Published:Updated:

வாட்ச்மேன் டு ஸ்டூடன்ட்... அசத்தும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வாட்ச்மேன்!

வாட்ச்மேன் ராம்ஜால்
வாட்ச்மேன் ராம்ஜால் ( HT )

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்ததும் இங்கிருந்த சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திறமைமிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் புழங்கும் இடம் என்பதால் எனக்குள் இருந்த படிப்பு தாகம் ஊற்றெடுத்து ஓடத் தொடங்கியது

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குள் வாட்ச்மேனாக காலடி எடுத்து வைத்தவர், அதே பல்கலைக்கழகத்தில் மாணவனாக படிக்க சேர்ந்துள்ளார். ஐ-ஏ.எஸ் அதிகாரியாவது அவரின் லட்சியம்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பாஜிரா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்ஜால் மீனா. இவரின் தந்தை கூலித் தொழிலாளி. வறுமையில் உழழும் குடும்பம். எனினும், படிக்க வேண்டுமென்ற வற்றாத தாகம் ராம்ஜாலுக்கு இருந்தது. பிறந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.

இளைஞரானதும் ராஜஸ்தானில் உள்ள கல்லூரியில் பி.எஸ்ஸி படிக்க சேர்ந்தார். ஒரு வருடம்தான் படிக்க முடிந்தது. நிதி நிலைமை காரணமாக படிப்பை பாதியில் கைவிடும் நிலை. சளைக்காத ராம்ஜால் கடந்த 2006-ம் ஆண்டு அஞ்சல் வழி கல்வியில் சேர்ந்து பி.ஏ படித்தார். இளங்கலை முடித்த பிறகு, பொலிட்டிக்கல் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்றார். இதற்கிடையே, வறுமை அவரை சொந்த ஊரிலிருந்து விரட்டியது. வேலை தேடி டெல்லியில் வந்து தஞ்சமடைந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வாட்ச்மேன் வேலைக்கு சேரும்போது இரு பட்டங்கள் இருந்தன.

தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ ரஷ்ய மொழி படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றுள்ளார். பல்கலைக்கழகத்தில் வாட்ச்மேனாக சேர்ந்த ராம்ஜால் இப்போது மாணவராகிவிட, அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

ராம்ஜால் இதுவரை தொலைதூர கல்வி வழியாகத்தான் படித்து வந்தார். முதன்முறையாக ரெகுலர் கல்லூரியில் சேர்ந்து படிக்கப் போவதால், வேலையை விடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ராம்ஜால்
ராம்ஜால்

இதனால், தன்னை இரவுப் பணிக்கு மாற்ற வேண்டுமென்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாட்ச்மேன் வேலையில் கிடைக்கும் ரூ. 15,000 சம்பளத்தில்தான் ராம்ஜாலின் குடும்பம் பசியாறி வருகிறது. 34 வயதான ராம்ஜாலுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். டெல்லியில் முனிர்கா என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மூத்த மகள் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.

படிப்பு புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? ராம்ஜாலின் மகள்களும் வகுப்பில் முதலிடம்தானாம். தன் மகள்களை மெத்த படிக்க வைக்க வேண்டுமென்பது ராம்ஜாலின் கனவு.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வது குறித்து ராம்ஜால் கூறுகையில், ``ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்ததும் இங்கிருந்த சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திறமைமிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் புழங்கும் இடம் என்பதால், எனக்குள் இருந்த படிப்பு தாகம் ஊற்றெடுத்து ஓடத் தொடங்கியது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், எனக்கு உதவினார்கள். சூழ்நிலைகளை எனது பலமாக மாற்றிக்கொண்டு படிக்கத் தொடங்கினேன். தினமும் தவறாமல் முடிந்தளவு செய்தித்தாள்களைப் படித்துவிடுவேன். சிவில் சர்வீஸ் தேர்வு புத்தகங்களையும் படித்து அறிவை விசாலமாக்கிக் கொண்டேன்.

மொபைல் போன் வழியாக வீடியோக்கள், கல்வி சம்பந்தமான ஆப்களில் இருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மொழிகளை அறிந்துகொள்வது அறிவை விசாலமாக்கும். ரஷ்ய இலக்கியம், கலாசாரம் போன்றவற்றைத் தெரிந்துகொள்வதில் எனக்கு அதீத ஆர்வம். அதனால், BA (Honours) ரஷ்ய மொழி படிக்க முடிவு செய்தேன். இரவுப் பணிதான் எனக்கு ஒரே தடையாக உள்ளது. இந்தச் சம்பளத்தை நம்பிதான் குடும்பம் இருக்கிறது. அதனால், வேலையை விட முடியாது.

இந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றி வெளியே தவறான அபிப்ராயங்கள் உண்டு. இங்கு மாணவர்கள் என்னிடம் அன்புடனும் கனிவுடனும்தான் நடந்துகொண்டார்கள். போராட்டங்களை மட்டுமே இவர்கள் நடத்துவதில்லை. நல்ல கல்வியாளர்களாகவும் இருக்கின்றனர். பெரும் சாதனையாளர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம் இது. நானும் இங்கே படித்து நாட்டுக்கு பதிலுக்கு ஏதாவது செய்வேன். அடுத்து சிவில் சர்வீஸ் தேர்வு என் இலக்கு'' என்கிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அங்கே பணிபுரிந்துகொண்டே ரெகுலர் கல்லூரியில் படிக்கக் கூடாது என்கிற விதி உள்ளது.

பல்கலைக்கழகத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி நவீன் யாதவ், ``எங்களையெல்லாம் ராம்ஜால் பெருமைப்படவைத்துவிட்டார். இரவுப் பணி பார்த்துவிட்டு பகலில் கல்லூரிக்குச் செல்வது கடினமானது. அதனால், பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் விவாதித்து அவருக்கு எங்களால் முடிந்தளவு உதவி செய்வோம்'' என்றார்.

`படிக்கிற பிள்ளை எங்கேயிருந்தாலும் படிக்கும் ' என்கிற சொலவடை தமிழில் உண்டு. இதை ராம்ஜால் நிஜமாக்கியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு