Published:Updated:

`கோமாவில் இருந்தவனின் உலகம் இன்று குழந்தைகளால் மலர்கிறது!' இனியன் #PhoenixPerson

`கோமாவில் இருந்தவனின் உலகம் இன்று குழந்தைகளால் மலர்கிறது!' இனியன் #PhoenixPerson
`கோமாவில் இருந்தவனின் உலகம் இன்று குழந்தைகளால் மலர்கிறது!' இனியன் #PhoenixPerson

`கோமாவில் இருந்தவனின் உலகம் இன்று குழந்தைகளால் மலர்கிறது!' இனியன் #PhoenixPerson

ஒரு விடுமுறை தினத்தில், சாலையில் அந்தப் பள்ளியைக் கடந்துசெல்வோரையும்கூட உள்ளிருந்து வரும் சந்தோஷக் கூச்சல் நிறுத்துகிறது. மேட்டுப்பாளையம் அருகில் உள்ள கிராமப் பள்ளி அது. உள்ளே எட்டிப்பார்த்தால், மைதானத்தில் இரண்டு, இரண்டு பேராகச் சேர்ந்து நிற்கிறார்கள் குழந்தைகள். அவர்கள் முகத்தில் ஒரு துளிக்கூட இடம் விடப்படாமல் முழுக்க சந்தோஷம் பூசப்பட்டிருந்தது. நடுவில் நிற்கிறார் இனியன்.

இனியன் 'சட்டி' என்றதும், சிறுவர்கள் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, நாற்காலியில் அமர்வதுபோலக் குனிகிறார்கள். 'பானை' என்றதும் கால்களை இன்னும் மடக்கி நிற்கிறார்கள். அவர் கொட்டாவி விட்டும், பாட்டுப் பாடுவதுபோலவும் நேரம் கடத்துகிறார். சிறுவர்கள் 'மாமா, மாமா' என்று கெஞ்சுகிறார்கள். அவர்கள் எதிர்பாராத நேரத்தில் இனியன் 'லொடக்' என்றதும் கைகளை இடுப்பிலிருந்து எடுக்காமல் அருகில் நிற்பவரை  இடிக்கிறார்கள். யார், யாரை முதலில் கீழே தள்ளி விடுகிறார்கள் என்பதுதான் விளையாட்டு. 'லொடக்' எனச் சொன்ன அடுத்த நொடியிலிருந்து உற்சாகம் பல மடங்காகி, மைதானமே ஆர்ப்பரிக்கிறது. அங்கிருந்த 200 குழந்தைகளோடு 201-வது குழந்தையாக விளையாடிக்கொண்டிருக்கிறார் இனியன். மொட்டைத் தலை, குறுந்தாடி, சிவப்பு ஃப்ரேம் கண்ணாடி, முகமெல்லாம் சிரிப்பு, அழகான தொப்பை, தொளதொள பேன்ட் என... குழந்தைகள் பார்த்தவுடனே விரும்பும் உருவம் இனியனுக்கு.

மறைந்துவரும் நமது மரபு விளையாட்டுகளை மீண்டும் குழந்தைகளிடையே விதைத்து வரும் இனியன், இதுவரை 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்று ஆயிரக்கணக்கான குழந்தைகளோடு விளையாடியிருக்கிறார். 'மொட்ட மாமா', 'ஏ.பி.சி.டி மாமா', 'டட்டு மாமா', 'கொள்ளுத் தாத்தா' என, இனியன் செல்லும் பள்ளிகளில் எல்லாம் அவருக்குப் பெயர் வைத்து மகிழ்கிறார்கள் குழந்தைகள். கொள்ளுத் தாத்தா என அழைப்பதை மனம் நிறைந்த பூரிப்போடு ஏற்றுக்கொள்கிறார் 32 வயதான இனியன். 

ஆறு வருடங்களுக்கு முன் படு பிஸியான சுயதொழில் முனைவோர் இனியன். அவர் அந்த முனையிலிருந்து குழந்தைகள் விளையாட்டுக் கலைஞர் என்ற இந்த முனைக்கு வந்த கதை வலி மிகுந்தது.

திருச்சியில் நூலகங்கள் மற்றும் பள்ளி மைதானங்களுக்கு இளவயது இனியனை நன்கு தெரியும். இனியனின் அப்பா வனத்துறை அலுவலர். வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அம்மா, ஓர் அக்கா. அரசுக் குடியிருப்புகள் தொடங்கி, பல வீடுகளில் குடியிருந்ததால் ஏகப்பட்ட நண்பர்கள் அவருக்கு. 80களில் பிறந்தோர்களைப் போல் கிரிக்கெட் மட்டுமல்ல, குடியிருப்புப் பகுதி பாட்டிகளோடு கதை பேசுவதும், அவர்களோடு பல்லாங்குழி, தாயம் போன்றவை விளையாடுவதும் வழக்கம். டிப்ளோமா முடித்து பி.இ படித்துக்கொண்டிருந்தபோது, தவிர்க்க முடியாத சில காரணங்களால் படிப்பைத் தொடர முடியவில்லை. விளையாட்டுத்தனங்களை விட்டொழித்து, சுயதொழில் தொடங்கி, வாழ்க்கைச் சென்றுகொண்டிருந்தபோது, அடி மேல் அடி தொடர் இடிகளாக இறங்கின அவர் வாழ்க்கையில்.

''ஒரு நாள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, கையில் ஏதோ கடித்துவிட்டது. மறுநாள் தாங்க முடியாத வலி ஏற்பட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். மருத்துவர்கள், 'விஷப்பூச்சி கடித்திருக்கலாம்' என்றனர். அதற்குள் என் இடக்கை முழுவதும் மரத்துவிட்டது. அறுவை சிகிச்சை நடந்தது. இடது கையில் தோள்பட்டையிலிருந்து இரண்டு அங்குலம் கீழேயும், உள்ளங்கையிலிருந்து மூன்று அங்குலம் மேலேயும் இதற்கு இடைப்பட்ட பகுதியை கிழித்து ஆபரேஷன் செய்தனர். விஷப் பூச்சி கடித்ததால், ரத்தம் உறைந்துபோயிருந்தது. நரம்புகள் சிதைந்து போயிருந்தன. அல்நர் எனும் நரம்பும், கை எலும்புகள் மட்டும் சேதமடையாமல் இருந்ததால் கை துண்டிக்கப்படாமல் தப்பித்தது.

கையில் ரத்தம் பாய, பாய விஷத்தின் தன்மையால் உறைந்துகொண்டிருந்தது. கையின் பெரும் பகுதி தசையை எடுக்க வேண்டியிருந்தது. எட்டு நாள்கள் கழிந்தது. கையின் நிலவரம் பரவாயில்லை எனும்போது, கடுமையான வயிற்று வலி வந்தது. வலி என்றால் ஒரு நொடிகூட பொறுத்துக்கொள்ள முடியாத வலி. உடனடியாக வயிற்றைக் கிழித்து ஆபரேஷன் நடந்தது. வயிற்றில் உள்ள ரத்தக் குழாய்கள் வெடித்து, ரத்தம் வெளியே வந்து அதில் விஷத் தன்மை இருக்க, ரத்தம் உறைந்துவிட்டது. அந்தப் பகுதிகளை நீக்கினர். ஆனால், திரும்பத் தைக்க முடியவில்லை. ஏனெனில் பெரும் பகுதி தசையை நீக்கியிருந்தனர். அதைத் தினமும் சுத்தம் செய்யவும் வேண்டியிருந்தது. இன்னும் இரண்டு நாள்கள் செல்ல, சுவாசக் கோளாறு ஏற்பட. அதைச் சோதித்த மருத்துவர்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றனர். இதற்கிடையில் நான் கோமாவுக்கே சென்றுவிட்டேன்'' என்று இனியன் சொல்லச் சொல்ல, பூச்சி கடி டூ கோமா ரிப்போர்ட், செரிக்க முடியாத அதிர்ச்சியாக இருந்தது.

''பெற்றோர் வேலூர் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். இரண்டு வாரங்கள் கோமா நிலையில் இருந்துவிட்டு மீண்டபோது, செயற்கை சுவாசம்தான் உயிர் தக்கவைத்தது. திருச்சியில் கையில் செய்த ஆபரேஷனை சோதித்து, தையல் போட்டனர். சில நாள்களுக்குப் பிறகு வயிற்றுப் பகுதியை நானே தினந்தோறும் சுத்தம் செய்யப் பழகிக்கொண்டேன். விஷப் பூச்சி கடிப்பதற்கு முன் என் எடை 90 கிலோ. வேலூரிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தபோது 46 கிலோ.

வீட்டுக்குச் சென்று ஓரிரு மாதங்களில் பிரச்னை வேறு வடிவில் வந்தது. ஆபரேஷன் செய்த கையை மடக்கியதும், தோள் பட்டையைத் தொட்டவாறே அப்படியே ஸ்ட்ரக் ஆகி விட்டது. மறுபடியும் திருப்பவோ, மடக்கவோ முடியவில்லை. மீண்டும் வேலூருக்கு என்னை அழைத்துச் சென்றனர். ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் இப்படி ஆகிவிடுகிறது என்று ஃபிஸியோதெரபி கொடுக்கச் சொன்னார்கள்". அங்குதான் கடித்த பூச்சி "விஷத்தன்மை கொண்ட கருஞ்சிலந்தியாக இருக்க 98% வாய்ப்பிருப்பதாகக் கூறினர் மருத்துவர்கள்" என்கிறார் இனியன். இந்த வாதைக் காலங்களில் இருந்து  மீட்டது சிறுவயத்திலிருந்து அறிமுகமாகியிருந்த புத்தக வாசிப்புதான் என்கிறார்.

''ஒவ்வொரு கல்லாக எடுத்து ஜாடிக்குள் போட்டு, நீரை மேலே கொண்டுவருவதுபோல, மெள்ள மெள்ள எனக்கான பணிகளைப் பார்த்துக்கொள்ளுமளவுக்குத் தயாரானேன். ஓடிக்கொண்டேயிருந்த என்னை கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் வீடு, மருத்துவமனை என்று வாழ்க்கை முடக்கிவிட்டிருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் ஒன்று என்னை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தது" என்கிறார். இனியனின் நண்பனுக்கு திருமணம். அதுவும் வெகு தூரத்தில் இருக்கும் ராஜபாளையத்தில். பெற்றோர் எவ்வளவு தடுத்தும் அந்த உடல் நிலையோடு திருமணத்துக்குப் புறப்படுகிறார்.

திருமணத்தை முடித்து, அங்கிருந்து குற்றாலம் செல்கிறார். அங்கிருந்து பொதிகை மலைக்குச் செல்கிறார். எதற்காக பொதிகை... தெரியாது. திட்டமிடாத பயணத்தின் சுவை அறியவதற்காக. பொதிகை மலையில், இவரின் கிரிக்கெட் தோழன் ராஜேந்திரன் வரவேற்றது பெரும் ஆச்சர்யம். 'அகத்தியருக்குப் படைத்த பொங்கல் இருக்கு. சாப்பிடு' என்றார். கடும்பசியில் இருந்த இனியனுக்கு அது சோளப்பொரிபோல கரைந்துவிட்டது. மீண்டும் வீடு, மாத்திரை, மருந்து வாசம்.

"சென்னைக்கு வேலை தேடிப் புறப்பட்டேன். ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. திருப்பூரில் ஒரு இலக்கிய நிகழ்வு. அதில் தலைமை எழுத்தாளர் பாமரன் என்றிருக்க அவரைச் சந்திக்கும் திட்டத்தோடு, சென்னையில் ரயிலுக்காகத் காத்திருந்தபோது, ஈரோடு செல்ல டிக்கெட் கிடைக்காமல் தவித்த ஒரு பாட்டியைப் பார்த்தேன். நான் மாற்றுத்திறனாளி என்பதால், என்னோடு ஒருவரை அழைத்துச் செல்லலாம் என்ற சலுகையின் கீழ் அவரை என்னுடன் அழைத்துச் சென்றேன். வழியில் இருவரும் எங்கள் கதைகளைப் பரிமாறிக்கொண்டோம். தனக்கு 13 வயதில் திருமணமான கதையைச் சொன்னார் பாட்டி. மணநாள் அன்று மாலை வேளையில் மணமக்கள் இருவரையும் எதிரெதிரே உட்கார வைத்து பல்லாங்குழி ஆடச் சொன்னார்களாம். எந்தக் குழியிலிருந்து ஆட்டத்தைத் தொடங்குகிறார், எவ்வளவு விரைவில் ஆட்டத்தை வெல்கிறார் அல்லது இழக்கிறார் என்பதை வைத்து, அந்தப் பெண் குடும்பத்தை எப்படி நடத்துவாள் என்பதைக் கணிப்பார்களாம். 'பல்லாங்குழி விளையாட்டு எப்படி ஒரு பெண்ணின் குணத்தை வெளிப்படுத்தும்?' என்ற என் கேள்விக்கு, பாட்டி உளவியல் நிபுணர்களை விடவும் அதிகத் தகவல்களைக் கொட்டினார். ஏற்கெனவே விளையாட்டுகள் பற்றியச் சிந்தனைகளில் மூழ்கிப் போய்யிருந்த எனக்குப் புதிய திசையைக் காட்டியது அது'' என்று சொல்லும் இனியனை, அந்தப் பாட்டியின் பல்லாங்குழிக் கதைதான் குழந்தைகள் உலகில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. 

''என் கதையைக் கேட்பவர்கள், 'நானாயிருந்தா செத்துருப்பேன்' என்பதை மாறாமல் சொல்வார்கள். அப்படியெனில் என்னைப் பிழைக்க வைத்திருப்பது எது என்ற கேள்விக்கு, எனது விளையாட்டுகள் தந்த உடல்திறனும், இளவயதில் கால்போன போக்கில் நான் மேற்கொண்ட திட்டமிடாத பயணங்கள் தந்த மனத்திறனும்தான் என்பதை உணர்ந்தேன். சிறு வயது விளையாட்டுகளை மீண்டும் ஆட ஆசை துளிர்த்தது. ஆனால், யாரோடு விளையாடுவது? குழந்தைகளைத் தேடிச் சென்றேன். முதல் நிகழ்ச்சியாக, என் நண்பர், குழந்தைகளுக்கான கதைச் சொல்லி குமார் ஷா ஏற்பாடு செய்த திருப்பாலைவனம் ஊர் குழந்தைகளோடு விளையாடினேன். ஆனால், குழந்தைகளுக்கும் எனக்குமான இடைவெளி அதிகம் இருப்பதாக உணர்ந்தேன். என்றாலும், அடுத்தடுத்த நான்கைந்து நிகழ்ச்சிகளில் குழந்தைகள் தங்களுக்கு மிக விருப்பமான இனிப்பை ஏற்பதைப் போல, என்னை மகிழ்ச்சியோடு தங்கள் உலகத்தில் இணைத்துக்கொண்டனர்'' என்கிறார் கனிந்த புன்னகையுடன். குழந்தைகள் அப்படி ஒருவரை ஏற்றுக்கொள்வது அதிசயம்தான். இதற்கு முன் என்றால், தமிழகச் சூழலில் நாடகக் கலைஞர் வேலு சரவணனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்து அநேகமாக இனியன்தான்.

பாரம்பர்ய விளையாட்டுகளைக் குழந்தைகளிடம் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் 'பல்லாங்குழி' எனும் அமைப்பை உருவாக்கியிருக்கிறார் இனியன். "விளையாட்டு என்பதை உடலை உறுதியாக்குவதற்கு மட்டுமானதாக நான் பார்க்க வில்லை. ஒரு விளையாட்டு தமிழகத்தின் எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரியாக விளையாடப்படுவதில்லை. சின்னஞ்சிறு கற்களைத் தூக்கிப் போட்டு விளையாடும் விளையாட்டு, கொங்கு பகுதியில் சுந்தரக் கல்லு என்றும் நாகப்பட்டினம் பகுதியில் சுட்டக் கல்லு என்றும் சொல்கிறார்கள். மருத நிலப் பகுதிகளில் மட்டும் நாடு பிடித்தல் விளையாட்டு ஆடப்படுகிறது. பிறகு, ஆணும் பெண்ணும் இணைந்து விளையாடும் விளையாட்டுகள் குறைந்து வருகின்றன; விளையாடும் பருவமும் குறைந்துவருகிறது. என்னைப் பொறுத்தவரை, விளையாட்டு என்பதே ஆண், பெண் பாகுபாடு இல்லாதததுதான். ரயிலில் என்னோடு வந்த பாட்டியே இதற்கு ஓர் உதாரணம். அவர் கணவனோடுதான் பல்லாங்குழி ஆடியிருக்கிறார். ஆனால், இப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்களும் பையன்களோடு விளையாட வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்." என்று கூறும் இனியன் விளையாட்டு பற்றிய பல செய்திகளைத் தொகுத்து வருகிறார். அவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். 

"ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் விளையாட்டுகள் மாறி வருகின்றன. அதுவும் உலகமயமாக்கலுக்குப் பிறகு, ஒருசில விளையாட்டுகள் என்பதை நோக்கிச் செல்லும் சூழல் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டது. விளையாடு என்றாலே கிரிக்கெட், புட்பால், வீடியோ கேம் என்ற மனநிலையை உருவாக்கி, மரபான விளையாட்டுகளை மறக்கடிக்கச் செய்துவிட்டனர். அப்படிச் செய்ததன் நோக்கம் வியாபாரம் என்பதைத் தாண்டி, இப்போது தேசப் பக்தியையும் சேர்த்துவிட்டார்கள். மரபு விளையாட்டுகளில் இதுபோன்ற விஷயங்கள் இல்லை. அது மனதையும் உடலையும் வளப்படுத்தவே உதவியது" என்று விளையாட்டின் மீது சுமத்தப்படும் அரசியல் பற்றிய வியப்பான விஷயங்களை அடுக்குகிறார் இனியன். 

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க, தான் பார்த்து வந்த வேலையிலிருந்தும் விலகிக்கொண்டார் இனியன். அவரின் ஆட்டம் பாட்டமான பொழுதுகள் தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்குக் கிடைத்து வருகிறது. குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம் எனும் சிறுவர் நூல்களைப் பற்றிய சிறுவர்களே விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியை சென்னை மற்றும் கோத்தகிரியில் நடத்தினார். பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள், நூலாசிரியர்கள், களச்செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை ஓரிடத்தில் இணைப்பதாகவும் அவை மாறின.

"சிகிச்சை எல்லாம் முடிந்து, ஊனமுற்றோர் என்று சான்றிதழ் வாங்கச் சென்ற அன்று அவ்வளவு வலியாக இருந்தது. அந்த வலிக்கு இப்போது குழந்தைகள் மருந்திட்டுக் கொண்டிருக்கிறார்கள். நெய்வேலியில் ஒரு நிகழ்ச்சி. 'என்னை சார், ஐயா என்றெல்லாம் கூப்பிடக் கூடாது. பெயர் சொல்லி, அல்லது உறவுப் பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்' என்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் 14 வயது சிறுமி ஒருத்தி அருகில் வந்தாள். 'உங்களை நான் அப்பா எனக் கூப்பிடலாமா?' என்று கேட்டாள். 'தாராளமாக' என்றேன். அவள் ஒருமுறை 'அப்பா' என்று கூப்பிட்டுவிட்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அவளின் அப்பா ஆறு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாராம். 'இந்த அன்பைப் பெறுமளவுக்கு நாம் ஏதோ செய்திருக்கிறோம், இது போதும் இந்த வாழ்வு அர்த்தப்பட' என்று நினைத்துக்கொண்டேன்'' என்றபோது அன்பின் நடுக்கம் அவர் குரலில்.

வலிகள் மூலம் வழியைக் கண்டறிந்த இந்த மனிதனின் அன்பைப் பெற்று அன்பைத் தந்து ஆசிர்வதிக்கிறார்கள் குழந்தைகள்! 

அடுத்த கட்டுரைக்கு