Published:Updated:

மகத்தான லாபம் தரும் மரச்சாகுபடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மரம் வளர்ப்போர் விழா தொடக்க நிகழ்வில்
மரம் வளர்ப்போர் விழா தொடக்க நிகழ்வில்

கூட்டம்

பிரீமியம் ஸ்டோரி
கோயம்புத்தூரில் இயங்கிவரும் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் ‘மரம் வளர்ப்போர் விழா-2020’ நடத்தப்பட்டது. 10-ம் தேதி நடந்த கருத்தரங்கு நிகழ்வுகளைக் கடந்த இதழில் பதிவுசெய்திருந்தோம்.

தொடர்ந்து 11-ம் தேதி நிகழ்வுகள் இங்கே இடம்பிடிக்கின்றன. விழாவைப் பல்லடம், வனம் இந்தியா ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தியது. ‘சீர்மிகு மரம் வளர்ப்பு முறைகள்’ என்ற தலைப்பில் விஞ்ஞானிகள் உரையாற்றினார்கள்.

நிகழ்வில் பங்கேற்றோர்
நிகழ்வில் பங்கேற்றோர்

தேக்குமரச் சாகுபடி குறித்துப் பேசிய முனைவர் சி.புவனேஸ்வரன், “தேக்கு உலகின் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் ஒன்று. வெளிச்சத்தை அதிகம் விரும்பும் இலையுதிர் மரம். சரியான பராமரிப்பு இருக்கும் நிலத்தில் 50 ஆண்டுகளில் 35 மீட்டர் உயரம் வளரக்கூடியது. நல்ல மண்வளமும், ஆண்டு மழைப்பொழிவு சராசரியாக 200 மில்லிமீட்டருக்கு மேலுள்ள நிலங்கள் தேக்கு வளர்ப்புக்கு ஏற்றவை. நடவுக்குத் தேவையான நாற்றுகளை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.

புவனேஸ்வரன், கண்ணன் வாரியர், ஆ.மாயவேல்
புவனேஸ்வரன், கண்ணன் வாரியர், ஆ.மாயவேல்

தொடர்ந்து பூவரசு சாகுபடி குறித்துப் பேசிய முனைவர் கண்ணன் வாரியர், ‘‘பூவரசு பன்முகத்தன்மைகொண்ட மரம். இழைத்தலுக்கு லகுவானது, உடையாது, பிளக்காது. கறையான் அரிக்காது. வண்டி, இசைக்கருவி, படகு பொம்மை, நெசவுத்தறி பாகங்கள் தயாரிக்க ஏதுவான மரம். இதன் இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகின்றன. இதன் விதை, காய், வேர், பூ, பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. மஞ்சள் சாயம் தயாரிக்க மூலப்பொருளாகப் பூவரசு காய் பயன்படுகிறது.

1993-ம் ஆண்டு பூவரசு மரத்தைப் பெருமைப்படுத்தும்விதமாக, தபால்தலை வெளியிடப்பட்டது. குளோனல் நாற்றுகள் மூலம் பூவரசு மரச்சாகுபடியை பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

குமிழ் மூலம் ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். புன்னை பயோடீசல், எரிபொருளாகவும் தோல்நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.

குமிழ் மரத்தைப் பற்றிப் பேசிய முனைவர் ஆ.மாயவேல், “குமிழ் மரம், தேக்கு மரக்குடும்பத்தைச் சார்ந்தது. மரவேலைப்பாடுகளுக்கு உகந்த மரம். செம்மண், வண்டல் மண், மற்றும் சுண்ணாம்புச் சத்துள்ள மண் வகைகளில் நன்கு வளரும். வளம் குன்றிய மண்ணில் குமிழ் மரம் வளர்ச்சி குன்றிக் காணப்படும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5-க்குள் இருக்க வேண்டும். நீர் தேங்கும் மண்ணில் குமிழ் நன்றாக வளராது. குமிழ் மரத்தைத் தனித் தோப்பாகவும், பண்ணைக்காடுகளிலும் வளர்க்கலாம். செடிக்குச் செடி இரண்டு மீட்டர் இடைவெளியில் நடவு செய்தால் காகிதக்கூழ் உற்பத்திக்கான மரங்களாக விற்பனை செய்ய முடியும். வேளாண் காடுகள் மற்றும் மரச்சாமான்கள் தேவையெனில் ஐந்து மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். வரப்புப் பயிராக இரண்டுக்கு மூன்று மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மூன்று மீட்டர் இடைவெளியில் நடவு செய்தால் தோப்பாக வளரும். குமிழ் மரங்களை எட்டு முதல் 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் 500 முதல் 800 கிலோ வரை கிடைக்கும். இன்றைய விலையில் ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்’’ என்றார்.

மரம் வளர்ப்போர் விழா தொடக்க நிகழ்வில்
மரம் வளர்ப்போர் விழா தொடக்க நிகழ்வில்

புன்னை மரச்சாகுபடி குறித்துப் பேசிய முனைவர் ஆர்.ஆனந்த லட்சுமி, ‘‘இது ஓர் எண்ணெய் வித்து மரப்பயிர். இதன் விதைப்பிருப்பில் 55 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. `பயோடீசல்’ எனப்படும் உயிர்ம எரிபொருளாகவும், தோல்நோயைக் குணப்படுத்தும் மருத்துவ எண்ணெயாகவும், சலவைக்கட்டிகள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. இதன் பிண்ணாக்கு பயிர்களுக்கு நல்ல உரமாகவும் பயன்படுகிறது. தென்னையில் ஊடுபயிராகச் சாகுபடி செய்ய ஏற்றது. கடலோரப் பகுதிகளில் காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கலாம். சாலையோர நிழல் தரும் மரங்களாகவும் நடவு செய்யலாம். நடவு செய்த ஆறு ஆண்டுகள் முதல் பலன் தரும். நான்கு மீட்டர் இடைவெளியில் ஏக்கருக்கு 250 நாற்றுகள் நடவு செய்யலாம். மழையில்லாத நாள்களில் மாதம் மூன்று முறை நீர்ப் பாசனம் கொடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு செடிக்குத் தலா 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கு அல்லது 500 கிராம் மட்கிய தொழுவுரத்தை உரமாகக் கொடுக்க வேண்டும்.

ஆனந்த லட்சுமி, செந்தில்குமார்
ஆனந்த லட்சுமி, செந்தில்குமார்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு முடிவில் பக்கக் கிளைகளைக் கவாத்துச் செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் விதை மகசூல் கூடும். ஆறு ஆண்டுகள் முடிந்த மரத்திலிருந்து சராசரியாக 12 கிலோ விதைகள் கிடைக்கும். இது வரும் ஆண்டுகளில் படிப்படியாக உயரும். புன்னை மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 2.1 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்’’ என்று சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயிரி உற்பத்திப் பொருள்கள் குறித்துப் பேசிய முனைவர் என்.செந்தில்குமார், “மரப்பயிர்களுக்கு ஏற்படும் பூச்சி, நோய்களுக்கு ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தவிர்த்து, அங்கக பூச்சி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் 2008-ம் ஆண்டு முதல் அங்கக பூச்சி மருந்துகளைத் தயாரித்து மரம் வளர்ப்போருக்கு வழங்கிவருகிறது வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம். நடப்பு ஆண்டில், பயோபேசலின் என்ற அங்கக மருந்தையும், மோனா 20 என்ற உயிரித் தடுப்பு காரணியையும் வெளியிட்டுள்ளோம்’’ என்றார்.

கார்த்திகேயன், நாகநாதன், ராஜேஷ் கோபாலன்
கார்த்திகேயன், நாகநாதன், ராஜேஷ் கோபாலன்

மாலையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வி.நாகநாதன், கோவை மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் மற்றும் கோபிசெட்டிபாளையம் மைரடா வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் ஆர்.அழகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நாகநாதன், “இயற்கை நமது வாழ்க்கை முறை. எல்லா நிலங்களிலும் எல்லாப் பயிர்களும் விளையும் காலம் இது. அதிக உற்பத்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக ரசாயன உரம் போடுகிறார்கள். தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ரசாயன விளைபொருள்தான் உணவாகிறது என்பதை விவசாயிகள் உணர வேண்டும். குறிப்பாக வனங்களை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் அங்கக வேளாண்மை செய்ய வேண்டும்’’ என்றார்.

வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவன விரிவாக்கத்துறை தலைவர்.ராஜேஷ் கோபாலன், “மரம் வளர்ப்போர் மரங்களை அறுவடை செய்யும்போது அந்த மரத்தின் சந்தை விலை என்ன என்பது தெரியாமல் குழம்பிவிடுகிறார்கள். அதனால் இடைத்தரகர்களை நம்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்தச் சிக்கலைப்போக்கும் விதமாக அனைத்து வகை மரங்களின் விலைப்பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடவிருக்கிறோம். அதற்காக டிஜிட்டல் இன்டர்பேஸ் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், மரம் வளர்ப்பு சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் அந்த இணையதளம் மூலம் உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

மரச்சாகுபடி புத்தகம்!

தேவராஜன், தலைவர், கோவை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கம்:

“வேளாண் பயிர்கள் பட்டியலில் வேளாண் காடுகள் இடம்பெறவில்லை. அதை வேளாண் பட்டியலில் சேர்த்தால்தான் அனைத்து மானியச் சலுகைகளும் மரம் வளர்ப்போருக்குக் கிடைக்கும். அரசாங்கம் அதைச் செய்ய வேண்டும்.

தேவராஜன், பழ.சந்திரசேகரன்
தேவராஜன், பழ.சந்திரசேகரன்

மேலும் பப்பாளிச் சாகுபடி செய்யும் விவசாயிகள் வெள்ளைப்பூச்சி, வேர் அழுகல், வைரஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறார்கள். போர்க்கால அடிப்படையில் இதற்குத் தீர்வுகாண வேண்டும். மேலும், வனத்துறைக்கும் விவசாயிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்திவருவது மரம் வளர்ப்போர் சங்கங்கள்தான். அனைத்து மாவட்டங்களிலும் மரம் வளர்ப்போர் சங்கம் தொடங்கப்பட வேண்டும்.’’

மொழிபெயர்ப்பு:

வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் உதவித் தலைமை தொழில்நுட்ப அலுவலர் பழ.சந்திரசேகரன், விவசாயிகள் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, ‘மகத்தான விளைச்சல் தரும் மரச்சாகுபடி முறைகள்’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்திருக்கிறார். அந்தப் புத்தகம் விழாவுக்கு வந்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

நோய் நீக்கி!

மகத்தான லாபம் தரும் மரச்சாகுபடி!

நிகழ்வில், ‘பயோபேசலின்’ என்ற அங்கக மருந்தும், `மோனா 20’ என்ற பெயரில் உயிரி கட்டுப்பாட்டுக் காரணியும் வெளியிடப்பட்டன. மோனா 20 குறித்துப் பேசிய வனப்பாதுகாப்புத்துறை தலைவர் முனைவர் அ.கார்த்திகேயன், “இந்த உயிரிக் கட்டுப்பாட்டுக் காரணி, ‘மைக்ரோமோனோஸ் போரா’ என்ற நுண்ணுயிரி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வேர்களில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்தவல்லது. குறிப்பாக, சவுக்கு மரங்களில் ஏற்படும் தண்டு மற்றும் இலைவாடல் நோய்களை அதிவிரைவில் குணப்படுத்துவதுடன், வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. சம அளவு தண்ணீரில் இந்தக் காரணியைக் கலந்து அதிலிருந்து 10 மி.லி அளவில் எடுத்து மரங்களின் வேர்ப்பாகங்களில் ஊற்ற வேண்டும். இதனால் வேர்களில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் உண்டாகும் நோய்கள் விரைவில் குணமாகும். இதன் விலை லிட்டர் 400 ரூபாய்.

தொடர்புக்கு, முனைவர் கார்த்திகேயன், செல்போன்: 94433 74119

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு