Published:Updated:

``நஞ்சற்ற விவசாயம்... நல்ல மகசூல்..!"- கலக்கும் காரைக்குடி விவசாயிகள் #MyVikatan

முழுக்க முழுக்க கண்மாய்த் தண்ணீரை மட்டுமே நம்பி இருக்கும் சின்ன கிராமம் சொக்கம்பட்டி. நெல் விவசாயம் மட்டுமே இங்கு முக்கியப் பயிர்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆயிரமாயிரம் சேர்மானங்கள் உணவுப் பொருள்களில் இரண்டறக் கலந்திருக்கின்றன. அதேவேளை நஞ்சற்ற தானியத்தை விளைவிக்கும் நல்ல காரியங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அப்படியான நஞ்சற்ற இயற்கை விவசாயத்தில் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் காரைக்குடியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வ.சூரக்குடிக்கு மிக அருகில் இருக்கும் சொக்கம்பட்டியைச் சேர்ந்த மூன்று விவசாயிகள்.

இயற்கை விவசாயி முத்து
இயற்கை விவசாயி முத்து

முழுக்க முழுக்க கண்மாய்த் தண்ணீரை மட்டுமே நம்பி இருக்கும் சின்ன கிராமம் சொக்கம்பட்டி. நெல் விவசாயம் மட்டுமே இங்கு முக்கியப் பயிர். இங்கும் மற்ற பகுதிகளைப்போல் ரசாயன உரங்கள் இட்டுத்தான் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்து, வெங்கடேசன், சிவசங்கர் ஆகிய மூன்று விவசாயிகளும் உடலுக்குக் கேடு தரும் ரசாயன உரங்கள் இல்லாமல் நெல் விவசாயம் செய்வதென முடிவு செய்தனர். அதன்படி நீண்டகாலமாக ரசாயன உரங்கள் இடப்பட்டு வந்த தங்களுடைய விவசாய நிலங்களின் மண்ணின் தன்மையை மாற்ற முடிவு செய்தனர்.

இதற்காக ஆட்டுக்கிடை, இயற்கை எரு, மாட்டுச் சாணம், காய்ந்த இலை தழைகள் போன்றவற்றை தங்களின் விவசாய நிலங்களில் இட்டு வந்தனர். இதையடுத்து தற்போது அவர்கள் இயற்கை விவசாயத்தில் இறங்கி இருக்கிறார்கள். முத்து, பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருவதுடன் இயற்கை விவசாயமும் செய்துவருகிறார். வெங்கடேசனும் முழு நேர விவசாயியாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். மற்றொருவரான சிவசங்கர் ஐந்து ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பியவர், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் தீவிர ஈடுபாடுகாட்டி வருகிறார்.

இயற்கை விவசாயி வெங்கடேஷ்
இயற்கை விவசாயி வெங்கடேஷ்

அத்துடன் மற்ற விவசாயிகளையும் உறவினர்களையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். இயற்கை விவசாயம் செழிக்க வழிவகுக்கும் இவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள் மூவரும் மற்றவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்கள். இவர்களை குறித்து கேள்விப்பட்டதும் #MyVikatan-இல் இவர்களை குறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது. உண்ணும் உணவில் நச்சுதன்மை அதிகரித்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் இயற்கை விவசாயமும் இயற்கை விவசாயிகளும்தான் நம் மண்ணின் நம்பிக்கை ஒளி.

- பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/