Published:Updated:

“விவசாயிகள் மாணவர்களாக இருக்க வேண்டும்!” - புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் விருப்பம்!

கூட்டம்

பிரீமியம் ஸ்டோரி
வேளாண்மை, இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள், உணவு பதனிடுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் தென்னிந்திய அளவில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், தனியார் ஆய்வுக் கூடங்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளின் வயல்வெளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த குறிப்புகளை ‘வேளாண் ஆற்றுப்படை’ என்ற பெயரில் கையேடாக வெளியிட்டிருக்கிறது புதுச்சேரி அரசின் வேளாண் துறை. இதற்கு முக்கிய காரணம், துறையின் அமைச்சர் கமலக்கண்ணன்.

விவசாயியான இவர், வார இறுதி நாள்களில் தனது வயலில் இறங்கி விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தவறுவதில்லை. இந்த அனுபவத்தின் காரணமாகவே தன் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகம், கோழிக்கோடு, மைசூரு, ஹைதராபாத் பகுதிகளில் இயங்கிவரும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் அறிவியல் நிலையங்கள், வேளாண்மை சார்ந்த தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகளின் நிலங்களுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்றுபார்வையிட்டு வந்தார். அதைத் தொடர்ந்தே இந்த வேளாண் ஆற்றுப்படை!

அமைச்சர் கமலக்கண்ணன்
அமைச்சர் கமலக்கண்ணன்

பெரு வள்ளல்களிடம் பரிசுகளைப் பெற்ற ஒரு புலவன், எதிரில் வரும் மற்ற புலவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் (வழிகாட்ட) ‘ஆற்றுப்படை’ என்ற சிற்றிலக்கியத்தின் மரபையொட்டி அந்தக் கையேட்டுக்கு ‘வேளாண் ஆற்றுப்படை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதைத் தொகுத்திருப்பவர்... புதுச்சேரி, வேளாண் துறையின் இணை இயக்குநர் சிவராமன்.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாய நலத்துறையும், புதுவை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர் நிறுவனமும் இணைந்து வேளாண் ஆற்றுப்படை வெளியீட்டு விழா மற்றும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைப் பற்றிய கருத்தரங்குக்கு அண்மையில் ஏற்பாடு செய்திருந்தன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முன்னணி விவசாயிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் முதல் அமர்வில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் சாதகங்கள் குறித்துக் காரைக்கால் பஜன்கோ வேளாண் கல்லூரியின் வேளாண் பொருளாதாரம் மற்றும் விரிவாக்கத்துறையிலிருந்து வந்த மூன்று பேராசிரியர்கள் உரையாற்றினார்கள். தொடர்ந்து வேளாண் துறை இயக்குநர், துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, ‘‘நானும் விவசாயி, வேளாண் அமைச்சரும் விவசாயி, பொதுப்பணித்துறை அமைச்சரும் விவசாயி, வெண்டைக்காய், கத்திரிக்காய் பயிரிடும் நம் முதலமைச்சர் நாராயணசாமியும் விவசாயி. ஒட்டுமொத்தமாகப் புதுச்சேரியில் விவசாயிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

வேளாண் ஆற்றுப்படை கையேடு வெளியீட்டு நிகழ்வில்
வேளாண் ஆற்றுப்படை கையேடு வெளியீட்டு நிகழ்வில்

ஆனால், பிரதமர் மோடி விவசாயிகளை முடக்கும் விதமாக 3 சட்டங்களைப் போட்டிருக்கிறார். மத்திய அரசு மற்றும் ஆளுநர் கிரண்பேடி கொடுக்கும் அழுத்தங்களையும் தாண்டி, விவசாயிகளுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது புதுச்சேரி அரசு. இன்றைய நிலையில் விவசாயத்தில் லாபம் என்பதே இல்லை. அதனால் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 100 சதவிகிதம் மானியம் தர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து புதுவை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான நிதியுதவி அளித்த வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், முன்னோடி விவசாயிகளைக் கௌரவப்படுத்தி நினைவுப் பரிசுகளை வழங்கிவிட்டுப் பேசியவர், “வேளாண்துறை அமைச்சராக எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நமது அதிகாரிகளுடன், மத்திய அரசு நடத்தும் பல்வேறு வேளாண் நிறுவனங்களுக்குச் சென்று விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டோம். அந்த அனுபவங்களை விவசாயிகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கையேடு.

30 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களை விவசாயிகளுக்குத் தேடிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தோம். ஆனால், தற்போது வேளாண் துறையைத் தாண்டி அனுபவம் வாய்ந்த பல விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கெல்லாம் இடுபொருள்கள் கிடைக்கின்றன, தரமான விதைகள் கிடைக் கின்றன, புதிய ரகத்தை எங்கு வாங்கினால் விளைச்சலை மேம்படுத்தலாம் போன்ற முயற்சிகளைச் செய்துவருகிறார்கள். வேளாண்துறை மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து பணப்பலன்களையும் வங்கியின் மூலம் சிந்தாமல், சிதறாமல் அளித்து வருகிறோம். நிலக்கடலை, விதை நெல் மானியம் என அனைத்தையும் மொத்தமாகக் கணக்கிட்டு ஹெக்டேருக்கு ரு.25,000 என ஒரு திட்டத்தை அறிவித் திருக்கிறோம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஆண்டுக்கு ரூ.25,000 கொடுக்கும் திட்டமே இருக்காது. நெல்லுக்கு மட்டுமல்ல கரும்புக்கு ரூ.10,000 தருகிறோம். வாழை உட்பட 10-க்கும் மேற்பட்ட பயிர்களுக்குக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். விவசாயிகள் தங்களை எப்போதும் மாணவர்களாக நினைத்துக்கொள்ள வேண்டும்; எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்” என்று முடித்தார்.

இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் பசுமை விகடன்!

ட்சித் துண்டுடன் விழாவுக்கு வந்த வேளாண் அமைச்சர், சற்று நேரத்தில் தனது காரிலிருந்து பச்சைத்துண்டு எடுத்து வரச் சொல்லி அதை அணிந்தார்.

கூட்டத்தில் பேசும்போது, “விவசாயம் மற்றும் விவசாயிகளின் நன்மைக்காக மட்டுமே பத்திரிகை நடத்திவரும் பசுமை விகடன் இதழ், பல இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் கொண்டு வரும் பணியைச் செய்துவருகிறது” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டினார் அமைச்சர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு