Published:Updated:

குட்டிகளைக் கைவிட்ட தாய் சிங்கம்... அரவணைத்த மருத்துவர்-ஒரு நிஜ தாயுமானவனின் கதை!

குட்டிகளைக் கைவிட்ட தாய் சிங்கம்... அரவணைத்த மருத்துவர்-ஒரு நிஜ தாயுமானவனின் கதை!
குட்டிகளைக் கைவிட்ட தாய் சிங்கம்... அரவணைத்த மருத்துவர்-ஒரு நிஜ தாயுமானவனின் கதை!

அந்த வெப்பம் மொத்த உடலையும் வறட்சியில் தள்ளும் அளவுக்கு இருந்தது. அந்தப் பாலைவன பாதையைக் கடந்து, அந்த வறட்டுப் பாறைகள் நிறைந்த மலையில் ஏறத் தொடங்கும்போது மாலை நெருங்கிவிட்டது. ஆனால், வெயில் குறையவில்லை. அந்த மலையின் உச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரம் அத்தனை அழகாகத் தெரிந்தது.

"மாச்சியா உயிரியல் பூங்கா" (Machia Biological Park).

உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்கத் தயாராக இருந்தார் அந்த மனிதர். நல்ல உயரம். முதலில் அந்த உயிரியல் பூங்காவின் சிறப்புகள் விளக்கப்பட்டன. 

பல ஆண்டுகளாக ஜோத்பூர் நகரில் இயங்கி வந்த உயிரியல் பூங்காவை 2016-ம் ஆண்டு விரிவுபடுத்தி இந்த மலையின் மீது அமைத்தார்கள். இது ஒரு செடி, கொடி கூட இல்லாத வறட்டு பாறைகளைக் கொண்ட ஒரு பாலைவன மலை. ஆனால், இந்த நிலையிலேயே மிருகங்களை கொண்டு வந்தால், அவை நிச்சயம் உயிர் பிழைப்பது மிகக் கடினம். எனவே, அந்த ஊழியர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

அந்தக் கடினமான பாறைகளைக் குண்டுவைத்து தகர்த்தார்கள். இருந்தும் அங்கு பெரிய மண் வளம் இல்லை. உடைக்கப்பட்ட பாறைகளின் நடுவே விதைகளைத் தூவி மரங்களை வளர்க்கத் தொடங்கினார். மலை முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மரங்களை நட்டனர். மரங்கள் வளரத் தொடங்கின. கொஞ்சம், கொஞ்சமாக மிருகங்களை இடம் மாற்றினர். அந்தப் பாலைவன வெப்பத்திலிருந்து அந்த மிருகங்களை, அந்த மரங்கள் காப்பாற்றின. 

இந்தக் கதைகளைத் தாண்டி ஒரு ஆச்சர்யமான கதை இந்தப் பூங்காவிலிருக்கிறது. அது ஒரு சிங்கக்குட்டிக்கும், ஒரு மருத்துவருக்குமான பேரன்பு உறவு. "தாயுமானவன்" கதை அது.

அந்த உயரமான மனிதர் அங்கிருந்த பேட்டரி காரில் எங்களை அழைத்துச் சென்றார். 

"ஹாய்...நான் ஷ்ரவன் சிங் ரத்தோர். இந்தப் பூங்காவின் விலங்குகள் நல மருத்துவர். " எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

ஒவ்வொரு கூண்டுகளிலிருந்த விலங்குகள் குறித்த தகவல்களைச் சொல்லிக்கொண்டே வந்தவர் ஒரு திருப்பத்தில் இருந்த அந்தப் பெரிய கூண்டின் அருகே நிறுத்திவிட்டு அவசர அவசரமாக இறங்கிப் போனார்...

"சார்... சலீம் கூண்ட திறக்கவே விட மாட்டேங்குறான் சார். சாப்பாடு போடணும் அவனுக்கு."

"டேய்...சலீம்..." என்று தன் உயரமான அந்த உருவத்துக்கு ஏற்ற கம்பீரமான குரலில் அவனை அழைத்தார்.

"உர்...உர்..." என்று அங்கு மரத்தின் மீது உட்கார்ந்தபடி உறுமிக் கொண்டிருந்த அந்த சிறுத்தை, ஷ்ரன் சிங்கைப் பார்த்ததும் சற்று அமைதியானது.

"சலீம்..." என்று மறு முறை அவர் அதட்டவும், மரத்திலிருந்து கீழே குதித்து அவரை நோக்கி ஓடி வந்தது. சுற்றியிருந்த அனைவரையும் விலகிப் போகச் சொல்லிவிட்டு, அந்தச் சிறுத்தையோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அது சற்று சாந்தமானதாகத் தெரிந்தது. பின்னர், அந்த ஊழியர் கொண்டுவந்திருந்த கறித் துண்டுகளை அதற்கு கொடுத்துவிட்டு, மீண்டும் அந்த பேட்டரி காரை இயக்கத் தொடங்கினார்.
வெயில் கொஞ்சம், கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அந்த மாலை இளவெயில் நேரம் அத்தனை ரம்மியமாக இருந்தது. ஒவ்வொரு வளைவிலும் வெயில் திசை மாறி, திசை மாறி தெரிய அதை ஓட்டிக் கொண்டிருந்த ஷ்ரவன் சிங்கின் முகமும் இருட்டு, வெளிச்சம் என மாறி, மாறி தெரிந்தது. 

"இங்க ஒரு முக்கியமான நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவர் கொஞ்சம் தள்ளி தனியாக வைக்கப்பட்டிருக்காரு..."

"ஏன்? யாரு அவரு?"

"என் நண்பன்...என் குழந்தைன்னு கூட சொல்லலாம். ஒரு வயசாகுது அவனுக்கு. அழகான சிங்கக் குட்டி அவன். அவனுடைய அம்மா பேரு ஆர்த்தி. மூன்று குட்டிகளை ஈன்றாள் ஆர்த்தி. ஏனோ, சில காரணங்களால் ஆர்த்தியால் சரிவர பால் சுரக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாம, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதிலும் அவள் பெரிய சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அவளுக்கு ஏதோ உடல்நலக் கோளாறு, கூடவே ஏதோ மன அழுத்தமும் இருந்திருக்கலாம். மூன்று குட்டிகளில் இரண்டு குட்டிகள், பிறந்து சில நாள்களிலேயே இறந்துவிட்டன. சரி...மிச்சமிருக்கும் ஒன்றையாவது காப்பாற்றலாம் என்று அந்தக் குட்டியைத் தாயிடமிருந்து பிரித்தோம்."

அவர் அதை சொல்லிக்கொண்டே அந்த பேட்டரி காரை, சிமென்ட் சாலையிலிருந்து அந்த மண் சாலைக்குள் திருப்பினார். அந்தப் பாதை சற்று மேடாக இருந்தது. பேட்டரி காரின் சக்கரங்கள் ரொம்பவும் சிறியது என்பதால், அந்த மண் பாதையில் வண்டி தடதடத்துக்கொண்டே சென்றது.

"சிங்கங்களைப் பொறுத்தவரையில் தாய்மை, வளர்ப்பு (Parenting) ரொம்ப முக்கியம். தாயிடமிருந்து பிரித்த இவனுக்கு முதலில் பால் கொடுக்க வேண்டும். மாட்டுப் பாலையோ, ஆட்டுப் பாலையோ அவனுக்குக் கொடுக்க முடியாது. இதற்கான பிரத்யேக பால் பவுடர் அமெரிக்காவில் கிடைக்கிறது. என் நண்பர் ஒருத்தர் மூலமாக, அந்தப் பால் பவுடரை வரவழைத்தேன். ஒரு நாளைக்கு 6 முறைகளேனும் அதற்குப் பால் புகட்ட வேண்டும். அதுவும் குழந்தை மாதிரிதான்...சமயங்களில் அடம்பிடிக்கும். அரவணைப்பைக் கேட்கும். அன்புக்கு ஏங்கும். அழும். இவனும் அப்படித்தான் அன்புக்காக அதிகம் ஏங்குவான்..." என்றபடி அங்கிருந்த மரத்தின் அடியில் அந்த பேட்டரி காரை நிறுத்தினார்.

மண் பாதை ஆதலால், எங்கும் புழுதி பரவியிருந்தது. வண்டியிலிருந்து அந்த நீல நிற வாட்டர் பாட்டிலை எடுத்து நீட்டினார்.

"எங்கள் உடலுக்கு இதெல்லாம் பழகிவிட்டது. ஆனால், நீங்கள் எல்லாம் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால், டிஹைட்ரேஷன் அதிகமாகிவிடும்." 

"முதல் மாதம் முழுக்க அவனுக்குப் பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். ரொம்பவே தவித்துப் போய்விட்டான். அவனை அரவணைத்து...கொஞ்சி, கொஞ்சிதான் பால் கொடுக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல், அவனுக்கு இதயத் துடிப்பு சத்தம் கேட்டால் தான் சரியான தூக்கம் வரும். அதற்காக, இரவுகளில் அவன் தூங்கும்போது என் மார்பின் மீது அவனைப் படுக்கவைத்தபடி, தூங்க வைப்பேன்." கிட்டத்தட்ட அந்தக் கூண்டை நெருங்கிவிட்டோம்.

"முதல் மாதம் முழுக்க பால். இரண்டாவது மாதம் பாலும், முட்டையின் மஞ்சள் கருவும். இரண்டு மாதங்கள் கழித்து சிக்கன் சூப். பிறகு, கொஞ்சம் வேகவைத்த கறி. இப்போது அவனுக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு நாளைக்கு 3 கிலோ கறி. இரண்டு வேளையாக போடுகிறோம்..." என்று சொன்னவர் அந்தக் கூண்டின் அருகே சென்று...

"கைலாஷ்...ஹேய்...கைலாஷ்" என்று குரல் கொடுத்து முடித்த அந்த நொடி, தெறித்து ஓடி வந்து அந்த வேலியின் மீது கால்களை வைத்து அவரைக் கொஞ்சத் தொடங்கியது. கூண்டின் வழி தன் கையை அவர் நீட்ட, அதை தன் நாவால் நக்கிக் கொடுத்தது. இவரும் அதன் பிடரியை வருடிக் கொடுத்தார். 

"என்னடா கைலாஷ்... எப்படி இருக்க? நல்லா சாப்பிடுறியா? என்ன ஒரே சேட்டை பண்றியாமே?" என்றெல்லாம் அத்தனை அழகாக அதைக் கொஞ்சிக் கொண்டிருந்தார். 

கைலாஷும் அவரை விடவே இல்லை. நீண்ட நேரம் அவர்கள் இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. ஷ்ரவன் பார்வையிலிருந்து மறையும் வரை அந்த தடுப்பு வேலியின் ஓரம் நின்றுகொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் கைலாஷ். 

"இப்போதெல்லாம் நீங்கள் கைலாஷை மிஸ் செய்வதில்லையா சார்?" என்று அவரிடம் கேட்டேன். நீண்ட நேரம் கழித்துப் பேசினார்.
"நான் ஒரு டாக்டர். ஒரு டாக்டருக்கும், நோயாளிக்குமான உறவு தான் எனக்கும் அவனுக்கும்." என்று சொன்னார். பின்னர், அந்த அமைதியை உடைத்து மீண்டும் தொடர்ந்தார்.

"ஆமாம்... நான் அவனை மிஸ் செய்கிறேன்தான். அவனுக்கும் என் மீது அன்பு அதிகம். நான் கூடவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான். எனக்கும் இவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், பெரும்பாலும் இவனை வந்து பார்ப்பதைத் தவிர்ப்பேன். கஷ்டமாகத்தான் இருக்கும் சமயங்களில்... ஆனால், இது இப்படித்தான். இயற்கையின் அமைப்பு அப்படித்தான். அவன் சிங்கம். நான் மனிதன். " என்று சொன்னவர் எந்த பதிலுக்காகவும் காத்திராமல் சின்ன புன்னகையோடு...

"கிளம்பலாம்..." என்று சொன்னார். அந்த மண் சாலையில் இப்போது விளக்குகளை எரியவிட்டபடி அந்த பேட்டரி கார் தடதடக்கத் தொடங்கியது.