அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசுப் பொருளாகக் கொடுக்கும்போது, இந்தப் பொம்மை பேசும் பொருளாக மாறும். அதனால் பனை குறித்து எளிமையான விழிப்புணர்வைக் கொண்டுவர முடியும்.

தாத்தா பொம்மை, சிங்க பொம்மை, யானை பொம்மை எனப் பனை (பனங்கொட்டையில்) விதையில் பொம்மை செய்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் புதிய முயற்சியில் சமூக ஆர்வலர் ஈடுபட்டுவருகிறார். மதுரையைச் சேர்ந்த அசோக்குமார் கடந்த சில வருடங்களாக இயற்கை சார்ந்த சேவைகளையும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவும் பல்வேறு திட்டங்களைச் சத்தமில்லாமல் செயல்படுத்தி வருகிறார்.

பனை விதை நடவு மற்றும் விதைப் பந்து தயாரிப்பில் தன் குழந்தைகளுடன் அசோக்குமார்
பனை விதை நடவு மற்றும் விதைப் பந்து தயாரிப்பில் தன் குழந்தைகளுடன் அசோக்குமார்

வீடுகளுக்கு வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு தன்னால் முடிந்த சமூக சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறார். இதில் பனை விதை விதைப்பு மற்றும் விதைப் பந்துகள் தயாரிப்பை அதிகப்படியாகச் செய்கிறார். இந்நிலையில் பனை மரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பனை விதைகள் மூலம் பொம்மைகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்.

அசோக்குமார்
அசோக்குமார்

இது குறித்து அசோக்குமார் நம்மிடம் பகிர்ந்துகொண்டது, "புத்தக வாசிப்பு என்னை சமூகத்தின் மீது அக்கறை கொள்ள வைத்தது. அதனால் புத்தக வாசிப்பை முதன்மையாகக் கொண்டு புதுமையான முறையைக் கையாண்டு பிறருக்கும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தும் பணியைச் செய்துவருகிறேன். அதேநேரம் என் குடும்பத்தினர் கையால் உருவாகும் விதைப் பந்துகளை பலருக்கும் இலவசமாக அளித்து வருகிறேன்.

மதுரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வுகளில் கூடுமான வரையில் கலந்துகொள்கிறேன். இந்நிலையில் பனை மரங்கள் குறித்து குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனப் புதிய முயற்சில் ஈடுபட்டுள்ளேன்.

முன்பு வீடுகளில் திஷ்டி பொம்மையாகப் பனங்கொட்டைகள் இடம்பெறும். ஆனால், சமீப காலமாக அந்தத் தயாரிப்பு நின்றுவிட்டது. அதை மீண்டும் நினைவுபடுத்துவது மட்டுமல்லாமல் விழிப்புணர்வாக மாற்ற வேண்டும் எனப் பனை விதையில் தாத்தா பொம்மை, சிங்கம், புலி, யானை என அந்தந்த விதைகளின் தோதுக்கு ஏற்ப வண்ணமிக்க பொருளாக மாற்றுகிறேன். இதைக் குழந்தைகள் கையில் கொடுக்கும்போது சந்தோசமாகப் பெற்றுக்கொள்வார்கள்.

பனை விதையில் சிங்கம்
பனை விதையில் சிங்கம்

இது பனை விதை பொம்மை எனத் தங்களின் நண்பர்களிடம் சொல்லிப் பெருமை கொள்வார்கள். அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருளாக கொடுக்கும்போது, இந்தப் பொம்மை பேசு பொருளாக மாறும். அதனால் பனை குறித்து நல்ல விழிப்புணர்வை அதிகப்படுத்த முடியும். கீழே விழும் பனம் பழத்தை எடுத்து, நீரில் அலசி, காயவைத்து வண்ணம் தீட்டி உருவமாக மாற்றும்போது அழகான பொம்மையாக மாறும். இதன்மூலம் பூலோகத்தின் கற்பகத்தரு என்று போற்றப்படும் பனையின் சிறப்பைக் கூடுதலாகப் பேச முடியும். என்னால் முடிந்த அசைவுகளை சமூகத்தில் ஏற்படுத்த முடியும்” என்று நம்பிக்கை சொல்லால் மகிழ்ந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு