Published:Updated:

1,000 வாத்துகள்... ஆண்டுக்கு ரூ. 4 லட்சம்! வளமான வருமானம் தரும் வாத்து வளர்ப்பு!

வாத்துகளுடன் பாஸ்கரன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாத்துகளுடன் பாஸ்கரன்

கால்நடை

டு, மாடு, கோழி, பன்றி, முயல், காடை போன்ற கால்நடைகள் வளர்ப்பில் ஓர் அங்கமாக இருக்கிறது வாத்து வளர்ப்பு. ஆடு, கோழி இறைச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இதற்குக் கொடுக்கப்படுவதில்லை என்றாலும் பிராய்லர் கோழிக்கு மாற்றாக வாத்து இறைச்சியைச் சாப்பிடத் தொடங்கியிருக் கின்றனர். அதேபோன்று கேரளாவில் வாத்து இறைச்சிக்கும் முட்டைக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதைத் தெரிந்துகொண்ட பலர் வாத்து வளர்ப்பிலும் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன்.

வாத்து மேய்ச்சலில் தந்தையுடன்
வாத்து மேய்ச்சலில் தந்தையுடன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ தொலைவில் செவிலிமேடு என்ற இடத்திலிருந்து வலது புறம் திரும்பும் சாலையில் சென்றால் வருகிறது விப்பேடு கிராமம். அங்குதான் இருக்கிறது பாஸ்கரனின் வாத்துப் பண்ணை. வாத்து மேய்ச்சலிலிருந்த அவரைக் கால்நடை சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். “எனக்கு பூர்வீகம் இதே ஊர்தான். நாங்க மூணு தலைக்கட்டுகளா வாத்து வளர்ப்புல ஈடுபட்டுகிட்டு வர்றோம். சின்ன வயசுலேயே வாத்துகள மேய்ச்சலுக்குக் கூட்டிக்கிட்டுப் போறது, தீவனம் கொடுக்கிறது, மருந்து கொடுக்கிறதுனு இருந்ததால, வாத்து வளர்ப்பு எனக்கு முழுசும் அத்துப்படி. இதுக்கிடையில பி.ஏ எக்னாமிக்ஸ் படிச்சு முடிச்சேன். படிச்சு முடிச்சிட்டு வேலைக்குப் போகணுங் கிறதுதான் வீட்டுல இருக்கிறவங்களோட விருப்பம். அவங்க திருப்திக்காக கூரியர் சர்வீஸ்ல பகுதி நேர வேலை பார்த்துக்கிட்டே இந்த வாத்து வளர்ப்பையும் தொடர்ந்து செஞ்சுகிட்டு வர்றேன். எங்கப்பா, அம்மாதான் வாத்துகள மேய்க்கிறது, பட்டியில அடைக்கிற வேலைகளப் பார்ப்பாங்க. நான் குஞ்சுகள வாங்கிட்டு வர்றது, வாத்துகளை, முட்டைகளை விற்பனை செய்றதுனு இருப்பேன்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

மேய்ச்சலில் வாத்துகள்
மேய்ச்சலில் வாத்துகள்

“வாத்துகள், வளர்க்கிறவங்க மேல ரொம்பப் பாசமா இருக்கும். அதேசமயம் பயந்த சுபாவமுடையது. எங்க போனாலும் கூட்டமாத்தான் போகும். தண்ணின்னா அதுங்களுக்கு உசுரு. காஞ்சிபுரம் மாவட்டத்தில ஏரிகள், நெல் கழனிகள் அதிகம் இருக்கிறதால, மேய்ச்சலுக்குப் பிரச்னை இல்லை. கொல்லம் வாத்துகள், மணிலா வாத்துகள், கூஸ் (பங்களா) வாத்துகள், வைட் பெக்கின், காக்கி கேம்பல், நாட்டு வாத்துகள்னு வாத்துகள்ல பல வகைகள் இருக்கு. இதுல கொல்லம் வாத்துகள் இறைச்சிக்கு ஏற்றது. ‘காக்கி கேம்பல்’னு சொல்லப்படுற குஜராத் ரகம் முட்டை உற்பத்திக்கு ஏற்றது. நாங்க இறைச்சி, முட்டை இரண்டுக்கும் பயன்படுற மாதிரி தூய நாட்டு வாத்துகளைத்தான் வளர்த்துட்டு வர்றோம். வாத்துகள் முட்டை போடுமே ஒழிய அடைக்கு உக்காறாது. எங்க தாத்தா காலத்துல வாத்து முட்டையை எடுத்து நாட்டுக் கோழிகள்ல அடைக்கு வெச்சு குஞ்சுகள பொரிப்பாங்க. இப்பெல்லாம் இன்குபேட்டர்ல வெச்சு பொறிக்குறாங்க. பெரும்பாலும் முட்டைகளை விற்பனைக்குக் கொடுத்திடுறதால குஞ்சுகள வாங்கிட்டு வந்துதான் வளர்க்கிறோம். ஆந்திர மாநிலம் குண்டூர் வாத்துக் குஞ்சுகள் விற்பனைக்குப் பெயர் பெற்றது. அங்கே யிருந்துதான் ஒரு குஞ்சு 17-25 ரூபாய் விலையில வாங்கிட்டு வர்றேன்” என்றவர் வாத்து வளர்ப்பு முறையைப் பற்றிப் பேசினார்.

‘‘நேரடி விற்பனையில கறிக்கடை போட்டு விற்பனை செய்றேன். இதன்மூலமா ஒரு வாத்து 200 ரூபாய்க்கு விக்கிறேன்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“வாத்துகள் நீர்நிலைகள், நீர்த் தேங்கியுள்ள கழனிகள்ல மேயும். அதுல கிடைக்கிற நத்தைகள், மண்புழுக்கள், சிறு புழுக்கள், நண்டுகள், சிறு பூச்சிகள் இதுதான் அதோட முக்கிய உணவு. இதைத் தவிர்த்து நெல் கழனிகள்ல அறுவடையின்போது உதிர்ந்து போகிற நெல் மணிகள், தானியங்களையும் சாப்பிடும். வயல்கள்ல தானியங்கள் கிடைக்காத காலங்கள்ல, நெல், அரிசினு தானியங்கள வாங்கிட்டு வந்து போடுவோம். குஞ்சாக வாங்கிட்டு வர்ற வாத்து 3 மாசத்துல இறைச்சிக்குத் தயாராயிடும். ஒரு நாட்டு வாத்தோட எடை 800 கிராமிலிருந்து 1 கிலோ வரை இருக்கும். வருஷத்துக்கு 3 தடவை முட்டை கிடைக்கும். ஒரு வாத்திலிருந்து வருஷத்துக்கு 160-180 முட்டைகள் வரைக்கும் கிடைக்கும். ஒரு முட்டை சில்லறை விலையில 5 ரூபாய்க்கும், மொத்த விலையில 4 ரூபாய்க்கும் கொடுக்கிறேன். முன்ன ஒரு வாத்து இறைச்சிக்காக 120 ரூபாய்க்கு வியாபாரிக்குக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலைய தலைவர் டாக்டர் சி.சௌந்தரராஜன் நேரடியாகக் கறியை விற்பனை செய்ய ஆலோசனை சொன்னார். அதன்படி இப்போ நானே நேரடி விற்பனையில கறிக்கடை போட்டு விற்பனை செய்றேன். இதன்மூலமா ஒரு வாத்து 200 ரூபாய்க்கு விக்கிறேன். இப்போ எங்ககிட்ட ஆண், பெண் வாத்துகள் எல்லாம் கலந்து 1,000 வாத்துகள் இருக்குது. எப்பவுமே 1,000 வாத்துகள் இருக்கும்படி பார்த்துக்குவேன். நாங்க இயற்கையா மேய்ச்சல் முறையில மேய்க்கிறதால, எங்ககிட்ட விரும்பி வாங்குறாங்க” என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

வாத்துகளுடன் பாஸ்கரன்
வாத்துகளுடன் பாஸ்கரன்

“வாத்துக்கான முக்கிய விற்பனை தளம் கேரளாதான். அங்கதான் வாத்து முட்டை, இறைச்சியை விரும்பிச் சாப்பிடுறாங்க. இங்கிருந்து உற்பத்தி செய்யப்படுற முட்டை கேரளாவுக்குத்தான் அதிகம் போகுது. அங்கே 15 ரூபாய்க்கு விற்பனையாகுது. 1,000 வாத்துகள்ல 800 பெண் வாத்துகள் இருக்கும். இதுமூலமா ஒரு கந்தாயத்துக்கு (அறுவடைக்கு) 20,000 முட்டைகள் கிடைக்கும். வருஷத்துக்கு 3 அறுவடை கிடைக்கும். அதுமூலமா 60,000 முட்டைகள் கிடைக்குது. ஒரு முட்டை குறைந்தபட்ச விலையாக 4 ரூபாய் கணக்குல 2,40,000 ரூபாய் கிடைக்குது. இறைச்சி மூலமாக வாரம் 30 வாத்துகள் விற்பனையாகுது. இப்ப இந்த கொரோனா ஊரடங்குக்குப் பிறகுதான் வாத்துகள நேரடியா கறியாக்கி விற்பனை செய்றோம். இதுவரைக்கும் 720 வாத்துகள நேரடி விற்பனை செய்திருக்கேன். அதுமூலமா 1,44,000 ரூபாய் வருமானம். அதுக்கு முன்ன வியாபாரிகளுக்கு ஒரு வாத்து 120 ரூபாய்னு 360 வாத்துகள வித்திருக்கேன். அதுமூலமா 43,200 ரூபாய். ஆக மொத்தம் இறைச்சி, முட்டை விற்பனை மூலமா 4,27,200 ரூபாய் வருமானம். இன்னொரு மூணு மாசம் இறைச்சி விற்பனை இருக்குது. அதுமூலமா 72,000 ரூபாய் கிடைக்கும். அதையும் சேர்த்தால் 4,99,200 ரூபாய் வருமானம். நாங்க மேய்ச்சல் முறையில வளர்க்கிறதால செலவு பெருசா இருக்காது. குஞ்சுகள் வாங்கிட்டு வர்ற செலவும், தேவைப்படும்போது தானியங்கள் வாங்குறதும்தான் செலவு. அந்தக் கணக்குல எப்படியும் 1,20,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக 3,79,200 ரூபாய் நிகர லாபமாகக் கிடைச்சிட்டு இருக்குது” என்றவர் நிறைவாக,

“வாத்து வளர்ப்பைப் பொறுத்தவரைக்கும் குடும்பமா செஞ்சா செலவை மிச்சப் படுத்தலாம். நாங்க அப்படித்தான் செய்றோம். வாத்து வளர்க்குறவங்கள இழிவா பாக்குற மனநிலை இருக்குது. அதுவும் மாறணும். இன்னைக்குக்கு ஊசி போட்டு, கம்பெனி தீவனம் கொடுத்து வளர்க்கப்படுற செயற்கை பிராய்லர் கோழிக்கறிக்கு இந்த வாத்துக்கறி எவ்வளவோ பரவாயில்லை. இயற்கையான மேய்ச்சல் முறையில வளர்த்துக் கொடுக் கிறோம். சாப்பிடுறதுக்கும் நல்லாயிருக்கும். ருசியும் அருமையா இருக்கும். வாத்து வளர்ப்புக்கு அரசு உதவணும். இதுக்கு லோன், வளர்ப்புக்கு மானியம்னு பல உதவிகள் தேவைப்படுது. கோழி வளர்ப்புக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை வாத்துக்கும் கொடுக்கணும். மக்களும் பிராய்லர் கோழிக்கு மாற்றா வாத்துகள சாப்பிட முன்வந்தால் இதற்கான வர்த்தகம் உயரும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பாஸ்கரன், செல்போன்: 97902 23647

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாத்து பராமரிப்பு!

வாத்து பராமரிப்பு குறித்துப் பேசிய பாஸ்கரன், “வாத்துகளை வளர்க்கிறதுக்கு 10 சென்ட் இடம் போதுமானது. ஒரு வாத்துக்கு ஒரு சதுர அடி கணக்குல 1,000 வாத்துக்கு 1,000 சதுர அடி போதுமானது. வாத்துக் குஞ்சுகள வாங்கிட்டு வந்து, புரூடர்ல 3 நாள்கள் வெச்சு பராமரிக்கணும். மூணு நாள்களுக்குப் பிறகு குருணை அரிசி, அரிசி மாவு, தண்ணி கொடுத்துப் பராமரிக்கணும். 4-ம் நாள் மேய்ச்சலுக்கு அனுப்பலாம். மேய்ச்சலுக்கு அனுப்பினாலும் மாலை வேளையில் குஞ்சுகளுக்கு குருணை அரிசி கொடுத்து ஒரு மாதம் பராமரிக்கணும். குஞ்சுகள ரொம்பக் கவனமா பராமரிக்கணும். காலையில 8 மணிக்குத் திறந்துவிட்டா சாயந்தரம் 5 மணிக்குப் பட்டிக்குத் திரும்பிடும். பட்டியெல்லாம் திறந்த வெளியிலேயே அமைக்கலாம். எவ்வளவு மழை பெய்ஞ்சாலும் மழைக்குத் தாங்கும். தண்ணியெல்லாம் போற இடத்திலேயே குடிச்சுக்கும். இதோடு பிண்ணாக்குத் தண்ணி, அடர்த் தீவன தண்ணி வெச்சா நல்ல எடை வரும். கோடைக்காலங்கள்ல வயலெல்லாம் வறண்டுடும். அதனால, மர நிழல்கள், ஏரியோரங்கள்ல வெச்சுத் தீவனம் போட்டு வளர்க்கலாம். சாய்ந்தரமா பட்டிக்குத் திருப்பிடலாம். நாய்கள், காட்டுப்பூனைகள், பாம்புகள், கீரிப்பிள்ளைகள்ல இருந்து இத பாதுகாக்கணும். பெரும்பாலும் நாம் கூடவே இருந்து கண்காணித்தால் இந்தப் பிரச்னை இருக்காது.

10 பெண் வாத்துகளுக்கு ரெண்டு ஆண் வாத்துகள் என்ற கணக்குல விடணும். ஆண் வாத்தும் பெண் வாத்தும் ஒரே மாதிரி இருக்கும். பெண் வாத்து பேக்... பேக்... எனக் கத்தும். ஆண் வாத்து கா... கா... எனச் சத்தம் எழுப்பும். ஆண் வாத்து பின்பகுதில மீசை போன்று இருக்கும் இதை வைத்தும் கண்டறியலாம்.

வாத்துகளுக்கு ‘டக் பிளேக்’னு (வாத்துக் கொள்ளை நோய்) ஒரு நோய் வரும். இது வந்தா பச்சை அல்லது வெள்ளை நிறத்துல மலம் கழிக்கும். மலத்துல ஈ மொய்க்கும். வாத்துகள் கண் மூடியே இருக்கும். கண்ல தண்ணி வரும். குஞ்சுகள் வளர்ந்து வரும் 35-ம் நாள்ல தடுப்பூசி போட்டா இந்த நோய் வராது. அடுத்து கழுத்து மடக்கி நோய் வந்து இறப்பை ஏற்படுத்தும். இது வந்தா கழுத்தை மடக்கிக்கிட்டே இருக்கும். இது வைட்டமின் குறைபாட்டால் வருவது. வைட்டமின் டானிக்குகள் கொடுத்தால் சரியாகிடும். அதேமாதிரி குடற்புழு நீக்கத்துக்குச் சுக்கு, வெல்லம் கலந்த தண்ணிய குடிக்கக் கொடுத்துக்கிட்டு வரணும். இதனால் ஜீரண மண்டலம் நன்றாகச் செயல்படும். கிழிஞ்சல் சுண்ணாம்புத் தண்ணியையும் கொடுக்கலாம்” என்கிறார்.

செலவு குறைவு!

1,000 வாத்துகள்... ஆண்டுக்கு ரூ. 4 லட்சம்! வளமான வருமானம் தரும் வாத்து வளர்ப்பு!

வாத்து வளர்ப்பு குறித்துச் சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் வீரமணியிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் முட்டைக்காகத்தான் வாத்து அதிகம் வளர்க்கப்படுகிறது. சீனா ரகமான ‘வைட் பெக்கின்’ கறிக்காக அதிகம் வளர்க்கப்படுகிறது. அதிக தீவன செலவில்லாமலும், மேய்ச்சல் வளர்ப்புக்கும் ஏற்றது நாட்டு ரக வாத்துகள்தான். ஆரணி வாத்துகள், சந்நியாசி வாத்துகள் இதற்கு ஏற்றது. கோழிக்கும் வாத்துக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் வாத்துக்கான செலவு குறைவு. இதற்கு ஷெட் பெரியளவில் தேவையில்லை. அதேமாதிரி வாங்கி வரும் குஞ்சுகளைப் புரூடரில் வைத்து முறையாகப் பராமரித்தால் குஞ்சுகளின் இழப்பைத் தவிர்க்கலாம். குஞ்சுகளின் இழப்பைத் தவிர்த்தாலே வாத்து வளர்ப்பு லாபகரமானதுதான். மற்றபடி மேய்ச்சலிலேயே அதற்கான தீவனத்தை எடுத்துக்கொள்ளும். நெல் அறுவடைக் காலங்களில் வாத்து வளர்ப்பு அதிகம். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், நாகர்கோவில் மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது. தற்போது நாமக்கல் மாவட்டத்திலும் கறிக்காக வாத்து வளர்ப்பு பரவலாகி வருகிறது. வாத்துகளுக்குத் கோழிக்கான தீவனத்தையே பயன்படுத்தலாம். வாத்து வளர்ப்பை மேய்ச்சல் தவிர்த்துப் பண்ணைக்குள்ளேயும் வளர்க்கலாம். அதற்கான ரகங்களைத் தேர்ந்தெடுத்துப் பண்ணை வாத்து வளர்ப்பு முறையை முன்னெடுக்கலாம். வாத்து வளர்ப்புக்கான சந்தேகங்களுக்கு என்னை எப்போதும் அணுகலாம்” என்றார்.

தொடர்புக்கு, முனைவர் வீரமணி, செல்போன்: 94420 48026

வாத்து வளர்ப்பு வழிகாட்டல்!

வாத்து வளர்ப்புக்குப் பெங்களூரு அடுத்த ஹெசரகட்டாவில் உள்ள மத்திய கோழியின வளர்ச்சி நிறுவனம் மற்றும் பயிற்சி நிலையம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. வாத்து வளர்ப்பில் ரகங்களைத் தேர்ந்தெடுத்தல், ஒரு தொழிலாக மேற்கொள்ளுதல், குஞ்சுகள் உற்பத்தி, முட்டை உற்பத்தி உள்ளிட்ட அனைத்துக்கும் வழிகாட்டுகிறது. மேலும் கோழி, வாத்து உள்ளிட்ட பறவையின வளர்ப்பில் ஈடுபடும் தொழில் முனைவோர்களுக்கும் வழிகாட்டுகிறது.

CENTRAL POULTRY DEVELOPEMENT

ORGANISATION AND TRAINING INSTITUTE

Hesaraghatta, Bangalore - 560088.

Karnataka. Tel. Duck Unit:

(080) 28466238

General Enquiry: (080) 28466226 / 28466236 / 28466240

e-mail: cpdoti@gmail.com