Published:Updated:

340 கோழிகள்... மாதம் ரூ.36,000... நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

கோழிகளுக்குத் தீவனமிடும் பணியில்
பிரீமியம் ஸ்டோரி
News
கோழிகளுக்குத் தீவனமிடும் பணியில்

படிச்சோம் விதைச்சோம்

‘‘என்னோட தாய்மொழி தமிழ். ஆனா பேச மட்டும்தான் தெரியும். படிக்கவோ, எழுதவோ தெரியாது. ஆனாலும், பசுமை விகடனை அப்பாவை வாசிக்கச் சொல்லி இந்தி, இங்கிலீஷ்ல குறிப்பெடுத்து, அந்த விஷயங்கள கொண்டு விவசாயம் செய்றேன். என் விவசாயக் கனவை நனவாக்கியது பசுமை விகடன்தான்” என நெகிழ்கிறார் நெல்லையைச் சேர்ந்த கோமதி.

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார் பட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது இட்டேரி. இங்குதான் உள்ளது கோமதியின் ‘கீதாஞ்சலி பார்ம்ஸ்’. இவர் ஊமை விழிகள், இணைந்த கைகள் போன்ற படங்களில் நடித்த நடிகர் அருண்பாண்டியனின் தங்கை. பேராவூரணி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் அருண் பாண்டியன் இருந்தார். மேய்ந்து கொண்டிருந்த கோழிகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். “என்னோட அப்பாவுக்குச் சொந்த ஊரு தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி. அம்மாவுக்குச் சொந்த ஊரு நெல்லை மாவட்டம் கீழ்நத்தம். அப்பா, ‘கர்னல்’ செல்லையா. மிலிட்டரியில 37 வருஷம் சர்வீஸ்ல இருந்து கர்னலா ரிட்டையர்டு ஆனவர். வட மாநிலங்கள்லதான் அப்பாவுக்கு அதிக சர்வீஸ். அதனால, எனக்கு இந்தி, பஞ்சாபி மொழியிலதான் சரளமாப் படிக்க, எழுத, பேசத் தெரியும்.

கோழிகளுக்குத் தீவனமிடும் பணியில்
கோழிகளுக்குத் தீவனமிடும் பணியில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை லயோலா காலேஜ்ல பி.ஏ பைன் ஆர்ட்ஸ் முடிச்சேன். தொடர்ந்து ‘பியூட்டிஷியன் கோர்ஸை’யும் படிச்சேன். என்னோட கணவர் ஷாம்பிரசாத் பால்யத். அவரும் ராணுவத்துல கர்னலா இருந்து ரிட்டையர்டு ஆனவர். 1992-ம் வருஷம் திருநெல்வேலிக்கே வந்துட்டோம். நெல்லையில, ‘ஆயுர்வேதிக் பியூட்டி கிளினிக்கைத் தொடங்கினேன். நெல்லை மாவட்டத்தில் முதலில் ‘பியூட்டி பார்லர்’ திறந்தது நான்தான். அம்மா, அப்பா ரெண்டு பேரோட குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். பள்ளி விடுமுறையில ஆச்சி, தாத்தா வீடுகளுக்கு வரும்போது வீட்டைச் சுத்தியும் வயல், தோட்டம்னு பசுமையா இருக்கும். தாமிரபரணி ஆத்துப் பாசனம் செழிப்பா இருக்குறதுனால அதிகமா நெல்லுதான் நடுவாங்க. அதுபோக எல்லா வீடுகள்லயும் ஆடு, மாடு, கோழிகள் இருக்கும்.

முட்டைகளுடன் கோமதி
முட்டைகளுடன் கோமதி

விவசாயம், கால்நடை வளர்ப்புல எனக்கு அதிக ஆர்வமும், ஈடுபாடும் இருந்துச்சு. எதிர்காலத்துல நிலம் வாங்கி விவசாயம் செய்யணும்னு அப்பவே எனக்குள்ள ஒரு ஆசை முளைச்சது. அதை லட்சியமா மாத்தி மனசுக்குள்ளயே வெச்சிக்கிட்டிருந்தேன். சொந்த ஊருக்கு (நெல்லை) வந்த பிறகு 8 வருஷம் ‘பியூட்டி பார்ல’ரை மட்டும் கவனிச்சுகிட்டேன். பிறகு, இருக்குற நிலத்துல விவசாயம் செய்யலாம்னு தோணுச்சு. வீட்ல என்னோட விவசாய ஆசையைச் சொன்னேன். ‘பியூட்டி பார்லர் ஆரம்பிச்சிருக்க. நல்லாப் போயிக்கிட்டிருக்கு. அதை டெலவப் பண்ணாம வெவசாயம் பண்ணப் போறேன்னு சொல்லிக்கிட்டிருக்க’ன்னு சொல்லி என்னைத் திட்டினது மட்டுமில்லாம சிரிச்சாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனா, எதைப்பத்தியும் கவலைப்படாம, எங்க ஊர்லப் பிரபலமான ‘அம்பை-16’ ரக நெல்லை உள்ளூர் விவசாயிங்க உதவியோட ரசாயன உரத்தைப் போட்டு விளைவிச்சேன். ஆனா, 5 வருஷம் வரைக்கும் சொல்லிக்கிற மாதிரி எந்தப் பலனும் கிடைக்கல. அந்த நேரத்துலதான் எங்க அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாம போச்சு. வீட்டுக்குப் பின்னால உள்ள இடத்துல கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய், கீரைகளை வெறும் தொழுவுரம் மட்டும் போட்டு வளத்தேன். நல்ல மகசூல் கிடைச்சுச்சு. அந்தக் காய்கறிகளைத்தான் அம்மாவுக்குச் சமைச்சுக் கொடுத்தேன். ‘இந்தச் சின்ன இடத்துலயே எந்த உரமும் போடாம காய்கறிச் செடிகளின் வளர்ச்சி நல்லா இருக்கே. அப்போ ஏன் ஒட்டுமொத்த நிலத்துலயும் ரசாயன உரம் எதுவுமே போடாம வெவசாயம் பாக்க முடியாது’னு எனக்குள்ள தோணுச்சு. ஆனா, ‘உரம் போடாம புல்லுகூட முளைக்காதும்மா’ன்னு உள்ளூர் விவசாயிங்க சொன்னாங்க.

செல்லையா
செல்லையா

அப்பா, விகடன் வாசகர்ங் கிறதுனால பசுமை விகடன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே ‘ஆனந்த விகடன்’ல நாலஞ்சு பக்கங்கள்ல ‘இயற்கை விவசாய’த்தைப் பத்தி வர்ற கட்டுரைகளைப் படிச்சு எனக்குச் சொல்வாரு. அதுல குறிப்பா நெல், காய்கறிகள் பத்தின தகவலையும், கால்நடைகள் வளர்ப்பைப் பத்தியும் சொல்வாரு. அதை நான் அப்படியே இந்தி, இங்கிலீஷ்ல நோட்ஸ் எடுத்து வெச்சு செஞ்சு பார்ப்பேன்.

பசுமை விகடன் தனி இதழா வெளி வர ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் எங்கப்பா தொடர்ந்து வாசகரா இருக்கார். இப்போ அவருக்கு வயசு 91. ஆனாலும், கண்ணாடியைப் போட்டுப் பொறுமையாப் படிச்சுச் சொல்றாரு. பார்லர்ல வேலை செய்யுற வங்ககிட்டயும் புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்லி, நாலு டைரி முழுக்க இந்தியில குறிப்பெடுத்து வெச்சிருக்கேன்” என்று தனது ஆரம்பகட்ட விவசாய முயற்சிகளைப் பற்றி பகிர்ந்து கொண்டவர், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

கூஸ் வாத்துகளுடன்
கூஸ் வாத்துகளுடன்

‘‘பலதானிய விதைப்பு மூலமா நிலத்தை வளமேத்தி அதே ‘அம்பை-16’ நெல் ரகத்தைச் சாகுபடி செஞ்சு நல்ல மகசூல் எடுத்தேன். பாசுமதியையும் இயற்கை முறையில சாகுபடி செஞ்சு ரெண்டு மடங்கு மகசூல் கிடைச்சுது. ‘கால்நடை வளர்ப்புல ஆடு, மாடுகளைவிடக் குறைவான முதலீட்டுல அதிக வருமானம் கிடைக்குறது நாட்டுக்கோழி வளர்ப்புலதான்’னு பசுமையில வந்த ஒரு கட்டுரையை, அப்பா படிச்சு சொன்ன பிறகுதான் கோழி வளர்ப்புல இறங்குனேன்.

கோழி வளர்ப்புக்குத் தேவையான ‘ஷெட்’ அமைச்ச பிறகுதான் கோழி தேர்வுல இறங்குனேன். ‘அசில் கிராஸ்’ கோழியைச் சிறுவிடைனு சொல்லி விற்பனை செய்யுறதா பசுமையில போட்டிருந்துச்சு. அதனால, நானே சுத்தியுள்ள கிராமங்களுக்கு நேரடியாப் போயி, 6 சிறுவிடை தாய்க்கோழிகளைத் தேர்வு செஞ்சு அதோடு 40 முட்டைகள வெச்சு ஆரம்பிச்சேன். அப்படியே படிப்படியா குஞ்சுகளின் எண்ணிக்கைப் பெருகிடுச்சு’’ என்றவர் தனது பண்ணை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். 2 ஏக்கர்ல மாப்பிளைச் சம்பா நடவு செஞ்சு மூணு மாசம் ஆகுது. 2 ஏக்கர்ல கொய்யா, நாவல், மா, தென்னை, சப்போட்டா, எலுமிச்சை, மாதுளை மரங்களைக் கலப்புப் பயிரா நட்டு ஒன்றரை வருஷம் ஆகுது. 25 சென்ட்ல கோழி தீவனத்துக்குத் தேவையான கீரை வகைகளைச் சாகுபடி செஞ்சிருக்கேன். 25 சென்ட் நிலத்தை ஒதுக்கி அதுல நாட்டுக்கோழிகளை வளர்த்துட்டு இருக்கேன். முட்டையிடுற நிலையில 340 சிறுவிடை நாட்டுக்கோழிகள், 30 கடக்நாத் கோழிகள், 5 சேவல்கள் இருக்குது. இதுதவிர, சின்ன குஞ்சுகள், பெரிய குஞ்சுகள், முட்டையிடுறதை நிறுத்திய முதிர்ந்த கோழிகள், சேவல்கள்னு 150-க்கும் அதிகமா இருக்கு. இதோடு கின்னிக்கோழிகள், கூஸ் வாத்துகள்னு 50 இருக்கு” என்றவர், பராமரிப்பு முறை குறித்துச் சொன்னார்.

கோழிக்கூண்டு
கோழிக்கூண்டு

“கோழிகள வளர்க்க 20 அடி நீளம், 15 அடி அகலத்தில் கொட்டகை அமைச்சுக்கணும். என்கிட்ட இதே மாதிரி 4 கொட்டகை இருக்கு. ரகம் வாரியாப் பிரிச்சு தனித்தனியே பராமரிக்க சரியா இருக்கு. தினமும் காலையில 6 மணிக்கு மேய்ச்சலுக்காகக் கோழிகளைத் திறந்து விட்டுத் தண்ணி வெச்சிடுவோம். உடனே, கொட்டகையைச் சுத்தம் செஞ்சு கோழிக்கழிவு களைத் தனியே சேமிச்சுடுவோம். இது பழ மரங்களுக்கு உரமாயிடும். 8 மணிக்கு அகத்தி, புளிச்சக்கீரை, வேலிமசால், முருங்கை, அகத்தி, தண்டுக்கீரைனு தினமும் 20 கட்டு கீரைகளைத் துண்டுத் துண்டா நறுக்கி போடுவோம். வாரத்துல ஒருநாள், சந்தையில மலிவாக் கிடைக்குற காய்கறிகளை வெட்டிப் போடுவோம். காய்கறிகளுக்குப் பதிலா சின்ன வெங்காயம், அசோலாவையும் போடலாம். 10 மணிக்குக் கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், தவிடு, அரிசி எல்லாத்தையும் மாவாக்கி, பிட்டுப் பதத்தில பிசைந்து, குஞ்சுகள் முதல் முட்டையிடுற கோழிகள் வரைக்கும் 30 கிராம் முதல் 70 கிராம் வரை வைப்போம்.

மதியம் 12 மணிக்குத் தண்ணீரை மாத்தணும். 2 மணிக்கு நெல் அல்லது அரிசியைப் போடலாம். அதுக்குப் பிறகு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்யணும். வேப்ப இலை, மஞ்சள் கலந்து 5 கிலோ தீவனத்தில் ஒரு கிலோ கலந்து கொடுத்திடுவேன். குஞ்சு பிறந்த இரண்டு மாதத்துக்கு மேல் வெள்ளைக் கழிச்சல் தடுக்கும் விதமாகத் தடுப்பூசி போடணும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போடலாம். மழை, பனிக் காலத்துல கோழிகளுக்குச் சளி பிடிக்கும். இதைத் தடுக்கத் தண்ணீரில் மஞ்சள்தூள், துளசி, கற்பூரவள்ளி, சீரகம் கலந்து கொதிக்கவிட்டு ஆற வெச்சு, தண்ணீருக்குப் பதிலாகக் கொடுக்கலாம். வாரம் ஒருமுறைகூட இப்படிச் செய்யலாம். அடைக்காகச் சிறிய தனிக் கூண்டில் வைக்கப்படும் கோழிகள், குஞ்சு பொரிச்சாலும் 2 மாதம் தாயுடன் இருக்கும். அடுத்த 2 மாதம் தனிக்கூண்டில் இருக்கும். பிறகுதான் மற்ற கோழிகளுடன் சேர்ப்பேன்’’ என்றவர் கோழி கொட்டகைக்குள் நம்மை அழைத்துச் சென்று காட்டினார்.

மாதம் ரூ.36,000

வருமானம் குறித்துப் பேசியவர், “340 சிறுவிடைக் கோழிகள் மூலமா தினமும் 65 முதல் 85 முட்டைகள் வரை கிடைச்சுட்டு இருக்கு. 70 முட்டைகள்னே வெச்சுகிட்டாலும், மாசம் 2,100 முட்டைகள் கிடைக்குது. கணக்குக்கு 2,000 முட்டைன்னே வெச்சுக்கலாம். ஒரு முட்டையை ரூ.15-க்கு விற்கிறேன். முட்டைகள் விற்பனை மூலமா மாசத்துக்கு ரூ.30,000 கிடைக்குது.

முட்டையிடுறதை நிறுத்திய கோழிகள், சேவல்கள்னு மாசத்துக்கு 12 முதல் 15 உருப்படிகள்வரை கழிச்சு, விற்கிறேன். அந்த வகையில ரூ.6,000 வரை கிடைக்கும். மொத்தம் கிடைக்குற ரூ.36,000 வருமானத்துல, தீவனச்செலவுகள், பராமரிப்புச் செலவுகள்னு ரூ.13,000 வரை செலவாகுது. மீதமுள்ள ரூ.23,000 லாபமா நிக்குது.

விற்பனையில் வில்லங்கமில்லை

முட்டைகளைப் பெரும்பாலும் பார்லர்ல வெச்சே விற்பனை செய்றேன். நேரடியாவும், ‘வாட்ஸ் அப்’ குரூப்புகள் மூலமாவும் முட்டைகள் விற்பனையாகுது. இப்போ முட்டைகளுக்குத் தேவை அதிகமா இருந்தும் என்னால கொடுக்க முடியல. கோழிகளோட எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பெரிய பண்ணையா விரிவுபடுத்தலாம்ங்கிற திட்டத்துல இருக்கேன்” என்றவர் நிறைவாக,

“எனக்குப் பாரம்பர்யமான இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொடுத்ததுடன், நாட்டுக்கோழி வளர்ப்புல முழுத் தகவலையும் தெரியப்படுத்தி, பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, அதுக்கு தீர்வும் கொடுத்து ஊக்கப்படுத்தியது ‘பசுமை விகடன்’தான். பசுமையை வாசிச்சுப் பார்க்க எனக்கு மொழி ஒரு தடையா இருந்தாலும், இன்னொருத்தரோட உதவியால படிக்கச் சொல்லி இந்தளவுக்கு முன்னேறியிருக்கேன். பசுமைப் பாதையில பின் தொடர்ந்து இன்னும் உயர்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு கோமதி, செல்போன்: 98948 05402.

குறைந்த முதலீடு... அதிக வருமானம்!

340 கோழிகள்... மாதம் ரூ.36,000... நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

‘‘நாட்டுக்கோழிகளை பிராய்லர் கோழி களைப்போலக் கூண்டுல அடைச்சு வளர்த்தா பெருசா லாபம் கிடைக்காது. நோய்த்தடுப்பு முறை, தீவன மேலாண்மை சரியாக் கடைப் பிடிக்கணும். தேவையான தீவனத்தை அதுங்களே எடுத்துக்கும். குறைஞ்சளவு தீவனம் கொடுத்தாலே போதும். கோழி வளர்ப்புக்கு பெரிய முதலீடும் தேவையில்ல. உடலுழைப்பும் தேவையில்ல. ஆனா, எல்லாக் கோழிகளையும் தினமும் கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். ஒரு கோழி சோர்வா இருந்தாக்கூட உடனே தனிமைப்படுத்தி அதுக்கு மருந்து கொடுக்கணும். மேய்ச்சல் முறைங்கிறதுனால அதுங்களோட தீவனத்தைத் தானாவே எடுத்துக்கும். அதனால, தீவனத்துக்குன்னு பெரிய செலவு ஏதுமில்ல. கோழி வளர்ப்பால எனக்கு மன அழுத்தம் குறைஞ்சு புத்துணர்ச்சி கிடைக்குது” என்கிறார் கோமதி.