Published:Updated:

பச்சைமலை, புளியஞ்சோலை... திருச்சிக்குப் பக்கத்துல ஒரு மினி ஒகேனக்கல்! ஊர் சுத்தலாம் வாங்க... பாகம்-7

பச்சைமலை, புளியஞ்சோலை... திருச்சிக்குப் பக்கத்துல ஒரு மினி ஒகேனக்கல்! ஊர் சுத்தலாம் வாங்க... பாகம்-7
பச்சைமலை, புளியஞ்சோலை... திருச்சிக்குப் பக்கத்துல ஒரு மினி ஒகேனக்கல்! ஊர் சுத்தலாம் வாங்க... பாகம்-7

‘ஒரு ஹேப்பி நியூ இயர் பாட்டுப் பாடுங்க’ என்றால், கமலின் 'இளமை இதோ'  பாடலைத் தவிர வேறு எதுவும் சட்டென நினைவுக்கு வராது. அதுபோலத்தான் பச்சைமலையும். (Pachamalai) ‘பச்சமலைப் பூவு.. உச்சிமலைத் தேனு’ என்கிற இளையராஜா பாடலைத் தவிர பச்சைமலைக்கும் உங்களுக்கும் உண்டான தொடர்பு பெரிதாக இருந்திருக்காது. ஆனால், எனக்கும் பச்சைமலைக்கும் உண்டான தொடர்பு, அதையெல்லாம் தாண்டி இப்போது வேற லெவலுக்குப் போய்விட்டது. இதுவே நான் ஒரு பருவப் பெண்ணாக இருந்திருந்தால், ‘பச்சமலைப் பூவு’ பாடல் எனக்குப் பொருந்தியிருக்கும். வழக்கம்போல், இந்த வருடமும் எனக்கு கமலின் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலோடுதான் தொடங்கியது. ஆனால், வித்தியாசமாக! பச்சைமலை அடிவாரத்தில்!

இந்தப் புத்தாண்டுக்கு, திருச்சியிலிருந்து 85 கி.மீ. தொலைவில் இருக்கும் பச்சைமலைக்குப் போய்விட்டு... திரும்பி வருவதற்கு எனக்கு மனசே இல்லை. பச்சைமலையின் வசியம் அப்படி! ‘அப்படி யாரும் இங்க இல்லையே’ என்று பக்கத்துவீட்டுக்காரர்களைக்கூடத் தெரிந்து வைத்திருக்காத நகரத்து ஃப்ளாட்வாசிகளைப்போல, சில திருச்சிக்காரர்களுக்கே பச்சைமலையைப் பற்றிப் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை என்பது வருத்தமா? மகிழ்ச்சியா? பிரபலமாகாத லோ பட்ஜெட் படங்கள்போல், இன்னும் டூரிஸ்ட்களால் அமளி துமளிப்படாமல் இருப்பது பச்சைமலையின் இயற்கை அமைப்புக்கு ஒரு வகையில் ஆசுவாசம்தான். 

ஓகே! பச்சைமலைக்கு ஒரு ஜாலி ட்ரிப்!

வழக்கம்போல், புகைப்படமே கண்ணாக திருச்சியில் போட்டோகிராபர் காத்திருந்தார். ‘உங்களுக்கு கார் ஓட்டத் தெரியும்; ஆனால், கார் இல்லை’ என்பவர்களுக்கு ஒரு ஐடியா. ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டில் காரை வாடகைக்கு எடுத்தால், ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் முதல் 4,000 வரை செலவாகும். பிரபலமான இடங்களில் மட்டும்தான் இந்த ஆப்ஷன். இதுவே மற்ற ஸ்பாட்கள் என்றால், நீங்கள் செல்ஃப் டிரைவிங்குக்கு காரை எடுப்பது சரியானதாக இருக்கும். வாடகையும் கிட்டத்தட்ட அதேதான் வரும். ஆனால், 'Driving at Own Risk' என்பது மட்டும்தான் இதில் சிக்கல். திருச்சியில் ஒரு டிரைவிங் ஸ்கூலில், ஒரு டொயோட்டா காரை வாடகைக்கு எடுத்துவிட்டுக் கிளம்பினோம். 

ரன்பீர், ரன்வீர்போல் திருச்சியைப் பொறுத்தவரை எனக்கு அடிக்கடி குழப்பும் ஒரே விஷயம் - துறையூர், உறையூர். இரண்டுமே திருச்சிதான். வெவ்வேறு ரூட். ஆனால், இரண்டு பாதைகள் வழியாகவும் பச்சைமலை போகலாம். இந்த முறையும் துறையூரும் உறையூரும் குழப்பியடித்துவிட்டது. கவனமாக துறையூர் வழியைத் தேர்ந்தெடுத்துக் கிளம்பினேன். பச்சைமலைக்கு, பேளூர் ரிஸர்வ் ஃபாரெஸ்ட் வழியாகயும் ஒரு டெரர் ரூட் இருக்கிறது. இதற்கு அனுமதி வேண்டும்.

டூர் என்று வந்துவிட்டால், சிலர் வேட்டை நாய் ஆகிவிடுவார்கள். வேட்டை நாய் எப்போதுமே வேடிக்கை பார்க்க விரும்பாது. நானும் அந்த ரகம்தான். ஓர் இடத்துக்குப் போகும்போது, அதை மட்டும் ஃபோகஸ் பண்ணாமல் போகும் வழியிலும் கண் வையுங்கள். நினைத்ததைவிட பிரமாதமாக அமையலாம் அந்த ட்ரிப்! கிழவரை, கடவரி, பேரிஜம் - இவையெல்லாம் கொடைக்கானல் போகும்போது நிச்சயம் நீங்கள் மிஸ் செய்த ஸ்பாட்களாய் இருக்கலாம். அப்படி நான் கண்டடைந்த ஓர் இடம் - புளியஞ்சோலை. இந்தப் பச்சைமலை ட்ரிப், அடுத்த ஆண்டு வரை என் நினைவுக் குடுவையிலிருந்து 'எவாப்ரேட்' ஆகாமல் இருக்கலாம். அதற்கு புளியஞ்சோலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

‘பெரிய கொலம்பஸ் இவரு... அமெரிக்காவைக் கண்டுபிடிச்சிட்டாரு’ என்று இதற்கு திட்டி கமென்ட் போடுபவர்கள், நிச்சயம் திருச்சி சுற்றுவட்டாரக்காரர்களாகத்தான் இருப்பார்கள். துறையூர் தாண்டி ஆத்தூர் சாலையில், இடதுபக்கம் திரும்பி கிட்டத்தட்ட 25 கி.மீ பயணித்தீர்கள் என்றால், பச்சைப் பெருமாள்பட்டி எனும் ஊருக்கருகில் ஓர் அருமையான இடம் உண்டு. அது, புளியஞ்சோலை. காரை பார்க் செய்யும்வரை, ஏதோ புளியமரங்களாக இருக்கும் பார்க், கோயில் குளங்கள் அமைந்திருக்கும் சோலை என்றுதான் நினைத்தேன். மீன் வறுவல்கள், கால் நனைக்கத் தூண்டும் ஓடை, குளிப்பதற்குக் கிடங்குகள், தின்பண்டங்களை எப்போது வேண்டுமானாலும் பிடுங்கித் தின்னக் காத்திருக்கும் குரங்குக் கூட்டங்கள் என்று ஒகேனக்கலின் செல்லமான மினியேச்சர் போல அருமையாக இருந்தது இடம்.

காரை பார்க் செய்யும்போதே, ‘சலசல’வென ஓடை நீர் புகுந்து புறப்படும் சத்தம் கேட்டது. அற்புதமாக இருந்தது. இடதுபுறம் திரும்பினால், ஓடையின் மேலுள்ள குட்டிப் பாலத்தைத் தாண்டி அரசமரத்தடியில் பூச்சொறியப்பட்டபடி வீற்றிருக்கிறது குட்டியாக ஒரு கோயில். குருவாயி அம்மன் கோயில் என்றார்கள். நாத்திகனான எனக்கே ரொம்ப ஆர்வமாகிவிட்டது. கமலை ரசிக்கிற ரஜினி ரசிகன்போல் கோயில் அமைந்திருந்த இடத்தை நன்றாக ரசித்தேன். ‘‘என்ன கோயில்... என்ன விசேஷம்’’ என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன். இங்குள்ள ஆதிவிநாயகர் சிலைக்குப் பின்னால் இருக்கும் ஒரு புராணக் கதை ஒன்றைச் சொன்னார் பெண் பூசாரிப் பாட்டி ஒருவர்.

‘‘பிள்ளைப் பேறே இல்லாத சிவன் - பார்வதி தம்பதியினருக்கு நீண்ட நாள் கழித்துப் பிறந்த சிறுவன் - விநாயகர். ஒருமுறை கைலாயத்தில் குளிக்கச் சென்ற தன் தாய்க்குக் காவல் காத்த சிறுவனிடம் தகராறு ஏற்படுகிறது சிவனுக்கு. மகன் என்று தெரியாமல், விநாயகரின் கழுத்தை வாளால் சீவிவிடுகிறார் சிவன். பிள்ளைப் பாசத்தில் பார்வதி கதற, அப்போது ஆபத்பாந்தவனாக விஷ்ணுவும் பிரம்மனும் இதற்குப் பரிகாரம் சொல்கிறார்கள். காட்டுப் பக்கம் நாலா திசையில் செல்லும்போது, எந்த உயிரினம் வடக்குப் பக்கமாகத் தலை வைத்துப் படுத்திருக்கிறதோ, அந்த உயிரினத்தின் தலையை அப்படியே சிறுவன் உடம்பில் பொருத்தினால், உயிர் வந்து விடும். மகனைக் காப்பாற்ற சிவன் காடு காடாய் அலைகிறார். அப்போது வடக்குப் பக்கமாக யானை ஒன்று வீற்றிருக்க, யானையின் தலையைக் கொய்து சிறுவனின் உடம்பில் அலேக்காகப் பொருத்தி உயிர் வரச் செய்தார். அந்தச் சிறுவன்தான் பிள்ளையார். யானைத் தலை வருவதற்கு முன்னால், மனிதத் தலையுடன் இருந்த விநாயகர் நினைவாகத்தான் இந்த ஆதிவிநாயகர் சிலை’’ என்று ‘சுகிசிவம்’போல் கதாகாலட்சேபமே பண்ணிவிட்டார் பூசாரிப் பாட்டி. ‘பிள்ளையாருக்கு ஏன் தும்பிக்கை இருக்கு’ என்று ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் என் பக்கத்து வீட்டு வாண்டுகள் என்னை நோண்டியெடுப்பது இனி இருக்காது. இந்தக் கதையையே அவர்களுக்குச் சொல்லிவிடலாம். பூசாரிப் பாட்டிக்குக் காணிக்கை செலுத்திவிட்டு, அழகாக ஓடிய ஓடையில் கால் நனைத்துவிட்டுக் கிளம்பினேன்.

‘காடு இல்லை; ஆனா காடு மாதிரி’ என்றிருந்த காட்டுப் பாதை வழியே குட்டியாய் ஒரு மினி ட்ரெக்கிங். ஒரு கையில் மீன் வறுவல், ஒரு கையில் கேமரா என்று ஸ்நாக்ஸ் டைமில்கூட கேமராமேனின் தொழில்நேர்த்தி வியக்க வைத்தது. ஒகேனக்கலின் ஒண்ணுவிட்ட தம்பியைப் பார்ப்பதுபோலவே இருந்தது மொத்தப் புளியஞ்சோலையும். பரிசல் சவாரி மட்டும்தான் மிஸ்ஸிங். ஆனால், இங்கே அதற்கு வாய்ப்பில்லை. காரணம், அங்கங்கே பதுங்கியிருக்கும் பாறைகள். தண்ணீர் மிரட்டவில்லை. அவ்வளவாகக் கூட்டமே இல்லை. அம்மாக்கள், தங்கள் மகன்களையோ மகள்களையோ காலை நனைக்க வைத்து, ‘ஒண்ணும் இல்லடா.. இறங்கு... ஜாலியா இருக்கும்’ என்று வீரத்தாய்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். முழங்கால் அளவுதான் ஆழம்; ‘தைரியமா இறங்குங்க’ என்பதுபோல், பெருசுகள் சிறுசுகள் எல்லோரையும் அழைக்கிறது ஓடை. விஷுவல் டேஸ்ட்டில் நிறைய புகைப்படங்களை அள்ளித் தள்ளினார் கேமராமேன். 

புளியஞ்சோலைக்கு எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் வருகிறது என்று விசாரித்தேன். புளியஞ்சோலைக்குப் பின்புறம் கொல்லிமலை. அங்கிருக்கும் ஆகாய கங்கை அருவியிலிருந்து வழியும் நீர்தான் புளியஞ்சோலைக்குப் பயணிப்பதாகச் சொன்னார்கள். தண்ணீர் வரும் பாதையை அப்படியே ஃபாலோ செய்தால், கொல்லிமலைக்குச் சென்று விடலாம் என்றார்கள். நீச்சல் எக்ஸ்பெர்ட்டுகளுக்காக, கொஞ்ச தூரத்தில் அகழிபோல் இருந்த ஒரு ஏரியாவில், பாறைக்கு மேலிருந்து சிலர் ‘தலைகீழாத்தான் குதிக்கப் போறேன்’ என்று கவுண்டமணி போல் ‘டைவ்’ அடித்துக் குளித்துக் கொண்டிருந்தார்கள். ரொம்பவும் ஆழம் இல்லாமல், டைவ் அடித்துக் குளிக்க ஏற்ற இயற்கை அமைத்த நீச்சல் குளம் மாதிரி இருந்தது. சும்மா ஐந்து தடவைதாம் முங்கினேன். காலை டிஃபன் செமித்தே விட்டது. 

புளியஞ்சோலையில் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்பதுபோல், ஒரே ஒரு ஹோட்டல்தான் இங்கு வருபவர்களுக்குப் பசியாற்றுகிறது. பெயரிடப்படாத படத்துக்கு ஷூட்டிங் நடப்பதுபோல், பெயரே இல்லாத அந்த ஹோட்டலில் பரபரப்பாக நாட்டுக்கோழியை மஞ்சள் தடவி உறித்துக் கொண்டிருந்தார் ஓர் அக்கா. ‘‘நீங்களே செலெக்ட் பண்ணிக் கொடுத்துட்டுப் போங்க தம்பி. குளிச்சுட்டு வர்றதுக்குள்ள சூப், ரசம், குழம்பு, வறுவல் எல்லாம் ரெடி பண்ணிப்புடுறேன்!’’ என்று முன்பே சொல்லியிருந்தார். சொல்லும்போதே எச்சில் ஊறிவிட்டது. 

நான்வெஜ் பிரியர்களுக்கும், நான்-ஜிஎஸ்டி பிரியர்களுக்கும் இந்த ஹோட்டல், மாமியார் வீட்டு விருந்துபோல் பிரமாதமாக அமையலாம். இங்கு ஸ்பெஷல் என்னவென்றால்... நாட்டுக்கோழி, காடை, மீன் போன்ற பறப்பன, நடப்பன, ஊர்வனவற்றை உயிருள்ளபோதே நீங்கள் செலெக்ட் செய்துவிடலாம். நீங்கள் பசியாற வருவதற்குள் பறப்பனவெல்லாம் இறப்பனவாக மாறி உங்கள் இலையில் விழும்.

‘‘அண்ணே, இந்தக் கோழியை செலெக்ட் பண்ணுங்க... நமீதா மாதிரி நல்லா வெயிட்டா இருக்கு!’’ என்று விடாப்பிடியாக ஒரு நாட்டுக்கோழியை செலெக்ட் செய்தார் புகைப்பட நிபுணர். ஆனால், சாப்பிடும்போது ‘வத்தக் வத்தக்’ எனச் சவ்வாக இருந்தது. ‘நாட்டுக்கோழினு சொல்லிட்டு போந்தாங்கோழியைப் போட்டுட்டாய்ங்களோ?’ நான் முறைத்தேன். ‘‘நான் அப்பவே சொன்னேன்ல தம்பி.. எப்பவுமே எடை அதிகமா இருக்குனு குண்டான கோழியை செலெக்ட் பண்ணக் கூடாது. ஒல்லியான கோழிதான் டேஸ்ட்டா இருக்கும்’’ என்று போகிறபோக்கில் ஒரு டிப்ஸ் கொடுத்தார். அசைவப் பிரியர்கள் நோட் செய்க!

புளியஞ்சோலை தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லை. ஆனால், தங்கினால் இத்தனை ரம்மியமா என்று கிளம்பவே மனசிருக்காது. ‘அப்படியே பச்சைமலைக்கு டர்ன் அடிச்சுடலாம்’ என்று ப்ளான் பண்ணியிருந்த என்னை, புளியஞ்சோலையில் தங்கும்படி இயற்கை ஒரு விளையாட்டை விளையாடிவிட்டது.

காரில் வருபவர்கள் எப்போதுமே கார் சாவி விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ‘கீலெஸ் சிஸ்டம்’ என்றால், கார் ஓட்டும்போதுகூட சாவியை எப்போதும் செல்போன் மாதிரி உங்கள் பாக்கெட்டிலேயே வைத்திருங்கள். இதுதான் எப்போதுமே பாதுகாப்பு. நாங்கள் சென்றபோது, ஒரு குடும்பம் காரின் டிக்கியில் சாவியை மறந்து வைத்துப் பூட்டிவிட, குழந்தையுடன் அந்தக் கணவனும் மனைவியும் அல்லோல கல்லோலப்பட்டது மறக்கவே முடியவில்லை. இம்மாதிரி நேரங்களில் ஸ்பேர் சாவிதான் ஒரே தீர்வு. அதை உங்கள் பாக்கெட்டிலேயே எப்போதும் வைத்துக்கொள்ள மறக்காதீர்கள். மறுநாள் ஸ்பேர் சாவி கிடைத்த பிறகுதான் காரை எடுக்க முடிந்தது.

புளியஞ்சோலையில் ரூம்கள் அவ்வளவாகக் கிடையாது. 600 ரூபாய் வாடகை ரூம்களில், கூட்டுக்குடும்பத்தினர் அடித்துப் பிடித்துத் தூங்குவதுபோல், இரண்டு பேர் மட்டும் நெருக்கியடித்துத் தூங்கலாம். புளியஞ்சோலை அடர்ந்த காடு போல்தான் இருக்கிறது. ஆனால், காட்டு விலங்குகளால் தொந்தரவு இல்லை. தைரியமாக புளியஞ்சோலையில் செல்போன் டார்ச்சே இல்லாமல், பேய் மாதிரி உலாப் போனோம். இரவு நேரத்தில் சலசலக்கும் ஓடைச் சத்தம், பறவைகளின் சிம்பொனி இசை என்று காதுகளுக்குத் தேனைப் பாய்ச்சிவிட்டு, வெள்ளி நிலாவும் நட்சத்திரங்களும் விளக்காய் எரியும் வீடுபோல் கண்களுக்கும் விருந்தாய் இருந்தது புளியஞ்சோலை. இரவு நேரம் மட்டும் ஊட்டிபோல் செம குளிரடித்தது.

மறுநாள் அதிகாலை விறைக்கும் குளிரில் பச்சைமலைப் பயணம். நுங்கு வண்டி ஓட்டிய சிறுவர்கள், பழைய சினிமாக்களில் வருவதுபோல் பஞ்சாயத்து மேடைகளில் அரட்டையடித்துக் கொண்டிருந்த பெரியவர்கள், புளியங்காய் அடித்துத் துவையல் செய்துகொண்டிருந்த இளசுகள், மாட்டுச் சாணத்தில் ஆர்ட் வரைந்துகொண்டிருந்த ஆயாக்கள், ‘அம்மா, கோழி முட்டை போட்டுருக்குமா’ என்று நாட்டுக்கோழி முட்டையுடன் முகம் மலர்ந்த சிறுமி, ‘கூலிக்குப் போயிட்டு வந்துடுறேன்த்தா... வூட்டையும் மாட்டையும் பார்த்துக்கோ’ என்று திறந்த மேனியுடன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சிக்ஸ்பேக் குடும்பஸ்தர்கள்... தோட்டத்தோடு கூடிய வீடு அமைந்தால் வரம்... ஆனால், தோட்டத்தையே வீடாக்கிக் குடியிருந்த சில வெள்ளந்தி மக்கள்... இப்படியொரு கிராமத்துப் பயணத்துக்காக எத்தனை நாள் ஏங்கியிருந்தேன்! பழைய பாரதிராஜா படம் பார்ப்பதுபோலவே இருந்தது. போட்டோகிராஃபர் கேமராவை ஆஃப் பண்ணவே இல்லை. 

பச்சைமலை முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிறது. மரவள்ளிக் கிழங்கு, அரிசி, அன்னாசி, பப்பாளி, மூலிகை போன்ற இயற்கைப் பொருள்களின் அமோக விளைச்சலில் செழிப்பாக இருக்கிறது ஊர். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், உணவைச் சம்பாதிக்கக்கூடிய ஒரே வழி விவசாயம் மட்டும்தான்! அதை முழுமையாக நம்பியிருக்கிறது பச்சைமலை. ‘‘வாவ்... செமயா இருக்குல்ல! இங்க ஒரு ரெண்டு ஏக்கர் வாங்கிப் போட்டு செட்டில் ஆகிட வேண்டியதுதான்’ என்று  கற்பனைக் குதிரையை விரட்டும்  ரியல் எஸ்டேட் புள்ளிகளுக்கு இங்கே இடமில்லை. காரணம் - இங்கு வெளியாட்கள் பெயரில் யாரும் பட்டா போட முடியாது. முழுக்க முழுக்க இங்குள்ள பழங்குடியினருக்கு மட்டும்தான் பச்சைமலை சொந்தம். சுற்று வட்டாரக் கிராமங்களுக்கெல்லாம் சோறு போடும் பூமியை, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கூறு போட அனுமதிக்காததற்காக தமிழ்நாடு டூரிஸத்துக்கு ஒரு லைக்!

‘‘பச்சை மலையை விரைவில் எக்கோ டூரிஸமாக ஆக்குவேன்’’ என்று எப்போதோ ஜெயலலிதா சொல்லியிருந்தார். ஜெயலலிதா இப்போது இல்லை; ஆனால், மலையைச் சுற்றிலும் ஆங்காங்கே மர வீடுகள் கட்டும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ‘‘விரைவில் ஊட்டி - கொடைக்கானல்போல் ஃபாரஸ்ட் சஃபாரி, ஹோட்டல்னு பெரிய சுற்றுலாத் தலமாக்க எல்லா வேலையும் நடந்துக்கிட்டிருக்கு!’’ என்றனர் வனத்துறை அதிகாரிகள் சிலர். இப்போதைக்குப் பச்சைமலையில் என்ஜாய் பண்ண இரண்டே இரண்டு விஷயங்கள் - அருவிக் குளியல், ட்ரெக்கிங்.

செங்காட்டுப்பட்டி என்றோர் இடம் வந்தது. 2006-ல் இந்த இடத்தில்தான் திருச்சி, மதுரையைக் கதி கலங்கவைத்த கொள்ளையர்கள் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி, தமிழகக் காவல்துறைக்குத் தண்ணி காட்டி வந்தார்களாம். சில பல கிராமங்கள் தாண்டி ‘இதுக்கு மேல் கார் போகாது’ எனும்படியான ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு, நடக்க ஆரம்பித்தோம். 360 டிகிரியில் கழுத்து முறியும் அளவுக்குச் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். இயற்கை அத்தனை அழகும் கொண்டு குடியேறியிருந்தது பச்சைமலையில்.

இங்கே தங்கும் இடங்கள் கிடையாது; உணவகங்கள் கிடையாது; கடைகள் கிடையாது; முறையான சாலை வசதி கிடையாது; ஆள் நடமாட்டம் கிடையாது. இவ்வளவு ஏன்... இத்தனை பெரிய மலையில் விலங்குகள்கூட அவ்வளவாகக் கிடையாது என்றார்கள். கடவுள் இல்லா ஆலயமா? பெண்கள் இல்லா வீடா? விலங்குகள் இல்லா காடா? பரிதாபமாக இருந்தது. ‘‘ஆனா, கரடிங்க கால்தடம் பார்த்திருக்கேன்ங்க!’’ என்று பீதி கிளப்பினார் ஒரு கிராமத்துவாசி. கூடவே மலைப்பாம்புகள் உண்டு என்றும் கிலி கிளப்பினார்கள். நிஜம்தான்... காரில் போகும்போது ‘பாதையா பாம்பா’ என்று சந்தேகம் வரும் அளவுக்கு வளைந்து நெளிந்து சென்ற ஒரு மலைப்பாம்பைப் பார்த்தோம். 

காரை நிறுத்திவிட்டு ஒரு கி.மீ ட்ரெக்கிங். மங்களம் அருவி என்று பழைய டூரிங் கொட்டகைபோல் போர்டு இருந்தது. ‘‘ஃபால்ஸ் இருக்குன்னாங்களே...’’ என்று விசாரித்தேன். ‘‘உள்ளதான் போங்க...’’ என்று 20 ரூபாய் கட்டணம் வாங்கிவிட்டு உள்ளே விட்டார்கள். ஆகாய கங்கை அருவிக்குப் போவதுபோல் சில பல படிகள் இறங்கி வலதுபுறம் திரும்பினால், 'தானுண்டு தன் வேலையுண்டு' என்று தனியாக பச்சைமலை அருவி சலசலத்துக் கொண்டிருந்தது. ‘கச கச’ என ஆள் அரவம் இல்லை. சின்ன அருவி பெரிதாய்க் கூச்சலிட்டதுபோல் கேட்டது. அதிரப்பள்ளி, குற்றாலம் போன்ற அருவிகள், பெரிய ‘சொல்வனம்’ கவிதைகள் என்றால், பச்சைமலை அருவி சிக்கென்ற ஹைக்கூ. ‘அப்படி என்னைப் பற்றி என்ன எழுதிவிடுவீர்கள் என்னைவிட அழகான ஹைக்கூவை’ என்பதுபோல், சின்னக் கவிதையாக கவிஞர்களுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தது அருவி.

புகைப்படத்தைப் பார்த்தால், ‘ஹ்ஹே... இவ்வளவுதானா அருவி’ என்று நினைக்கத் தோன்றும். குறைந்த உயரத்தில் இருந்துதான் விழுகிறது. ஆனால் குற்றாலம், மணிமுத்தாறு போன்ற அருவிகளுக்கு இணையாக தலையில் ‘ணங் ணங்’கென்று ஓங்கி ஆசீர்வதிக்கிறது மங்களம் அருவி. ‘அருவித் தண்ணியில அடிச்சுட்டுப் போயிடுவோமோ’ என்கிற பயம் இங்கே இல்லை என்பது பெரிய ப்ளஸ். ‘இன்னும் ஏண்டா நின்னுக்கிட்டிருக்க கைப்புள்ள’ என்று எனக்குள் இருந்த ரசிகனை ஓரம் கட்டிவிட்டு, களத்தில் இறங்கினேன். சின்ன வயதில் பண்டிகைக் காலங்களில் அம்மா தலைக்குக் குளிப்பாட்டிவிட்ட ஞாபகம் வந்தது. 

அருவி வழிந்த இடத்தை மேலிருந்து கீழே பார்த்தேன். கண்ணுக்கெதிரே குட்டி வானவில் வட்டமாய் நெளிந்தது. ‘அபோகலிப்டோ’ படத்தில் வருவதுபோல், பெரிய பள்ளத்தாக்காக இருந்தது. ‘‘திஸ் ஈஸ் மை ஃபாரஸ்ட்..’’ என்று கீழே குதித்துவிட்டு ஓங்கிக் கத்த வேண்டும் போல் இருந்தது. அப்படிப்பட்ட சிலர் உண்மையாகவே இருந்தார்கள். விடுமுறை நாள் என்பதால், ‘அபோகலிப்டோ’ ஹீரோபோலவே டிரெஸ் கோடில் இருந்த சில பள்ளிச் சிறுவர்கள், அருவியை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பாறைகளை அடுப்பாக்கி, விறகுகளால் நெருப்பு மூட்டி, விரல்களைக் கரண்டியாக்கி, ஈர டவுசரோடு சிக்கன் குழம்போ ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார்கள். ‘‘30 கி.மீ-க்கு அந்தால இருந்து வர்றோம்ணே... பாக்கெட் காசு சேர்த்து வெச்சு வாரா வாரம் இங்கேதான் குளியல், சாப்பாடு எல்லாம். இது எங்க காடுண்ணே! ஆமா... இந்த ஆண்ட்ராய்டு, கேண்டிக்ரஷ், டெம்பிள் ரன்றாவளே.. இதெல்லாம் என்னண்ணே?’’ என்று இயற்கையாக விழுந்த சிக்ஸ்பேக்கைத் தடவியபடி ‘பொடேரென’ அருவிக்குள் டைவ் அடித்தான் ஒரு வாண்டு. 

தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்றால், தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டதோ என்னவோ - மங்களம் அருவி தனித்துவமான அழகோடு தனியாக இருக்கிறது. ‘ஆசம்’ என்று வியக்க வைக்கும் பச்சைமலை, எக்கோடூரிஸம் ஆன பிறகு நாசம் ஆகாமல் இருக்க எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திப்போம்!

மற்ற பாகங்கள்