Published:Updated:

மாட்டுப் பொங்கலும்... மடிக்கப்பட்ட நாள்காட்டியும்! #MyVikatan

Representational Image
Representational Image

பொங்கலன்று, வழக்கமாக எங்கள் தெருப் பெண்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நீர் எடுத்துவர பிடாரி குளம் செல்வர். அதிலும் ஒரு சீனி யாரிட்டி மரியாதை உண்டு.

அப்பா, ஆண்டின் தொடக்கத்தில் தினசரி நாட்காட்டியை வாங்கி வந்து வீட்டில் மாட்டியதும்,சின்னண்ணனும் நானும் செய்கிற முதல் வேலை, தீபாவளி மற்றும் பொங்கல் திருநாள்களை அதில் தேடிக் கண்டுபிடித்து, அந்த ஷீட்டுகளை மட்டும் மடித்து வைத்து விடுவோம். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், அவை வர இன்னும் எத்தனை நாள்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம். மனதுக்குத் தெரிந்தாலும், மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்ப்பதில் ஓர் அலாதி இன்பம்.

Representational Image
Representational Image

தீபாவளிக்கு புத்தாடை, இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு ஆகிய மூன்றும் ஒரு சேரக் கிடைப்பதால், அது முக்கியத்துவம் பெற்று விடுகிறது. மழை வந்து அதைக் கெடுப்பதற்கான சந்தர்ப்பங்களும் அதிகம். ஆனால்,பொங்கலில் அந்தப் பிரச்னை இல்லை. மார்கழியின் இதமான குளிர் மனத்தை நிறைத்திட, வயல்களில் கதிர்கள் முற்றிட, முதல் நாளில் சர்க்கரைப் பொங்கலையும் வெண் பொங்கலையும் ஒரு கை பார்த்த பிறகு, இறக்கத்தில் தாழ்வாகக் கட்டித் தொங்கவிடப்படும் வாழைத் தாரிலிருந்து இஷ்டத்துக்கு பழங்களைப் பிய்த்து சாப்பிட்டுக் கொண்டு விளையாடுவோம். அதிலும், அத்தான் சிவராமன் வந்து விட்டால், அந்தப் பூவன் பழங்களைத் தோலோடு யார் அதிக எண்ணிக்கையில் சாப்பிடுவது என்ற போட்டியும் நடக்கும்.

கட்டாக வாங்கிவந்து, சுவரோரத்தில் சாற்றிவைக்கப்பட்டுள்ள கரும்பிலிருந்து, பிடித்ததை செலெக்ட் செய்து, அதை உருவி, அரிவாளால் சிறிய துண்டுகளாக வெட்டி,பற்களால் தோலைக் கடித்துத் துப்பிவிட்டு, கடித்தே கரும்பைச் சுவைப்பதில் ஒரு தனி ருசிதான். புல்லாங்குழலோடு இருக்கும் கண்ணனைப் போல் கரும்பைச் சுவைக்கும் கண்ணன்களை தெருக்களில் அதிகம் பார்க்க முடியும். திருத்துறைப்பூண்டியில் பொங்கல் சந்தை என்றே தனியாக நடக்கும். வாழைத்தார், கரும்புக் கட்டு,மஞ்சள் இஞ்சிக் கொத்து, மாடுகளுக்கான நெட்டி மாலை மற்றும் மாட்டுக்கான மணிகள், கயிறுகள் என்று அனைத்தும் சந்தையில் விற்கப்படும். அன்றைக்கு, டவுனில் எங்கும் போக்குவரத்து ஜாம்தான்.

Representational Image
Representational Image

எந்தச் சாலையில் பார்த்தாலும், மாட்டுவண்டிகள் வரிசையாக நிற்கும். மாடுகளில்தான் எத்தனை வகைகள். கொம்பு மாடுகள்,மொட்டை மாடுகள் (கொம்பு தீய்க்கப்பட்டவை), புஷ்டியானவை, எலும்பும் தோலுமானவை, எப்பொழுதோ வண்டியில் பூட்டப்படுபவை, எப்போதுமே வண்டியோடு உழைப்பவை என்று பல வகை. அவற்றைப் பார்த்தே, அதன் உரிமையாளர்களின் பொருளாதார நிலையைச் சரியாகக் கணக்கெடுத்துவிடலாம். `பால் மாட்டுக் கன்றும் பணக்காரன் வீட்டுப் பிள்ளையும் தனியாகத் தெரிவார்கள்தானே.’ அப்போது, எங்கள் வீட்டில் மாட்டு வண்டியோ, வண்டி மாடுகளோ இல்லை.

மூன்று பசு மாடுகளும் அவற்றின் கன்றுகளுமாக, ஆறு உருப்படி மட்டுமே. அவற்றை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் ஒருவர் இருந்தார். காலையில் வந்து மாலை வரை இருந்து, மாடுகளின் தேவைகளைக் கவனிப்பதே அவர் வேலை. மாலை ஆனதும் வீட்டுக்குப் போய்விடுவார். சில விசேஷ நாள்களில் எங்கள் வீட்டிலேயே தங்கிவிடுவார். ஓட, ஓடியாட என்று எல்லா வேலைகளையும் அவர்தான் செய்வார். ஆளுக்கொரு வேலையைச் சொன்னாலும் அயராமல், முகம்ழிக்காமல் செய்வார்.

Representational Image
Representational Image

பொங்கலன்று, வழக்கமாக எங்கள் தெருப் பெண்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, குளித்துவிட்டு நீர் எடுத்துவர பிடாரி குளம் செல்வர். அதிலும் ஒரு சீனியாரிட்டி மரியாதை உண்டு. பட்டாமணியராக இருந்த எங்கள் சின்ன தாத்தாவின் மனைவி மூத்தவர் என்பதால், அவர் வந்த பிறகே புறப்படுவர். அவருக்கு வயதாகி, குடம் தூக்க முடியாமல் போனபிறகு, அந்த சீனியாரிட்டி எங்கள் அம்மாவுக்குக் கிடைத்ததில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. செப்புக்குடத்தை இடுப்பில் வைத்தபடி, குளித்துவிட்டு நீர் எடுத்துக்கொண்டு வந்து, அந்த நீரில்தான் பொங்கல் பானை வைப்பார்கள்.

ஆசார அனுஷ்டானங்களில், எங்கள் அம்மாவை யாராலும் மிஞ்ச முடியாது. அதேபோன்று பணிவிலும் அவர்களுக்கு இணையில்லை. அதனால் எல்லோருக்குமே அவர்களைப் பிடிக்கும். பட்டாமணியார் தாத்தாவின் பெயர் முருகையன் என்பதால், முருங்கைக்காய் என்று தன் வாழ்நாளில் அவர்கள் கூறியதில்லை. ‘மரத்துக்காய்’ என்றேதான் சொல்லிவந்தார்கள். அப்பாவின் பெயர் ரெத்தினசாமி என்பதால், ரத்தத்தை ‘சிவப்பு’ என்றே சொல்வார்கள். பக்கத்து வீட்டு நடு மாமா, வாசலில் கோடு வெட்டித்தான் பொங்கல் வைக்கச் செய்வார். காற்றில் நெருப்பு அணையாமல் இருக்க, சணலால் ஆன படுதாவை மறைப்பாகக் கட்டிவிடுவார். கோட்டின்மீது மண் பானைகளில் பொங்கி, அங்கேயே சூரியனுக்குப் படைத்துவிட்டு, உள்ளே எடுத்துச் சென்று சாப்பிடுவார்கள். பானையில் பொங்கல் பொங்கும்போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று எல்லோரும் மகிழ்ந்து ஆரவாரம் செய்வார்கள்.

பானையை இறக்கிவைத்து, அதன் கழுத்துப் பாகத்தில் கட்டிய இஞ்சி, மஞ்சள் கொத்துகளைச் சரிபார்த்த பின், முக வாழை இலை ஒன்றில் சர்க்கரைப்பொங்கலையும், மற்றதில் வெண் பொங்கலையும் வைத்து சூரியனுக்குப் படையலிடுவார்கள். சர்க்கரைப் பொங்கலுக்கு அவரைக்காய் பொரியலும், வெண் பொங்கலுக்கு, பிடி கருணை தாளிதமும் சைடு டிஷ்கள். சர்க்கரைப்பொங்கலைக் குழியாக்கி, அதில் நெய்யை ஊற்றுவார்கள். வெண்பொங்கலைக் குழியாக்கி, அதில் தயிர் ஊற்றுவார்கள். கூடவே வாழைப்பத்தை உரித்துவைப்பதோடு, ஒரு அச்சு வெல்லத்தையும் வைப்பார்கள். எங்கள் வீட்டில் வாசல் கோடெல்லாம் கிடையாது. கூடத்தில் கோடு நிரந்தரமாக உண்டு. சாதாரண நாள்களில், அதற்குள் மணலைக் கொட்டி, மேலே சாணத்தால் மெழுகிவைப்பார்கள். பொங்கல் சமயத்தில் தோண்டிக்கொள்வார்கள். சாமிக்குப் படையலிட்ட இலையில்தான் நான் சாப்பிடுவேனென்று அடம்பிடிப்பேன்.

Representational Image
Representational Image

கடைக்குட்டி செல்லமென்று அனைவரும் விட்டுக்கொடுத்து விடுவார்கள். எங்கள் தெருவிலேயே, எங்கள் வீட்டில் மட்டும் போகிப் பண்டிகையும் கொண்டாடுவார்கள். போகி என்றால், பழசையெல்லாம் கொளுத்துகிற சமாச்சாரமெல்லாம் கிடையாது. போகியன்றிரவு வெண்பொங்கல் பொங்கி, சாமி கும்பிடுவதோடு சரி. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்தான் பொங்கலின் ஹை லைட்டே. காலையிலிருந்தே ஊர் பயங்கர பிஸியாகச் செயல்படும். குளம், ஆறு, வாய்க்கால் என்று எங்கெல்லாம் கோரை வளர்ந்திருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று அதைப் பிடுங்கி, வேறில் ஒட்டியிருக்கும் சேற்றை நன்கு கழுவிவிட்டு வீட்டுக்குக் கொண்டுவந்து, அதன் பருமனுக்கு ஏற்ப இரண்டு மூன்றாக வகிந்து, கூரையில் வெயிலில் உலரப்போட்டு விடுவார்கள். குளம், குட்டைகள், வாய்க்கால்கள், ஆறுகள் என்று தங்களுக்கு அருகிலுள்ள நீர் நிலைகளில் மாட்டைக் குளிப்பாட்டி, வெயிலில் குளிர் போகக் கட்டிவைப்பார்கள். மதியச் சாப்பாட்டிற்கு முன் இந்த வேலையை முடித்துவிடுவார்கள்.

மதியம், பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் ஆட்டுக்கறி குழம்புதான். ஒரு முறை எங்கள் வீட்டில், எங்கள் செல்லமாக வளர்ந்த கடாவையே அடித்துப் போட்டுவிட, நான் அதைச் சாப்பிட மாட்டேன் என்று முரண்டுபிடிக்க, என் தந்தையார் ”கொன்னாப் பாவம் தின்னாப் போச்சு” என்று கூறியது இன்னும் நினைவிலிருக்கிறது. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, சிறிது ஓய்வெடுத்தபின், மாடுகளுக்கான அலங்காரம் தொடங்கிவிடும். கொம்புள்ள மாடுகளின் கொம்பைச் சீவி, அதற்கு கவர்ச்சிகரமான வண்ணங்களைப் பூசுவார்கள். அந்தக் கொம்புகளை அழகுபடுத்த, ஒரு மாதம் முன்பிலிருந்தே, கதிர் முற்றிய வயல்களில் நானும் அண்ணனும் இறங்கி, கதிரின் பதர், சற்றே மஞ்சள் வண்ணத்தில் தோன்றுவதை, தண்டுடன் சேர்த்துப் பிடுங்கிவருவோம். அதைச் சடைபோல் பின்னி, எங்கள் பசு மாட்டின் கொம்பில் சுற்றிவிடுவோம். அதைக் குஞ்சம் என்று கூறுவதுண்டு. இந்த முறை பல வயல்களில் ஏறி இறங்கி, அதைச் சேர்த்துத் தயார்படுத்தி வைத்திருக்கிறோம். சற்றே வெளிறிய தங்க நிறத்தில், ஒளியில் அது மின்னுகையில் அவ்வளவு அழகாக இருக்கும். நெற்றிக்கு, நெற்றிச்சுட்டியைக் கோரையில் கோத்துக் கட்டுவார்கள். நெற்றிச்சுட்டியைப் பனை ஓலையில் செய்வார்கள். சிலர், அதற்கு வண்ணமும் பூசுவதுண்டு.

Representational Image
Representational Image

எங்களுக்கு பனை ஓலையில் தாமரை மொட்டு செய்யத் தெரிந்த அளவுக்கு, நெற்றிச்சுட்டி செய்யத் தெரியாது. பக்கத்து வீட்டு சின்ன மாமா ஜெகநாதனும், அவர்கள் வீட்டில் பணியாற்றும் சாம்பசிவமும் அதைச் செய்வதில் திறமைசாலிகள். சில சமயங்களில் அவர்களிடமே நெற்றிச் சுட்டியைச் செய்து வாங்கிக் கொள்வோம். பனை ஓலையில் செய்யப்படும் தாமரை மொட்டுக்கள். அதற்கு பல வண்ணங்களைப் பூசி, பல நாள்களுக்கு முன்பாகவே காயவைத்துவிடுவோம். அதை, மாலையாகக் கோக்க, பனை அவணியைப் பயன்படுத்துவோம். அவணி என்பது பனை மட்டையின் மேல் தோல். அடுத்து, நெட்டியிலான பல வண்ண மாலைகள். இதை சந்தையில் வாங்குவதுடன், நாங்களும் சுயமாகத் தயாரிப்பதுண்டு. நானும் அத்தான் சிவராமனும் கிழக்கே புல்லறுக்கப் போகையில், நிறைய நெட்டிகள் ஓடைகளில் வளர்ந்திருக்கும். அதைப் புல்லோடு சேர்த்து அறுத்துவந்து, அதைப் பதப்படுத்தி, துண்டுகளாக நறுக்கி, வண்ணம் பூசி மாலைகளாக்குவோம். புல்லறுப்பதில் அத்தான் பயங்கர கெட்டிக்காரர்.

ஒரு வரப்பில் அவர் உட்கார்ந்தால், அந்த வரப்பு சுத்தமாகிவிடும். ஆடு, மாடுகளால்கூட அவ்வாறு சுத்தமாக மேய முடியாது. ஆனாலும், மாமா எப்போது பார்த்தாலும் அத்தானை திட்டிக் கொண்டேதான் இருப்பார். ”விடியா மூஞ்சி வேலைக்குப் போனால், வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது” என்பார். நெட்டியை வட்டமாக, நீள வாக்கில் என்று பல விதமாக வெட்டிச் சுயமாகச் செய்யப்பட்ட மாலைகளை மாடுகளுக்கு அணிவிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. முதல் மாத சம்பளத்தில், அம்மாவுக்கு நகை வாங்கிக்கொடுத்து, அதை அம்மா அணிந்து மகிழ்கையில், நமக்குத் தோன்றுமே ஒரு புளகாங்கிதம். அது போல.

Representational Image
Representational Image

பால் கொடுத்து நம்மைக் காப்பாற்றும் பசுவும் நம் தாய்தானே. அப்புறம், வெண்கல மணி. அதுவும் பழசென்றால், பொங்கலன்று அதைக் கழற்றி புளியில் தேய்த்துப் பளிச்சென ஆக்கி அணிவோம். அதற்கு அடுத்தபடியாக, வேப்பமாலை. வேப்ப இலையில் செய்யப்படும் மாலை. எங்கள் தெரு பட்டாமணியார் தெரு என்றாலும், நாங்கள் கடைசியாகத்தான் பொங்கல் கூறுவோம். பட்டாமணி தாத்தாவின் வீட்டுக்குப் பின்னாலிருக்கும் மைதானம்தான் எங்கள் மாட்டுப் பொங்கல் களம். மாலைதான் பொங்கல் வைக்க ஆரம்பிப்போம். அதிலும், ஞாயிற்றுக்கிழமை மாட்டுப் பொங்கலென்றால், ராகு காலம் முடிந்து ஆறு மணிக்கு மேல்தான் பொங்கல் வைக்கவே ஆரம்பிப்பார்கள். முதலில், பொங்கல்வைக்கும் இடத்தை முன்னரே சுத்தம் செய்திருந்தாலும், மீண்டும் ஒரு முறை சுத்தப்படுத்துவோம். மாடுகளை நிறுத்த பெரிய இடம் தேவை. நடுவில் மாடுகளை நிறுத்திச் சுற்றிவர, நல்ல பாதை தேவை. அந்த மாதிரி இடம்தான் அது.

முதலில் சிறிய குழி தோண்டி, அதில் வயலிலிருந்து அப்போது கொண்டுவந்த பயிரை நட்டு, செங்கல்லில், சாணத்தாலான பிள்ளையாரைப் பிடித்துவைத்து சாமி கும்பிட்ட பிறகுதான், மாடுகளுக்குத் தருவதற்கான பொங்கலை பூமியில் கோடு வெட்டி, புதுப்பானையில் சமைப்போம். நல்ல பயிரை எடுத்து வருவதும், புதுப் பானையை வாங்கிவருவதும் என் வேலை. அருகில்தான் குயவர் தெரு. அவர்கள், மாட்டுப் பொங்கலுக்கான பானையை இலவசமாகவே தருவார்கள். பொங்கல் தயாராகிக் கொண்டிருக்கும்போதே, அவரவர் வீட்டுக்குச் சென்று, மாடுகளுக்கான ஆபரணங்களைக் கூடைகளில் வைத்து எடுத்து வருவார்கள். அது, புது மணப்பெண்ணைப் பரிசம்போட மாப்பிள்ளை வீட்டார், வரிசை கொண்டுவருவதைப் போலிருக்கும். அந்தக் கூடையில் மாடுகளுக்குத் தேய்க்க நல்லெண்ணையும் பின்னர் தலையில் தேய்க்க சீயக்காய்த்தூளும் அடக்கம். எல்லோரும் கொண்டுவந்த பிறகு, உப்புப் போடாத பொங்கலையும் இறக்கிவைத்து, சாமி கும்பிட்ட பிறகு, அவரவர் கொண்டுவந்த ஆபரணக் கூடைகளை எடுத்துச் சென்று, தங்கள் மாடுகளுக்குப் பூட்டி, அழைத்துவருவர். மாலைகளைப் போடுவதற்கு முன்னால், மாடுகளுக்குத் தலையில், ”எண்ணெய்... எண்ணெய்...” என்று சொல்லிக் கொண்டே எண்ணெயைத் தலையில் தேய்த்துவிட்டு, பின்னர் ”தண்ணி... தண்ணி...” என்று கூறியபடியே தண்ணீரைத் தெளிப்பர். அதன்பிறகு, புதுமணப் பெண்ணைத் திருமணக் கூடத்திற்கு அழைத்துவருவது போல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாட்டைப் பிடித்துவருவர் மைதானத்திற்கு. அப்போதே, சில மாடுகள் சண்டித்தனத்தை ஆரம்பித்துவிடும்.

Representational Image
Representational Image

சில மாடுகள் நேராக வராது. எங்கள் பசுவுக்கு கொம்பில் குஞ்சம் கட்டிக்கொண்டு வந்ததை, மைனரின் காளை மாடு ஒரே வாயில் பிடுங்கித் தின்றுவிட்டது. எங்கள் ஒரு மாத உழைப்பு, ஒரு நொடியில் அதன் வாய்க்குள் போயிற்று. எல்லோரும் மாட்டை மைதானத்திற்குள் நிறுத்தியதும், ஒரு மண் சட்டியில் நல்ல தணலை எடுத்துக்கொண்டு ஒருவர் முன்னே போக, மற்றவர்களெல்லாம் அவரைத் தொடர்ந்து, வெண்கலத் தாம்பாளங்களில் கம்பால் அடித்து ஒலியெழுப்பிக்கொண்டே, ’பொங்கலோ பொங்கல்’ என்று கூவிக்கொண்டே, நடுவிலுள்ள மாடுகளைச் சுற்றிவருவோம். தப்படிப்பார்கள். அப்படிச் சுற்றி வருகையில், மாடுகளின்மீது மஞ்சள் தண்ணி தெளிப்பது வழக்கம். மைனர்தான் எப்போதும் மஞ்சள் தண்ணி தெளிப்பார். அவர் ரகசியமாக, மஞ்சளுடன் சுண்ணாம்பைக் கலந்து, எல்லோர் மீதும் தெளித்துவிடுவார். பலரின் சட்டைகளில் அது ரத்தச் சிவப்பாகக் காட்சியளிக்கும்.

மூன்று சுற்று சுற்றி வந்ததும், தயாராக உதறிவைக்கப்பட்டுள்ள வைக்கோலின்மீது மண்சட்டி நெருப்பைக் கொட்டி தீ மூட்டுவார்கள். ஒவ்வொரு மாட்டையும் பிடித்திருப்பவர், மாட்டுடன் தீயைத் தாண்டி ஓட வேண்டும். வேடிக்கையே அப்பொழுதுதான் ஆரம்பிக்கும். சில மாடுகள் பிடித்திருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு எதிரில் ஓடும். சில மாடுகளோ, நின்ற இடத்தை விட்டு நகராது. ஆனால், எல்லா மாடுகளையும் நெருப்பைத் தாண்டி வரச்செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளில் மற்றவர்களும் ஈடுபட்டு, ஒரு வழியாக எல்லா மாடுகளையும் தீயைத் தாண்ட வைத்து, வீட்டுக்கு ஓட்டிச் சென்று, மாட்டுக் கொட்டகையின் உள்ளே கட்டிவைத்து, ஆட்கள் அறுத்து வந்த புல்லை தாராளமாகப் போடுவார்கள். பிறகு, எல்லோரும் பட்டாமணி தாத்தா வீட்டுக்குச் செல்ல, பாட்டி ஆரத்தி எடுத்து அனைவருக்கும் நெற்றியில் பொட்டு வைப்பார்கள். தாத்தா- பாட்டி காலில் விழுந்து அனைவரும் ஆசி வாங்குவோம். தயாராக இருக்கும் பயத்தங்கஞ்சியையும் உளுத்தம் வடையையும், பாட்டி சார்பாக அங்குள்ளவர்கள் வழங்குவர்.

மாட்டுப் பொங்கலும்... மடிக்கப்பட்ட நாள்காட்டியும்! #MyVikatan

மாட்டுப்பொங்கல் இரவின் விசேஷ உணவு, பயத்தம் பருப்பில் செய்யப்பட்ட கஞ்சியும் உளுந்தில் செய்யப்பட்ட வடையும்தான். அதன்பிறகு, அந்த இரவிலேயே காணும் பொங்கல் ஆரம்பித்து விடும். ஆமாம். எங்கள் ஊரைப் பொறுத்தவரை, அந்த இரவே காணும் பொங்கல். எல்லா உறவினர் வீடுகளுக்கும் சென்று, காலில் விழுவோம். பயத்தங் கஞ்சியும், உளுந்த வடையும் நிறைய கிடைக்கும். சில வீடுகளில் வாழைப்பழத்தையும் சாப்பிடக் கொடுத்து உபசரிப்பர். எங்களுடையது கீழத்தெரு, வடக்குத் தெரு, மேலத் தெரு என்று எங்கள் ஆசீர்வாதம் வாங்கும் சடங்கு, சில சமயம் நடு நிசி வரை தொடரும். அடுத்த நாள் காலை, வீட்டுப் பெரியவர்கள் உலக்கையுடன் மாட்டுக் கொட்டகை சென்று, வாசலில் உலக்கையைப் போட்டு, ஒவ்வொரு மாடாக அதைத் தாண்டச்செய்வர். அவ்வாறு செய்தால்தான் மாடுகளின் மேலுள்ள கண்திருஷ்டி விலகி, அவை நீண்டு வாழும் என்பது நம்பிக்கை. இப்போது சொல்லுங்கள், ஜல்லிக்கட்டு வெற்றி பெற்றதற்கான காரணம் என்னவென்று. மாடுகள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள்.

-ரெ.ஆத்மநாதன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு