Published:Updated:

பயிர்களுக்கும் ஸ்ட்ரெஸ் உண்டு... ஆனால் என்ன ஆகும்? - விவசாயியின் அதிர்ச்சி

paddy field
paddy field

"வயதான நெல் நாற்றை நடவு செய்தால் பயிர் வினை அழுத்தம் (Physiological stress) காரணமாக நெற்கதிர்கள் சீக்கிரம் முளைத்து விடும். இதுதான் பிரச்னைக்குக் காரணம்." - ஆனால், இது சரியா?

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். அதிலும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக குறுவை, தாளடி, சம்பா என முப்போகம் விளையும் பொன் பூமியாய்ப் பார்க்கப்படுவது, காவிரி டெல்டா பகுதி. மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் எனப் பல போராட்டங்களுக்கு மத்தியில் விவசாயத்தை நலிவடையாமல் தூக்கி நிறுத்தும் டெல்டா விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பாக தினம் எழும் பிரச்னைகளுக்கு ஆராய்ச்சிகள் புதுப்புது கோணத்தில் பதில்களை தந்து, அவர்களைக் குழப்பத்தில் தள்ளுகின்றன.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே குன்னம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது நெற்பயிருக்குத்தான் இப்போது புதிய பிரச்னை கிளம்பியிருக்கிறது. ஒரே ரக நெல் விதைகள், ஒரே தூரில் மூன்று நிலையில் வளர்ந்து அறுவடை செய்ய முடியாத நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன், நேரில் சென்று விவசாய நிலத்தைப் பார்வையிட்டு விஸ்வநாதனிடம் பேசினோம்.

Vikatan
அதைப் பார்த்து சந்தேகித்த நான் விதை நெல் வாங்கிய கடையிலும் விதை நெல் நிறுவனத்திலும் புகார் தெரிவித்தேன். அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.
விஸ்வநாதன்

"விவசாயம் பார்க்க ஆரம்பித்து 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை ஆடுதுறை 43 என்ற நெல் ரகத்தைப் பயிரிட்டு அதிக மகசூல் பெற்று விவசாயம் செய்து வந்தேன். குருவை, சம்பா என இரண்டு போகம் அமோக விளைச்சல் தரும் 18 ஏக்கர் விவசாய நிலத்தில் 2019-ம் ஆண்டு குறுவை சாகுபடிக்காகத் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோ-51 என்ற நெல் ரகத்தைத் தனியார் விதை நெல் விற்பனை நிலையத்திலிருந்து 17.05.2019 அன்று வாங்கி மே 23-ம் தேதி நாற்றங்காலில் விதை விட்டேன். ஜூன் 26-ம் தேதி 18 ஏக்கர் நிலத்திலும் நடவு செய்தேன்.

paddy
paddy

கோ 51 ரக நெல் விதையின் வயசு 115 நாள்கள். ஆனால், 115 நாள்களில் வர வேண்டிய நெற்கதிர்கள் விதை விட்டு 55 நாள்களிலேயே வரத் தொடங்கியது. அதைப் பார்த்து சந்தேகித்த நான் விதை நெல் வாங்கிய கடையிலும் விதை நெல் நிறுவனத்திலும் புகார் தெரிவித்தேன். அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. இன்று விதை விட்டு 85 நாள்கள் ஆன நிலையில் 18 ஏக்கர் விவசாய நிலத்திலும் நடப்பட்டுள்ள கோ 51 ரக நெல் தூர்களில் மூன்று நிலையில் நெற்கதிர்கள் வளர்ந்துள்ளன. ஆரம்ப நிலை, பூ வைத்த நிலை, பழுத்து முற்றிய நிலை என்று மூன்று நிலைகளிலும் நெற்கதிர்கள் வளர்ந்துள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறேன்.

ஒரே வயலில் ஒரு சில இடங்களில் நெற்கதிர்கள் வந்து ஒரு சில இடங்களில் இப்போதுதான் பூ வைத்திருக்கிறது. பூ வைத்த நிலையில் இருக்கும் கதிர்கள் முற்றிய நிலைக்கு வரும் வரை காத்திருந்தால். முன்பே முற்றிய நிலையில் இருக்கும் நெல் மணிகள் கீழே கொட்டிவிடும். இல்லையெனில் கறுத்து நிறம் மாறிவிடும். அறுவடை செய்தாலும் நெல்லை விற்க முடியாது. இதனால் 4,00,000 ரூபாயும், ஒரு போக விளைச்சலின் வருமானமும் நஷ்டமடையும். இதற்கு காரணம் நெல் விதையில் கலப்படமா என்று தெரியாமல் குழம்பி வரும் விஸ்வநாதன் இதற்கு விடை கிடைத்தால் விவசாயிகளுக்கு கோ 51 நெல் ரகத்தைப் பயன்படுத்தவும் ஏதுவாக இருக்கும்" என்கிறார்.

Vikatan

ஒரே தூர்களில் மூன்று நிலை வளர்ச்சிக்கு விதை நெல்லில் கலப்படமா என்று கொள்ளிடம் வட்டார வேளாண்மை அலுவலர் விவேக்கிடம் பேசினோம்.

"காலநிலை மாற்றம் கூட இப்படி மூன்று நிலை வளர்ச்சிக்குக் காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களிடம் கேட்டால் ஆய்வின் முடிவு தெரியும்” என்றார்.

நாகப்பட்டினம் மாவட்டம் விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பேராசியர்கள் உள்ளடக்கிய குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கை பற்றி விவரித்தார் விதை ஆய்வாளர் செந்தில்.

வயதான நெல் நாற்றை நடவு செய்தால் பயிர் வினை அழுத்தம் (Physiological stress) காரணமாக நெற்கதிர்கள் சீக்கிரம் முளைத்து விடும். இதுதான் பிரச்னைக்குக் காரணம்.
வட்டார வேளாண்மை அலுவலர் விவேக்

"அந்தத் தனியார் நெல் விற்பனை நிலையத்திலிருந்து விற்கப்பட்டு மற்ற ஊர்களில் நடப்பட்டிருக்கும் கோ 51 ரக நெல் சாகுபடி நல்ல முறையில் இருக்கிறது. நாற்றை முற்ற விட்டு பிறகு நட்டதால்தான் நெற்கதிர்களின் வளர்ச்சி ஒரே தூர்களில் மூன்று நிலையிலும் இருக்கிறது. வயதான நெல் நாற்றை நடவு செய்தால் பயிர் வினை அழுத்தம் (Physiological stress) காரணமாக நெற்கதிர்கள் சீக்கிரம் முளைத்து விடும். இதுதான் பிரச்னைக்குக் காரணம்." என்று தெரிவித்தார், செந்தில்.

Paddy Field
Paddy Field

வயதான நாற்றை நடவு செய்தல், காலநிலை மாற்றம் இவை எல்லாம் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆனால், ஒரே தூர்களில் மூன்று நிலையில் வளரக் கூடிய அளவிற்கு வளர்ச்சியைப் பாதிக்காது. அதிகாரிகளின் இந்த அறிக்கை முடிவு விவசாயிகளை ஏமாற்றி தன் பெயரில் தப்பு இல்லை என்று தப்பிக்கும் வழி என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்படி விவசாய நிலத்தில் ஒரு பிரச்னை வந்த பிறகு அதை ஆராய்ந்து சரி செய்ய முனைப்பு காட்ட வேண்டிய வேளாண்மைத் துறை மழுப்பலான பதிலையே கொடுக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு