மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

புதுச் சேலையுடன் புறப்பட்டு வாசலுக்கு வந்தார் தமிழரசி. காத்திருந்த வாகனத்தில்

 

பின்பக்கமாகப் போய் உட்கார்ந்தார். 'மேடம்... நீங்க முன்னாடி உட்காருங்க மேடம்' என்று பாதுகாவலர் பவ்யமாகச் சொன்னார். 'எனக்கு முன் சீட்ல உட்கார்ந்து பழக்கம் இல்லீங்க. நீங்க யாராவது உட்கார்ந்துக்கோங்க' என்று அதைவிடப் பவ்யமாகப் பதில் அளித்தார் அமைச்சர்.

'இல்ல மேடம், நீங்கதான் முன்னாடி உட்காரணும்' என்று சொல்லப்பட்டது. பயந்தபடியே முன் பக்கம் போனவர், இருக்கையின் ஓரத்தில் ஒண்டிக்கொண்டார். 'எனக்கு எதுக்குங்க இவ்வளவு பெரிய காரு?' என்று சொல்லிக்கொண்டார். வாகனம் புறப்பட்டது. சென்னையின் நெரிசலான அடையாறு பகுதியில் சைரன்கள் முழங்கப் பறந்தது. தன்னை மறந்துபோக ஆரம்பித்தார். இந்த நான்கு ஆண்டு காலமும் அவருக்குக் கனவு உலகத்தில் மிதப்பதுபோலத்தான் இருக்கிறது.

பரமக்குடியில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த தமிழரசி, மதுரை நாகனாகுளத்தைச் சேர்ந்த ரவிக்குமாரைக் கரம் பற்றும்போதுதான் அரசியல் காற்றும் லேசாகப்பட்டது. அப்போது ரவி, பால் வியாபாரத்தில் இருந்தார். தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த மூர்த்தி (சோழவந்தான் எம்.எல்.ஏ.) கண்ணில் சுறுசுறுப்பான வாலிபராக ரவி அறிமுகமானார். தி.மு.க. இளைஞர் அணியின் ஒன்றியத் துணை அமைப்பாளர் பதவி தரப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் வந்தபோது, இவர் குடியிருந்த மதுரை மேற்கு ஒன்றிய பெண் கவுன்சிலருக்கான ஒரு வார்டுக்கு ஆள் சிக்கவில்லை. 'தமிழரசிக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்களேன்' என்று மூர்த்தியிடம் சொன்னார் ரவி.

மிக மிக ஒல்லியாக வந்து நின்ற தமிழரசியைப் பார்த்த மூர்த்தி, "கவுன்சிலர் ஆகுறதுன்னா ஓரளவு படிச்சிருக்கணுமே... உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?" என்று இழுத்தார். "நல்லா எழுதுவேன்... படிப்பேன்" என்று ஆங்கிலத்தில் தமிழரசி பதில் அளித்தபோது அதிர்ந்துபோனது மூர்த்தி மட்டுமல்ல; கணவர் ரவிக்குமாரும்தான். பி.காம்., பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வாங்கித் தேறியவர் தனது மனைவி என்பதை அப்போதுதான் ரவியே அறிந்துகொண்டார். கவுன்சிலர் ஆனார் தமிழரசி. ஒன்றியத் தலைவராகவும் ஆனார். அந்த ஒன்றியத்தில் இருந்த 16 கவுன்சிலர்களில் பெரும்பான்மையை வைத்திருந்தது அ.தி.மு.க. அவர்கள்தான் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், இரட்டை இலைப் பிரமுகர் ஒருவர் தனது கொழுந்தியாளுக்கு அந்தப் பதவியைக் கேட்க, மேலிடம் மறுத்ததால்... அந்தப் பக்கம் இறக்கம் ஏற்பட்டு, தமிழரசி தலைவர் இருக்கையைக் கைப்பற்றினார்.

