மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

லடி அருணாவுக்கு அறிமுகம் தேவைஇல்லை. முழு நேர அரசியல்வாதியான அவர் தனது மகள் பூங்கோதை மீது அரசியல் காற்று பட்டுவிடாமல் மருத் துவம் படிக்கவைத்தார். உயர் கல்வி யைப் பெற லண்டனுக்கு அனுப்பினார். ஆனால் அவரது மரணம், மகளை அரசியலுக்குள் இழுத்து வந்தது. டாக்டர் பூங்கோதை, பூங்கோதை ஆலடி அருணாவாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆலங் குளம் தொகுதி வெயிலில் வேட்பாளராக இறக்கி விடப்பட்டார். அன்றைய தி.மு.க. அவரை அவ்வளவு முக்கியமானவராக நினைக்கவில்லை. தொகுதிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தவரை வேட்பாளர் ஆக்கியதைக் கறுப்பு - சிவப்பு கட்சித் தொண்டர்களும் ஆரம்பத்தில் வரவேற்கவில்லை. 'இந்தத் தொகுதி நமக்கு இல்லை' என்று ஏக்கத்துடன் பேசிக்கொண்டார்கள். ஆனால், அப்பாவின் அடை யாளம் இவருக்கான முழு அறிமுகமாக மாறி வெற்றி பெறவைத்தது. அமைச்சரவையில் இணைக்கப்பட்ட பின்னால், தனி அணியாக உருமாற ஆரம்பித்தார். இன்று மாவட்ட அரசியலில் பூங்கோதை... தவிர்க்க முடியாத சக்தி!

"சென்றன வருடங்கள் நான்கு
எம் தந்தையே எமைவிட்டுப் பிரிந்து
இன்று வரை புரியவில்லை
இப்படி ஒரு மரணம்
எப்படி வந்ததென்று - ஆனால்
சத்தியம் சாகாது.
உண்மை தூங்காது!
துவண்டுவிட மாட்டோம்.
நம்பிக்கை இழக்க மாட்டோம்.
ஏன் தெரியுமா தந்தையே?
எங்களுடன் இருக்கிறார்
நம் குடும்பத் தலைவர்
நம் தமிழினத் தலைவர்!"-
என்று ஆலடி அருணா நினைவு தினத்தின்போது எல்லாம் அமைச்சர் சார்பில் விளம்பரம் வரும். ஆனால், அவரது உள் மனசுக்கு எல்லாமே ராஜாத்தியும் கனிமொழியும்தான். பூங்கோதையை அமைச்சராக்கியதும், இழந்த அவரது மந்திரிப் பதவியை மீட்டுக் கொடுத்ததும் அவர்களே!

கனிமொழி தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே பூங்கோதையுடன் நெருக்கமான பழக்கம். அமைச்சரான பிறகும் கனிமொழியின் பி.ஏ. மாதிரி சுற்றுவதை பூங்கோதை விடவில்லை!

ஆனால், அந்த வீட்டோடு கருணாநிதி கோபித்துக் கொண்டு சில நாட்கள் போகாமல் இருந்தபோது சக மந்திரிகளும் அந்த வீட்டுக்கு எட்டிப்பார்க்க வில்லை. மற்றவர்கள் பரவாயில்லை. பூங்கோதையும் அப்படி 'ஸ்டிரைக்' செய்தது சம்பந்தப்பட்டவர் களுக்கு மன வருத்தத்தை அளித்ததாம்.

அரசு நிகழ்ச்சிக்காக நெல்லை வந்திருந்தார் துணை முதல்வர் ஸ்டாலின். மதிய உணவு நேரம் அது. அமைச்சர் மைதீன்கான் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அனை வரும் ஸ்டாலினின் அறை வாசலில் காத்து நின்றார்கள். அந்த நேரம் வந்தார் பூங் கோதை. 'அண்ணன் எங்கே?' எனக் கேட் டார். 'தளபதி சாப்பிட்டுட்டு இருக்காங்க. உள்ளே யாரையும் விட வேண்டாம்னு சொல்லியிருக்காங்க!' என்றது பதில். அதைப்பற்றிக் கவலைப்படாதவராக உள்ளே நுழைந்தார் பூங்கோதை. ஸ்டாலி னைப் பார்த்ததும் டாக்டராக மாறி அவருக்கு டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தார். இப்படி கட்சியினர் தயங்கும் காரியங்களை உரிமையுடன் செய்வதால், மேலிடத்துப் பிரதிநிதியாக மற்றவர்களால் பார்க்கப் படுகிறார். இது அவருக்கு அப்பா ஆலடி அருணா விட்டுச் சென்ற சொத்து!

அமைச்சர் பதவியுடன் அரசியலில் நுழைய சிலருக்குத்தான் கொடுப்பினை இருக்கும். அது இவருக்கு வாய்த்தது. மருத்துவர், பல ஆண்டு அனுபவம்கொண்டவர் என்பதால், சமூக நலத் துறையைக் கொடுத் தார் முதல்வர். முதல் பிரச்னை 'முட்டை' யில் ஆரம்பித்தது. கேபினெட் நடந்து கொண்டு இருக்கும்போதே அமைச்சரிடம் இது தொடர்பாக நேரடியாகவே கேட்டார் முதல்வர். 'அப்படி எல்லாம் நான் பண்ணலப்பா!' என்று பதில் அளித்தார் பூங்கோதை. பின்னால்திரும்பிய முதல்வர், தனது செயலாளரிடம் இருந்து ஒரு காகிதத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். சென்னைக்கு அருகில் இருக்கிற மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஃபேக்ஸ் கடிதத்தில் சில உத்தரவுகள் விதிமுறைகளை மீறியதாக அமைந்து இருப்பதை முதல்வர் வாசிக்க வாசிக்க, பூங்கோதை கண்ணில் நீர் வடிய ஆரம்பித்தது. அனேகமாக கேபினெட் கூட்டத்தில் முதல்முறையாக அழுத அமைச்சர் என்ற பெருமையையும் வாங்கிக்கொண்டார். முட்டை விஷயம், துணை முதல்வரின் கண்காணிப்புக்குப் போனது.

அடுத்ததாக, மகளிர் சுய உதவிக் குழுக்களை வளர்த்து எடுக்கும் விஷயத்தில் இவர் போதிய அக் கறை காட்டவில்லை என்ற வருத்தம் தலைமைக்கு ஏற்பட்டதால், அதுவும் சமூக நலத் துறையில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு துணை முதல்வர் வசமானது. பகுதி பகுதியாகப் பறிபோன சமூகநலத் துறையை, அடுத்து நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில் பூங்கோதை மொத்தமாக இழக்க வேண்டிய தாயிற்று.

2008-ம் ஆண்டு தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் உபாத்யாயா வுக்கும் இடையில் நடந்த உரை யாடல் பத்திரிகை ஒன்றில் வெளியானது.அதைத் தொடர்ந்து அமைச்சர் பூங்கோதை, உபாத்தியாயாவுடன் பேசிய தகவல் ஒன்றை ஜனதா கட்சித் தலை வர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார். 'பூங்கோதையின் உறவினரான ஜவஹர் என்பவர்

30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகவும் அதுபற்றிப் பதிவான வழக்கைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்' என்று இவர் சொன்னதாகவும் நீண்டன சுவாமியின் குற்றச்சாட்டுகள். மறுநாள் சபை கூடியதும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்த பிரச்னையை எழுப்பினார். தன் வாழ்நாளில் எந்தச் சூழ்நிலையிலும் இல்லாத அளவுக்கு முதல்வர் கருணாநிதி தனது குரலைத் தாழ்த்தி, வார்த்தைகளால் தலை கவிழ்ந்தார். 'லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டு இருப்பது வெட்கப்படக்கூடிய ஒன்றாகும். இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்!' என்றும் பூங்கோதை தன்னிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து இருப்பதாகவும் சொன்னார்.

"ஜவஹர் தொடர்பான விஷயத்தை ஒரு கோரிக்கை என்ற முறையில் பரிசீலிக்கத்தான் சொன்னேன். அது தவறு என்று இப்போது உணர்கிறேன்!" என்று ஒப்புக்கொண்டார் பூங்கோதையும். திரிபாதி - உபாத்தியாயா பேச்சு வெளியானது தொடர்பாக நீதிபதி ப.சண்முகம் தலைமையில் கமிஷன் அமைத் தார் கருணாநிதி. அந்த விசாரணைக் கமிஷனுடன் பூங்கோதை விவகாரத்தையும் விசாரிக்கலாமா என்று யோசிப்பதாக கருணாநிதி சொன்னார். ஆனால், அந்தக் கமிஷனின் வரம்புக்குள் இது வரவில்லை.

சில மாதங்கள் கடந்தன. கமிஷன் அறிக்கையும் வந்தது. 'சண்முகம் கமிஷன் அமைச்சர் பூங்கோதை மீது எந்தக் குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் தரப் படுமா என்று நல்லவர்கள் அனைவரும் எதிர் பார்க்கிறார்கள்' என்ற விநோதமான கோரிக்கையை வைத்தார் ஓர் உஷாரான எம்.எல்.ஏ. 'அப்படிக் கேட்கிற நல்லவங்க யாருங்க?' என்று மறுநாள் தனி அறையில் கிண்டல் அடித்தாராம் முதல்வர்.ராஜாத்தியும் கனிமொழியும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாகப் பார்த்து நித்தமும் சொல்லிச் சொல்லி பூங்கோதையை கேபினெட்டுக்குள் இணைத்தார்கள்.

சமூகநலத் துறையைத் தர மாட்டேன் என்று மறுத்த கருணாநிதி, தன் வசம் இருந்த தகவல்தொழில் நுட்பவியல்த் துறையைக் கொடுத்தார். எந்தத் துறையாக இருந்தால் என்ன 'சைரன்' இருந்தால்போதும் என்று பூங்கோதையும் ஏற்றுக்கொண்டார். சண்முகம் கமிஷனின் வரம்புக்குள் வராமல், ஆனால் அது தன்னைப்பற்றி எந்தக் குற்றச்சாட்டும் வைக்கவில்லையே என்று சொல்லி நிரபராதியான காட்சி, வேறு எவரது வாழ்க்கையிலும் நடந்து இருக்காது. இதற்குப் பிறகும் பூங்கோதைக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று யாராவது சொல்வார்களா என்ன?

ஆலடி அருணாவுக்கு, மதிவாணன், தமிழ் வாணன், அமுதவாணன், அன்புவாணன், எழில் வாணன் என்று ஐந்து வாரிசுகள் உண்டு. இதில் பூங்கோதையின் நிழலாக எழில்வாணன் வலம் வருகிறார். எப்போதும் அவருடன் இருப்பதோடு கட்சிக்காரர்கள் யாரையும் அண்டவிடுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் பலமாக இருக்கிறது. சிபாரிசுகள் அனைத்தும் அவர் மூலமாகவே நடக்கின்றன. கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம்கூட அவர் படாரெனப் பேசிவிடுவதாகப் புகார் பத்திரம் வாசிக்கிறார்கள். "மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களை கனிமொழி நடத்திட்டு வர்றாங்க. அதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஐ.டி. மினிஸ்டர்ங்கிற முறையில் பூங்கோதையிடம் கொடுத்து இருக்காங்க. நெல்லையில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் நிர்வாகிகள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு வேலை தரப்பட்டது. ஆனால் எழில்வாணன், மூத்த நிர்வாகிகளிடம்கூட 'அதைச் செய்யுங்க... இதைச் செய்யுங்க' என்று தேவை இல்லாமல் அதிகாரத் தோரணையைக் காட்டினார். அமைச்சரின் சகோதரர் என்பதால் சகிச்சுக்கிட்டோம்!' என்று கிசுகிசுக்கிறார்கள். ஆனால், அவர்தான் அமைச்சருக்கு முழு பலம் என்று சொல்பவர்களும் உண்டு. பூங்கோதை அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவருடைய குடும்பத்துக்கு ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி இருந்தது. பூங்கோதை அமைச்சரானதும் அந்தக் கல்லூரியின் வளர்ச்சி அபாரமானது. கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்களைத் தங்களுடைய கல்லூரியில் வைத்து அதனை நடத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாகவும் பேச்சு. கல்லூரி விரிவாக்கம் வேகமாக நடந்து வரும் நிலையில், புதிதாக நர்ஸிங் கல்லூரியும் தொடங்கி இருப்பது தொகுதி மக்க ளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

டைடல் பார்க் போன்ற தொழில்நுட்பப் பூங் காக்களை சென்னைக்குள் மட்டும் முடக்கிவிடாமல் கோவை, மதுரை, திருச்சி என்று பரவலாக்குவது இந்த அரசின் தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்று. அப்படி வளர்க்க நினைக்கும் சமயம், ஐ.டி. துறை உலக அளவில் தேக்கம் அடைந்தது ஒரு பின்ன டைவுதான். அந்தத் தொழில் மீண்டும் எழுந்து வரும்போது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறனுடைய ஐ.டி. மாணவர்களை உருவாக்குவதில் இத்துறை முன்முயற்சிகள் எடுத் தாக வேண்டும். ஆனால், 'தகவல் தொழில்நுட்பத் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை இருந்தும் தகுதியான மாணவர்கள் இல்லை' என்று பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒருவர் வருத்தப்படும் நிலை. இந்நிலை தொடர்ந்தால், நாம் அமைக்கும் அத் தனை டைடல் பார்க்குகளிலும் மற்ற மாநிலத்து மாணவர்கள் வந்து வேலை பார்க்கும் சூழல்தான் நிலவும். இந்தக் கவலையுடன் கல்வித் துறையையும் இணைத்து காரியம் சாதிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இருக்கிறது.

தனது நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே பூங்கோதையின் கவலையாக இருந்தால், என்ன செய்வது?

                            
        

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick