வரலாற்றைச் சேகரிக்கிறேன்!

திருச்சி கே.கே.நகரில் தீப்பெட்டி சைஸ் வீட்டுக்குள் இருந்து வரவேற்கிறார் தி.மா.சரவணன். ''வணக்கம் தோழர். 'கலைநிலா இதழகம்’ உங்களை அன்போடு வரவேற்கிறது!'' - பத்திரிகைகளால் நிரம்பி வழி யும் வீட்டின் நடுவே நின்று, சிரிக்கிறார் சரவணன்.

 மேஜை டிராயரில் பாதுகாக்கப்பட்ட பழுப்பு நிறப் பத்திரிகை ஒன்றை எடுத்து நீட்டுகிறார். ''இது 1883-ல் வெளியான 'ஜநவிநோதிநி’ இதழ். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. கல்வி அறிவியல் செய்திகள்தான் இதில் பிரதானம். இதுதான் என்னிடம் இருக்கும் மிகப் பழைய பத்திரிகை!''

மகாகவி பாரதியார் நடத்திய 'சக்ரவர்த்தினி’, பெரியாரின் 'குடிஅரசு’, அண்ணாவின் 'காஞ்சி’, கண்ணதாசனின் 'தென்றல்’, 'முல்லை’, பாரதிதாசனின் 'குயில்’ என்று ஜாம் பவான்கள் நடத்திய இதழ்கள் அங்கு படபடக்கின்றன. ''குடும்பச் சூழ்நிலை காரண மாக பத்தாவது வரைதான் படிக்க முடிந்தது. பழையப் புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். எடைக்கு வரும் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி னேன். இதழியல் தொடர்பான நூல்களைப் படித்தபோது, 'சுதேச மித்திரன்’, 'சக்கரவர்த்தினி’, 'இந்தியா’, 'தேச பக்தன்’ ஆகிய பத்திரிகைகளைப் பற்றிய செய்திகள் கிடைத்தன.

அந்தப் பத்திரிகைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உந்தித் தள்ள, நூலகங்களைத் தேடிச் சென்றேன். 'அவை எல்லாம் பழைய இதழ்கள். எடுத்துவைப்பது இல்லை. தூக்கி எறிந்துவிடுவோம்’ என்ற பதில் கிடைத்தது.  அவற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை உந்திக்கொண்டே இருந்தது. அந்த ஆர்வம்தான்  பழைய இதழ்களை நான் சேகரிக்கக் காரணம். நண்பர்கள், அறிந்த வர்கள் என்று ஒவ்வொருவர் வீடு வீடாகத் தேடிச் சென்று பழையப் புத்தகங்களைக் கேட்டு வாங்கி னேன். சம்பாதித்ததில் பெரும் பகுதியைப் புத்தகங்கள் வாங்கு வதிலேயே செலவிட்டேன். ஒரு கட்டத்தில்  'இவ்ளோ புத்தகங்கள் வெச்சிருக்கியே... இதைப் படிச்சா பத்தாதா? ஏன் மீண் டும் மீண்டும் புத்தகங்களை வாங்கி பணத்தை வீணாக்குற? வீட்டையும் குப்பையாக்குற?’ என்று பெற்றோர் திட்டத் துவங்கினார்கள். என்னைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவம் அவர்களிடம் இல்லை. வீட்டைப் பிரிந்து தனியாக வந்தேன். சுழல் நூலகம் நடத்த ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில்தான் கோமதி எனக்கு அறிமுகம் ஆனார். இதய நோயாளியான அவருக்கு மருத்துவம் பார்க்க பல இடங் களுக்கும் அழைத்துச் சென்றேன். அனைவரும் குணப் படுத்த முடியாது என்று கை விரித்துவிட்டார்கள். அவரையே திருமணம் செய்துகொண்டு, மண வாழ்க்கை யைத் தொடங்கினேன். என்னைப் பற்றி நன்கு தெரிந்தவர் என்பதால், எனது இதழ் சேகரிப்புப் பணிக்கு உறுதுணை யாக இருந்தார்.

அதன் பின்னர் அவரை நூலகத்தைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஊர் ஊராகச் சென்று இதழ்கள் சேகரிக்க ஆரம்பித்தேன். யாரெல்லாம் பழைய இதழ்கள் வைத்து இருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் தகவல் தெரிந்து கொண்டு, அவர்களிடம் இதழ்களைக் கேட்டுப் பெற்றேன். இப்படி பெரும்பாடுபட்டு சேர்த்தப் புத்தகங்கள்தான் எனது இதழகத்தை இன்று அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன.

ஆறாயிரம் வகை இதழ்கள், 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. எம்.ஃபில்., பி.ஹெச்டி. மாணவர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் இதழியல் தொடர்பான ஆய்வுப் பணிக்காக என்னிடம் வருவார்கள். என்னாலான உதவிகளை அவர்களுக்குச் செய்துக்கொடுக்கிறேன். 20-ம் நூற்றாண்டின் தமிழ் இதழ்கள் தொடர்பாக நூல் எழுத வேண்டும் என்பது எனது ஆவல். 19-ம் நூற்றாண்டில் 500 இதழ்கள் வெளிவந்தன. அவற்றில் இந்தியாவில் 30 இதழ்கள்தான் இருக்கின்றன. மற்றவை எல்லாம் வாடிகன், லண்டன் நூலகங்களில்தான் இருக்கின் றன. 1901-ல் இருந்து 2000 வரையில் 10 ஆயிரம் இதழ்கள் வெளிவந்தன. அவற்றில் 6 ஆயிரம் இதழ்கள் என்னிடம் இருக்கின்றன. இன்னும் 4 ஆயிரம் இதழ்களை தேடிப் பிடித்துவிட்டால் போதும். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். அது  விரைவில் நிறைவடையும்!''

-ஆர்.லோகநாதன், படங்கள்:'ப்ரீத்தி’ கார்த்திக்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick