருணாநிதியால் தட்ட முடிய வில்லை. அதிகாரிகளிடம் மிக நுணுக்க மான கேள்விகள் கேட்கக்கூடியவர்,சட்ட சபையில் குறிப்புகள் இல்லாமல் இரண்டு மணி நேரம் பேசக்கூடியவர், முடிவுகளை விரைவாக எடுக்கக்கூடியவர், துணிச்சலாக கருத்துக்களைக் கூறக்கூடியவர் என்று எல்லாம் இதுவரை பேர் எடுத்த ஆற்காடு வீராசாமி, இவை அனைத்துக்கும் நேர்மாறாக இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்துகொண்டார். கட்சியின் அதிகாரம் வாய்ந்த பொருளாளர் பதவியே அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சியின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்க்கும் மின்வெட்டுப் பிரச்னை, ஆற்காடு வீராசாமியை அவமானத்தால் தலை குனியவைத்தது.

'அழிந்துபோன எங்களின் வாழ்க்கையை மீட்ட வள்ளலே' என்று பெட்ரோமாக்ஸ், அரிக்கேன் விளக்கு, மெழுகுவத்தி, காடா விளக்கு, தீப்பந்த உற்பத்தியாளர் கள் சங்கம் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு, இந்த விவகாரம் அவரது அனைத்துத் தகுதிகளையும் கேள்விக்கு உள்ளாக்கியது.

இப்போதுதான் மந்திரிக்கு கருணாநிதியை அருகில் இருந்து கவனிக்கும் கஷ்டம் இல்லையே. மின்சாரத்தைக் கவனிக்கக் கூடாதா?

                            
        

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick