மூன்று தொகுதிகளும்.... முட்டிக்கொள்ளும் கட்சிகளும்!Sponsoredஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க, தி.மு.க, பி.ஜே.பி, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் சுறுசுறுப்புடன் சுற்றி வருகின்றன. இந்தக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

அ.தி.மு.க-வின் முகமே ஜெயலலிதாதான் . அவரது பிரசாரம் இல்லாமல் இந்தத் தேர்தலை அ.தி.மு.க சந்திப்பதே அவர்களுக்கு உற்சாகம் இல்லாமல்தான் இருக்கிறது. அதைச் சரிக்கட்ட பிரசார யுக்தியை வேகப்படுத்தியுள்ளது அ.தி.மு.க தரப்பு. அதற்காகத்தான் அ.தி.மு.க வேட்பாளர்களை  ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டுள்ளார்கள். அந்த நட்சத்திரங்கள் பிரசாரக் களத்தில் என்ன பேசுகிறார்கள் தெரியுமா?

Sponsored


அ.தி.மு.க செய்தி தொடர்பாளரும் நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி டி.வி. விவாதங்களிலே அனல் பறக்க பேசுவார். தேர்தல் பிராசாரம் என்றால் சும்மா இருப்பாரா? தி.மு.க-வையும் தே.மு.தி.க-வையும் விளாசுகிறார். ‘‘முதலமைச்சர் அம்மா அவர்கள் குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் வீடு திரும்பி, கோட்டைக்கு சென்று மக்கள் பணியைத் தொடர்வார். எந்த நிலையில் இருந்தாலும் மக்கள் நலனை எப்போதும் நினைப்பவர் அம்மா ஒருவர் மட்டுமே. ஆனால், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மக்களுக்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்வதையே மக்களுக்கு செய்த சேவையாக நினைக்கிறார். மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க ஜெயிக்கும். மூன்று தொகுதிகளிலும் நமது கோட்டையைக் கட்டுவோம். அதே வேளையில் தி.மு.க-வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இனி தமிழகத்தில் ஒருபோதும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது’’ என்று விளாசுகிறார்.

Sponsored


அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யும்  நடிகருமான  ராமராஜன், ‘‘புதுவையில் நெல்லிக்குப்பம் தொகுதி உட்பட தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். இந்த வெற்றியினை முதல்வருக்கு மக்கள் சமர்ப்பிப்பார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குன்றியபோது அவர் நலம்பெற தமிழக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

25 ரூபாய் இருந்தால் ஒரு நாள் உணவை ஒருவர் அம்மா உணவகத்தில், அழகாக சாப்பிட்டு முடித்துவிடலாம். ஏழைகளுக்கு மட்டுமல்ல கோடீஸ்வரர்களுக்கும் உணவு போட்டது அம்மா உணவகம்தான் என்பதை ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் நினைத்துப் பார்த்து வாயார வாழ்த்துகிறார்கள். தி.மு.க என்றாலே கொள்ளை அடிக்கும் கூட்டம். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிடாதீர்கள். தமிழ்நாட்டையே விற்று விடுவார்கள்’’ என்று பேசி அ.தி.மு.க-வுக்கு வாக்குகள் சேகரிக்கிறார்.

திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பிராசாரத்திலும் நையாண்டியைத் தொடர்கிறார் ‘‘மக்களுக்காக உழைத்த ஒரே ஒரு எம்.ஜி.ஆரைத்தான் மக்களுக்குத் தெரியும். தான் கஷ்டப்பட்ட காலத்தில் கூட மக்களுக்கு உதவி செய்தவர்தான் எம்.ஜி.ஆர். கறுப்பு எம்.ஜி.ஆர் என்று விஜயகாந்த் தன்னைத்தானே சொல்லிக்கொள்ளலாம். அதை ஒரு போதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கருணாநிதி, விஜயகாந்த்... இவர்களெல்லாம் மக்களின் தேவை அறிந்து அதை நிறைவேற்றுவதற்காக கட்சி நடத்தவில்லை. அவர்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காகவே கட்சி நடத்துகிறார்கள். ' மக்களால் நான்; மக்களுக்காக நான்' என்று சூளுரைத்து மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் ஜெயலலிதா. ஆஸ்பத்திரியில் இருந்துகொண்டு மக்களை நினைக்கிறார், மக்களாகிய நாம் ஆஸ்பத்திரியில் இருக்கும் ஜெயலலிதாவை நினைக்கிறோம். விஜயகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுத்த மக்களுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்கூட வெற்றி பெறமுடியவில்லை. அவரது கட்சி டெபாசிட் இழந்தது. இனி அவரால் அரசியல் நடத்த முடியாது. தே.மு.தி.க கூடாரமே காலியாகிவிட்டது’’ என்று பேசி ரசிக்க வைக்கிறார்.

அ.தி.மு.க ஆளுங்கட்சி என்ற  பலத்தோடு களப்பணியை வேகப்படுத்திவரும் நிலையில், நாங்களும் ஆளுங்கட்சிதான்; மத்தியில் ஆளுவதே நாங்கள்தான் என்று மோடியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டு வருகின்றனர் பி.ஜே.பி-யினர். அந்தக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பவனி வருகிறார் மாநிலத் தலைவரான டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன்.

அவருடைய பிரசாரத்தில் ‘‘மோடி அரசுதான் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. தி.மு.க வெற்றி பெற்றால் சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்வார்கள். அ.தி.மு.க வெற்றி பெற்றால் மேஜையைத் தட்டுவார்கள். ஆனால், பி.ஜே.பி வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்னைகளுக்காக ஆட்சியாளர்களைத் தட்டிக்கேட்போம். தமிழக அரசை மிரட்டி நலத்திட்டப்பணிகளை பி.ஜே.பி அரசு செய்து வருகிறது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறு. உதய் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்ற நல்ல திட்டங்களை மோடி அரசு செயல்படுத்துவதால் அதை அ.தி.மு.க அரசு அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறது. தி.மு.க-வுக்கு, பி.ஜே.பி சவாலாக உள்ளது என்று தி.மு.க தலைவர் கருணாநிதி நினைக்கிறார். பி.ஜே.பி வளர்ச்சி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சி என்றால், பாட்டாளி ஜனங்கள் கட்சி என்று அர்த்தம்’’ என்று புதுவிளக்கம் கொடுத்து கலக்குகிறார்.

இந்த இரண்டு கட்சிகளும் ஆளுங்கட்சி என்ற தோரணையில் பிரசாரம் செய்துவர, தமிழக வரலாற்றிலேயே இத்தனை உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி இதுவரை கிடையாது. எனவே பலமான எதிர்க்கட்சியான எங்களை ஆதரியுங்கள் என்று முழக்கமிடுகிறது தி.மு.க! இந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி பிரசாரத்துக்கு வரமுடியாத குறையைப் போக்குகிறார் மு.க.ஸ்டாலின். ‘‘அரவக்குறிச்சி, தஞ்சைத் தொகுதி சட்டமன்றத் தேர்தல் இடைத்தேர்தல் அல்ல. திருப்பரங்குன்றத்தில் நடப்பது மட்டுமே இடைத்தேர்தல். அரவக்குறிச்சியிலும், தஞ்சாவூர் தொகுதியிலும் நடக்கும் தேர்தல் வந்து சேர்ந்த தேர்தல். இந்த தேர்தல் எதற்காக வந்தது என்பது தொகுதி மக்களுக்கு நன்றாகவேத் தெரியும். கடந்த பொதுத்தேர்தலின்போது அரவக்குறிச்சியில், தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்துப் பிரசாரம் செய்தேன். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அப்போது நிறுத்தப்பட்டு இருந்தவர்தான் இப்போதும் வேட்பாளர். அவர் பெயரைக் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை. அ.தி.மு.க அமைச்சர் ஒருவரது பினாமியின் வீட்டில் இருந்து கோடி கோடியாகப் பணம் பதுக்கி வைத்து இருந்ததை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்தது. அதன் காரணமாக அப்போது இந்தத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்படி ரத்து செய்யப்பட்ட தேர்தல் தான் இப்போது மீண்டும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் காணொளிக் காட்சி மூலம் ஆட்சி நடந்தது. இப்போது காணொளிக் காட்சி முடிந்து, 5 மாதமாக காணாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க மூன்று தொகுதிகளிலும் ஜெயித்து செஞ்சுரி அடிப்போம். இந்த செயல்படாத அரசுக்கு இடைத்தேர்தல் மூலம் பாடம் புகட்டுவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவராக ஆளுங்கட்சியை வெளுத்து வாங்குகிறார்.

இந்த மூன்று கட்சிகளையும்  கார்னர் செய்யும் விதத்தில் பிரசாரம் செய்துவருகிறார் தே.மு.தி.க-வின் மகளிர் முகமான பிரேமலதா. ‘‘காவிரியில் தண்ணீர் வந்தால் மணலை கொள்ளையடிக்க முடியாது. இதனால்தான் காவிரிப் பிரச்னைக்கு யாரும் தீர்வு காணவில்லை. ஓட்டுக்கு ரூபாய் கொடுத்து பொதுமக்களை பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறார்கள். 3 தொகுதி சட்டமன்றத் தேர்தல், தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆட்சியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திருப்பரங்குன்றத்தில்தான் 2005-ம் ஆண்டு, தே.மு.தி.க தொடங்கப்பட்டது. அன்று தொடங்கப்பட்ட கட்சியானது பல்வேறு போராட்டங்களையும், தேர்தல்களையும் சந்தித்து ஜனநாயகத்தின் பக்கம் நின்று மக்களின் உரிமைக்காக போராடி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சி செய்த அ.தி.மு.க - தி.மு.க கட்சிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. மக்கள் பணத்தை சுரண்டி பிழைக்கக்கூடிய அந்த இரண்டு கட்சிகளும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. இந்த தேர்தலில்கூட பணத்தைத்தான் அவர்கள் இருவரும் நம்பி இருக்கிறார்கள். தே.மு.தி.க-வுக்கு எப்போதும் தெய்வத்தின் துணையும், மக்களின் துணையும் உண்டு. அப்படித்தான் இந்தத் தேர்தலை சந்திக்கிறோம். தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளை விரட்டுங்கள். இரண்டு கட்சிகளும் கோமா நிலையில் உள்ளது. இனி நமக்குத்தான் எதிர்காலம்” என்று துணிச்சலாகப் பேசி கட்சியினரை உற்சாகப்படுத்துகிறார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்Trending Articles

Sponsored