Election bannerElection banner
Published:Updated:

`மண் தேவையில்லை, சத்துநீர் போதும்!' - ஷில்பா ஷெட்டியின் ஹைட்ரோபோனிக் தோட்டம்

தனது வீட்டுத் தோட்டத்தில் உற்சாகமாக ஆடுகிறார் ஷில்பா
தனது வீட்டுத் தோட்டத்தில் உற்சாகமாக ஆடுகிறார் ஷில்பா

பாலிவுட் நடிகை ஷில்பாஷெட்டி தனது வீட்டுக்கு பின்புறம் மண்ணில்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறிகளை வளர்த்து அசத்தி வருகிறார்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். குடும்பம், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவரின் சமீபத்திய சந்தோஷம், தனது வீட்டுக்குப் பின்புறம் அமைத்துள்ள காய்கறித் தோட்டம். யோகா செய்வது மற்றும் அது தொடர்பான புத்தகங்கள் வெளியிடுவது என்று தனது வாழ்க்கையை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கும் ஷில்பா, ஓய்வு நேரத்தில் இந்தத் தோட்டத்தை உருவாக்கியுள்ளார்.

தனது வீட்டுத் தோட்டத்தில் உற்சாகமாக ஆடுகிறார் ஷில்பா
தனது வீட்டுத் தோட்டத்தில் உற்சாகமாக ஆடுகிறார் ஷில்பா

வழக்கமான காய்கறித் தோட்டமாக அமைக்காமல், மிகவும் வித்தியாசமான முறையில், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பமான ஹைட்ரோபோனிக் (Hydroponics) முறையில் தனது தோட்டத்தை அமைத்து அசத்தி வருகிறார். மும்பை அந்தேரி சார் பங்களாவில் உள்ள தனது வீட்டில் செடிகளை வளர்த்து வருவதாக ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். இந்தத் தொழில்நுட்பத்தில் காய்கறிகளை வளர்க்க மண் தேவையில்லை.

முழுக்க முழுக்கத் தண்ணீரில் வளர்க்கப்படுகிறது. வீட்டில் வழக்கமான முறையில் காய்கறிகள் வளர்க்கப் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கையாண்டுள்ளார். தனது ஹைட்ரோபோனிக் தோட்டத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 'சுத்தமான உணவைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபோது எனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள சிறிய இடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறி விளைவிக்கும் செயலில் இறங்கினேன். இப்போது என்னால் 25 நாள்களில் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிகிறது' என்று அந்த போஸ்ட்டில், தன் ஹைட்ரோபோனிக் தோட்டத்துக்கு அருகில் நின்று ஆடிக்கொண்டே சொல்கிறார் ஷில்பா.

Hydroponics
Hydroponics
Pixabay

ஹைட்ரோபோனிக் குறித்து தெரியாதவர்களுக்கு அது குறித்து விளக்கமும் அளித்துள்ளார். 'ஹைட்ரோபோனிக் என்பது மண்ணில்லாத விவசாயமாகும். தாவரங்களை மண்ணில் வளர்க்காமல் சத்துகள் நிறைந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வளர்த்துவிட முடியும். தாவரங்களுக்கு குறிப்பிட்ட சத்து, கொஞ்சம் தண்ணீர் மற்றும் சூரிய வெளிச்சம் மட்டுமே தேவை' என்றும் தெரிவித்துள்ளார். தனது தோட்டத்தில் காய்கறிகளுடன் புதினா, கீரை, துளசி போன்றவற்றையும் விளைவிப்பதாகத் தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, அந்தச் செடிகளோடு பேசிக்கொண்டிருப்பதிலும் அவற்றுக்கு முத்தம் கொடுப்பதிலும் பராமரிப்பதிலும் கணிசமான நேரத்தைச் செலவிடுகிறார். அவருக்கு அவரின் மகனும் உதவி செய்கிறார். பொதுமக்களும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் இதுபோன்று ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறிகளை வளர்க்க முன் வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்வது அதிகளவில் இஸ்ரேஸ் நாட்டில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷில்பா ஷெட்டிக்கு அவரின் கணவர் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் 11.07% பங்குகளை வாங்கிக் கொடுத்தார். ஆனால், கிரிக்கெட் சூதாட்ட பிரச்னையில் ராஜ் குந்த்ராவின் பெயர் சிக்கியதால் அந்தப் பங்கை விற்பனை செய்துவிட்டனர். இப்போது தன் தோட்டத்தின் மூலம் உற்சாகத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு