Published:Updated:

”தினகரன் ஆதரவாளர்களும் தி.மு.க.வினரும் கைகுலுக்கிக் கொண்டனர்!” - 'அடடே' மதுசூதனன்

”தினகரன் ஆதரவாளர்களும் தி.மு.க.வினரும் கைகுலுக்கிக் கொண்டனர்!” - 'அடடே' மதுசூதனன்
”தினகரன் ஆதரவாளர்களும் தி.மு.க.வினரும் கைகுலுக்கிக் கொண்டனர்!” - 'அடடே' மதுசூதனன்


                           

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க., இடைத் தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது. ஆளுங்கட்சியை எதிர்த்து சுயேச்சை ஒருவர் இமாலய வெற்றி பெற்றிருப்பதில் ஆளுங்கட்சியினருக்கு மன உளைச்சல்தான்.  குக்கர் சின்னத்தை  தேர்ந்தெடுத்த போதே, 'ஆளுங்கட்சிக்கு பிரஷர் ஏற்றத்தான் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தேன்'  என்று சொன்னார், டி.டி.வி. தினகரன்.  பிரஷர் ஏறித்தான் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைக் கொண்டுபோய்க் கொட்டி போராடிப் பெற்ற  இரட்டை இலை, போராடித் தோற்றிருக்கிறது.  ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனன், அந்தக் கட்சியின் அவைத்தலைவரும் கூட.  இந்தத் தேர்தலில் போட்டியிட 'சீட்'  பெறுவதிலேயே இழுபறி நிலைமை இருந்தது. ஆர்.கே.நகர்த் தொகுதியின் மண்ணின் மைந்தனான மதுசூதனன், இந்தத் தோல்வியை எப்படிப் பார்க்கிறார் என்றறிய அவரைச் சந்தித்தேன்.

''...டேய், அவனுங்களைக் காலையிலயே நேரத்தோட வந்துரச் சொல்லு. ஜெயிக்கறதும், தோக்கறதும் சகஜம்தான். அதுக்குன்னு தலைவர் நினைவுநாளை விட்ராதீங்கடா... என்ன புரியுதா, கெளம்புங்க, கெளம்பி சீக்கிரமா வூட்டைப் போய்ச் சேருங்க...'' என்று தொண்டர்களை  உற்சாகமாக வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தார், மதுசூதனன்.

''இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்த்தீர்களா?"

''கண்டிப்பாக இல்லை''  என்றவர், திடீரென்று வந்த ஒரு கும்பலைப் பார்த்ததும், ''பாக்க வர்றவனெல்லாம், துக்கம் விசாரிக்க வர்ற மாதிரியே வர்றானுங்களே, டேய் போயிட்டு அப்புறம் வாங்கடா'' என்றவர் பின்னர் நம் பக்கம் திரும்பினார்.

''தோல்வியின் காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

''டி.டி.வி. ஆட்கள் அள்ளி இறைத்த பணம், அவர்களுக்குத் துணைபோன தி.மு.க. இதைத் தவிர வேற எந்தக் காரணமும் இல்லை.''

''தி.மு.க.தான் எங்கள் எதிரிக்கட்சி என்று டி.டி.வி. தினகரன் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆளுங்கட்சியை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. நீங்களோ, தினகரனும், தி.மு.க.வும்  கூட்டு என்கிறீர்களே?''

''ராணிமேரிக் கல்லூரியில் ஓட்டு எண்ணும் இடத்தில்,  தினகரன் ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜி,  அவங்க அட்வகேட்  தம்பா,  தி.மு.க. அட்வகேட் கிரிராஜன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர், மிகவும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக ஏதோ கூட்டணிக் கட்சிக்காரர்கள் போலத்தான்  இருந்திருக்கிறார்கள்.  எனக்கு சீப் ஏஜெண்ட்டாக அங்கே உட்கார்ந்திருந்த  ஆர்.எஸ்.ராஜேஷ், இதைப் பார்த்துவிட்டு, 'உங்களால் எப்படி இப்படி இருக்க முடிகிறது?' என்று அவர்களிடம் கேட்டிருக்கிறார். இது ஒரு சாம்பிள்தான். தினகரனுக்கும், தி.மு.க-வுக்கும் இருக்கும் உறவைச் சொல்ல  இது போல ஆயிரம் சம்பவங்கள் இருக்கின்றன."

''சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றிக்கு, ஆண்ட கட்சியான தி.மு.க.  துணை போனதாகச் சொல்வது சரிதானா?''

''எது சரியில்லே? நான் சொல்றதா சரியில்லே... உண்மையைச் சொன்னா கசக்கத்தாம்பா செய்யும். கடந்த பொதுத் தேர்தல்ல இதே தொகுதியில அம்மா வாங்குன ஓட்டு 96 ஆயிரத்து சொச்சம். அப்ப கருணாநிதி கட்சி வாங்குனது 56 ஆயிரத்து சொச்சம்.  இப்ப நடந்த, இந்தத் தேர்தல்ல அதே தி.மு.க. 24 ஆயிரத்து சொச்சம் ஓட்டை மட்டுமே  வாங்கி டெபாசிட்ட இழந்திருக்குது. முதல்ல வாங்குனதுல பாதியைக் கூட இப்ப தி.மு.க. வாங்கலை. வாங்க முடியலைங்கறது வேற. ஆனா, வாங்கலே. இந்தத் தேர்தல்ல நான் வாங்குனது 48 ஆயிரத்து 306 ஓட்டு.  அ.தி.மு.க. ஓட்டு, எங்கயும் போகலை. அப்படியேத்தான் இருக்கு. அது  எப்பவும் போல இரட்டை இலைக்கு கிடைச்சிருக்கு.  இத்தனைக் கட்சிகளைக் கூட்டணியில வெச்சுக்கிட்டும், தி.மு.க. இவ்வளவு மோசமா தோக்குதுன்னா அதுக்கு என்ன காரணம்? என் சொந்தத் தொகுதி மக்கள் இப்படி இருண்டு போன முகத்தோடு இருப்பதை என்னால் பாக்க முடியலை. இந்தக் கேவலமான வெற்றியை அவங்களால கொண்டாட முடியலை.  இன்னைக்கி தொகுதியில் பட்டாசு கொளுத்தி கொண்டாடறதெல்லாம் தொகுதிக்கு சம்மந்தமே இல்லாத ஆளுங்கதான். பணமும், துரோகமும் ஒரே தராசுத் தட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன''

''நீங்கள் பணம் கொடுக்கவில்லையா?''

''அப்படி ஒரு அவமானத்தை செஞ்சி, அதுல வர்ற வெற்றியை நான் எப்பவும் விரும்பமாட்டேன்.  அடுத்த விலங்கு அடித்துப் போட்ட இறைச்சியை சிங்கம் ஒரு போதும் தின்னாது''

''பிரசாரத்தின்போது நீங்கள் மயங்கி விழுந்து, 'அட்மிட்' ஆனதாகச் சொல்லப்பட்டது. அதேபோல் பிரசாரத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். முழுமையாக உங்களுக்கு உதவவில்லை என்றெல்லாம் தகவல் பரவியதே...?''

''இப்டி பல கதைகளை அவுத்து விட்டானுங்க.  அதில் துளியாவது உண்மை இருக்கா ? நான் பிரசாரத்துக்குப் போகாத நாளே கிடையாது.  தொகுதியில வந்து கேட்டுப் பாக்கச் சொல்லு. இரண்டு வேளையும் ஓப்பன் ஜீப்பில நின்னுக்கிட்டு வெய்யில்லயே போயிருக்கேன்; மைக் பிடிச்சிப் பேசியிருக்கேன். ஒருநாளைக்கு ஓ.பி.எஸ்.சு, ஒரு நாளைக்கு ஈ.பி.எஸ்.சுன்னு என் கூட வந்து ஓட்டு கேட்டாங்க. ரெண்டு பேரும் சேந்து வந்து பலமுறை ஓட்டுக் கேட்டாங்க. சொல்றவன் எதையாவது சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான்.''

''ஆர்.கே.நகர் பிரசாரத்தில், டி.டி.வி. தினகரன், உங்களை 'வன்முறைக் கும்பல்' என்று குறிப்பிட்டாரே?''

''என் மேல எந்தக் கேசும் கிடையாது. பெரா, பொரா, காபிபோசா, சீட்டிங் இப்படி எந்தக் கேசும் என் மேல இல்லே. அவரு தரம் தாழ்ந்து பேசற அளவுக்கு  நான் பேச மாட்டேன். இது அண்ணா தி.மு.க. இங்க வளர்ந்த எந்தத் தொண்டனும் புரட்சித் தலைவர் கொள்கையையோ, அம்மாவோட கொள்கையையோ சீரழிக்கிற மாதிரி பேசமாட்டான். வன்முறையில் ஈடுபட மாட்டான்.''

''ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் இவ்வளவு மோசமாகத் தோற்றதை நீங்கள் பாதிப்பாகக் கருதவே இல்லையா ?''

''என் வாயிலயிருந்து என்ன பதில் வரணும்னு எதிர்பார்க்குறே? இது இரும்புக் கோட்டைப்பா, புரியுதா... எந்த இயக்கமும் துரோகத்தால கொஞ்சம் ஷேக் ஆகும். ஆனா கொஞ்சம்தான் ஆகும். இயக்கம்கறது ஆலமரம். கொளத்தூர் தொகுதியில வெற்றிவேல் செய்த சதியால, தி.மு.க. ஸ்டாலின் ஜெயிச்சாரு. அதேமாதிரி வில்லிவாக்கத்துல ரெங்கநாதன் ஜெயிச்சாரு. கட்சிக்காகப் பாடுபட்ட தாடி.ம.ராசு, ஜே.சி.டி. பிரபாகரன் இவங்களைப் பலி கொடுத்தது வடசென்னை மாவட்டச் செயலாளரா இருந்த வெற்றிவேல்தான். பெரம்பூர்ல வெற்றிவேல் ஜெயிச்ச கதை எல்லாருக்கும் தெரியும். டோட்டலா வடசென்னை மாவட்டத்தை, வெற்றிவேல் வாஷ் அவுட் பண்ணிட்டாரு.  அது சாதனை இல்லை, துரோகம். இப்ப ஆர்.கே.நகர்ல நானு. தலைவரால் உருவாக்கப்பட்ட  கட்சியை, சின்னத்தை எதிர்த்து கருணாநிதிக் கட்சியோடு ரகசியக் கூட்டு வைத்துக் கொண்டு, இவர்கள் பெற்ற வெற்றியை  மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.''

''மீண்டும் அணிதாவல் நடக்காது என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிகளில் ஏதேனும் குழப்பம் இருக்குமா, உங்கள் அனுபவத்தை வைத்துச் சொல்லுங்கள்...''

''நீங்க ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணின்னு சொல்றதை முதல்ல நிறுத்துங்க. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இணைந்து கட்சியை வழி நடத்துகிறார்கள். ஓர் எம்.பி.  இங்க வந்துட்டு  மறுபடியும் அங்கே ஓடியிருக்காரு. நியூஸ்ல வந்தது, அதை வெச்சுக் கேக்கறீங்க. கொள்கைப் பிடிப்பும் அம்மா மேலயும், தலைவர் மேலயும், கட்சிமேலயும் விஸ்வாசமா இருக்கவன் எங்கயும் ஓடமாட்டான்.  என்னைப் பொறுத்தவரை நான் சாகும்போது என் உடல் மீது அண்ணா தி.மு.க. கொடி போர்த்தி இருக்க வேண்டும். அந்தச்சாவுதான் எனக்கு நிம்மதியைக் கொடுக்கும். ஒவ்வொரு உண்மைத் தொண்டனும் இதைத்தான் விரும்புவான். தினகரனும், தி.மு.க-வும் வெச்சிருக்குற கள்ள உறவு, இந்தத் தேர்தல்ல வெளியே வந்திருக்கு. அதுக்கு என்னோட, கழகத்தோட வெற்றியை விலையா கொடுக்க வேண்டி ஆகிடுச்சு. அம்மா ஜெயிச்சிக் குடுத்துட்டுப் போன ஆட்சியை மூணுமாசத்துல கலைச்சுடுவேன்னு தினகரன் சொல்றதுல இருந்தே, இது யாரோட குரலுன்னு உங்களுக்குத் தெரியலையா. அதெல்லாம் இங்கே ஒரு கதையும் நடக்காது.''