பிரீமியம் ஸ்டோரி
சுமை விகடன் ஏற்பாட்டில் கடந்த நவம்பர் 29-ம் தேதி, ‘கறுப்பு யூரியா’ ஆன்லைன் பயிற்சி நடைபெற்றது. செங்கல்பட்டில் உள்ள அரசு உயிரியல் ஆய்வு மையத்தின் ஓய்வுபெற்ற முதன்மை விஞ்ஞானி முனைவர் அரு.சோலையப்பன் பேசும்போது, ‘‘எங்கள் விஞ்ஞானிகள் குழு கறுப்பு யூரியாவை கண்டுபிடித்தபோதுகூட இது பிரபலமாக வில்லை.

பசுமை விகடன் இதழில் இது சம்பந்தமான தகவல் வந்தவுடன் கறுப்பு யூரியா தேடி விவசாயிகள் வரத் தொடங்கி யுள்ளனர். வரவேற்பு பெருகியுள்ளது. ஆரம்பத்தில் கரும்புக்குத்தான் பயன்படும் என்று நினைத்தோம். இப்போது அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது’’ என்றார்.

எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற கறுப்பு யூரியா!

அடுத்து, உயிரியல் ஆய்வு மையத்தின் ஓய்வுபெற்ற ஆராய்ச்சி அலுவலர் முனைவர் ஆர்.முத்துக்குமாரசாமி பேசும்போது, “கறுப்பு யூரியாவில் உள்ள ‘அசிட்டோபாக்டர்’ (Acetobacter) நுண்ணுயிரி அற்புதமானது. பயிரின், இலை, தண்டு, வேர்... என எந்தப் பகுதியில் ஒட்டிக்கொண்டாலும் வளரும் தன்மை கொண்டது. இதைப் பயன்படுத்தும் நிலங்களில் அதிக செலவு செய்து ரசாயன யூரியாவைக் கொட்ட வேண்டிய அவசியமில்லை. நெல், கரும்பு, வாழை, மலர்கள், மரப்பயிர்கள்... என எல்லா விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இலைவழி தெளிப்பாக இருந்தால், 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி கறுப்பு யூரியா திரவத்தைக் கலந்து தெளிக்கலாம். பாசன நீரில் கலந்துவிட்டால், கூடுதலான அளவு தேவைப்படும். எனவே, இலைவழித் தெளித்தாலே போதுமானது. செலவும் குறையும். இது தழைச்சத்தை மட்டும் பயிருக்கு இழுத்துக் கொடுக்கவில்லை. மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச் சத்தையும் பயிருக்கு எடுத்துக் கொடுக்கிறது. இன்னும், ஏராளமான நன்மைகளைச் செய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், விற்பனை செய்யப் படுகிறது. ஒரு லிட்டர் 200 ரூபாய்தான். ஓராண்டுக் காலம் வைத்திருந்து பயன் படுத்தலாம். ஆலைகளில் கிடைக்கவில்லை யென்றால், செங்கல்பட்டு உயிரியல் ஆய்வு மையத்தை அணுகி வாங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.

‘‘கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தி ஏக்கருக்கு 65 டன் கரும்பு மகசூல் எடுத்தேன். கறுப்பு யூரியா மூலம் பயன்பெற்ற விவசாயிகளில் நானும் ஒருவன்’’ என்றார் முன்னோடி விவசாயி தனபால்.

தொடர்புக்கு, உயிரியல் ஆய்வு மையம், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம், குட்வில் அவென்யூ, வேண்பாக்கம், செங்கல்பட்டு-603 111. செல்போன்: 90955 66911.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு