Published:Updated:

'வீடு தர்றோம்னு பாறைக்குழிய காட்டுனாங்க' - திருச்சி தெருவோரவாசிகளின் துயரக் கதை!

'வீடு தர்றோம்னு பாறைக்குழிய காட்டுனாங்க' - திருச்சி தெருவோரவாசிகளின் துயரக் கதை!
'வீடு தர்றோம்னு பாறைக்குழிய காட்டுனாங்க' - திருச்சி தெருவோரவாசிகளின் துயரக் கதை!

'வீடு தர்றோம்னு பாறைக்குழிய காட்டுனாங்க' - திருச்சி தெருவோரவாசிகளின் துயரக் கதை!

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பரபரப்பான ஈ.பி. சாலை. அதன், 3-வது வார்டில் உள்ள சாலையோரத்தில் சில குடும்பங்கள் தங்கியிருப்பதை பார்க்க முடியும். அந்தப் பகுதிவாசிகளுக்கும், அந்த சாலையில் பயணிக்கும் பொது மக்களுக்கும் இங்கு வசிக்கும் முகங்களை நன்றாகத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் கடந்த பலவருடங்களாக இவர்களின் விலாசம் இந்த ஈ.பி. சாலைதான். வெயில், மழை, குளிர் என வருடத்தின் அனைத்துப் பருவங்களையும் இந்த மக்கள் இங்குதான் கழிக்கிறார்கள். இவர்களின் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு இந்த சாலையோரம் நன்கு பழகிப்போயிருக்கிறது. இந்த சாலை ஓரத்தில் மொத்தம் 26 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து கிட்டதட்ட 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இத்தனை வருடங்களாக ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவலகத்துக்கு அருகில் உள்ள சாலையில் இவர்கள் வசித்துவருகிறார்கள். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு இவர்களிடம் பேச்சு கொடுத்தோம்... 

75 வயதான முதியவர் பழனி நம்மை எதிர்கொண்டார். முதலில் சிறிது தயக்கம் காட்டிய பழனியின் கண்களில் ஆயிரம் யோசனைகள். பேசுவதா.. வேண்டாமா என இரண்டு மனநிலையில் இருந்தவரை சமாதானப்படுத்தி பேசவைத்தோம்..  "எங்க சொந்த ஊர் திருப்பஞ்செழி. பலவருஷமா இங்கயேதான் தங்கியிருக்கோம். மூங்கில் கூடை செய்து, அதவிற்றுதான் பொழப்பு நடத்திட்டு வர்றோம். ஒரு நாளைக்கு ஒருத்தரால மூணு கூடைங்க செய்ய முடியும். அதுல 200, 300 ரூபாய் கிடைக்கும். ஒரு சில நாள் எதுவுமே கிடைக்காமலே போயிடும். அது மட்டுமில்லாம இப்போ மூங்கில் கூடைகளை யாரும் அதிகமாக வாங்குறதில்ல. எல்லாம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாறியாச்சு.", என பழனி பேசிக்கொண்டு இருந்தபோதே முருகேசன் என்பவர் குறுக்கிட்டு, "கூடை செய்யும்போது கையில அறுத்துகிட்டா அவ்ளோதான். ரெண்டு நாளைக்கு எங்களால கூடை செய்ய முடியாது. ரெண்டு நாள் வியாபாரம் போச்சு. கூடை மட்டுமில்ல பொம்மைகள், ஃபினாயில் கூட விற்போம். போன வாரம் கூட அகல் விளக்கு வித்தோம். அதுக்குமுன்னால பிள்ளையார் வித்தோம். இப்படி சீசனுக்கு ஏத்தமாதிரி என்ன வாங்குவங்களோ அதையெல்லாம் விற்போம்", என்றார்.

மறுபடியும் பேச்சைத் தொடர்ந்த பழனி, "எங்களுக்கு எல்லாம் வெறுத்துப்போச்சுங்க. நிறைய பேர் வந்துருக்காங்க.. நிறைய போட்டோ பிடிப்பாங்க.. நிக்க வச்சு, உட்கார வச்சு, சாப்பிடுற மாதிரி  எல்லாம் எடுப்பாங்க. அப்புறம் ஒரு நடவடிக்கையும் இருக்காது. எவ்வளவோ மனு எழுதி கொடுத்துட்டோம். எல்லா வழியிலயும் காசுமட்டும்தான் செலவாயிட்டே இருக்கு. தேர்தல் நடக்குறப்போ வருவாங்க, 'உங்களுக்கு நிச்சயமா இடம் தர்றோம், வீடு தர்றோம். எங்களுக்கு ஓட்டு போடுங்க'ன்னு சொல்வாங்க. ஆனா, அதுக்குப் பிறகு ஒண்ணும் நடக்காது", என்றார் பழனி.

'வீடு' என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அதுவரை ஓரமாய் நின்றுகொண்டிருந்த வள்ளி கோபத்துடன் நம்மிடம் வந்து , "எல்லாருக்கும் வீடு இருக்கு வாங்கனு ஒருநாள் வந்து கூட்டிட்டுப் போனாங்க. நாங்களும் ஆசைப்பட்டு குழந்தைகளை எல்லாம் இழுத்துட்டு ஓடினோம். ஒரு இடத்தை காமிச்சாங்க. தாயனூர் பக்கத்துல பெரிய பாறைக்குழி அது. சும்மா நாங்களும் காட்டினோம்னு காட்டினாங்க. அங்கயிருந்து வந்துட்டோம். நாங்கதான் படிக்கல நம்ம புள்ளைங்களாச்சும் படிக்கணும்னுதான் இங்க பக்கத்துல இருக்க பள்ளிக்கூடம் அனுப்புறோம். எட்டு, ஒன்பதாவது வரைக்கும் படிக்கிறாங்க. பத்தாவது படிக்கணும்னா சாதிச் சான்றிதழ் கேக்குறாங்க. சாதி சான்றிதழுக்கு எழுதித் தாலுக்கா ஆபிஸ்ல கொடுத்தோம். கிராம நிர்வாக அதிகாரிங்க அதை கிழிச்சுப் போட்டுட்டாங்க. எங்களுக்கு 'மலைக்குறவர்'னு சாதிச் சான்றிதழ் வரணும். சான்றிதழ் இல்லாததாலேயே எங்க பிள்ளைங்க பாதியில படிப்பை நிறுத்துற கட்டாயத்துல இருக்காங்க. ஓட்டு போடறதுக்கு எங்களுக்கு ஐ.டி கொடுத்தவங்க, சாதிச் சான்றிதழ் கொடுக்க மாட்டேங்குறாங்க.

பொம்பள பிள்ளைங்கள ரோட்டு ஓரத்துல வச்சுட்டு, இங்க வாழறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா. ஒரு பாதுகாப்பும் கிடையாது. எல்லாரும் சொல்வாங்க வீடு கொடுத்தும் போகலைனு. வீடு இருந்தா நாங்க ஏன் இங்க இருக்கப் போறோம். எங்களுக்குத் தேவை எல்லாம் இருக்க ஒரு வீடு, எங்க பிள்ளைங்களுக்கு நல்ல படிப்பு, சாதிச் சான்றிதழும் முறையாக கிடைக்கணும்", என்று பேச்சை முடித்துவிட்டு தன் தினசரி  வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார் வள்ளி. வாக்குகளுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்களின் கவனம் இந்த தெருவோர மக்களின் மீது திரும்புமா. புறக்கணிக்கப்பட்ட இவர்களின் உரிமைகள் கிடைக்குமா!?

அடுத்த கட்டுரைக்கு