2006 தேர்தல் வந்தபோது, சமயநல்லூர் தொகுதியை தமிழரசிக்காகக் கேட்டார் மூர்த்தி. அழகிரியும் இதை ஏற்றார். தலைமை யின் நேர்காணலில் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்வி வந்தபோது, தலைவரே அதிர்ந்துபோகும் அளவுக்கு ஒரு தொகை யைச் சொல்லி, ஆதாரம் காட்டியதாக தமிழரசியைப் பற்றி மதுரையில் கதைகள் உலவுகின்றன. வெற்றியும் பெற்றார். 'மதுரையில பி.டி.ஆருக்கு மந்திரிப் பதவி கொடுக்கணும்... நீ இன்னொரு ஆளைச் சொல்லு' என்று கருணாநிதி கேட்க.... அப்போதும் மூர்த்தியைப் பார்த்தார் அழகிரி. அவர் தமிழரசியைக் கை காட்டினார். 'படிச்ச பொண்ணாய்யா?' என்று கேட்டிருக்கிறார் கருணாநிதி. 'டிகிரி இருக்கு... போதும்ல' என்றார் அழகிரி. இதெல்லாம் தெரியாமல், கணவருடன் சென்னைக்கு வந்து இறங்கினார் தமிழரசி.

டி.வி-யில் அமைச்சரவைப் பட்டியலில் யார் யார் பெயர்கள் இருக்கின்றன என்ற தகவல் ஓடியது. தமிழரசி என்ற பெயரைப் பார்த்ததும் சந்தோஷத்தில் பதறிப்போனார் தமிழரசி. ஆட்டோ பிடித்து அறிவாலயம் வந்து.... தலைவரைப் பார்த்து... கவர்னர் மாளிகை போய்... ஸ்கார்பியோ காரில் உட்கார்ந்தபோதுதான் முதல் பாராவில் சொன்ன சம்பவம் நடந்தது. இப்போது மூர்த்திக்கும் அவருக்கும் முறையான பேச்சுவார்த்தை இல்லை. தமிழரசி மாறிவிட்டாரா, அல்லது மூர்த்தி மரியாதைக் குறைவாக நடத்தினாரா என்ற விசாரணையில் கிடைப்பவை சில்லியான சம்பவங்கள். 'அரசியல்ல தன்னை யாரு வளர்த்துவிட்டாங்களோ... அவரையே ஒதுக்கிவெச்சிட்டாங்க. அன்னிக்கு மூர்த்தி அண்ணன் இவங்க பேரைச் சொல்லலேன்னா, தமிழரசி சட்டசபையில் ஏதோ ஒரு மூலையிலதான் உட்கார்ந்திருக்கும்' என்று மூர்த்தியின் ஆட்கள் சொல்கிறார்கள். 'மந்திரி ஆன பிறகும் பழைய மாதிரியே மூர்த்திக்குக் கை கட்டிச் சேவகம் பார்க்க முடியுமா?' என்று தமிழரசிக்கு நெருக்கமானவர்கள் வருந்துகிறார்கள். ஒரு பதவி, ஒரு நட்பை உடைத்துவிட்டது.

அழகிரியிடம் இருந்து தமிழரசியைப் பிரித்துவிட வேண்டும் என்று ஒரு குரூப் கங்கணம் கட்டிச் செயல்படுகிறது. ஆனால், 'அக்கா.... அக்கா' என்று காந்தி அழகிரியிடம் இவர் நெருக்கமாக இருப்பதால், எந்தச் சிக்கலும் இல்லை. கடந்த 4-ம் தேதி அமெரிக்காவுக்கு அழகிரி சென்றபோது, விமான நிலையத்தில் கடைசி வரிசையில் தமிழரசி காத்துஇருக்க.... 'எங்க அந்தம்மாவைக் காணோம்?' என்று வரச் சொல்லி... தமிழரசியிடம் பேசிவிட்டுத்தான் போனார். தமிழக அமைச்சரவையில் தலையை ஒரு பக்கமும், வாலை மறுபக்கமும் காட்டிக்கொண்டு இருக்கும் பலர் மத்தியில், தன்னை மட்டுமே நம்பி இருக்கும் இருவரில் ஒருவர் தமிழரசி என்பதால்தான் அழகிரியின் மனதில் தனி இடம்.

ஆரம்ப காலத்தில் தமிழரசியை ஓர் அப்பாவி என நினைத்தவர்களுக்கு மத்தியில் இன்று சொல்லப்படும் கதைகள், மலைப்பை ஏற்படுத்துகின்றன. மதுரை அண்ணா நகர், கே.கே. நகர் பகுதியில் சிலபல வீடுகளும்... அலங்காநல்லூர் கோம்பக்காடு நிலமும், பாலமேடு பகுதிக் காடும் கவனிக்கப்படுகின்றன. கணவர் ரவிக்குமார் சில கான்ட்ராக்ட்டுகளைக் கறாராகப் பேசுவதாகவும், சதவிகிதக் கணக்குகள் சளைக்காமல் போடப்படுவதாகவும் கிசுகிசுப்புகள். அந்த வட்டாரத்து எம்.எல்.ஏ. ஒருவரின் மனைவியே இந்தக் கதைகளை 'மதுர' குலுங்கச் சொல்லிப் புகைகிறார்.

பழைய பி.காம்., பெண்ணாக இல்லாமல், பாரம்பரிய அரசியல்வாதியாகவே தமிழரசியை இப்போது பார்க்க முடிகிறது. ஒடிசலான உடல், ஒட்டிய கன்னம், எளிமையான சேலை, எதற்கும் பயந்த கண்கள் என வலம் வந்தவர், இன்று சபையில் அனைவருக்கும் சமமாக நிற்கிறார். சட்டசபையில் சரளமாகப் பேசுகிறார், மானியக் கோரிக்கை விவாதங்களுக்குப் பதில் அளித்து மணிக்கணக்கில் உரையாற்றுகிறார், மதுரையில் யார் எங்கு தேதி கேட்டாலும், போய் அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறார். 'பெண்கள் நிறையப் படிக்க வேண்டும். எல்லாச் சாதிப் பெண்களும் அடிமைகள்தான். கல்விதான் அவர்களை மாற்றி அமைக்கிறது' என்று பாத்திமா கல்லூரியில் பாடம் எடுக்கிறார். 'மனிதர்களை நெறிப்படுத்த தெய்வ வழிபாடு தேவை' என்று அகில பாரத ஐயப்ப சேவை சங்க விழாவில் மனம் உருகிச் சொல்கிறார். ஆனாலும், இவரை ஒரு பிம்பம் மிரட்டிக்கொண்டே இருக்கிறது.

'மந்திரி ஆகி வந்ததுமே, அழகிரியுடன் இருக்கும் முக்கியமான நபர் கூப்பிட்டு, 'யார் எந்தப் பரிந் துரை செய்தாலும், இங்கே தகவல் சொல்லாமல் செய்யக் கூடாது'ன்னு சொல்லிட்டார். அதனால், யாருக்கு லெட்டர் பேடில் பரிந்துரை கொடுத்தாலும் அதைக் குறிச்சுவெச்சிருந்தாங்க. முதல் ஒரு வருஷம் சென்னைக்குப் போறதும் மதுரைக்கு வர்றதுமாத்தான் இருந்தாங்க. அதுக்குப் பிறகுதான் தன்னுடையதுறை யைப்பத்தியே யோசிக்க ஆரம்பிச்சாங்க' என்கிறார் மதுரைக்காரர் விவரமாக. தலித் பெண்கள் 100 பேருக்கு ஆண்டுதோறும் விமானப் பணிப்பெண் பயிற்சி தரப்படும் என்கிற அறிவிப்பு, 'தமிழரசி கொஞ்சம் வித்தியாசமானவர்போல' என்றுகவனிக்க வைத்தது. தையல் பயிற்சி, பிளாஸ்டிக் வொயர் கூடைப் பயிற்சி என்று அறிவிப்பவர்களுக்கு மத்தி யில், இந்த அறிவிப்பு வியப்புக்கு உரியதாகவும் அமைந்தது. அந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் பணம் ஒதுக்கினார், பயிற்சிகள் கொடுத்தார். படித்துவிட்டு வெளியே வந்தார்களே தவிர, அவர் களுக்கு வேலை வாங்கித் தரும் முறையானநடவடிக் கைகள் எதுவும் இல்லாமல் அத்திட்டமே முடங்கிப் போனது.

அனைவருக்கும் கல்வித் திட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவசப் புத்தகம், நோட்டு கள், மிதிவண்டி, சீருடைகள், விடுதிகள், இலவச உணவு, சிலேட்டுகள் என்று ஆதிதிராவிட மக்களுக்கு அடிப்படை வசதி வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் தரும் துறையாக இது இருக்கிறது. அருந்ததிய மக்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு.மிகமிக அடித்தட்டில் இருந்த அந்தச் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் மட்டுமே, இந்த ஆண்டு 56 அருந்ததிய மாணவர்கள் மருத்துவத்திலும், 1,156 பேர் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்திருக்கிறார்கள். புதிரை வண்ணார் என்ற புறக்கணிக்கப்பட்ட சாதிக்கு நல வாரியம் அமைத் ததும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு அமைப்பு தொடங்கப் பட்டு இருப்பதும் மிக முக்கியச் சாதனைகள். ஆனால், குறைகள் என்று யோசித்தால்....

ஆதி திராவிடப் பள்ளிகளும் விடுதிகளும் கூவத்தைவிடக் கேவலமான, பரிதாபமான நிலைமையில்தான் பெரும்பாலான இடங்களில் உள்ளன. பல பள்ளிகளுக்கு ஒழுங்கான கட்டடங்கள் இல்லை. அங்கு சமைக்கும் சாப்பாடு வாயில் வைக்க முடியாத அளவு மோசம். அப்பள்ளி மாணவர்களைக் கூலிக்காரர்களைப்போல நிர்வாகிகள் நடத்துகிறார்கள். விடுதிப் பொறுப்பாளர்கள், உதவியாளர்கள், சமையல்காரர்கள் என்ற முக்கூட்டுக் கொள்ளையில் சிக்கி, அப்பாவி மாணவர்கள் சீரழிவதைக் கவனிக்க யாரும் இல்லை. சேலம் மாவட்டம் மேட்டூரில் வாடகைக் கட்டடத்தில் ஆதி திராவிடர் மாணவியர் விடுதி இருந்தது, அதற்குச் சரியாக வாடகை கொடுக்காததால், ஒரு மத்தியான நேரத்தில் பிள்ளைகளை விரட்டிப் பட்டினி போட்டுவிட்டார்கள். அந்த நேரத்தில் செம்மொழி மாநாட் டைக் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தார் தமிழரசி. இன்று கட்டப்படும் தொகுப்பு வீடுகள் 10 ஆண்டுகள்கூட ஒழுங்காக இல்லாமல், ஒழுகும் வீடுகளாக இருக்கின்றன. அதுவும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, அப்படியே ஒதுக்கிவிட வசதியாகவே இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.

தலித்துகள் மீது அதிகப்படியான தாக்குதல்கள் நடக்கும் மாநிலங்களில் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். இரட்டைக் குவளை முறை இன்னமும் இருக்கிறது, கோயிலுக்குள் நுழைய மறுக்கப்படுகிறார்கள், பொதுப் பாதையைப் பயன்படுத்தத் தடை இருக்கிறது, செத்தால்கூட தனி மயானம்தான். ஆனால், இது குறித்தெல்லாம் இந்தத் துறை கவலைப்படுவதாகத் தகவல் இல்லை.

வன்கொடுமைச் சட்டத்தின்படி முதலமைச்சரைத் தலைவராகக்கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். அது எத்தனை முறை கூடியது? வன்கொடுமைச் சட்டப்படி பதிவாகும் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். ஆனால், அவை தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில்தான் இருக்கின்றன.

ஆதிதிராவிடர்கள் தாங்கள் வாழும் பகுதியில் எத்தனையோ வகையான கொடுமைகளை அனுப வித்தாலும், அவை காவல் நிலையங்களில் வழக்கு களாகப் பதிவாவது இல்லை. ஆங்கிலேயர் காலத் தில் தரப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் இப்போது 3,000 ஏக்கர் நிலம் மட்டுமே அந்த மக்கள் வசம் உள்ளது.

இந்தக் குறைகளைப்பற்றி எல்லாம் அம்பேத்கர் விருது வழங்குபவர்களும் கவலைப்படவில்லை; வாங்குபவருக்கும் கவலை இல்லை. அல்லது அதைக் கையில் எடுத்துச் செய்துகாட்டக்கூடியவரையும் அமைச்சராக நியமிக்கவில்லை.

6.24 கோடிப் பேரில், 1.18 கோடி மக்களைக் கவனித் துக் கை தூக்கிவிட வேண் டிய துறையை, சலுகை கொடுப்பதாக இல்லாமல் சுதந்திரமாக அதிகாரம் செலுத்துவதாக மாற்றினால்தான் அர்த்தம் இருக்கும். இல்லை என்றால், 'நானும் மந்திரியா இருந்தேன்' என்பது மட்டுமே தமிழரசி யின் தனிப் பெருமையாக இருக்கும்!

                            
        

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick