Published:Updated:

மீன் கரைசல்.. இரண்டு நாட்டு மாடு..! - இயற்கை விவசாயி சொல்லும் சக்சஸ் ஃபார்முலா #MyVikatan

சிவசங்கர்
சிவசங்கர்

இயற்கை விவசாயம் செய்து வரும் சொக்கம்பட்டி சிவசங்கர்தான் மேற்கொண்டுவரும் இயற்கை விவசாயம் குறித்து MyVikatan-இல் பகிர்ந்துள்ளார்.

நம்முடைய உலகம் மிகவும் வேகமாப் போய்க்கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு எங்கே இருந்து ஆபத்துகளும் கெடுதல்களும் வருகிறது என்று யாருமே கண்டிக்கிறதில்லை. உணவு விஷயத்திலும் அதேதான். இன்றைய ஏராளமான நோய்களுக்கு நாம் சாப்பிடும் உணவுதான் முக்கியக் காரணம். அதனால் நஞ்சில்லா உணவுதான் நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரும். அதற்கு நஞ்சில்லா உணவுகள் முக்கியம். அதை விவசாயியாக இருக்கும் நாம் ஏன் செய்யக்கூடாதென்று, நாங்கள் இயற்கை நெல் விவசாயம் செய்ய முடிவு செய்தோம். நான் காரைக்குடி அருகே வ.சூரக்குடியில் உள்ள சொக்கம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், முதலில் நம்முடைய குடும்பம், உறவினர்களின் தேவைக்காகவாவது நஞ்சில்லாத அரிசியை உற்பத்தி செய்வதென திட்டமிட்டேன்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

அதற்காக எங்களுடைய நிலத்திலே ஆரம்பத்திலே இருந்து கடைசிவரை ரசாயன உரங்கள் போடக்கூடாது எனத் திடமான முடிவெடுத்தோம். அதன்படியே செய்து வருகிறோம். பூச்சிக் கொல்லியாக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ மாட்டுச் சாணம், 10 லிட்டர் கோமயம், வெல்லம் 1 கிலோ, பாசிப்பயறு அரைக் கிலோ, இளநீர், நாட்டு வெல்லம் எல்லாம் 48 மணி நேரம் ஊறப்போட்டு அதை ஒரு நாளைக்கு மூன்று தரம் கலக்கவேண்டும். இதை நன்றாக வடிகட்டி கைத்தெளிப்பானில் வைத்து தெளிக்கிறோம்.

அதேமாதிரி பயிருக்குத் தேவையான தழைச்சத்து மணிச்சத்து கிடைப்பதற்காக மீன் அமிலக் கரைசல், பஞ்ச கவ்யா ஆகியவை பயன்படுத்துகிறோம். இதையும் நாங்கள் சொந்தமாகவே தயாரிக்கிறோம். மீன் கடைகளில் கிடைக்கும் மீன் கழிவுகளை ஒரு டப்பாவில் போட்டு, நாட்டு வெல்லத்தைக் கலந்து 30 நாளுக்கு ஊற வைச்சிடுறோம். அப்புறம் அதை எடுத்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து விடுறோம். பயிர் நன்றாக தூர் கட்டி பச்சைப் பசேலென்று இருக்கும். சொல்லப்போனால் ரசாயன உரங்கள் போட்ட பயிர்களைவிட மீன் கரைசல் தெளித்த பயிர்கள் செழிப்பாக இருக்கும். கல்சர் பொன்னி, ஜேசிஎல் போன்ற நெல் ரகங்களை நடவு செய்திருக்கிறோம். ஜேசிஎல் நெல் ரகம் இப்போது கதிர் பருவத்திற்கு வந்துவிட்டது. இதிலே ஒருதுளிகூட ரசாயன உரம் சேர்க்கவில்லை. நெல் மணிகள் நன்றாகப் பால் பிடித்து தெளிவாக இருக்கிறது. நல்ல மகசூலுக்குக் குறைவிருக்காதென்று நம்புறோம்..!.

இயற்கை விவசாயி  சிவசங்கர்
இயற்கை விவசாயி சிவசங்கர்

இந்த மகசூலை எல்லாம் தாண்டி நஞ்சில்லா அரிசியை உற்பத்தி செய்து சாப்பிடுகிறோம் என்பதே மகிழ்ச்சியான ஒன்று...அதேபோன்று பயிர் முளைக்கத் தொடங்கும்போதே களைக்கொல்லியிலிருந்து கடைசியாக கதிர் அறுக்கிறவரைக் கெடுதலான மருந்துகளையும், ரசாயன உரங்களையும் தெளித்து மண் வளத்தையே கெடுத்துவிடுறோம். மண்ணில் உள்ள நல்ல உயிரினங்களையே கொன்றுவிடுகிறோம். இதை எல்லாம் செய்யாமல் மண் வளத்தைப் பாதுகாக்கும் நஞ்சற்ற விவசாயத்தையே ஒவ்வொரு விவசாயியும் செய்யவேண்டும்.  அதேபோல் ஒற்றை நாற்று நடவுமுறையையும் செய்திருக்கிறோம். வரப்பு ஓரங்களில் சற்று இடைவெளிவிட்டு துவரையும் விதைத்து இருக்கிறோம். இதனால் நெல் பயிருக்கு வரக்கூடிய பூச்சிகள் துவரைப் பயிரால் தடுக்கப்படுகிறது.

விவசாய இடுபொருள்களான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், இயற்கை விவசாயத்துக்கு இரண்டு நாட்டு மாடுகள் இருந்தால் போதும். அதனோடு சாணம், சிறுநீர் இதுவே வயல்களுக்கு முக்கியமான உரம். கொசுவிரட்டி, இயற்கை உரங்கள், மீன் கரைசல், அமுதக் கரைசல், பஞ்ச கவ்யா போன்றவற்றையும் நாமே சொந்தமாக சொற்ப செலவில் தயாரிக்கவும் முடியும். இயற்கை விவசாயத்தை ஈடுபாட்டுடன் செய்தால் மகசூலுக்கும் குறைவிருக்காது. இயற்கை விவசாயத்தின் அவசியத்தை அரசாங்கம் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

இயற்கைமுறை விவசாயிகளுக்குச் சிறப்புச் சலுகைகளை அரசு வழங்க வேண்டும். அப்படிச் செய்யும்போது எல்லோரும் முழு ஈடுபாட்டுன் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். இப்போது எங்கள் ஊரிலேயே நிறைய விவசாயிகள் அடுத்தாண்டு முதல் இயற்கை விவசாயம் செய்யப்போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். நஞ்சற்ற உணவும் நல்ல மகசூலும் இயற்கைமுறை விவசாயத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை விவசாயிகள் பலரும் உணரத் தொடங்கிவிட்டனர். நானும் மற்ற விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தின் தேவையினை எடுத்துக்கூறி வருகிறேன். இன்னும் சில காலங்களில் இயற்கை விவசாயம் எல்லா இடங்களுக்கும் பரவும்!

-இயற்கை விவசாயி சிவசங்கர்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு