Published:Updated:

``வாழ்க்கையில்லைனு சொன்னாங்க, ஆயிரம் வருஷம் இயற்கையுடன் வாழ்வேன்!"- 2 மில்லியன் மரங்கள் நட்ட பெண்

மரம் வளர்ப்பு
மரம் வளர்ப்பு

22 கிராமங்களைத் தேர்வு செய்து மரம் நடும் பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

ரெண்டு மில்லியன் மரக்கன்றுகளை நட்டதற்காக அமெரிக்காவின் யுனெஸ்கோ விருதைப் பெற்றிருக்கின்றனர் தெலங்கான மாநிலத்தைச் சேர்ந்த அனுஷியா மற்றும் அவரின் குழுவினர். 25 வருடங்களாக மரக்கன்றுகள் நடும்பணியில் ஈடுபட்டுவரும் இவர்கள், தெலங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தில் 22 கிராமங்களைத் தேர்வுசெய்து அப்பணியைச் செய்திருக்கிறார்கள். அதன் பயனாக தெலங்கானா இப்போது பசுமை மாநிலமாக மாறியிருக்கிறது.

அனுஷியா
அனுஷியா

யுனெஸ்கோ விருது குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``என்னைப் போன்ற ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்கள், அவ்வளவு பெரிய விருதை கையில் ஏந்திய தருணம் இன்னும் கனவாக இருக்கிறது. யுனெஸ்கோ விருதுக்கு எங்கள் குழு தேர்வு பெற்றிருக்கிறது என்று எங்கள் மாநில அரசிடமிருந்து எனக்குத் தொலைபேசியின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த நிமிடம் முதல் இப்போது வரை எல்லாமே கனவு போன்று உள்ளது" என்ற அனுஷியா, மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் ஏற்பட்டதைப் பற்றி விளக்குகிறார்.

சென்னை - முகப்பேரில் வனம்போல் வீட்டுத்தோட்டம்: சந்தன மரங்கள் வளர்க்கும் ஜஸ்வந்த் சிங்!

25 வருடங்களுக்கு முன், என் கணவர் என்னை விட்டுட்டு போயிட்டார். அப்போது எனக்கு 20 வயசுதான். ஒரு குழந்தையும் தத்தெடுத்து வளர்த்துக்கொண்டிருந்தேன். என் கணவர் என்னைவிட்டுப் போனதும் என் வாழ்க்கை முடிஞ்சுருச்சுனு எல்லோரும் நினைச்சாங்க. தத்தெடுத்த குழந்தையைத் திரும்பி விட்டுவிடச் சொன்னாங்க. ஆனா, ஓர் ஆண் என்னை விட்டுட்டு போனதுக்காக என் வாழ்க்கையின் எல்லா நாள்களையும் நான் தொலைக்க விரும்பல.

மரங்கள்
மரங்கள்

எத்தனையோ விமர்சனங்களுக்கு மத்தியில் என் குழந்தைக்காக வாழ ஆரம்பிச்சேன். என்னோட செலவை நான்தான்  பார்த்துக்கணும். யாரையும் நம்பி வாழக்கூடாதுனு முடிவு பண்ணி, வேலை தேடினேன். நான் பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருந்ததால் எங்குமே வேலை கிடைக்கல. அதனால் கிடைக்குற வேலையைச் செய்ய ஆரம்பிச்சேன். அப்போதான் பெண்கள் நலனுக்காகச் செயல்படும் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் எனக்கு அறிமுகமானது. சில மாதங்களில் நானும் அந்தத் தொண்டு நிறுவனத்தில் ஒருத்தியாக மாறிட்டேன்.

எங்க ஊருல பயங்கர தண்ணி கஷ்டம். ஒரு குடம் தண்ணிக்கே 2 கி.மீ தூரம் நடந்து போகணும். அதைச் சரி செய்ய, தொண்டு நிறுவனத்திலிருந்து எங்கள் பகுதியில் இருக்கும் கிராமங்களில் மரங்கள் நடும் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிச்சாங்க. நான் பகலில் வேலைக்குப் போயிட்டு, இரவில் கிராமங்களில் விழிப்புணர்வு செய்வேன். இரவு நேரங்களில் மரக்கன்றுகள் நட்டேன். எங்கள் பகுதியில் 30 வகையான மரங்களை நட்டேன். அது கொடுக்கும் பயனைக் கண்கூட பார்க்கும்போது இன்னும் ஆர்வம் அதிகமாயிருச்சு. வேலைநேரம் போக மீதி நேரமெல்லாம் பக்கத்துக்குக் கிராமங்களுக்குச் சென்று மரக்கன்றுகள் நடுவேன். என்னைப் பார்த்து சில பெண்கள் எனக்குக் கைகொடுத்துப் பாராட்டினாங்க.

காடுகள்
காடுகள்

எந்தப் பகுதிக்கு எந்த மரங்கள் நட்டால் நல்லா வளரும் என்பதை தொண்டு நிறுவனத்தில் சொல்லிக்கொடுத்துருக்காங்க. இதுவரை எங்களுடைய குழுவினர் ரெண்டு மில்லியன் மரக்கன்றுகளை நட்டிருக்கோம். கடந்த சில வருடங்களில் எங்கள் மாநிலமே பசுமையாகிருக்கு. இப்போ சொல்றேன் என் வாழ்க்கையை நான் தொலைக்கவில்லை, மாத்தி எழுதியிருக்கேன். எனக்கு வாழ்கையையே இல்லைனு சொன்னவர்களிடம், என் சேவை இன்னும் ஆயிரம் வருஷம் வாழும்னு நிரூபிச்சுருக்கேன். இதுவே மாற்றத்துக்கான ஆரம்பம்" என வெற்றிபெருமிதத்தில் சொல்கிறார் அனுஷியா.

அடுத்த கட்டுரைக்கு