Published:Updated:

மக்கும் குப்பையில் மகத்தான உரம் தயாரிப்பு! அசத்தும் திண்டுக்கல் மாநகராட்சி!

நுண்ணுர உற்பத்தி மையம்

பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திண்டுக்கல் மாநகராட்சியில் 9 நுண் உர செயலாக்க மையங்கள் தொடங்கப்பட்டு ஓராண்டில் மட்டும் 100 டன் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு உரம் வழங்கியுள்ளனர்.

மக்கும் குப்பையில் மகத்தான உரம் தயாரிப்பு! அசத்தும் திண்டுக்கல் மாநகராட்சி!

பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திண்டுக்கல் மாநகராட்சியில் 9 நுண் உர செயலாக்க மையங்கள் தொடங்கப்பட்டு ஓராண்டில் மட்டும் 100 டன் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு உரம் வழங்கியுள்ளனர்.

Published:Updated:
நுண்ணுர உற்பத்தி மையம்

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சியில் தினம்தோறும் 92 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டு களாகத் திண்டுக்கல் பழநி ரோட்டில் முருகபவனம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 11.21 ஏக்கரில் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. நகருக்குள் குப்பைக் கிடங்கு மலைபோல் குவிந்திருப்பதிருப்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் கொசு உற்பத்தி மையமாகவும் இருக்கிறது. மேலும், குப்பையில் தீப்பற்றி எரிந்துகொண்டே இருப்பதால் எப்போதும் புகை மண்டலமாக இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

குப்பை அரைக்கும் பணி
குப்பை அரைக்கும் பணி

இதுதொடர்பாக கிடங்கில் உள்ள குப்பையை அகற்றக்கோரி நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில் பாதியளவு குப்பை அகற்றப்பட்டுவிட்டது. இதற்கிடையே மாநகரில் குப்பை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து வாங்கிச் சென்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பையை அரைத்து பதப்படுத்தி உரமாகத் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாகவும், மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைத்திருக்கும் மக்களுக்கு கிலோ ஒரு ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.

உரத் தொட்டி
உரத் தொட்டி

பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திண்டுக்கல் மாநகராட்சியில் 9 நுண் உர செயலாக்க மையங்கள் தொடங்கப்பட்டு ஓராண்டில் மட்டும் 100 டன் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு உரம் வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் பேசினோம், ``மாநகராட்சியில் 581 துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 125 பேர் தவிர மற்ற அனைவரும் தற்காலிக ஊழியர்கள். இவர்களை மேற்பார்வை செய்ய 15 துப்புரவு மேற்பார்வையாளர்களும், 16 சுகாதார ஆய்வாளர்களும் உள்ளனர். இந்த ஊழியர்கள் 15 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, காலை 6 முதல் 11 மணி வரை தள்ளுவண்டி, மிதிவண்டி, பேட்டரி வண்டிகள், குட்டியானை உள்ளிட்ட வாகனங்களில் ஒவ்வொரு தெருவாகச் சென்று மக்களிடம் குப்பை சேகரிக்கும்போதே மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துவிடுவார்கள்.

ஆணையர் சிவசுப்பிரமணியன்
ஆணையர் சிவசுப்பிரமணியன்

மக்கும் குப்பையான காய்கறி, பழக்கழிவுகள், காய்ந்த பூக்கள், இலைதழைகள், மிஞ்சிய மிதமான உணவுகள், டீத்தூள், காபித்தூள் கழிவுகள், அசைவ உணவுகள் ஆகியவற்றை சேகரித்து மாநகராட்சியில் தலா 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 9 நுண் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்வார்கள். ஒவ்வொரு நுண் உர செயலாக்க மையங்களுக்கும் 2 முதல் 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு மையத்துக்கும் தினம்தோறும் 2 முதல் 5 டன் வரை மக்கும் குப்பைக் கொண்டுவரப்படுகிறது. 

மக்காத குப்பையான பாட்டில்கள், ஈ-வேஸ்ட், பிளாஸ்டிக் பொருள்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி மற்றும் விற்பனைக்குத் தேவையானவற்றைத் துப்புரவு தொழிலாளர்களே அதைக் கொள்முதல் செய்வோரிடம் விற்றுவிட அனுமதி உண்டு. எனவே, இதன்மூலம் தற்காலிகத் துப்புரவுத் தொழிலாளர்கள் தினம்தோறும் 100 முதல் 200 ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம். 

தயாரிப்பு பணி
தயாரிப்பு பணி

உணவகங்கள், மருத்துவமனைகள், விடுதிகள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் ஆகியவற்றில் குப்பை வாங்குவதை நிறுத்தியுள்ளோம். அங்கு சேரும் குப்பைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

சாலையோர தள்ளுவண்டி உணவுக்கடைகள், இறைச்சிக் கடைகள் நடந்துவோரின் விவரங்களை சேகரித்து இதில் 95 கடைக்காரர்கள் தங்கள் கடையில் இருந்து உருவாகும் கழிவுகளை சேகரித்து அந்தந்தப் பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களில் கொடுத்துவிடுவார்கள். இதை திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கால்நடை தீவன நிறுவனம் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் திண்டுக்கல் மாநகராட்சி மிகவும் தூய்மையாய் இருந்து வருகிறது.

வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பை
வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பை

மக்கா குப்பையான பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் சிமென்ட் தொழிற்சாலைக்கும் தார் சாலைகள் அமைப்பதற்கும் அனுப்பப்படுகிறது. இல்லையெனில், வேடப்பட்டி எரியூட்டு நிலையத்தில் எரித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். தற்போது கூடுதலாக 10 நுண்ணுர உற்பத்தி மையங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 வார்டுக்கு ஒரு நுண்ணயிர் கூடம் என்ற அடிப்படையில் மொத்தம் 24 மையங்கள் அமைக்கப்படவுள்ளன'' என்றார்.

உரத் தயாரிப்பு குறித்து திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலமுருகனிடம் கேட்டோம். ``மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.காலனி மெயின் ரோடு, லயன் தெரு, சந்தப்பேட்டை, அண்ணா நகர், பாறைப்பட்டி, வேடப்பட்டி, கோவிந்தாபுரம் மின்மயானம் உள்ளிட்ட 9 இடங்களில் நுண் உர செயலாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கும் குப்பை நுண் உர மையத்துக்கு கொண்டுவரப்பட்டவுடன், அதில் பாலித்தீன், பிளாஸ்டிக் மறைந்திருக்கிறதா எனப் பார்த்து பிரித்து எடுத்துவிடுவோம். உணவுப் பொருள்கள் இருந்தால் அவற்றை எடுத்து தனியாக வைத்துக்கொள்வோம்.

சுகாதார ஆய்வாளர் பாலமுருகன்
சுகாதார ஆய்வாளர் பாலமுருகன்

பிறகு கட்டிங் அரவை இயந்திரத்தில் போடுவோம். பொடிப்பொடியாக வெட்டி எடுக்கப்பட்ட குப்பை 5 டன் எடை கொண்ட தொட்டியில் போடப்படும். ஒவ்வொரு மையத்திலும் 21 தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தத் தொட்டிகள் முதல் 7 தொட்டிக்கும் ஒரு வண்ணம் அடுத்த 7 தொட்டிகளுக்கு ஒரு வண்ணம் எனப் பிரித்து வேறுபடுத்தப் பட்டிருக்கும். அரைக்கப்படும் குப்பை, முதல் தொட்டி, இரண்டாம் தொட்டி என 7 தொட்டிகளில் முதலில் நிரப்பப்படும். ஒவ்வொரு முறை அரைத்த குப்பை தொட்டியில் நிரப்பப்படும்போது இ.எம் என்ற எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம் தெளிக்க வேண்டும். 

புளித்த தயிர் 5 லிட்டர், வெல்லம் 2 கிலோ எடுத்து 100 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து மூடி வைத்தால் நன்றாக நொதித்தால் எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம் கிடைத்துவிடும். இதை நாங்களே தயாரித்து ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து குப்பைத் தொட்டியில் தெளிக்கிறோம். 

உரம்
உரம்

ஒரு தொட்டியில் குப்பை மக்க மக்க 3 முறை நிரப்பப்படும். இவ்வாறு மற்ற 14 தொட்டிகளையும் நிரப்பிய பிறகு, முதல் 7 தொட்டிகளுக்கு வந்தால், அதில் உரம் தயாராக இருக்கும். விவசாயிகள் விளைநிலத்துக்கான ஆவணங்கள் ஏதேனும் காட்டினால் அவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறோம்.

மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் வைத்திருக்கும் மக்களுக்கு ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்குகிறோம். விவசாயிகளுக்கு உரத் தொட்டியில் இருந்து அப்படியே எடுத்துக்கொடுக்கிறோம். மக்களுக்கு அரைத்து டீத்தூள் போல மாற்றிக்கொடுக்கிறோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உரம்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உரம்

எந்த விதமான ரசாயன கலப்பும் இல்லாத உரம் தென்னை, வாழை, காய்கறி பயிர்களுக்கு உகந்ததாக இருக்கிறது. இதனால் நல்ல விளைச்சல் கிடைப்பதாகக் கூறி விவசாயிகளும் மக்களும் மீண்டும் மீண்டும் உரம் கேட்டு வரத் தொடங்கியுள்ளனர்'' என்றார்.