Published:Updated:

ஐந்தாவது முறையாக 'கிரிஷி கர்மான்' விருது... சாதனை படைக்கும் தமிழக வேளாண்மைத்துறை!

எண்ணெய் வித்துகளில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியும், உற்பத்தித் திறனில் ஹெக்டேருக்கு 2,729 கிலோ என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

agri department members
agri department members

வேளாண் விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும், அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் எண்ணெய் வித்துகள் உற்பத்தித் திறனில் சாதனைப் படைத்ததற்காக 2017-18-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் 'கிரிஷி கர்மான்' விருதுக்கு ஐந்தாவது முறையாகத் தமிழ்நாடு அரசுத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் முயற்சிகளாலும், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேளாண் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய சாகுபடி தொழில்நுட்பங்களாலும், இந்த விருது கிடைத்திருக்கிறது. 5-ம் முறையாக இந்த விருது பெற்றிருப்பது பற்றி, வேளாண்துறை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் பேசினோம்.

``தக்காளியை யாரும் பறிப்பதில்லை...”- விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை!
agriculture
agriculture

"வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. 2011-12-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு தானிய இயக்கத்தின் மூலம், தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தியில் தற்போது இரு மடங்குச் சாதனையை அடைந்திருக்கிறோம். தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால் தமிழகத்தில், வேளாண் உற்பத்தி அதிகரித்து உயரிய சாதனை அடைந்ததற்காக நான்கு முறை மத்திய அரசு “கிருஷி கர்மான்’’ விருதினை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு 2011-12, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 2016-17-ம் ஆண்டில் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவிய போதும், தமிழக அரசின் முயற்சிகளினால் 2017-18-ம் ஆண்டிலும் 107.133 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறது.

குறிப்பாக எண்ணெய் வித்துகளில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியும், உற்பத்தித் திறனில் ஹெக்டேருக்கு 2,729 கிலோ என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. இது அகில இந்தியச் சராசரி உற்பத்தித் திறனான ஹெக்டேருக்கு 1,284 கிலோ என்ற அளவைவிட இரு மடங்கிற்கும் அதிகம். 113 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்களில் தமிழ்நாட்டின் இந்தச் சாதனைக்காக, 2017-18-ம் ஆண்டின் 'கிருஷி கர்மான்' விருதுக்குத் தமிழ்நாடு தற்போது மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக வேளாண்துறைக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த பெருமை" என்றார்.