மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/10/2010)

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நான் புல்டோசர்! பிடிக்காததைப் பண்ணினா, நசுக்கிடுவேன்!" என்று தன்னிடம் சொல்லிய கருணாநிதியிடம் கோபம்கொண்டு வைகோ ஆரம்பித்த ம.தி.மு.க-வில் ஐக்கியமானார் செல்வராஜ். 'இனிமே அங்க இருக்க முடியாது!' என்று தன் வசம் இருந்த அத்தனை நிர்வாகிகளையும் ஒரே ராத்தியில் ஒன்று திரட்டியவர். காலத்தின் கோலம்... இன்று அதே கருணாநிதியின் அமைச்சரவையில் செல்வராஜும் ஒரு மந்திரி!

செல்வராஜுக்கு ஜூனியர்தான் அமைச்சர் கே.என்.நேரு. ஆனால், அமைச்சரவையில் இன்று சர்வ வல்லமை பொருந்தியவராக நேரு வலம் வர, இவரோ 'அவருக்குப் பின்னால் அரசியலுக்கு வந்தவர்' என்பதுபோன்ற முகபாவத்துடன், கண்களை அப்பாவியாக உருட்டி உருட்டிப் பார்த்து, ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டு இருப்பார். அமைச்சர்கள் கூடி இருக்கும் இடங்களில், மற்றவர்களிடம் வம்பு பேச்சுக்களை வைத்துக்கொள்ளாமல் அடக்கி வாசிப்பார். காரணம், எல்லா அமைச்சர்களும் நேருவுக்கு வேண்டப்பட்டவர்கள். யார் எப்படிப் போட்டுக்கொடுப்பார்களோ என்ற பயம். எனவே, தான் உண்டு தன்னுடைய 'இந்து' பேப்பர் சுடோகு உண்டு என்று அதை நிரப்புவதிலேயே கவனமாக இருப்பார். தனக்கான கட்டம் காலியாகிவிடக் கூடாது என்ற கவலை மட்டும் எப்போதும் உண்டு!

இன்றைய பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமங்கலம், செல்வராஜின் சொந்த ஊர். அப்பா நடேசன், பஸ் டிரைவராக இருந்தார். அந்தக் காலத்திலேயே சொந்தமாக ஒரு லாரியும் வைத்துஇருந்தார். விடுமுறை நாட்களில் தானே லாரியை எடுத்துச் சென்று சரக்குகளை ஏற்றி இறக்கி வருவார். இந்த வருமானத்தால் வசதிகள் கூடி, 10 லாரிகள் சேரும் அளவுக்கு வளர்ந்தார். நிலங்களும் வாங்கப்பட்டன. மகன் செல்வராஜை, பொறியியல் படிக்கவைத்தார். பொதுப் பணித் துறையில் பொறியாளராக பவானிசாகர் அணைக்கட்டில் வேலைக்குச் சேர்ந்தார் செல்வராஜ். கூடவே, லாரி தொழிலையும் கவனித்து வந்தார் இவர். அந்தக் காலக்கட்டத்தில் திருச்சி தி.மு.க-வில் முக்கியமானவராக இருந்தவர்கள், அன்பில் தர்மலிங்கமும் ஜே.எஸ்.ராஜுவும். இந்த ராஜு எம்.பி-யாகவும் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். கட்சிக் கூட்டங்கள், மாநாடுகளுக்கு அப்போதுஎல்லாம் லாரியில்தான் ஆட்கள் வருவார்கள். 10-க்கும் மேற்பட்ட லாரிகள் வைத்திருந்த செல்வராஜ் குடும்பத்திடம்தான், அதை வாடகைக்கு எடுத்துச் செல்வார் ராஜு. இதனால், ராஜுவின் அறிமுகம் செல்வராஜுக்குக் கிடைத்தது. மேலும், பூவலூர் தி.மு.க. நகரச் செயலாளராக இருந்தவர், செல்வராஜின் அக்கா வீட்டுக்காரர். அரசியல் ஆர்வம் இப்படித்தான் அரும்பியது.

1980 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயம் அது. திருச்சி தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக நிற்கலாம் என்ற ஆசையுடன் செல்வராஜ் இருந்தார். அவரை அன்பில் தர்மலிங்கத்திடம் அழைத்துச் சென்றபோது, 'படித்த பையன். அந்தப் பகுதியில் பெரும்பான்மை சமூகமான முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவன். இவனுக்குப் பதவியை வாங்கிக் கொடுத்தால், தன்னை மதிப்பானா' என்று தயக்கம் காட்டினாராம். ஆனால், அன்றைக்கு முத்தரையர் சமூகத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர், புதுக்கோட்டை குல.செல்லையா. கருணாநிதி இவருக்கு ஸீட் தர மறுத்ததால், தனியாக நின்று ஜெயித்தவர். 'என்னுடைய ஆட்சியைக் காப்பாற்ற ஒரு ஸீட் தேவை என்றால்கூட செல்லையாவைச் சேர்க்க மாட்டேன்' என்று கருணாநிதி சொல்லும் அளவுக்குக் கடுப்பேற்றிய அவரை, எம்.ஜி.ஆர். பிரிவுக்குப் பிறகு வலியப்போய் சேர்த்துக்கொண்டார் கருணாநிதி. கட்சியில் சேர்ந்த மறுநாளே தி.மு.க-வில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிக்கொண்டார் செல்லையா. 'எம்.ஜி.ஆர். பக்கத்துல செல்லையா இருக்கிறதுனால, முத்தரையர் சமூகத்துல படிச்ச பையனை அழைத்து வா!' என்று கருணாநிதி இட்ட கட்டளையை அன்பில் தர்மலிங்கத்தால் தட்ட முடியவில்லை. வேண்டா வெறுப்பாக கருணாநிதி முன்னால் செல்வராஜை அழைத்துச் சென்றார் அன்பில்.

"ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டணும், கட்டுவியா?" என்ற கேள்விக்கு யோசிக்காமல் தலையாட்டினார் செல்வராஜ். (அந்தக் காலக்கட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்த கட்சிக்காரர்கள் கம்மி!) 'இன்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்வியா?' அதற்கும் தலையாட்டினார். திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் ஆனார். வென்றார். செல்வராஜுக்கு ஏறுமுகம் ஆரம்பமானது மட்டுமல்ல... அன்பில் தர்மலிங்கத்தின் அரசியல் வாழ்க்கையும் கொஞ்சம் அசைய ஆரம்பித்தது. அடுத்து நடந்த உள்கட்சித் தேர்தலில், மாவட்டச் செயலாளர் பதவிக்கு அன்பிலை எதிர்த்து செல்வராஜ் நின்றார். வெற்றிபெறவைக்கப்பட்டார்.

செல்வராஜ் மாவட்டச் செயலாளர் ஆன கதையே சுவாரஸ்யமானது. 'அன்பில் தர்மலிங்கத்தின் அபார வளர்ச்சியைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்' என்ற தலைமையின் விருப்பத்தின் பேரிலேயே செல்வராஜ் மாவட்டச் செயலாளர் பதவிக்கு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் உண்டு. தலைமையின் விருப்பமோ... செல்வராஜின் ஆசையோ... உட்கட்சித் தேர்தலைவைத்து திருச்சி தி.மு.க-வில் பெரிய தகராறு நடக்கும் சூழ்நிலை. இதனைக் குறிப்பிட்டே, உட்கட்சி தேர்தல் நடத்த அன்பில் தர்மலிங்கம் நீதிமன்றத் தடை வாங்க... வாக்காளர்கள் அனைவரும் அறிவாலயத்துக்கே அழைத்து வரப்பட்டு, அங்குவைத்தே தேர்தல் நடத்தப்பட்டது. அதிக ஓட்டுக்கள் வாங்கி ஜெயித்ததாக செல்வராஜ் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

இப்படி வளர்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டு இருந்த செல்வராஜின் அரசியல் கிராஃப், அடுத்து சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட்ட செல்வராஜுக்குத் தோல்வி! அடுத்து 89-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முசிறி சட்டமன்றத் தொகுதிக்கு செல்வராஜுக்கு ஸீட் கொடுக்கப்பட்டது. லால்குடி வேட்பாளர் கே.என்.நேரு. அந்தத் தேர்தலில் நேரு ஜெயிக்க... செல்வராஜுக்குத் தோல்வி. திருச்சிக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதற்காக நேருவுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி தரப்பட வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இப்படி இரு வகையிலும் செல்வராஜுக்குப் பாதிப்பு. 91-ம் ஆண்டு திருச்சி தொகுதிக்கு ஸீட் கொடுக்கப்பட, இம்முறையும் தோல்வி.

அப்பா அன்பிலை எதிர்த்து அரசியல் நடத்திய செல்வராஜுக்கு மகன் அன்பில் பொய்யாமொழி அடுத்த குடைச்சலாக உள்ளே நுழைந்தார். பொய்யா மொழிக்கு ஸ்டாலின் ஆசீர்வாதம் அதிகமாகவே இருந்தது. உடனே, எதிர்ப் பக்கம் பார்த்த செல்வராஜுக்கு வைகோ தெரிந்தார். வைகோவை வைத்து திருச்சியில் கூட்டம் போட ஆரம்பித்தார் செல்வராஜ். கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள வார்த்தைகளை அப்போதுதான் கருணாநிதி பயன்படுத்தி எச்சரித்தார்.

கருணாநிதி - வைகோ கசப்பு வந்த மூன்றாவது நாளே தன் வசம் இருந்த 32 ஒன்றியச் செயலாளர்கள், 4 நகரச் செயலாளர்களை அழைத்து வந்து, 'இனி, தனி சமையல்தான்' என்று அண்ணாநகரில் இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டில் கர்ஜித்தார். அந்தக் கட்சியில் முக்கியமானவராக வலம் வந்தார். 96-ல் ம.தி.மு.க. சார்பில் முசிறியில் ஸீட் கொடுக்கப்பட... தோல்வியே கிடைத்தது.

அந்தத் தேர்தலுக்குப் பிறகு, வைகோவின் கொள்கைகள் பிடிக்கவில்லை என்று காரணம் சொல்லிவிட்டு, ம.தி.மு.க-வில் இருந்து வெளியேறி, தாய்க் கழகமான தி.மு.க-வில் இணைந்தார். இங்கும் சிக்கல். ம.தி.மு.க-வுக்குச் சென்றபோது, அவருடன் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் உடன் சென்றனர். திரும்பி வந்தபோது, அவர்கள் கூட வரவில்லை. இது அவரது சறுக்கலுக்கு ஒரு காரணமாகிவிட்டது. இடைப்பட்ட காலத்தில், தி.மு.க-விலும் தலைகீழ் மாற்றங்கள். திருச்சி மாவட்டக் கழகச் செயலாளராக நேரு இருக்க... கட்சியில் உரிய முக்கியத்துவம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை.

2001-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ஸீட் கொடுக்கப்படவில்லை. '10 வருஷம் ஆச்சுண்ணே! யாருமே திரும்பிப் பார்க்க மாட்டேன்றாங்க!' என்ற வருத்தத்தில் தொடர்ந்தார். அதன் பின்னர், 2006 சட்டமன்றத் தேர்தலில் முசிறியில் வாய்ப்பு கொடுக்கப்பட... ஜெயித்தார். முதல் முறையாக மந்திரி ஆனார். இப்படி மந்திரிப் பதவியைப் பிடிக்கவே கட்சியில் கால் நூற்றாண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை.

முதல் பதவியே எம்.பி-யாக இருந்ததால், முரசொலிமாறன் அறிமுகம் கிடைத்தது. பொய்யாமொழி இருந்ததால், ஸ்டாலினை நெருங்க முடியாத நிலை. இப்போதும் அவருக்கு குடைச்சல் கே.என்.நேருதான். 'நான்தான் கட்சியில சீனியர். ஆனா, எனக்கு ஜூனியராக் கட்சிக்கு வந்தவங்களுக்குக் கீழே நான் வேலை செய்ய வேண்டி இருக்குது. அமைச்சர் பதவியே வேணாம். எல்லாத்தையும் விட்டுட்டுப் பேசாம ஊருக்குப் போய் விவசாயம் பார்க்கலாம்னு இருக்கேன்' என்று நெருங்கிய நண்பர்களிடம் மனம்விட்டுப் புலம்ப மட்டுமே செல்வராஜால் இப்போது முடியும். அதே நேரத்தில், செல்வராஜ் எதற்கும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்ற புகார்களும் நேரு தரப்பில் இருந்து தலைமைக்குச் சென்றபடி இருக்கிறது. மாவட்டச் செயலாளரின் படம் இல்லாமல் எந்த பேனரும் அடிக்கக் கூடாது. செய்தித்தாள் விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது என்பது தி.மு.க-வில் எழுதப்படாத விதி. அதைமீறி, கட்சி பத்திரிகையான முரசொலியிலேயே மாவட்டச் செயலாளரின் படம் இல்லாமல் தி.மு.க-வின் திருச்சி பொதுக்கூட்ட விளம்பரங்களை செல்வராஜ் கொடுக்கிறார் என்று புகார்கள் அனுப்பியிருக்கிறார்கள் எதிர்த்தரப்பினர்.

வாரிசு கலாசாரம் இல்லாமலா? மகன்கள் கலை ராஜா, கருணைராஜா. தலைவரின் பெயரில் பாதியை எடுத்து மகன்களுக்குச் சூட்டி இருக்கிறார் செல்வராஜ். இவர்கள்தான் ஆல் இன் ஆல்! மரங்களுக்கு நம்பர் எழுதுவது, புலிகள் கணக்கெடுப்பு போன்ற வனத் துறை தொடர்பான பணிகள் அனைத்தும் இவர்கள் முடிவு செய்யும் நபர்களுக்கே போவதாக துறை வட்டாரத்தில் பேச்சு. பினாமிகள் என்று சொல்லிப் பலரும் வலம் வருகிறார்கள். காவிரிக் கரைகள், பாசன வாய்க்கால் கரைகள் பலப்படுத்துவது உள்ளிட்ட இன்ன பிற துறைகளின் கான்ட்ராக்ட் வேலைகளை நேரடியாக எடுத்துச் செய்கிறார்கள். சொந்த ஊரில் இருக்கும் விவசாய நிலங்களில் வாழை, நெல் பயிரிடப்படுகின்றன. எதிர்காலத் தேவைக்காக விவசாய நிலங்களை வாங்கிப் போடுவ தாகவும் தகவல். ஏரியாவில் இருக்கும் பிரபலக் கல்லூரிகள் குறித்தும் அரசல் புரசலாகச் சில செய்தி கள் உலவி வருகின்றன.

செல்வராஜுக்கு வழங்கப்பட்டுள்ள வனத் துறை... வளமான துறை! 'பட்ட மரத்தை வெட்டினாலும் 10 மரம் நட்டாக வேண்டும்' என்று இத்துறை சார்பில் பிரசாரம் செய்யப்படுகிறது. வன நாள் விழா, சுற்றுச் சூழல் நாள் விழா கொண்டாடப்படுகிறது. அதைத் தாண்டிய விஷயங்கள் வனத் துறையில் ஆர்வமாகச் செய்யப்படுவது இல்லை என்பதுதான் கானுயிர்கள் தொடர்பாக ஆராய்ச்சி நடத்துபவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. 'மரக் கடத்தல் முன்பைவிட இப்போது குறைந்திருக்கிறது. ஆனால், முற்றிலுமாகத் தடுக்கப் படவில்லை' என்கிறார்கள். கொடைக்கானல் மலைப் பகுதியில் நடக்கும் மரக் கடத்தலை ஆதாரத்துடன் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் சொன்னார். 'ஒரு மரம்கூட வெட்டப்படவில்லை' என்று செல்வராஜ் விளக்கம் அளித்தார். ஆனாலும், இன்று வரை அது நடக்கவே செய்கிறது. 'மனிதர்கள் யாரும் நுழையக் கூடாது' என்று கட்டுப்பாடு விதிப்பதால் மட்டும் காடுகளை வளர்த்துவிட முடியாது. கானகப் பாது காப்புக்கான பல்லுயிரியல் தொழில்நுட்பங்களை மேலைநாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அந்தக் கட்டத்தை நாம் இன்னும் யோசிக்கவே இல்லை. இன்று வனத் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இது தொடர்பான செய்திகளே தெரியவில்லை. நீலகிரியில் வாகனத்தில் ஒரு விலங்கு அடிபட்டுவிட்டதாம். அது பனிச் சிறுத்தை என்று அதிகாரிகள்பேட்டி தர, நேபாளத்தில் மட்டும்தான் பனிச் சிறுத்தை உண்டு என்று ஆய்வாளர்கள் சொல்ல, 'இல்லை... இல்லை அது காட்டுப் பூனை' என்று அப்புறமாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். அந்த அளவுக்குப் பின்தங்கிய அலுவலர்களைவைத்து எப்படிக் காடுகளை வளர்க்க முடியும்?

மேலும், ஆண்டுதோறும் நிலத்தைத் தனியாரிடம் இருந்து வாங்கி, அதைக் காடுகளாக அரசு மாற்ற வேண்டும் என்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை. ஐரோப்பிய நாடுகள், காடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது இப்படித்தான். ஆனால், நாம் ஏற்கெனவே இருக்கும் வனத்தையே அழித்துக்கொண்டு இருக்கிறோம்.

அதிகாரிகள் ராஜ்யம் நடக்கும் முக்கியமான துறை இது. அதை அமைச்சர் கட்டுப்படுத்தி, தனது தனி ஆர்வத்தைக் காட்டினால் மட்டுமே வனத் துறை வாழும். இல்லை என்றால், அதிகாரவர்க்கம் ரெஸ்ட் எடுக்க 'கெஸ்ட் ஹவுஸ்'களுக்கு கையெழுத்துப் போட மட்டுமேபச்சை மையைச் செலவழித்தார் என்ற குற்றச்சாட்டுதான் மிஞ்சும்!

                            
        

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க