Published:Updated:

‘வந்தாச்சு... இயற்கை விரட்டி!’ - காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு!

கண்டுபிடிப்பு

பிரீமியம் ஸ்டோரி
‘விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களைச் சாப்பிட்டு சேதம் விளைவித்து தீராத தலைவலியை ஏற்படுத்தி வருபவை காட்டுப்பன்றிகள். இவற்றைத் தலைச்சுற்ற வைத்து ஓடவிட இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக்கொண்டு மருந்து கண்டுபிடித்து அசத்தியுள்ளனர், வேலூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள்.

யானையைவிடவும் கூடுதலான பயிர்ச்சேதம் ஏற்படுத்தக்கூடியவை காட்டுப் பன்றிகள். படையெடுத்துவரும் பன்றிகளின் வருகையால், விவசாயிகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிவருகிறார்கள். காட்டுப் பன்றிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்து வதற்காக முள்வேலி அமைப்பது, மின்சார விளக்குகளைத் தொங்கவிடுவது, வண்ணத் துணிகளை வயலைச் சுற்றிக் கட்டுவது, மருந்துகள் வைப்பது என விவசாயிகள் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

‘வந்தாச்சு... இயற்கை விரட்டி!’ - காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதம்தோறும் நடக்கும் குறைதீர்வு கூட்டத்திலும், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாயிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் மட்டும் காட்டுப்பன்றிகளின் தாக்குதலுக்குச் சுமார் 12,000 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதமடைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வேலூர் விரிஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் நிலையத்தில் காட்டுப் பன்றிகளின் வருகையைக் கட்டுப்படுத்தும் விதமாக இயற்கை விரட்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வாடையை ஏற்படுத்தும் திரவம். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய இலை, தலைகள் போன்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றி
காட்டுப்பன்றி

குள்ளநரிகளைக் கண்டால்
குலை நடுங்கும் பன்றிகள்


இது தொடர்பாக வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமாரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘காட்டுப்பன்றிகள் கோரைக்கிழங்கை விரும்பிச்சாப்பிடும். நெல் வயலிலுள்ள கோரைக்கிழங்கைச் சாப்பிடுவதற்காக அந்த வயலையே ஏர் ஓட்டியதைப்போலத் துவம்சம் செய்துவிடும். இயற்கையாகவே காட்டுப் பன்றிகளைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளும் இருக்கின்றன. முதல் தீர்வு நரியினம்தான். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நரி, குள்ள நரிகள் எங்கு பார்த்தாலும் அதிகளவில் சுற்றித்திரியும். வயல்வெளிகளில் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் நரி கடந்து ஓடுவதைப் பார்க்க முடிந்தது.

இரண்டு குச்சிகளுக்கிடையே சிறிய டப்பாவில் மருந்தைத் தொங்க விடுதல்
இரண்டு குச்சிகளுக்கிடையே சிறிய டப்பாவில் மருந்தைத் தொங்க விடுதல்

நரிகள் நடமாடும் பகுதியில் பன்றிகள் தலை வைத்தே படுக்காது. அதிலும், குள்ள நரிகளைக் கண்டால் பன்றிகளுக்குக் குலை நடுங்கும். குட்டிப் பன்றிகளை நரிகள் தூக்கிச் சென்று சாப்பிட்டுவிடும். இதனால், பன்றி களின் இனப்பெருக்கம் குறைந்திருந்தது. நரிகள் எண்ணிக்கை குறைந்த பிறகு, காட்டுப்பன்றிகளின் தாக்கம் அதிகமாகி விட்டது. அடிக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாத விலங்கினப் பட்டியலில் காட்டுப் பன்றிகளும் இருப்பதால், அதன் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காட்டுப்பன்றிகளின் தாக்குதலைத் தடுக்க ஆராய்ச்சித் திட்டம் ஒன்றுக்குச் செயல் வடிவம் கொடுக்கப்பட்டது. அதன்படி, பன்றிக்குப் பிடிக்காத வாசனைத் திரவம் அடங்கிய இயற்கை விரட்டியைக் கண்டுபிடித்துள்ளோம். அதை நெல், கேழ்வரகு, சூரியகாந்தி, பப்பாளி, கரும்பு, வாழை மற்றும் நிலக்கடலை பயிரிடப்பட்ட 60 ஏக்கர் நிலத்தில் இரண்டு பருவங்களாகச் சோதனைக்கு உட்படுத்தினோம்.

மருந்தை டப்பாவில் ஊற்றுதல்
மருந்தை டப்பாவில் ஊற்றுதல்

முதற்கட்ட சோதனையில், விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகளை ஊடுருவச் செய்யாமல் இயற்கை விரட்டி வெற்றிகரமாகத் தடுத்தது. இரண்டாம்கட்ட சோதனையில், 8 மாதங்கள் வரை இயற்கை விரட்டி உயிர்ப் புடன் இருந்தது. இதைப் பயன்படுத்தும் முறையும் மிகவும் எளிதானது. விவசாயிகள் சிரமமடையத் தேவையில்லை’’ என்றவர் மருந்து செயல்படும் விதம் குறித்து விளக்கினார்.

“இரண்டரை அடி உயரத்துக்குக் குச்சியையோ, பிளாஸ்டிக் பைப்பையோ எடுத்துக்கொள்ள வேண்டும். பன்றித் தாக்குதலுக்குள்ளாகும் நிலத்தைச் சுற்றியுள்ள வரப்புகளில் மண்ணுக்குள் அரையடியும், தரைக்குமேல் இரண்டு அடியும் இருப்பதுபோல் குச்சியை நட வேண்டும். ஒரு குச்சிக்கும் இன்னொரு குச்சிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். குச்சிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் புதர் மண்டியிருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒன்றரை அடி உயரத்துக்குக் கட்டுக்கம்பி அல்லது நூல் கொண்டு அனைத்து குச்சிகளையும் இணைத்துக் கட்ட வேண்டும்.

‘வந்தாச்சு... இயற்கை விரட்டி!’ - காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு!

குச்சிகளின் இடைவெளியில் சுண்ணாம்பு டப்பா போன்ற சிறிய பிளாஸ்டிக் குப்பிகளைக் கட்டித் தொங்கவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100 டப்பாக்கள் போதுமானது. இயற்கை விரட்டி மருந்துடன் நாங்களே டப்பாக் களையும் விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு பிளாஸ்டிக் டப்பாவிலும், மூடிக்குக் கீழ் கழுத்துப் பகுதியில் 4 துளைகள் இட வேண்டும். எதிரெதிர் திசையில் உள்ள 2 துளைகளை நூலால் இணைத்து மேற்புறமாக முடிந்துகொள்ள வேண்டும். டப்பா சாய்வாக இருக்கக் கூடாது.

மற்ற 2 துளைகளும் மருந்து வாசனை வெளிவரும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு டப்பாவிலும் சுமார் 5 மி.லி அல்லது ஒரு தேக்கரண்டி அளவு மருந்தை ஊற்றி மூட வேண்டும். மழைநீர் உட்புகுந்து மருந்தின் வீரியத்தை குறைக்காத வாறும், வாசனை குறையாதவாறும் பாதுகாக்க வேண்டும். திரவ வடிவிலான இந்த மருந்தி லிருந்து வாடை வெளியேறுவதால் காட்டுப்பன்றிகள் நிலத்தின் பக்கமே வராமல் இருக்கும்.

இந்த மருந்து மூன்று மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்கும். ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ஒரு லிட்டர் 590 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். கடந்த நவம்பர் மாதம் மட்டும் 170 லிட்டருக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. பல மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் ஆர்வமுடன் வந்து வாங்கிச் செல்கிறார்கள். மருந்தைப் பயன்படுத்திப் பலனடைந்த விவசாயிகள் பலர் மீண்டும் மீண்டும் வருகிறார்கள். அவர்களுடைய கருத்துகளையும் எழுத்து பூர்வமாகப் பதிவு செய்து வருகிறோம்.

இயற்கை விரட்டி மருந்துக்கு இன்னும் ‘காப்புரிமை’ பெறவில்லை. காப்புரிமை பெற்ற பிறகு, பன்றியை விரட்டக்கூடிய வாடை மருந்துகள் தயாரிக்கப்பட்டது எப்படி? என்ன மாதிரியான இயற்கைப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன? என்பதை விரிவாக ‘பசுமை விகடன்’ மூலமாகவே விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துகிறோம். இந்த இயற்கை விரட்டிக் குறித்துத் தெரிந்து கொள்ள விவசாயிகள், விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத் துக்கும் நேரில் வரலாம்’’ என்றார்.

தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.
தொலைபேசி: 0416 2272221, 2273331.

ஸ்பீக்கர், பென் டிரைவ் போதும்!

விவசாயி பல்லேரி ராஜா பேசும்போது, ‘‘நானும் ஓர் பன்றிவிரட்டியைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு எந்தச் செலவும் இல்லை. ஸ்பீக்கர், பென் டிரைவ் இருந்தால் போதும். அதில், 5 நிமிடத்துக்கு ஒருமுறை சிங்கம் கர்ஜிப்பது போலவும், புலி உறுமுவது போலவும், பட்டாசு வெடிப்பது போலவும் சத்தம் வரும்படி செட்டிங் செய்துகொள்வேன். அளவுக்கு மீறிய சத்தமும் எழுப்பக் கூடாது.

என்னுடைய கரும்புத்தோட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஒலி அமைப்பை ஏற்படுத்தினேன். இதுநாள் வரை காட்டுப்பன்றித் தாக்குதலும் இல்லை, ஒரு கரும்புகூட சேதமடையவுமில்லை. அதற்கு முன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் காட்டுப்பன்றிகளின் தாக்குதல் இருந்தது. காட்டுப்பன்றிகளைக் கூண்டு வைத்துப் பிடித்து இறைச்சிக்காகவே வாழும் சிங்கம், புலி இருக்கும் பெரிய காடுகளில் கொண்டுச் சென்று விடலாம்.

இல்லையெனில், வண்டலூர் போன்ற உயிரியல் பூங்காக்களில் காட்டுப்பன்றிகளை விடலாம். இதோடு காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதேசமயம், வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயற்கை விரட்டி மருந்தைக் குறைந்த விலையில் அனைத்துப் பகுதியிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்கிறார்.

நந்தகுமார், பல்லேரி ராஜா, பாலாறு வெங்கடேசன்
நந்தகுமார், பல்லேரி ராஜா, பாலாறு வெங்கடேசன்

வனத்துறை கம்பிவேலி அமைக்க வேண்டும்!

‘இயற்கை விரட்டியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறதா?’ என்பது குறித்து தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘வேளாண் அறிவியல் நிலையத்தின் இயற்கை விரட்டி மருந்து கண்டுபிடிப்பை விவசாயிகள் சார்பில் வரவேற்கிறேன். அந்த மருந்தின் வாசனையை நுகரும் பன்றிகளுக்கு முதலில் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. பிறகு, மூச்சுவிடச் சிரமப்பட்டுத் திக்குமுக்காடி அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறது.

விலை அதிகமாக இருப்பதாலும், விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் மட்டுமே கிடைப்பதாலும் மருந்தை வாங்க விவசாயிகள் தயங்குகிறார்கள். காட்டுப்பன்றிகளை விரட்டு வதற்கு விவசாயிகளும் சில வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். பயிர் செய்துள்ள நிலத்தின் நான்கு மூலைகளிலும் முள்ளம் பன்றியின் முள்ளை மண்ணில் சொருகி வைத்தால் பன்றிகள் நடமாடுவதில்லை.

முடிதிருத்தும் கடைகளிலிருந்து துண்டு முடிகளை மூட்டைக்கட்டிக் கொண்டுவந்து பன்றிகள் வரும் வழித்தடத்தில் புதைத்துவிடலாம். மோப்பம் பிடித்துக்கொண்டு வரும் பன்றிகளின் மூக்கில் முடிகள் ஏறும்போது கிறுகிறுத்து ஓடிவிடும். நாட்டுப் பன்றிகளைப் போன்றே காட்டுப்பன்றிகளும் 12 குட்டிகள்வரை ஈனுகிறது. ஆனால், நாட்டுப்பன்றிகளை விடவும் பெரிய கோரைப்பல் காட்டுப்பன்றிகளுக்கு இருக்கிறது.

மண்ணைக் கிளறி வேர்க் கிழங்குகளைச் சாப்பிடும் அளவுக்குப் பன்றிகளின் கோரைப்பல் கூர்மையானது. சோளக்கதிரைக்கூட மென்று தின்றுவிடுகின்றன. உயரமாக இருக்கிற பயிர் வகைகளைக் கீழே தள்ளி மிதித்து நாசப்படுத்திவிடுகின்றன. தென்னந்தோப்பில் கிடக்கும் தேங்காய்களையும் பிளந்து சாப்பிடும் அளவுக்குக் காட்டுப்பன்றிகள் வீரியமானது. துவரையைக்கூட விட்டு வைப்பதில்லை.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் மலைப்பகுதிகளையே சார்ந்திருக்கின்றன. இதனால், காட்டுப்பன்றிகளின் தாக்குதலும் அதிகமாக இருக்கிறது. இதற்குக் காட்டுக்குள்ளேயே தேவையான உணவுப் பயிர்களை வனத்துறை வளர்க்க வேண்டும்.

காடுகளையொட்டி குழியை வெட்டலாம். வலைப்பின்னல் போன்று கம்பி வேலி அமைக்கலாம். இப்படிச் செய்துகொடுத்தால், காட்டுப்பன்றிகள் மட்டுமன்றி யானை, மான், மயில்களின் தாக்குதலிலிருந்தும் பயிர்களைக் காப்பாற்றிக்கொள்வோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு