காலமே ஓவியமாய்...

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

காலங்கள் மாறினாலும் கலையின் மீதான மனிதனின் ஆர்வம் என்றும் மாறுவது இல்லை. இன்று கிராஃபிக்ஸ், முப்பரிமாணம் என்று எல்லாம் வளர்ந்து இருக்கும் ஓவியக் கலையின் ஆதித் தாய், பாறை ஓவியங்களும் சுவர் ஓவியங்களும்தான். அப்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள கீழ் வாளை என்ற கிராமத்திலும் அதற்கு அடுத்து உள்ள ஆலம்பாடி நாயனூர் மற்றும் பாடியேந்தல் என்னும் இடத்திலும் உள்ள பாறை ஓவியங்கள் குறித்து 'என் விகடன்’ வாசகர் குமரேசன் சுவாமிநாதன் வாய்ஸ் ஸ்நாப்பில் சொன்ன தகவலில் இருந்து...

கீழ்வாளை கிராமத்தில் உள்ள ஓவியங்கள் ஒரு சிறு குன்றின் மீது அமைந்து உள்ள இரண்டு பாறைகளுக்கு இடையில் ஆன பகுதியில் தீட்டப்பட்டு உள்ளன. இந்தப் பாறை ஓவியங்கள் என்றும் அழியாத சிறப்பு வாய்ந்த சிவப்பு நிற மையினால் வரையப்பட்டு உள்ளன.

இந்த ஓவியங்கள்  கி.மு. காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகிறது. ஆண், பெண், ஆடு, மாடுகள், சூரியன், கைகோத்து செல்லும் குடும்பம், மரம், விலங்கின் மேல் பவனிவரும் தலைவன், உடுக்கை வடிவம் என்று பல்வேறு வகையான குறியீடுகள் இந்த ஓவியங்களில் வரையப¢பட்டு உள்ளன.  ஆண் உருவம் அலங்கரிக்கப் பட்டு விலங்கின் மேல் பவனி வருவது போலவும் கீழே நின்று கொண்டு இருக்கும் ஒரு மனிதன் அந்த விலங்கினை கயிற்றால் கட்டி இழுத்து வருவது போலவும் உள்ளது. இதனைக் கொண்டு அந்தக் கால மக்கள் விலங்கினை பழக்கப்படுத்தி தங்கள் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆணோ, பெண்ணோ மிக அலங்காரமாக உடை அணிந்து கொண்டு இருக்கும் ஓவியங்களைப் பார்க்கும்போது  உடையிலும் அலங்காரத்திலும் மக்கள் கவனம் செலுத்தியது தெரிகிறது.  பல ஆண்டுகளாக எல்லா பருவ நிலைகளையும் தாங்கிக்கொண்டு இந்த ஓவியங்கள் சிறிதும் மங்காமல் காட்சி அளிப்பது வியப்புக்கு உரியது.  

அறிவியல் துறை பெரிதும் வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் ஓவியம் வரையத் தேவைப்படும் மையினை எதனைக்கொண்டு தயாரித்தனர் என்பது வியப்பான கேள்வி. இந்தப் பகுதி தற்போது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளது. ஆனால், இந்தப் பகுதியைச் சுற்றிலும் கல் குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. பாறைகளை உடைப்பதற்காகக் குவாரியில் வைக்கப்படும் வெடிகள் ஓவியங்கள் உள்ள பாறையைச் சிறிது சிறிதாக தகர்த்துவருகின்றன.  ஒவ்வொரு முறை இந்தப் பகுதிக்குச் செல்லும்போதும் பாறாங்கற்கள் பாதையினை அடைத்துக்கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.  ஆகவே, அரசாங்கம் இந்தப் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி கீழ்வாளைக் கிராமத்தில் உள்ள ஓவியங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலம்பாடி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தின் மத்தியில் ஒரு குன்றின் மேல் உள்ள பாறை இடுக்கில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் கி.மு. 1000-த்துக்கு முற்பட்டவையாகும். இதிலும் அக்கால மனிதன் தன்னைச் சுற்றி இருந்த, தான் கண்ட காட்சிகளை ஓவியமாக வரைந்து உள்ளான்.  மனித முகம், பல வித கோட்டு ஓவியங்கள், தண்ணீர் குடிக்கும் மான், ஆடு, மாடு, சப் பாத்திக்கள்ளி போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.  

பாடியேந்தல் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்த பாறைகளுக்கு இடையில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.  இந்த ஓவியங்கள் வெள¢ளை நிற மையினால் வரையப்பட்டு உள்ளன.  இந்த ஓவியங்கள் எல்லாம் நம் மனிதகுலம் கடந்து வந்துள்ள காலடிச் சுவடுகள். இதை அழியாமல் பாதுகாக்க வேண்டியது அவசியத் தேவை!

- குமரேசன் சுவாமிநாதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick