‘அப்பா இன்னும் வரலையே... நாம எப்பம்மா ஊருக்குப் போறது?’

கண்ணீரில் மிதக்கும் கிராமங்கள்.

திருவண்ணாமலையும் தர்மபுரியும் அலறலும் கதறலுமாக இருக்கிறது. ஆந்திராவில் அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழர்களது குடும்பங்கள் இங்குதான் இருக்கின்றன. அந்த ஏழை கிராமங்களில் இருந்து வீடுகட்டவும் பெயின்ட் அடிக்கவும் போனவர்கள் இப்படி பிணமாகக்கொண்டுவந்து குவிக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை அந்தக் கிராமங்கள். உயிரோடு போனவர்கள் பிணங்களாகத் திரும்பி வருவதற்கு முன் அவர்களது வீடுகளில் நாம் இருந்தோம். அங்கே நாம் கண்ட கதறல் காட்சிகள் கல் நெஞ்சத்தையும் கலங்கவைக்கும்.

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியை அடுத்து உள்ளது சித்தேரி மலைக் கிராமம். அந்த மலைக் கிராமம் முழுக்க கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறது.

சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட அரச நத்தத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன், ல.லட்சுமணன், சிவக்குமார், தீ.லட்சுமணன், பாலகிருஷ்ணன், ஆலமரத்து வளவு கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், கருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஆகிய எட்டு பேரும் கடந்த 5-ம் தேதி கூலி வேலைக்காக ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் பாலகிருஷ்ணனை தவிர, மற்ற ஏழு பேரும் தற்போது உயிருடன் இல்லை.

சிறுசிறு கிராமங்களாகப் பிரிந்து வாழும் சித்தேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் 9-ம் தேதி காலை அரச நத்தம் கிராமத்தில் திரண்டிருந்தனர். இறந்த ஏழு பேரின் குடும்பங்களும் அரச நத்தத்தில் சடலங்களுக்காகக் காத்திருந்த அந்தத் துயரக் காட்சி வார்த்தைகளால் வடிக்க முடியாதது. 9-ம் தேதி காலை நான்கு அமரர் ஊர்தி வாகனங்கள் மூலம் ஏழு பேரின் சடலங்களும் அரச நத்தத்துக்கு வந்து சேர, குடும்பம் குடும்பமாக வந்து கதறி அழுதபடி உடல்களைப் பெற்றுக்கொண்டனர்.

கட்டிலில் கொண்டு செல்லப்பட்ட சடலங்கள்!

போலீஸிடம் இருந்து சடலத்தை வாங்கியவுடன், அதை எப்படி வீட்டுக்குக் கொண்டு செல்வது என்று தெரியாமல் பதறினார்கள். தோளில் சுமந்து செல்வதா, இரண்டு பேராகத் தூக்கிச் செல்வதா என்ற குழப்பம். பிறகு அவரவர்களின் வீட்டில் இருந்து கட்டில்களைக் கொண்டுவந்து, அதில் பிணங்களைத் தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர். அந்தக் கிராமத்துக்குச் சுடுகாடு வசதிகூட இல்லை. பிணங்களைத் தங்களுடைய தோட்டங்களில்தான் அடக்கம் செய்தார்கள்.

‘‘இங்கிருந்து சென்றவர்கள் யாருமே மரம் வெட்ட செல்லவில்லை. எல்லோரையும் கல் வேலை, பெயின்ட் வேலை, கட்டட வேலை என்று சொல்லித்தான் அழைத்துச்சென்றார்கள்’’ என்கிறார்கள் கிராமத்து மக்கள்.
ல.லட்சுமணின் மனைவி உண்ணாமலையிடம் பேசினோம். ‘‘அவர் கல் வேலைக்குப் போறேன்னுட்டுத்தான் போனார். எந்தக் கூலி வேலைக்குக் கூப்பிட்டாலும் போவார். பத்து பதினைந்து நாள் தங்கியிருந்து வேலை பார்த்துட்டு வந்துடுவார். ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் என் பொண்ணுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு நாலு மாசம் வேலைக்கே போகாம இருந்துட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில ஜவ்வாது மலையிலேருந்து வேலைக்குக் கூப்பிட்டுருக்காங்க. போயிட்டு வந்துடுறேனுட்டு போனார். அவரை அநியாயமா கொன்னுட்டாங்களே’’ என்று கதறினார்.

‘இனிமேல் அவரு வரமாட்டாரு இல்ல...’

சிவக்குமார் மனைவி விஜயா, “ஞாயிற்றுக்கிழமை மத்தியானம்...  ஜவ்வாது மலையில இருந்து கட்டட வேலைக்குக் கூப்பிட்டுருக்காங்க. போயிட்டு பத்து பதினைஞ்சு நாள்ல வந்துடுறேன்னு போனார். எப்போதும் போன உடனே போன் பண்ணுவார். ஆனா, திங்கள்கிழமை முழுக்க அவர்கிட்ட இருந்து போன் வரவே இல்லை. ஏதோ பிரச்னையில சிக்கிக்கிட்டாரோன்னு பக்குபக்குனு இருந்திச்சி. செவ்வாய்க்கிழமை நியூஸ்ல பாத்ததுக்கு அப்புறம்தான் அவரை ஆந்திரா போலீஸ் சுட்டுக் கொன்னுட்டாங்கன்னே தெரியும். அவர் மரம் வெட்டினாருன்னு சொல்றாங்க. அவருக்கு அந்த வேலையே தெரியாதுங்க. கத்தியே கொண்டு போகலை. கல் வேலை, கட்டட வேலை, பெயின்ட் வேலைக்குத்தான் போவார். அதுவும் ஜவ்வாது மலையிலேயிருந்து போன் பண்ணி, வேலை இருக்கு ஆள் கூட்டிக்கிட்டு வாங்கனு சொல்லுவாங்க. அதுக்குப் பிறகுதான் இங்கிருந்து வேலைக்கு ஆட்கள் போவாங்க. யார் கூப்பிட்டுக்கிட்டு போறாங்கனு எங்களுக்கு எதுவுமே தெரியாது. எங்களுக்கு ரெண்டு பிள்ளைக இருக்குங்க. பையன் அஞ்சாம் வகுப்பு படிக்கிறான். ரெண்டு மாச பெண் குழந்தை இருக்கு. அவங்களை நான் எப்படி கரைசேர்க்கிறது’’ வார்த்தைகள் தடுமாறின.

வெங்கடேசன் மனைவி கனகராணியை சமாதானப்படுத்தவே முடியவில்லை. “எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஏழு மாசம்தான் ஆகுது. அவர் விவசாய வேலைதான் பார்த்துகிட்டு இருந்தார். சின்னங்குப்பம் கிராமத்துல குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் பண்ணிகிட்டு இருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை காலையில காட்டுல வேலை பார்த்துகிட்டு இருந்தோம். அப்போ ரெண்டு பேர் வந்து புளி அடிக்க போகணும். வேலை இருக்கு, வர்றீயானு எங்க வீட்டுக்காரரைக் கூப்பிட்டாங்க. அவரும் சரின்னு அங்கிருந்தபடியே கிளம்பிப் போனார். செவ்வாய்க்கிழமை நியூஸ்ல பார்த்ததுக்குப் பிறகுதான் என் வீட்டுக்காரர் கொலை செய்யப்பட்ட விஷயமே தெரிஞ்சுச்சி. அவர் மரம் வெட்டல்லாம் போகவே இல்லீங்க. புளி அடிக்கத்தான் போனார். இனிமேல் அவரு வரமாட்டாரு இல்ல...’’ வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.

‘ஒன்பது மணிக்கு திருப்பதி வந்துடு!’

சித்தேரி மலையில் இருந்து ஆந்திராவுக்குச் சென்ற எட்டு பேரில் பாலகிருஷ்ணன் மட்டும் உயிர் தப்பியிருக்கிறார். இறந்த ஏழு பேரில் ஒருவரான ஹரிகிருஷ்ணனின் மகன்தான் பாலகிருஷ்ணன். அவரிடம் பேசினோம். “ஜவ்வாது மலையில இருந்து பழனி என்பவர்தான் ஆந்திராவில் செங்கல் அறுக்குற வேலை இருக்குது வாங்கனு கூப்பிட்டார். நான் எங்க அப்பா உட்பட மொத்தம் எட்டுபேர் இங்கிருந்து கிளம்பி ஜவ்வாது மலைக்குப் போனோம். ஞாயிற்றுக்கிழமை இரவு எங்க எல்லோரையும் ஜவ்வாது மலையிலேயே தங்கச் சொன்னார் பழனி. நாங்களும் அங்க தங்கினோம். திங்கள்கிழமை காலையிலேயே எல்லோரும் முதல் பஸ்ஸுக்குக் கிளம்பினோம். கண்ணமங்கலம் போனவுடனேயே. தண்ணி அடிச்சிட்டுப் போகலாம்னு தோணுச்சி.

நான் அடுத்த பஸ்ல வர்றேன்னு இறங்கிட்டேன். அதுக்கப்புறம் அவங்களுக்கு போன் பண்ணினேன். தண்ணி அடிச்சிட்டு இப்ப வரவேண்டாம். காலையில ஒன்பது மணிக்கு திருப்பதிக்கு வந்துடுனு சொன்னாங்க. நானும் சரின்னு திரும்பி ஜவ்வாது மலைக்கே வந்துட்டேன். அதுக்குப் பிறகுதான் அவங்ககிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. நாங்க நரிபுத்தூர்ங்கிற இடத்துகிட்ட போய்கிட்டு இருக்கும்போது போலீஸ் எங்களை சந்தேக கேஸ்ல பிடிச்சிடுச்சு. அதனால நீ வரவேண்டாம்னு சொன்னாங்க. அப்ப ஒரு போலீஸ்காரர் போனை வாங்கி, ‘ஒண்ணும் இல்லப்பா. சாதாரண விசாரணைதான். விசாரிச்சுட்டு விட்ருவோம்’னு சொன்னார். அப்போ பழனி கால் பண்ணார். செங்கல் மில் ஓனருக்கு போன் பண்ணி போலீஸ்கிட்ட சொல்ல சொன்னோம். அவரும் போன் பண்ணிட்டு சீக்கிரம் விட்ருவாங்கனு சொன்னார். ஆனா, அநியாயமா எல்லாரையும் கொன்னுட்டாங்க’’ என்றார் சோகத்துடன்.

‘புள்ளைக்கு புதுத்துணி எடுக்கப்போனாரு!’

இன்னொரு ஏழு பேர் திருவண்ணாமலை மாவட்டம் அனந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள். அத்தனை கிராமங்களும் சோகத்தில் மூழ்கியிருக்கின்றன. முருகப்பாடியைச் சேர்ந்த மூர்த்தி, முனுசாமி வேட்டகிரிப்பளையம் சசிக்குமார், முருகன், பெருமாள், காளசமுத்திரத்தைச் சேர்ந்த பழனி, காந்திநகர் மகேந்திரன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுவிட்டதால் இவர்களின் உறவினர்கள் அனைவரும் 8-ம் தேதி காலையிலேயே கண்ணம்பாளையம் காவல் நிலையத்தில் கூடியிருந்தனர். கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்களது மனைவிகள் தங்களது கைக்குழந்தைகளுடன் கண்ணீர் விட்டுக் கதறியதால் காவல் நிலையமே மயானத்தைப்போல காட்சியளித்தது. நடந்த விபரீதம் புரியாத அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து பலரும் கலங்கினர். இதில் முருகப்பாடியைச் சேர்ந்த மூர்த்திக்குத் திருமணம் ஆகி, ஒன்றரை வருடமே ஆன நிலையில், அவருக்கு எட்டு மாதத்தில் கைக்குழந்தை இருக்கிறது. அவரது மனைவி பச்சையம்மாள், ‘‘எம்புள்ளைக்குப் புதுத்துணி எடுத்து வந்துடறேன்னு போனவர் இப்படி ஒரேயடியா விட்டுட்டுப் போயிட்டாரே’’ என்று கதறினார். மற்ற அனைவரின் குழந்தைகளுமே 2, 3 வயதுக்குள்தான். 22 வயதே ஆன மகேந்திரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தலைமறைவு வெங்கடேசன்!

மலைக் கிராமமான நெம்மியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேல்குப்சானூரைச் சேர்ந்த சின்னசாமி, ராஜேந்திரன், கோவிந்தசாமி, வெள்ளிமுத்து, மேல் கனவாயூர் பன்னீர்செல்வம் ஆகியோரது உடல்களில் தீயிட்டுப் பொசுக்கிய, கத்தியால் வெட்டப்பட்ட காயங்களைக் காட்டினர் அவர்களது உறவினர்கள். திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், பன்னீர்செல்வத்தின் நான்கு மாதக் கைக்குழந்தையான சஞ்சனா தனது அப்பாவின் போட்டோவை வைத்து சிரித்துக்கொண்டு விளையாடியதைப் பார்த்த அனைவரும் கண் கலங்கிவிட்டனர். இந்த ஊர்க்காரர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றவர் புதூரைச் சேர்ந்த ‘செக்காரன்’ வெங்கடேசன் என்பவர்தான். இதை ஊர் மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த வெங்கடேசன் தற்போது தலைமறைவாகிவிட்டார். இந்த விஷயத்தை காவல் துறையினரிடம் சொல்லியும் ஏனோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்த முக்கியமான நபரை ஏன் இன்னும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவில்லை என்பது காவல் துறைக்கே வெளிச்சம்.
“அப்பா இன்னும் வரலையே...

நாம எப்பம்மா ஊருக்குப் போறது?’ 
 

திருவண்ணாமலை பக்கமுள்ள கலசப்பாக்கத்தைச் சேர்ந்த பழனியும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். இவரது மனைவி லோகநாயகி, “வீட்டிலேயே டைலர் கடை வெச்சிருந்தார். கண்ணமங்கலம் போய் பட்டன் வாங்கிட்டு, அப்படியே புள்ளைக்கும் சிரப் வாங்கிட்டு வந்துடுறேன். புள்ளைய பத்திரமா பார்த்துக்குன்னு சொல்லிட்டுப் போனார். போனவர் அன்னைக்கு ராத்திரி முழுக்க வீட்டுக்கே வரல. ஒரு போன்கூட பண்ணலை. மறுநாள் காலைல, ‘இது பழனி வீடா’ன்னு கேட்டு ஒரு போன் வந்துச்சு. ஆமாங்கன்னு சொன்னேன். ‘மரம் கடத்தினதால அவனைச் சுட்டுப்புட்டோம். திருப்பதிக்கு வந்து பொணத்தை வாங்கிட்டுப் போங்க’ன்னு சொன்னாங்க. என் புருஷன் டெய்லருங்க. மரம் வெட்டுற வேலையெல்லாம் தெரியாது. கூட்டிக்கிட்டு போய், கொன்னுட்டாங்களே” என்ற கதறலுக்கிடையே அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகையும் சேர்ந்து கலங்க வைத்தது.

‘அப்பா இன்னும் வரலையே... நாம எப்பம்மா ஊருக்குப் போறது? ஏம்மா நீ அழுவுற’’ என்று அப்பா இறந்ததுகூட தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்தான் முருகனின் நான்கு வயது மகன் ரோகித். ‘‘அதோ கார்ல வர்றார் பாருடா அப்பா...” என்று, அவனை தூக்கிவாரிக்கொண்டு அலறிப் புலம்பியபடி ஆம்புலன்ஸின் எதிரே ஓடினார் முருகனின் மனைவி தஞ்சம்மாள். 

யாரைப் பழிவாங்க இந்த அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்?

- க.பூபாலன், எம்.புண்ணியமூர்த்தி, ஜெ.முருகன்
படங்கள்: எம்.விஜயகுமார், கா.முரளி, வி.சதீஸ்குமார், அ.குரூஸ்தனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick