Published:Updated:

``ஒரு ரூபாய் வடை, கலந்த சாதம் 12 ரூபாய்'' - 74 வயதில் அசத்தும் தாத்தா பாட்டி கடை லட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``ஒரு ரூபாய் வடை, கலந்த சாதம் 12 ரூபாய்'' - 74 வயதில் அசத்தும் தாத்தா பாட்டி கடை லட்சுமி
``ஒரு ரூபாய் வடை, கலந்த சாதம் 12 ரூபாய்'' - 74 வயதில் அசத்தும் தாத்தா பாட்டி கடை லட்சுமி

``ஒரு ரூபாய் வடை, கலந்த சாதம் 12 ரூபாய்'' - 74 வயதில் அசத்தும் தாத்தா பாட்டி கடை லட்சுமி

லட்சுமி அம்மாள்... 

பெயருக்கு ஏற்ப நெற்றியில் குங்குமம், மஞ்சள், திருநீறு என லட்சுமிகரமாக காட்சி அளிக்கிறார். சேலத்தின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்று, லீ பஜார். மஞ்சள், மிளகாய், பருப்பு, எண்ணெய் எனப் பலவும் இங்கிருந்து வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மிகப்பெரிய வர்த்தகப் பகுதி. எனவே, மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள் அதிகம் இருப்பார்கள். நாள் முழுக்க உழைக்கும் அவர்களுக்கு லட்சுமி அம்மாள் கடையே இளைப்பாறவும் பசி ஆறவும் கூடும் இடம். காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை ஒரு ரூபாய்க்கு வடை, போண்டா, பஜ்ஜி என மாறாத புன்னகையுடன் பரபரப்பாக உழைக்கும் லட்சுமி அம்மாள் மலைக்கவைக்கிறார். அவர் வயதோ 74. உதவியாகத் தோள் கொடுத்து நிற்கும் கணவர் வரதராஜன் வயது 78. 

பெரிய பெரிய பிசினஸ் ஜாம்பவான்கள், ஜி.எஸ்.டி. பிரச்னையைச் சமாளித்து லாபம் பார்ப்பது எப்படி எனத் திட்டம் போட்டுக்கொண்டிருக்கும்போது, லட்சுமி அம்மாள் பலகாரக் கடை இயங்குவது அன்பினாலும் மனிதத்தினாலும். "மூட்டைத் தூக்குற பிள்ளைங்களுக்காவே இந்தக் கடை. லாபம் கிடக்குது; உழைப்புக்கான கூலி கிடைச்சா போதும்" என்கிறார் இந்த மனுஷி. 

லீ பஜார் பகுதியில், 'தாத்தா பாட்டி கடை' எனப் பாசத்துடன் அழைக்கப்படும் இந்த ஒரு ரூபாய் பலகாரக் கடை குறித்து மனம் திறக்கிறார் லட்சுமி அம்மாள். "என் அம்மா வரதம்மா, அந்தக் காலத்துல ஆரம்பிச்சது இந்தப் பலகாரக் கடை. ஓர் அனாவுக்கு பலகாரம் போட்டிருக்காங்க. நான் பள்ளிக்கூடத்துக்கே போனதில்லே. தவழ்ந்து வளர்ந்தது எல்லாம் இந்தப் பலகாரக் கடையில்தான். பலகாரம் போட்டு சம்பாதிச்ச காசுல எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சாங்க. அம்மாவுக்கு வயசானதும் நான் பலகாரம் போட ஆரம்பிச்சேன். 

மூட்டைத் தூக்குறவங்க, வெளியூரிலிருந்து வியாபாரம் பண்றவங்க, கிராமத்திலிருந்து பொருள் வாங்க வர்றவங்கன்னு இங்கே எல்லாரின் வயிறும் எப்பவும் பசியோடு இருக்கும். அந்தக் காலத்திலேயே நாலணாவுக்கு பலகாரம் வித்திருக்கோம். அப்போதிலிருந்தே இது 'தாத்தா பாட்டி கடை'தான். பலகாரத்துக்குத் தேவையான அத்தனைப் பொருளையும் மூட்டைக் கணக்கில் வாங்கிடுவோம். சுத்தமான எண்ணெய்யில் பலகாரம் போடறோம். நாலணா, ஐம்பது பைசா என இருந்து, இப்போ ஒரு ரூபாய்க்கு வந்திருக்கு'' என்கிறார் லட்சுமி அம்மாள். 

மெதுவடை, கார வடை, சொய்யான், இனிப்பு வடை, உருளைக்கிழங்கு போண்டா, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, கீரை போண்டா, வெங்காய பஜ்ஜி, முறுக்கு என எல்லாமே இங்கே சுடச் சுட கிடைக்கிறது. ''காலையில் ஆறு மணிக்கு எழுந்து தேவையான மாவை அரைச்சு எடுத்துட்டு வந்திருவேன். சாயந்திரம் வரைக்கும் கூட்டம் இருக்கும். காலையிலிருந்து வேலை முடியுற வரை நின்னுட்டேதான் இருப்பேன். மூட்டைத் தூக்கும் பசங்க, 'அம்மா'னுதான் கூப்பிடும். அவங்களுக்காக உழைக்கிறது சந்தோஷம். தினம் தினம் விலைவாசி ஏறினாலும் நான் பலகாரத்தின் விலையை ஏத்தலை. இதுவே எனக்கு மனசுக்கு நிறைவா இருக்கு. எனக்கு நாலு பொண்ணுங்க, ரெண்டு பசங்க. எல்லாரையும் பலகாரம் போட்டு சம்பாதிச்ச பணத்துலதான் கரை சேர்த்தேன். எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் வயசாயிட்டாலும், பிள்ளைகளை எதிர்பார்க்காமல் பொழைக்கிறோம். தினமும் பலகாரம் போடறதில் 300 ரூபாய் கிடைக்கும். அதுல கொஞ்சம் சேர்த்து வைப்போம். அவசர செலவுன்னா அதை எடுத்துப்போம். இதுவரை யார்கிட்டேயும் கை நீட்டி கடன் கேட்டதில்லை. ஞாயித்துக்கிழமை மட்டும் கடைக்கு லீவு. அடுத்த நாள் எப்படா விடியும். கிலம்பலாம்னு காத்திருப்பேன். ஏன்னா, என்னை எதிர்பார்த்து எத்தனை எத்தனை புள்ளைங்க பசியோடு காத்திருப்பாங்கனு தெரியுமே'' என்கிற லட்சுமி அம்மாள் முகத்தில் தாய்மை ரேகைகள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு