Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 

 

அரசியல், இலக்கியம், வரலாறு, அறிவியல், சமயம், ஆழ்வார்கள், பழைய நாணயங்கள், தொல்லியல், விலங்குகள், பறவைகள், வேட்டை... என எதைப்பற்றியும் மணிக்கணக்கில் கொட்டக்கூடியவர் தங்கம் தென்னரசு. 'வாத்தியார் பிள்ளை மக்கு’ என்ற பழமொழி, இவரை வைத்துப் பார்த்தால்... பொய்மொழி!

 தென்னரசுவின் அப்பா தங்கபாண்டியன், பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியராக இருந்து அமைச்சர் ஆனவர். சாயல் குடி, சொந்த ஊர். அங்கு நிலபுலன்கள், வீடுகள் உண்டு. பி.ஏ., பி.எட்., படித்தவருக்கு சொந்தத்தில் குஞ்சம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்துவைத்தார்கள். அவர்களுக்கு பானு என்ற ஒரு மகள் உண்டு. இதற்கு இடையில் பி.எட்., பட்டம் பெற்ற தங்கபாண்டியனுக்கு, மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை கிடைத்தது. மல்லாங்கிணறு வந்து தங்கி, ஆசிரியர் வேலை பார்த்தார். அப்போது அதே பள்ளியில் பணியாற்றி வந்த ராஜாமணி என்ற ஆசிரியையை அடுத்ததாகத் திருமணம் செய்துகொண்டார். அவருக் குப் பிறந்த மூத்த மகள் சுமதி. தமிழச்சி என்ற பெயரில் கவிதைகள் எழுதி, கருணாநிதியால் தமிழச்சி தங்கபாண்டி யன் என்று நாமகரணம் சூட்டப்பட்ட கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடகக்காரர். இவருக்கு அடுத்துப் பிறந்தவர்தான் தென்னரசு. தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய, திராவிட இயக்க சிறுகதை மன்னன் எஸ்.எஸ்.தென்னரசு வின் ஞாபகமாக அந்தப் பெயரை தங்க பாண்டியன் தனது மகனுக்கு வைத்தார். தங்கம் தென்னரசு என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி!

அந்தக் காலத்து ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் எல்லாம் தி.மு.க-காரர்களாகவே இருப்ப£ர்கள். மேடைத் தமிழ்க் காதல் ஒரு முக்கியக் காரணம். அப்படித்தான் தங்கபாண்டியனும் கழகத்துக்காரர் ஆனார். இன்றைக்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகராகப் பிரிக்கப்பட்ட அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த தென்னரசுவின் அறிமுகம் தங்கபாண்டியனுக்குக் கிடைத்தது. 'படித்த, நல்ல இளைஞன் ஒருத்தரைச் சொல்லு, அவரை நான் எம்.எல்.சி. ஆக்குறேன்’ என்று அண்ணா சொன்னபோது, தென்னரசுவும் மதுரை முத்துவும் சேர்ந்து சொன்னது, தங்க பாண்டியனைத்தான். 'யானை உன்னைத் தேடி வந்து மாலை போட்டிருக்கிறது’ என்று சொல்லி, தங்கபாண்டியனை அரவணைத்துக்கொண்டாராம் கருணாநிதி.  

அழகிரியின் மதுரை வருகை, தங்கபாண்டியன் - கருணாநிதி நெருக்கத்தை அதிகப்படுத்தியது. 'அறிமுகம் இல்லாத இடத்தில் வந்து மகனைக் குடியேத்துறேன். நீங்க அடிக்கடி வந்து போயி கவனிச்சுக்கோங்க’ என்று தங்கபாண்டியனின் கையில் பிடித்து அழகிரியைக் கொடுத்தார் கருணாநிதி. மல்லாங்கிணறுக்கு அடிக்கடி வந்து போவார் அழகிரி. இருவரும் போனை எடுத்தால், மணிக்கணக்காகப் பேசிச் சிரிப்பார்கள்.

விருதுநகர் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டதும் மாவட்டச் செயலாளர் ஆனார் தங்கபாண்டியன். 96-ம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றவருக்கு, கூட்டுறவு மற்றும் வணிக வரித் துறையைக் கொடுத்து அமைச்சராக ஆக்கினார் கருணாநிதி. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தென் பகுதியில் நடந்த மிகப் பெரிய வகுப்புக் கலவரத்தைக் கட்டுப்படுத்த கருணாநிதி அனுப்பிய குழுவில் ஒருவராகச் சென்ற தங்க பாண்டியனுக்கு, ராஜபாளையத்தில் தங்கி இருந்தபோது, திடீர் என மரணம் ஏற்பட்டது. அஞ்சலி செலுத்த வந்த கருணாநிதி, அன்று தான் இந்த தென்னரசுவை உற்றுக் கவனிக் கிறார். அரசியல் காற்று அண்டாமல்,சென்னை யில் உள்ள ஸ்பிக் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் தென்னரசு.

அப்பா தங்கபாண்டியன் வேலை பார்த்த பள்ளியிலேயே படித்த தென்னரசு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., மெக்கானிக் கல் சேர்ந்தார். 1983 முதல் 87 வரை அங்கு படித்தவருக்கு, அடுத்த ஓர் ஆண்டு தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் வேலை. பிறகு, சென்னை கிண்டியில் உள்ள ஸ்பிக் அலுவலகம் வந்து சேர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றினார். தங்கபாண்டியன் 98-ம் ஆண்டு இறந்தபோதுதான் தென்னரசுவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம் ஆனது.

அருப்புக்கோட்டை இடைத் தேர்தலில் நிற்கிறாயா என்று தென்னரசுவை, கருணாநிதியும் அழகிரியும் கேட்டார்கள். இடைத் தேர்தலில் நின்றார். வென்றார். அவரை வெற்றி பெறவைக்க அழகிரிதான் அதிகமாக உழைத்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்குள் நுழைகிறார். தங்கபாண்டியன் இல்லாத தி.மு.க-வை வளைக்கலாம் என்று வந்தவருக்கு, தங்கம் தென்னரசு கிளம்பியது எரிச்சலைக் கிளப்பியது. அழகிரி மூலமாக தி.மு.க-வுக்கு வந்த சாத்தூரார், அடுத்து ஸ்டாலின் அணிக்குத் தன்னுடைய ஜாகையை மாற்றியது இதனால்தான். தென்னரசுவை மந்திரியாக்க வேண்டும் என்று நினைத்தார் அழகிரி. ஆனால், அந்தப் பதவி அழகிரியின் எதிர் அணியான தா.கிருஷ்ணனுக்குத் தாரை வார்க்கப்பட்டது. மாவட்டச் செயலாளராக ஆக்க நினைத்தார் அழகிரி. அதுவும் சாத்தூரார் வசமானது. அப்பாவைப்போலவே அமைதி அரசியலைத் தென்னரசு செய்து வந்தார்.

இன்றைக்கு எத்தனையோ பேர் அழகிரிக்கு அணுக்கர்களாக இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன்னால் 'நான் அழகிரி ஆள்’ என்று துணிச் சலாகக் காட்டிக்கொண்டவர் தென்னரசு. 2006-ம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் வென்ற தென்னரசுவுக்கு மந்திரி பதவி வாங்கித் தருவதில் வென்றார் அழகிரி. அவரது கோட்டாவில் அமைச்சர் ஆனவர்கள் தென்னரசுவும் தமிழரசியும். நெடுஞ்சாலைத் துறையை அழகிரி கேட்டார். அது ஸ்டாலின் ஆதரவாளரான வெள்ளக்கோயில் சாமிநாத னுக்குத் தரப்பட்டு, இவருக்குப் பள்ளிக் கல்வித் துறை தரப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை கிடைத்ததும் தங்கம் தென்னரசு ஆரம்பத்தில் மகிழ்ந்தார். ஆனால், அடுத்தடுத்துக் கிளம்பிய பிரச்னைகள் அவரை நிலை தடுமாறவைத்தன. 'வேறு ஏதாவது துறை கிடைத்தால், நிம்மதியாக இருக்குமே’ என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை. செயல் வழிக் கற்றல் முறையை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி, தமிழகக் கல்வித் துறையில் பெரும் மாற்றம் செய்தது இவரது காலத்து சாதனைகளில் முக்கியமானது. அடுத்ததாக, சமச்சீர் கல்வியும் கல்விக் கட்டணம் ஒழுங்குபடுத்துதலும் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்ததற்கு இணையாக, சர்ச்சைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழகத்தில் அனைத்து வகையான கல்வி முறைகளையும் மாற்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டுவந்ததைவிட, காலம் காலமாகப் புத்தகம் தயாரித்து வந்த ஆசிரியர் களை விட்டுவிட்டு கல்வியாளர்கள், இலக்கிய வாதிகள், கவிஞர்களைவைத்துப் புத்தகங்கள் தயாரித்ததும் தென்னரசுவின் வித்தியாசமான அணுகுமுறை. 'இந்தப் புத்தகங்களைப் பேராசிரியர் அன்பழகன் சரிபார்க்க வேண்டும்’ என்று கருணாநிதி சொல்லிவிட... பேச்சுத் தமிழில் இருந்தவை அனைத்தையும் அன்பழ கன் பழைய இலக்கணத் தமிழில் கொத்திப் போட, புத்தகங்கள்  அச்சிடுவதில் காலதாமதம் ஆன கூத்தெல்லாம் நடந்தது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான புத்தகத் தயாரிப்பில் காண்பிக்கப்பட்ட அந்த முறை, அடுத்தடுத்த வகுப்புப் புத்தகங்கள் தயாரித்தபோது மாறி, மீண்டும் பழைய ஆசிரியர்கள் தயாரிக்கும் நிலைமைக்கே இன்று மாறிவிட்டது.

இதைவிடச் சோகமானது கல்விக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த முடியாமைதான். கோவிந்தராசன் கமிட்டியைப் போட்டு கட்டணத்தை வரையறுத்தபோது, அனைத்துப் பெற்றோரும் இந்த ஆட்சிக்குப் பாராட்டு மழை பொழிந்தார் கள். ஆனால், இந்தக் கட்டணத்தை எதிர்த்து கோவிந்தராசன் கமிட்டி மீதே மேல் முறையீடு செய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு, துறையின் அமைச்சரான தென்னரசு வுக்கே தெரியாமல் நடந்ததாகச் சொல்கிறார்கள். தனியார் பள்ளி முதலாளிகளின் அப்பீலை உச்ச நீதிமன்றமே உதாசீனப்படுத்திய பிறகும், இன்றைய ஆட்சியால் அந்த முதலாளிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டணத்தில் கை வைத்தால், முதலாளிகள் எழுந்து வருவார் கள் என்று தெரிந்தே அறிவித்து... 'என் கடமை நான் செய்ய நினைத்தேன். ஆனால், அவர்கள் தான் விடவில்லை’ என்ற போலிக் காரணத்தைச் சொல்லவே இந்தக் கமிட்டி பயன்பட்டது. தங்கம் தென்னரசுவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு இதுதான். எத்தனை கோடி ஒதுக்கினாலும் 'தனியார் பள்ளிக் கல்விதான் தரமானது’ என்ற மக்கள் மனோபாவத்தை தங்கம் தென்னரசுவால் மாற்ற முடியவில்லை. பணி மாறுதல்களில் கவுன்சிலிங்கை மீறிய அரசல் புரசல் சமாசாரங்கள் இங்கும் இருக்கவே செய்கின்றன. மரத்தடி பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகள், கட்டடம் இல்லாத பள்ளிகள், முழுமையான ஆசிரியர் இல்லாத பள்ளிகள் இருக்கவே செய்கின்றன. இத்தனை ஆண்டு காலத்தில், கல்வித் துறை மீது காட்டப்பட்ட அலட்சியம் தவிர்க்கப்பட்டு, அக்கறை ஏற்பட்ட காலமாக தங்கம் தென்னரசுவின் காலத்தைச் சொல்லலாம்!

மற்றபடி அவருக்கு விழாக்கள், கண்காட்சிகள் நடத்துவதற்கு யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை. கோவை செம்மொழி மாநாட்டில், உருப்படியாக இருந்த ஒரே விஷயமாக தமிழர் பழம் பெருமை பேசும் கண்காட்சியை அமைத்து... ஆறு மணி நேரம் காத்திருந்து அதைப் பார்க்க வேண்டிய அளவுக்கு அரசியல் சார்பு இல்லாமல் உருவாக்கி இருந்தார் தென்னரசு. அதைப்போலவே தஞ்சை ராஜராஜன் விழாக் கண்காட்சியையும் அமைத்துக் கொடுத்தார். சென்னையின் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை காலையும் மாலையும் போய்ப் பார்த்து... கருணாநிதி கட்டளையிட்ட காலத்துக்குள் கட்டிக் கொடுத்தார். இதைப் பார்த்த கருணாநிதி, தலைமைச் செயலகத்தையும் அதே மாதிரி முடித்துக் கொடு என்று சொல்ல, அந்த வேலைகளிலும் இறங்கியுள்ளார். நூலகம்போல எளிய விஷயம் இல்லை இது என்பதை தென்னரசு அறிவார். முதல்வர் சொல்கிறார் என்பதற்காக அவசர அவசரமாக தலைமைச் செயலகக் கட்டடத்தை இட்டு நிரப்பி இருந்தார்கள் அரசு அதிகாரிகள். முழுமையாக இந்த வேலைகள் முடிய இன்னும் ஓர் ஆண்டு ஆகலாம். தன்னுடைய துறையை ஒழுங்காகக் கவனிக்க முடியாமல் போனதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்விட்டீஸில் தூள் கிளப்பும் பையன், எக்ஸாமில் மார்க் குறைந்து விடுவான் என்பார்கள். எத்தனையோ தனித் திறமைகள் இருக்கும் தங்கம் தென்னரசுவால், தன் துறையில் முழுமையாக நினைத்ததைச் சாதிக்க முடியாததையும் இப்படித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது!

ஒவியம்:அரஸ்

ஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சிறுகதை : அலர்
விசில் ப்ளோயர் விக்கிலீக்ஸ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close