Published:Updated:

ராஜஸ்தானில் நடந்தது என்ன? - பெரியபாண்டியன் மனைவி காலில் விழுந்து கதறிய முனிசேகர் #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராஜஸ்தானில் நடந்தது என்ன? - பெரியபாண்டியன் மனைவி காலில் விழுந்து கதறிய முனிசேகர் #VikatanExclusive
ராஜஸ்தானில் நடந்தது என்ன? - பெரியபாண்டியன் மனைவி காலில் விழுந்து கதறிய முனிசேகர் #VikatanExclusive

ராஜஸ்தானில் நடந்தது என்ன? - பெரியபாண்டியன் மனைவி காலில் விழுந்து கதறிய முனிசேகர் #VikatanExclusive

பெரியபாண்டியன் எப்படி இறந்தார் என்பதை அவர் குடும்பத்தினரிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்போது, ‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று பெரியபாண்டியனின் மனைவி பானுரேகாவின் காலில் முனிசேகர் விழுந்ததாகப் பெரியபாண்டியனின் சகோதரர் ஜோசப் தெரிவித்தார். 

சென்னைக் கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில் கொள்ளையர்களைப் பிடிக்க டிசம்பர் 8-ம் தேதி, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் தனிப்படை போலீஸார் ராஜஸ்தானுக்குச் சென்றனர். டிசம்பர் 13-ம் தேதி கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சி செய்தபோது, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில ஜெய்த்ரன் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்தநிலையில், பெரியபாண்டியனின் உடலைத் துளைத்த குண்டு முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்ததாக ராஜஸ்தான் மாநிலப்  போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இதுதொடர்பாக தமிழகப் போலீஸார் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர். தற்போது, பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ராஜஸ்தான் மாநிலப் போலீஸார், முனிசேகர் மற்றும் தனிப்படை போலீஸாரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் கொள்ளையன் நாதுராமை கைது செய்ய ராஜஸ்தான் மாநிலப் போலீஸாரும், தமிழகப் போலீஸாரும் தீவிரம் காட்டிவருகின்றனர்.
 

இந்தச் சூழ்நிலையில், ராஜஸ்தானில் நடந்தது என்ன என்பதை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் தன்னுடைய கணவர் மரணத்தில் நீதிவிசாரணை வேண்டும் என்றும் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற தமிழகப் போலீஸார், கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் தனிப்படை போலீஸார் ஆகியோர் பெரியபாண்டியனின் சொந்த ஊரான சங்கரன்கோவில், முவிருந்தாளி, சாலைபுதூர் கிராமத்துக்கு டி.எஸ்.பி தலைமையில் சென்றனர். அங்கு, வைக்கப்பட்டிருந்த பெரியபாண்டியனின் புகைப்படத்தைப் பார்த்து முனிசேகர் மற்றும் இதர போலீஸார் கதறி அழுதனர். 
 இதையடுத்து, பெரியபாண்டியனின் குடும்பத்தினரிடம் ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தை முனிசேகர் விளக்கினார். அதைக் கேட்டு

பெரியபாண்டியனின் குடும்பத்தினர் கதறினர். முனிசேகர் என்ன சொன்னார் என்பதைப் பெரியபாண்டியனின் சகோதரர் ஜோசப் நம்மிடம் விவரித்தார். 

“அண்ணன் பெரியபாண்டியனின் இழப்பை ஈடுகட்ட முடியாது. ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு முன்புகூட போனில் அவருடன் நான் பேசினேன். அப்போதுகூட சீக்கிரத்தில் கொள்ளையர்களைப் பிடித்துக்கொண்டு சென்னை வந்துவிடுவேன். கிறிஸ்துமஸ்க்குக் கண்டிப்பாக ஊருக்குக் குடும்பத்துடன் வருவதாகச் சொன்னார். கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. ஆனால், அண்ணன் வரவில்லை'' என்றவரின் குரல் உடைந்தது... தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை.

அவருக்கு நாம் ஆறுதல் கூறினோம். சிறிது நேரத்துக்குப் பிறகு, அவர் தொடர்ந்தார். “கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் இரண்டு தனிப்படை போலீஸாரை அழைத்துக்கொண்டு போலீஸ் அதிகாரி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். கொள்ளையர்கள் குறித்த தகவல் கிடைத்ததும் விமானத்தில் முனிசேகரும் பெரியபாண்டியனும் சென்றுள்ளனர். அப்போது, விமானத்தில் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால், ரயிலில் துப்பாக்கிகளை இரண்டு போலீஸார் கொண்டு சென்றுள்ளனர். அதன்பிறகு டிசம்பர் 13-ம் தேதிதான் நாதுராம் இருக்கும் இடம் போலீஸ் இன்ஃபார்மர் மூலம் கிடைத்துள்ளது. உடனே, அவரை கைது செய்ய அதிகாலையில் பெரியபாண்டியன், முனிசேகர் மற்றும் போலீஸார் அங்குச் சென்றுள்ளனர். அப்போது அந்த இடத்தில் இரண்டு பேர் காவலுக்கு இருந்துள்ளனர். பெரியபாண்டியனும் போலீஸாரும் அவர்கள் இருவரையும் அங்குள்ள மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர். அதன்பிறகு, வீட்டுக்குள் முதல் ஆளாகப் பெரியபாண்டியன் துணிச்சலாகச் சென்றுள்ளார். அப்போது, கொள்ளையர்களைப் பிடிக்க பெரியபாண்டியன் முயன்றுள்ளார். அதைக் கொள்ளையர்களின் உறவினர்கள் தடுத்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் முனிசேகர் மற்றும் போலீஸார் வெளியில் ஓடிவந்துள்ளனர். ஆனால், பெரியபாண்டியன் மட்டும் கொள்ளைக் கும்பலில் சிக்கியுள்ளார்.

அதைக் கவனித்த முனிசேகர், மீண்டும் உள்ளே சென்றுள்ளார். அப்போது, முனிசேகரையும் கொள்ளைக் கும்பல் தாக்கியுள்ளது. இந்தச் சமயத்தில் பெரியபாண்டியன் அருகே 6 வயது பெண் குழந்தை, இளம் பெண் ஒருவர் இருந்துள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலைப் பெரியபாண்டியன் சமாளித்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் கொள்ளையர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியால் பெரியபாண்டியன் சிரமப்பட்டுள்ளார். இதனால், முனிசேகர், தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கொள்ளைக் கும்பலை நோக்கிச் சுட்டுள்ளார். இருட்டில், துப்பாக்கிக் குண்டு பெரியபாண்டியன் மீது பாய்ந்துள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் கொள்ளைக் கும்பல் அங்கிருந்து சிதறி ஓடியுள்ளது. கொள்ளையர்கள் தாக்கியதில் பெரியபாண்டியன் நிலைதடுமாறி அருகிலிருந்த இரும்புக் கேட்டைப் பிடித்துக்கொண்டு நின்றுள்ளார். உடனே முனிசேகர் மற்றும் போலீஸார் அவரை தாங்கிப்பிடித்துள்ளனர். அவரின் பின்பக்கத்திலிருந்து ரத்தம் வழிந்தது. 
 

உடனே, அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம். அப்போது, ‘முனி... மிஸ்ஸிங்’ என்று கடைசியாகப் பெரியபாண்டியன் கூறினார். மருத்துவமனையில்தான் அவரின் மார்புப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு துளைத்திருந்ததைப் பார்த்தேன் என்று முனிசேகர்,  எங்களிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

6 வயது பெண் குழந்தைக்காகத்தான் மனிதநேயத்துடன் தன்னுடைய துப்பாக்கியைப் பெரியபாண்டியன் பயன்படுத்தவில்லை என்றும் முனிசேகர் கூறினார். பெரியபாண்டியனும் துப்பாக்கியால் சுட்டிருந்தால் அவரை இழந்திருக்க மாட்டோம் என்றும் தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். ஒரு மணி நேரம் எங்கள் வீட்டில் அவர்கள் இருந்தனர். அப்போது, பெரியபாண்டியனின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். எங்களிடம் முனிசேகர் பேசிகொண்டிருக்கும்போதே அண்ணி பானுரேகாவின் காலில் விழுந்துவிட்டார். ‘என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று கையெடுத்துக் கும்பிட்டார். அதைப்பார்த்த எங்களுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது" என்றார் கண்ணீர் மல்க. 

முனிசேகர் மற்றும் போலீஸார் வந்த தகவலை ரகசியமாக வைத்திருக்குமாறு தமிழகப் போலீஸார் பெரியபாண்டியன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்தத் தகவல் தெரிந்ததும் முனிசேகரின் செல்போனில் தொடர்புகொண்டோம். எடுத்துப் பேசிய அவர், தகவலைத் தெரிவிப்பதற்கு முன்பே இணைப்பைத் துண்டித்துவிட்டார். 

பெரியபாண்டியன் மரணத்தில் உள்ள தகவல்களை மூடிமறைப்பதால் மர்மங்கள் இருப்பதாகத் சந்தேகங்கள் எழுந்துவருகின்றன. தமிழகப் போலீஸார், பெரியபாண்டியன் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டால் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அதன் ஒருகட்டமாகத்தான் ரகசியமாக முனிசேகர் மற்றும் போலீஸார் பெரியபாண்டியன் குடும்பத்தினரைச் சந்தித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலப் போலீஸார் தகவல் தெரிவிப்பதற்கு முன்பே தமிழகப் போலீஸார் நடந்த சம்பவத்தை அறிக்கை வெளியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு