Published:Updated:

`மாட்டுச் சாணத்தில் செல்போன் ஸ்டாண்டு உள்ளிட்ட 100 கலை பொருள்கள்!'- அசத்தும் மதுரை கணேசன்

மதுரையில் இயற்கை விவசாயி நாட்டு மாட்டுச் சாணத்தில் கலை பொருள்கள் செய்து அதைத் தொழிலாக மாற்றி முன்னேறிவருகிறார்.

சாணம் கலை பொருள்கள்
சாணம் கலை பொருள்கள் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் நாட்டு மாட்டுச் சாணத்தில் கோமியத்தைக் கலந்து கலை பொருள்கள் செய்து அசத்திவருகிறார். இதற்காகப் பல்வேறு அமைப்புகள் கணேசனைப் பாராட்டிவருகின்றன. கணேசனைச் சந்தித்துப் பேசினோம்.

கணேசன் பெற்ற விருது
கணேசன் பெற்ற விருது

``எனக்கு இயற்கை மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. அதனால் தற்சார்பு வாழ்க்கை வாழவேண்டும் என முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இயற்கை விவசாயத்தில் முழுமையாகப் பயணிக்கிறேன்.

சாண கலை பொருள்கள்
சாண கலை பொருள்கள்

ஒரு நாட்டு மாட்டை வைத்து 20 ஏக்கர் வரை இயற்கை விவசாயம் செய்யலாம். நாமே பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி போன்றவை தயார் செய்துகொள்ளலாம்

இயற்கை உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் கடந்த 3 ஆண்டுகளாக அரசு இயற்கை விவசாயச் சான்றிதழுடன் பொருள்களை விநியோகம் செய்கிறேன். விவசாயத்தில் கிடைக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றினால் அதிக லாபம் கிடைக்கும் என்பது உண்மை.

சாணத்தில் அணிகலன்
சாணத்தில் அணிகலன்

அதனால் என்னுடைய விவசாயம் சார்ந்து ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன். விவசாயத்திற்காகக் காளைகள் வைத்துள்ளேன். அதிலிருந்து கிடைக்கும் சாணத்தையும் கோமியத்தையும் சேகரித்தேன். கலை பொருள்கள் செய்கிறேன். விபூதி, பல்பொடி, பினாயில் போன்ற மதிப்புகூட்டுப் பொருள்கள் பிற இடங்களில் அதிகளவு செய்யப்படுவதால், நான் அதிலும் வேறுபட்டுச் செய்ய வேண்டும் எனக் கலை பொருள்கள் செய்யத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் பெரியளவு வரவேற்பில்லை என்றாலும் சில மாதங்களில் மக்கள் விரும்பி வாங்க ஆரம்பித்தனர். இதனால் தொடர்ச்சியாக நல்ல லாபம் கிடைத்துவருகிறது. 100 வகையான கலை பொருள்கள் நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து செய்துள்ளேன்.

செல்போன் ஸ்டாண்டு
செல்போன் ஸ்டாண்டு

சாணம், கோமியத்தைத் தவிர எந்த ஒரு வேதிப் பொருளும் வண்ணமும் சேர்ப்பதில்லை. வீட்டு முகப்பில் தொங்கவிடும் மா இலை, விநாயகர், செல்போன் ஸ்டாண்டு, பூஜை பொருள்கள், அடையாளச் சின்னங்கள், கட்டட வடிவமைப்பு என்று எண்ணற்ற பொருள்கள் செய்துள்ளேன்.

இதற்கு அச்சு மோல்டுகள் பயன்படுத்த மாட்டேன் முழுக்க முழுக்க கைகளில் செய்கிறேன். நாட்டு மாட்டுச் சாணத்தின் மூலம் பொருள்களைத் தயார் செய்வதால் பலருக்கும் மண்ணின் மீதும் பாரம்பர்யத்தின் மீதும் விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன்.

பசு, கன்று சிலைகள்
பசு, கன்று சிலைகள்

ஐந்து ரூபாய் முதல் ஆயிரத்தி இருநூறு ரூபாய் வரை பொருள்கள் வியாபாரம் செய்கிறேன். நல்ல லாபம் கிடைக்கிறது. தொடர்ந்து நம் பாரம்பர்யத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்'' என்கிறார் கணேசன்.