Published:Updated:

"விவசாயத்தை பெண்கள் கையில் எடுக்க வேண்டுமென்பார் நம்மாழ்வார்!" அழகேஸ்வரி #NammalvarMemories

"விவசாயத்தை பெண்கள் கையில் எடுக்க வேண்டுமென்பார் நம்மாழ்வார்!" அழகேஸ்வரி #NammalvarMemories
"விவசாயத்தை பெண்கள் கையில் எடுக்க வேண்டுமென்பார் நம்மாழ்வார்!" அழகேஸ்வரி #NammalvarMemories

இயற்கை விவசாயத்தின் ஓர் அடையாளமாக மாறியவர் நம்மாழ்வார். மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே ஆரோக்கியமான சூழல் இங்கு நிலவும் என்று தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியவர். மாற்று மருத்துவம், நஞ்சில்லா உணவு உள்ளிட்ட பல விஷயங்களுக்காகத் தொடர்ந்து பரப்புரை செய்தவர். இன்று இவரின் வாழ்முறையைப் பின்பற்றும் குடும்பங்கள் ஏராளம். விவசாய நிலங்களை அரசு கைப்பற்றினாலும் அதற்கு எதிராகப் போராடியவர். மக்கள் நலனுக்காகச் செயலாற்றும் பல்வேறு இயக்கங்களைத் தோற்றுவித்ததில் நம்மாழ்வாரின் பங்கு பெரிதும் உள்ளது. அப்படியான ஓர் இயக்கம்தான் இயல்வாகை. திருப்பூர் ஊத்துக்குளியில் சிறு விதையாகத் தொடங்கிய இதன் ஒருங்கிணைப்பாளர் அழகேஸ்வரி, இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று நஞ்சில்லா உணவு முறைக்கு மக்கள் வாழ வேண்டிய அவசியத்தைப் பற்றி விளக்கி வருகிறார். அப்படியான வாழ்க்கை முறையை வாழ முடியும் என்பதன் உதாரணமாகவும் திகழ்ந்துவருகிறார். இவர் நம்மாழ்வாரோடு பயணித்த அனுபவங்களைப் பற்றிக் கேட்டேன். 

``நம்மாழ்வார் அய்யாவை நான் முதன்முதலாகப் பார்த்தது 2009 ம் ஆண்டு, ஊத்துக்குளி விழாவில்தான். அப்போது அவரைப் பற்றி அதிகம் தெரியாது. அதனால், பலரும் அவரிடம் வாழ்த்து பெற்றபோதும் நான் ஒதுங்கியே நின்றேன். அடுத்த சந்திப்பு ஈரோட்டு விழா ஒன்றில் நடந்தது. அப்போது விழா முடிந்து, நான்கைந்து பேராக நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கூறிய செய்திகள் என்னை ஆச்சர்யப்படுத்தின. அவரின் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்தேன். அவரின் பேச்சுகளைக் கூர்ந்து கேட்டேன். அப்புறம்தான் எனக்கு நஞ்சில்லா உணவு முறை எவ்வளவு அவசியம் என்பது புரிந்தது. அவரின் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். அதன் தொடர்ச்சியாகப் பல இடங்களுக்கும் அய்யாவுடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் பெரிய நூலைப் படிப்பதற்கு இணையான அறிவையும் அனுபவத்தையும் தந்தது. 

அவர் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் உரையாட ஆர்வமாக இருந்தார். விவசாயத்தை முழுமையாகப் பெண்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது நஞ்சில்லா உணவு முறைக்கு மாறுவதோடு இயற்கை வளத்தை முழுமையாகப் பயன்படுத்தவும் முடியும் என்று அடிக்கடி அய்யா சொல்வார். அவர் கூறியது முழுக்க உண்மை என்பதை நாங்கள் சரோஜா தோழர் மூலமாகக் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். அய்யாவின் பயிற்சி வகுப்பு வந்தவர் சரோஜா தோழர். இப்போது கரூர் அருகே விவசாயப் பண்ணையை திறம்பட நடத்தி வருகிறார். நஞ்சில்லா உணவுப் பொருள்களைத் தயாரிப்பதோடு, அவர் நிலத்தில் விழும் மழை நீரை முழுமையாக அந்த நிலம் பயன்படுத்திக்கொண்டு, நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் அந்தச் சூழலை அமைத்துள்ளார். இது நம்மாழ்வார் அய்யா கற்றுக்கொடுத்த வாழ்க்கை முறை எவ்வளவு நடைமுறை சாத்தியமானது என்பதற்கு இவரே நல்ல உதாரணம். சென்ற ஆண்டு நம்மாழ்வார் விருதும் பெற்றார். 

அய்யா இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு, ஊத்துக்குளியில் பனைத் திருவிழாவிற்கு அழைத்திருந்தோம். காலையிலேயே வந்துவிட்டார். அவர் வந்ததுமே விழாக் குழுவினருக்கு தனி உற்சாகம் வந்துவிட்டது. காலையில் மண் மத்தளம் இசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கியதும், அவரையும் அறியாமல் அய்யா ஆடத் தொடங்கிவிட்டார். சுமார் அரைமணி நேரம் உற்சாகமா நடனம் ஆடியதை நான் உட்படப் பலரும் முதன்முதலாக அப்போதுதான் பார்த்தோம். அதன்பின் நடைப்பயணத்திலும் கொஞ்சமும் சோர்வில்லாமல் நடந்தார். குழந்தைகள் பனை ஓலைகளில் செய்துகொடுத்த கிரீடத்தை ஆசையோடு தலையில் சூடிக்கொண்டார். அன்றைக்கு முழுவதுமே பனையால் செய்யப்பட்ட உணவுகளைத்தான் கொடுத்துவந்தோம். மாலையில் நடந்த விழாவில் கருப்பட்டி காபி கொடுத்தோம். அதை பிளாஸ்டிக் அல்லது காகிதக் கோப்பைகளில் கொடுக்க விரும்பாததால், கொட்டாங்குச்சி சிரட்டையில் கொடுத்தோம். பலவித சாதியினரும் கூடியிருந்த அந்த அவையில் ஒருவர் குடித்த கோப்பையை மற்றவருக்குத் தந்து, குடிக்கச் செய்தனர். இதைப் பார்த்த அய்யா, விழா முடிந்ததும் `பெரிய வேலைகள் செஞ்சிருக்க'னு சொல்லி வாழ்த்தினார். அந்த நிமிஷம் அப்படியே எனக்குள் இருக்கிறது. அவர் காட்டிய வழியில், அவர் கற்றுக்கொடுத்த வாழ்க்கை முறையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். அய்யா எப்போதும் என்னுடன் இருந்து வழிகாட்டி வருகிறார் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று நெகிழ்கிறார் அழகேஸ்வரி.