Published:Updated:

தடைகள்... இடைவிடாத முயற்சி!- 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் உயிர்ப்பித்த வாரச் சந்தை #MyVikatan

ஏம்பலைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பகுதியில் வசித்துவருகின்றனர்.

பக்கத்து ஊர் சந்தைகளில் வியாபாரிகளுக்கு அழைப்பு
பக்கத்து ஊர் சந்தைகளில் வியாபாரிகளுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவைச் சேர்ந்த ஏம்பல் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் இடைவிடாத முயற்சியால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாரச் சந்தை வரும் 29-ம் தேதி கூடுகிறது. இதற்கான அனுமதியை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கியுள்ளார். மேலும், இந்தத் தொடர் முயற்சியில் ஈடுபட்ட ஏம்பல் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர், 6 ஊரணிகளைத் தூர்வாரியும் அசத்தியிருக்கின்றனர். இதற்காக அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழும் அளித்து கவுரப்படுத்தியுள்ளார் கலெக்டர் உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை  கலெக்டர் உமாமகேஸ்வரியின் பாராட்டு
புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரியின் பாராட்டு

ஏம்பலைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களின் அனைத்துவித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஊராகவும் ஏம்பல்தான் இருந்துவருகிறது. ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்று வந்த வாரச்சந்தை கடந்த 15 ஆண்டுகளாக மீண்டும் கூடுவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்துவந்தது. இதை ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களும், ஊர்ப் பொதுமக்களும் அரசின் கவனத்துக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பலமுறை கொண்டுசென்றனர்.

ஏம்பல் ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வாரச் சந்தை மீண்டும் கூடுவதற்கு எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆனால், ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர் சிறிதும் சளைக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தின் கதவுகளை இடைவிடாது தீவிரமாகத் தட்டி வந்தனர். இதுதொடர்பான செய்தியை #MyVikatan வாயிலாக விகடன் இணையதளத்துக்கு அனுப்பினேன். செய்தி பிரசுரமும் ஆனது.

மாநில சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-புதுக்கோட்டை மண்டலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் தடை இல்லாச் சான்று வழங்கினால் மட்டுமே சந்தையை நடத்த ஒப்புதல் அளிக்க முடியும் என அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

சந்தை தொடக்க விழா போஸ்டர்
சந்தை தொடக்க விழா போஸ்டர்

இதற்காக மேலே குறிப்பிட்ட அனைத்து அலுவலகங்களில் இருந்தும் ஒப்புதல் பெற பல்வேறு சிரமங்களையும் இடைவிடாத முயற்சிகளையும் ஏம்பல் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மேற்கொண்டனர். இறுதியில் அனைத்து தரப்பு அதிகாரிகளிடமிருந்தும் தடை இல்லாச் சான்று கிடைத்தது. ஆனால், எந்த இடத்தில் சந்தையை நடத்துவது என்பதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டது, இச்சூழலில் ஏம்பல் வட்டார இளைஞர்கள், அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தூர்வாரப்படாமல் கிடந்த 17-க்கும் மேற்பட்ட ஊரணிகளை தற்போது தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் 6 ஊரணிகளின் தூர்வாரும் பணி முழுமை அடைந்துள்ளது. அப்படி தூர்வாரப்படுவதற்காக நில அளவை செய்தபோதுதான் தற்போது சந்தை கூடுவதற்காக வேலைகள் நடைபெற்று வரும் அரசுப் பொது இடத்தை அடையாளம் கண்டுள்ளனர். அங்கிருந்த வேலிக் கருவைகளை அகற்றி பள்ளங்களை எல்லாம் மணல் கொண்டு நிரப்பி துரித கதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பினர். பின்னர் சந்தை நடத்துவதற்கான அனுமதியை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தற்போது வழங்கியுள்ளார்.

வாரச் சந்தைக்கான திறப்பு விழா வரும் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதற்காக இப்பகுதி முழுவதும் அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வாரச்சந்தை மீண்டும் நடத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக களம் இறங்கிய ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவரான ஜே.எம்.அகமது மாலிக் என்னிடம் இதுகுறித்து பகிர்ந்துகொண்டார்.

சந்தை நடைபெற உள்ள இடம்
சந்தை நடைபெற உள்ள இடம்

`` கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நாங்கள் முன்வைத்த கோரிக்கை இது. தற்போது ஏம்பல் சந்தையை நடத்துவதற்கான அனுமதியை அளித்துள்ள புதுக்கோட்டை கலெக்டருக்கு எங்கள் பகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் பரிசீலித்து அதற்கான தீர்வையும் தரும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சந்தை மட்டுமல்லாமல் இங்குள்ள நீர் நிலைகளை தூர்வாருவதற்காக நில அளவை செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று எங்கள் ஏம்பல் கிராமத்தையே புதுப்பொலிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கலெக்டருக்கு எங்கள் ஏம்பல் மக்கள் எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்கள். இதுவரை 6 ஊரணிகளை நாங்கள் திரட்டிய நிதியிலிருந்து தூர்வாரி இருக்கிறோம். அதற்காக எங்கள் ஏம்பல் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தை நேரில் அழைத்து வாழ்த்திப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கியுள்ளார். கலெக்டரின் இந்தச் செயல் இன்னும் இதுபோன்ற பல நல்ல காரியங்களைச் செய்வதற்கு எங்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.

அகமது மாலிக்
அகமது மாலிக்

இங்கு சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு அனைத்து அடிப்படை உதவிகளும் செய்துகொடுக்க உள்ளோம். இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுவட்டாரம் முழுவதும் சந்தை தொடங்குவது பற்றி தீவிர பிரசாரமும் செய்து வருகிறோம். எங்கள் சங்கத்தின் சார்பாக பக்கத்து ஊர்களில் நடைபெறும் சந்தைக்குச் சென்று வியாபாரிகளுக்கு நேரடி அழைப்பும் கொடுத்துவருகிறோம். பொதுமக்களும், வியாபாரிகளும் ஏம்பல் சந்தையை நல்லவிதமாக பயன்படுத்திப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட நிர்வாகத்தின் இந்த உதவி எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது...” என்றார் உற்சாகம் பொங்க.

-பழ.அசோக்குமார்

Myt Vikatan
Myt Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/