Published:Updated:

''ஏன் நடிகைகளின் சம்பளத்தை மட்டும் கேள்விகேட்கிறீர்கள்?” - பளீர் பொளேர் ப்ரியங்கா சோப்ரா

''ஏன் நடிகைகளின் சம்பளத்தை மட்டும்  கேள்விகேட்கிறீர்கள்?”  - பளீர் பொளேர் ப்ரியங்கா சோப்ரா
''ஏன் நடிகைகளின் சம்பளத்தை மட்டும் கேள்விகேட்கிறீர்கள்?” - பளீர் பொளேர் ப்ரியங்கா சோப்ரா

''ஏன் நடிகைகளின் சம்பளத்தை மட்டும் கேள்விகேட்கிறீர்கள்?” - பளீர் பொளேர் ப்ரியங்கா சோப்ரா

PC: PTI

சமீபத்தில், பிரபல புத்தக வெளியீட்டாளரான ‘பெங்குவின் இந்தியா' நடத்திய பிரமாண்ட இலக்கிய விழாவில், நடிகை ப்ரியங்கா சோப்ரா பேசிய உரை, அவருக்கு மேலும் ரசிகர்களை உருவாக்கியுள்ளது. 

இந்த விழா நடைபெறுவதற்கு சில நாள் முன்பே, இதில் ப்ரியங்கா சோப்ரா பேசப்போவது தெரிந்து பலரும் சர்ச்சை எழுப்பினர். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, 11 ஆண்டுகளாக நடக்கும் இந்த விழாவில், அமர்தியா சென், அப்துல் கலாம், ராமச்சந்திர குஹா என ஆண்களே பேசியிருக்கிறார்கள். முதன்முறையாக ஒரு பெண் பேசுவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர். மற்றொரு காரணம், இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் விழாவில் ஒரு நடிகையைப் பேச அழைப்பது ஏன். ஆளுமைமிக்க பெண் எழுத்தாளர்களே இங்கு இல்லையா என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்தன. ஆனால், இலக்கிய விழாவுக்கு ப்ரியங்கா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கு விளக்கம் தெரிவித்தது, விழாவை நடத்திய பெங்குவின் இந்தியா. 

இதில், பிரேகிங் தி கிளாஸ் சிலிங்: சேஸிங் ஏ ட்ரீம் (Breaking the Glass Ceiling: Chasing a dream) என்ற தலைப்பில் பேசிய ப்ரியங்கா, “நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப்போகிறேன். எனக்கு ‘பிரேக்கிங் தி கிளாஸ் சிலிங்’ என்ற வரிகள் அவ்வளவாகப் பிடிக்காது. ஏனென்றால், நான் இதுவரை செய்த சாதனைகள், என் கடின உழைப்பு எல்லாவற்றையும் ஒரு பெட்டிக்குள் அடைப்பது போன்று உணர்கிறேன். ஏதோ நானே ஒரு கிளாஸ் சிலிங்கை கண்டுபிடித்து உடைப்பதுபோல அர்த்தம் ஆகிவிடுகிறது. நான் நினைப்பதெல்லாம் என் கனவுகளை தொடர வேண்டும். நான் என் சிறந்த வெர்ஷனாக ஆக வேண்டும்' என்று தன் உரையைத் தொடங்கினார். 

பார்வையாளர்களுக்கு ஒருவரின் சிறந்த வெர்ஷன் ஆவதற்கான 12 வழிமுறைகள் பற்றி ப்ரியங்கா கூறியபோது, “உங்களை நேசியுங்கள், மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், லட்சியத்தோடு இருங்கள், நீங்கள் எங்கிருந்து ஆரம்பித்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று உற்சாகமாக உரையாற்றியதும் அரங்கம் ரசிகர்களின் கைதட்டல்களால் நிறைந்தது. 

விழாவில் பேசி முடிந்ததும், பிரபல செய்தி சேனலுக்குப் பேட்டி அளித்தார். தன் பள்ளி நாள்கள், பாலிவுட்டில் நிலவும் அரசியல், 'பத்மாவதி' திரைப்படம் எழுப்பிய சர்ச்சை என பல கேள்விகளுக்கு பதில் அளித்த ப்ரியங்கா, “நான் அமெரிக்காவில் பள்ளிப் படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, என் நிறத்தைச் சுட்டிக்காட்டி, ப்ரோனி (Brownie) எனக் கேலி செய்வார்கள். கறுப்பி என்று அழைப்பார்கள். அப்போது எனக்கு 15 வயதுதான். அந்த வயதில் நம்மிடம்தான் ஏதோ குறை இருக்கிறது என்று தோன்றியது. அது உண்மையில்லை. நீங்கள் உங்கள் பாதையில் தெளிவாக இருந்து வெற்றிபெற்றால், உலகம் உங்களை நிச்சயம் கவனிக்கும்” என்றார். 

அதே அமெரிக்காவில், ‘People Choice' என்ற விருதை இரண்டு முறை ப்ரியங்கா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலிவுட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பேசிய ப்ரியங்கா, “ஒருவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் பெறுவதை நானும் அனுபவப்பட்டிருக்கிறேன். ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் பெற்று, அதன் பிறகு கடைசி நேரத்தில், அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகரின் காதலியோ இயக்குநரின் காதலியோ திடீரென நடிகையாக ஒப்பந்தம் ஆகிவிடுவார். இதில் நானும் பலிகடா ஆகியிருக்கிறேன். நடிகர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை ஊடகம் எப்போதும் ஒரு பொருட்டாக நினைக்காது. ஆனால், ஒரு நடிகை இவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பதைத் தலைப்புச் செய்தியாக வெளியிடும். அது ஏன்” என்று கேள்வி எழுப்பினார். 

சமீபத்தில், ப்ரியங்கா சோப்ரா 5 நிமிடங்கள் மேடையில் நடனமாடுவதற்கு 5 கோடி கேட்டதை செய்தியாக்கியிருந்தது சில தேசிய ஊடகங்கள். 

'பத்மாவதி' திரைப்படம் பற்றிய கேள்விக்கு, “இந்தத் திரைப்படம் குறித்து எனக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். அதைப் பொதுவெளியில் கூறுவது சரியாக இருக்காது. இந்தக் கேள்வியை நீங்கள் ஓர் அரசியல்வாதியிடம் கேட்கலாம். நானும் உங்களைப்போல ஒரு சராசரி குடிமகள்தான்” என்று நாசுக்காகப் பதில் அளித்தார் ப்ரியங்கா. 

வெல்டன் ப்ரியங்கா!

அடுத்த கட்டுரைக்கு