Published:Updated:

பாடத்திட்டத்தில் ‘மரம் தங்கசாமி’! - அரசுக்கு கோரிக்கை வைக்கும் மக்கள் #MyVikatan

`மரம் வளர்ப்பே மக்களை வளர்க்கும்' என்ற விழிப்புணர்வுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பே விதை போட்டு, மரங்களுடன் மரமாய் வாழ்ந்து சென்றவர், ‘மரம்’ தங்கசாமி.

‘மரம்’ தங்கசாமி
‘மரம்’ தங்கசாமி

மரம் வளர்ப்பு; மரக் கன்றுகள் வழங்குதல்; மரம் நடுவிழா என சுற்றுச்சூழலின் நலம் காக்கும் மரம் வளர்ப்பை 35 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்துச்சென்றவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சேந்தன்குடி கிராமத்தின் ‘மரம்’ தங்கசாமி. இவருடைய வாழ்க்கைக் குறிப்பை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும், அவருடைய நினைவாக #TreeSelfieChallenge #MaramThangasamy #KAIFA என்ற ஹேஷ் டேக்கை சமூக ஊடகங்களில் பரப்பி, இன்று அனைத்து பகுதிகளிலும் மரக் கன்றுகள் நடுவதற்கு வேண்டுகோள் வைத்தும், மண்ணின் நலம் காத்த மனிதருக்கு நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறது, பேராவூரணியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ‘கைஃபா’ எனும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்.

School students planting trees
School students planting trees

`மரம் வளர்ப்பே மக்களை வளர்க்கும்' என்ற விழிப்புணர்வுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பே விதை போட்டு, மரங்களுடன் மரமாய் வாழ்ந்து சென்றவர், ‘மரம்’ தங்கசாமி. அவரின் நேசமும் சுவாசமும் முழுக்க முழுக்க மரங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது. வறட்சியிலும் மரங்களைத் துளிர்க்கவைத்த மனிதர் அவர். விவசாயிகளை வழக்கமான விவசாய சாகுபடி கைவிட்டாலும், மரங்களின் வளர்ப்பு காப்பாற்றும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். இயற்கைத் தாயின் நலன் காக்கும் புதல்வராய் பூமியில் வலம்வந்தவர். இதற்காகத் தனது 5 ஏக்கர் நிலத்தில் ‘கற்பகச் சோலை’ எனும் குறுங்காட்டை உருவாக்கி, உலகத்தின் இயற்கையை நேசிக்கும் மனிதர்களைத் தன் இருப்பிடம் நோக்கி வரவைத்தவர்.

அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 16) அனுசரிக்கப்படுகிறது. மரம் தங்கசாமியும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரும் 50 ஆண்டுகாலம் இணைந்து, பசுமைப் பணி ஆற்றியவர்கள். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம், காதணி விழா, அரசியல் கூட்டங்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகள் வழங்குதலைத் தொடங்கி வைத்தவர், ‘மரம்’ தங்கசாமிதான்.

பேராவூரணியில், செப்டம்பர் 15-ம் தேதி அன்று, ‘கைஃபா’ எனும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ‘மரம்’ தங்கசாமியின் வாழ்க்கைக் குறிப்பை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைப்பது, தற்போது பொதுமக்களின் நிதி உதவியால் தூர் வாரப்படும் பேராவூரணி பெரியகுளத்தில் அமையவிருக்கும் குறுங்காட்டுக்கு, 'மரம் தங்கசாமி நினைவு குறுங்காடு' எனப் பெயர்சூட்டுவது என்ற இரண்டு முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

மரக்கன்றுகள் நடும் பள்ளி மாணவர்கள்
மரக்கன்றுகள் நடும் பள்ளி மாணவர்கள்

இன்று, மரம் தங்கசாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆலங்குடி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, நெடுவாசல், நாடியம், குருவிக்கரம்பை, பேராவூரணி என காவிரி கடைமடைப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு, செல்ஃபி எடுத்து, சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ‘கைஃபா’ அமைப்பின் தலைவர் ராம்குமார் நம்மிடம், “மரமே வாழ்க்கை என வாழந்த மனிதர், ‘மரம்’ தங்கசாமி.

இந்த மண், இன்று ஓரளவு பசுமையாக இருப்பதற்குக் காரணம், அவருடைய பசுமைப் பணிதான். அவர், இந்த மண்ணில் வாழ்ந்துசென்றது நமக்கெல்லாம் பெருமை. அந்த மகத்தான மனிதரின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான், அதை தமிழக அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளோம்.

KAIFA president ramkumar
KAIFA president ramkumar

மேலும், அவருடைய நினைவு நாளில், அவர் விட்டுச்சென்ற பணியின் நீட்சியாக பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள், அனைத்து சமூக நல அமைப்புகளும் மரக்கன்றுகளை நட்டு, செல்ஃபி எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்காக #TreeSelfieChallenge #MaramThangasamy #KAIFA என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கியுள்ளோம். இதற்கு, பலதரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்த மண்ணையும் இயற்கையையும் காப்பது நம் கடமை என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால், ஐயா ‘மரம்’ தங்கசாமியின் கனவுத் திட்டம் நிறைவேறும்...” என்கிறார்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/