மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/08/2010)

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 

டந்த 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரம்... நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட ஏ.கே.எஸ்.விஜயனுக்கும் மதிவாணனுக்கும் போட்டி. அப்போதைய திருவாரூர் மாவட்டச் செயலாளரான கோட்டூர் ராஜசேகரின் ஆதரவுடன் நேர்காணலுக்குப் போனார் மதிவாணன். இரண்டு விரல்களில் மோதிரங்கள், கழுத்தில் தங்கச் சங்கிலி என மின்ன... கடுப்பானார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. "முதல்ல எளிமையா இருக்கக் கத்துக்கய்யா. நானே அண்ணா அணிவிச்ச ஒரு மோதிரம்தான் போட்டிருக்கேன்... நீ இப்படி மின்னுறியே?" எனத் திட்டினார். சீட் விஜயனுக்கே போனது. இதில் பரிதாபம் என்னவென்றால், உண்மையிலேயே அந்த மோதிரங்களும் சங்கிலியும் மதிவாணனுடையது இல்லை. அப்போது மிகுந்த வறுமையில் இருந்த மதிவாணன், தலைவரைப் பார்க்கச் செல்லும்போது கௌரவமாக இருக்க வேண்டுமே என்று நண்பர்களிடம் இரவல் வாங்கிப்போட்டு வந்தவை. கடன், சீட்டை முறித்துவிட்டது!

ஆரம்பத்தில் விதி இப்படி விளையாடினாலும், அதன் பிறகு சுற்றிச் சுற்றி சுக்கிர தசைதான் மதிவாணனுக்கு. அதற்குக் காரணம் நாகை அசோகன். மு.க.ஸ்டாலினுக்கு கட்சி எல்லைகளைத் தாண்டி நெருக்கமான நண்பராக இருந்தவர் நாகை அசோகன். அவருடன்தான் மதிவாணன் எப்போதும் இருப்பார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அசோகனுக்குத்தான் சீட் என்பது உறுதியாகி இருந்த நிலையில், அப்போதைய மாவட்டச் செயலாளரான பூண்டி கலைச்செல்வத்துக்கும் அசோகனுக்கும் பிரச்னை ஆரம்பமானது. பொதுவாகவே, தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சிக்கல் வரும்போது 'அவ்வளவாக' ஸ்டாலின் தலையிட மாட்டார் என்பதால், மனம் வெறுத்துப்போன அசோகன், அ.தி.மு.க. பக்கம் போய்விட்டார். அதுவரை அசோகனின் பக்கம் இருந்த மதிவாணன், உஷாராகி சட்டென 'பூண்டி' ஆதரவில் ஒதுங்க... அதற்கான கைம்மாறாக வாய்த்ததுதான் எம்.எல்.ஏ. சீட்!

இதற்கிடையில் ஸ்டாலினுக்கு எதிரான பிரசார பீரங்கியாக அசோகன் பயன்படுத்தப்பட்டார். அசோகனின் விமர்சனங்கள் ஸ்டாலினைக் கொந்தளிக்கவைத்தன. அதனால், அசோகனைக் கடுப்பாக்குவதற்காகவே 'மதிவாணன் ஜெயித்தால் மந்திரி!' என பிரசாரத்திலேயே கருணாநிதியை அறிவிக்கவைத்தார் ஸ்டாலின். 'ஆட்டக்காரி ஆகலைன்னு தோட்டக்காரியைச் சிங்காரி'த்த கதையாக திருவாரூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதும், பால் வளத் துறை மந்திரியாக அமர்த்தப்பட்டார் மதிவாணன்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, இந்தத் துறை கே.ஏ.கிருஷ்ணசாமிக்குத் தரப்பட்டது. 'பாலுக்கு ஒரு மந்திரி, மோருக்கு ஒரு மந்திரி... போகிற போக்கைப் பார்த்தால் தயிருக்கும் நெய்யுக் கும் மந்திரி போடுவார்கள்' என்று தி.மு.க. மேடைகளில் கிண்டல் மழை பொழிவார்கள். அதனால்தான் முந்தைய தி.மு.க. ஆட்சியில் க.சுந்தரத்துக்கு பால் வளத் துறை மற்றும் குடிசை மாற்று வாரியமும் இணைத்துத் தரப்பட்டது. மக்களின் வாழ்க்கையில் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்கிற துறை என்பதால், தனி அமைச்சகம் வேண்டும் என்று கருணாநிதி முடிவு எடுத்திருக்கலாம். அவரது அந்த ஆசையைப் பூர்த்திசெய்தாரா மதிவாணன்?

பால்... அத்தியாவசிய உணவுப் பொருட்களில் முக்கியமானது. தமிழகத்தில் தினந்தோறும் 26 லட்சம் லிட்டர் பால், ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 22 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள். மற்றவை பால் பொருட்களாகத் தயாரிக்கப்படுகின்றன. இவ்வளவு முக்கியமான பாலின் விலை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டே வந்திருக்கிறது. 'பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான விலையை உயர்த்தித் தரக் கோரிக்கை வைப்பதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்று காரணம் சொல்லப்படும். அதே நேரத்தில் பால் உற்பத்தியும் குறைந்துகொண்டே வருகிறது. அதைத் தடுக்க மந்திரியால் முடியவும் இல்லை.

மதிவாணனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தஞ்சை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகக் கைதானார்கள். ஆனால், கோவை ஆவினுக்குப் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்த அதிகாரி, தனக்குச் 'சரியாக வரவில்லை' என்றதும் அவரை அடுத்த ஊருக்கு மாற்றிப் பழிவாங்குவதை மட்டும் நிறுத்தவில்லை. சென்னை இணையத்துக்கு இணையாக மற்ற மாவட்ட ஒன்றியங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறை இன்னமும் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தவே இல்லை.

மதுரை ஆவின் குறித்து உயர் நீதிமன்றம் வலுவான உத்தரவுகளைப் போட்டு பல மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படி பால் வளத் துறையை உற்றுக் கவனிப்பவர்கள் எத்தனையோ புகார்களை அடுக்குகிறார்கள்.

திருவாரூரில் ஆவின் பாலகம், குளிரூட்டப்பட்ட பிரமாண்ட பால் பதனீட்டகம் உள்ளிட்ட வசதி களைச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியும் காற்றில் பறக்கிறது. மதிவாணன் அமைச்சராக அறிவிக்கப்பட்டபோது, ஓடாச்சேரி கிராமத்தில் இருந்த அவருடைய கூரை வீட்டைப் படமாகப் போட்டு அத்தனை மீடியாக்களும் முதல்வரைப் பாராட்டின. 'ஒரு குடிசை வீட்டை மட்டுமே கையிருப்பாகக்கொண்ட மதிவாணன் என்ற சாமானியனுக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் கருணாநிதி' என்று பத்திரிகைகள் மெச்சின. ஆனால், இப்போது மதிவாணன் வசிப்பது அதே கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பங்களாவில். 'வீடு மாறியதுபோலவே ஆளும் மாறி விட்டார்' என்பதுதான் திருவாரூர் குமுறலாக இருக்கிறது.

மதிவாணனின் தந்தை உத்திராபதி, திராவிடர் கழகத்தில் தீவிரப் பணியாற்றியவர். அதனால், சிறு வயதிலேயே மதிவாணனுக்கும் அரசியல் ஆர்வம். சட்டப் படிப்பு முடித்த மதிவாணன் 25 வயதிலேயே ஓடாச்சேரி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது டூ வீலர் ஒன்றைத் தவணைக் கடனில் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மதிவாணன் திண்டாடிய சோகத்தை இப்போதும் நினைவுகூர் கிறார்கள் ஊரில்.

1996-ல் திருவாரூர் ஒன்றியப் பெருந்தலைவரானபோதும் மதிவாணன் எளிமை மாறாதவராகவே இருந்தார். 'வாய்தா வக்கீல்' என்று திருவாரூர் வட்டாரத்தில் பிரபலம்.

இன்றைக்கு அமைச்சரை நெருங்குவதே அரிதான காரியமாகிவிட்டது. முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆனவுடனேயே அமைச்சரான பெருமிதம் அவர் மனதை மாற்றிவிட்டதோ என்னவோ? அவருக்கு சீட்டும் செல்வாக்குமிக்க பதவியும் கிடைக்கக் காரணமாக இருந்த திருவாரூர் தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த பூண்டி கலைச்செல்வத்தின் குடும்பத்துக்கு எதிராகவும் ஒரு கட்டத்தில் திரும்பியதுதான் அவர் 'அரசியல்வாதியாக' முழுப் பரிமாணம் அடைந்ததற்கு உதாரணம்.

ஒருநாள் காலையில் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து இருந்த பூண்டி கலைச்செல்வத்திடம் திருமணஅழைப் பிதழ் கொடுக்க வந்திருப்பதாக உள்ளே நுழைந்த இருவர், தாங்கள் கொண்டுவந்த தாம்பாளத்தில் இருந்து அரிவாளை எடுத்து அவரைச் சீவினார் கள். சம்பவ இடத்திலேயே அவர் கொல்லப்பட் டார். தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும்போது அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளரே கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் வகித்த மா.செ. பதவியை அவருடைய சகோதரரான பூண்டி கலைவாணனுக்குத் தர வேண்டும் என ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் புள்ளிகள் விரும்பியபோதும், போட்டிக்கு ஆட்களை நிறுத்திப் புயல் கிளப்பினார் மதிவாணன். அதையெல்லாம் தாண்டி மாவட்டச் செயலாளர் பதவியை கலைவாணன் கைப்பற்ற... இப்போது அவருக்கும் அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இதுவே, சாதிரீதியான மோதலாகவும் மாறி, ஒரு கட்டத்தில் அமைச்சருக்கும் கலைவாணனுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. கட்சி விவகாரங்கள் தொடங்கி கான்ட்ராக்ட் வரை இப்போதும் இரு தரப்புக்கும் கர்புர்தான்!

இந்தப் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லியே யாரையும் சேர்க்க மறுக்கிறாராம் அமைச்சர். அவரது அக்கா மகன் மற்றும் பாதுகாவலர்கள் நான்கு பேர் மட்டுமே எப்போதும் அவருடன் இருப்பார்கள். 'பாதுகாப்புக் காரணங்களுக்காக' பெரும்பாலும் அலைச்சலைக் குறைத்திருக்கிறார். திருவாரூர் பக்கம் ஆளைக் காணோமே என்று கேட்டால், 'தலைவர் அடிக்கடி ஊருக்குப் போக வேண்டாம்னு சொல்லி இருக்கார்' என்று பதில் தருகிறாராம் அமைச்சர்.

வரும் தேர்தலில் திருவாரூர் பொதுத் தொகுதி ஆவதால், பக்கத்தில் இருக்கும் கீவளூர் தொகுதியைக் குறிவைத்து இரண்டு ஆண்டுகளாக அங்கே அடிக்கடி வலம் வந்தார் மதிவாணன். ஆனால், அதுவும் பெண்களுக்கான ரிசர்வ் தொகுதியாக மாறப்போவதாக யூகம் கிளம்பியது. தொகுதிப் பிரச்னையாலும், உட்கட்சிப் பூசலாலும், வரும் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தாரோ என்னவோ... சமீபத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசியவர், "அமைச்சராக நான் கலந்துகொள்ளும் கடைசி விழாவாகவும் இருக்கலாம்!" எனச் சொல்லிக் கலங்கி இருக்கிறார்.

துணை முதல்வர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான மதிவாணன், சென்னையிலேயே தங்கிவிடப் போவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. விவசாய மண்ணில் இருந்து வந்தும் பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களைக் கடைசி வரை உணராதவராகக் காலம் தள்ளும் இவர் மீது முதல்வர் கருணாநிதிக்கே வருத்தம் உண்டு. பால் உற்பத்தியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்தியபோது, உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் மதிவாணன் திண்டாட, "உன்னோட துறைக்கும் நானே அமைச்சரா இருந்திருக்கலாம்யா!" எனக் கவலையோடு கமென்ட் அடித்தாராம் முதல்வர்!

சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறார் மதிவா ணன். அதற்காக துறையையும் கடைசியாக வைத்திருக்க வேண்டுமா என்ன?

                            
        

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க