Published:Updated:

உலகிலேயே கைகளில்லாத ஒரே சமையல் கலைஞர்! - நம்பிக்கைக் கதை #MotivationStory

உலகிலேயே கைகளில்லாத ஒரே சமையல் கலைஞர்! - நம்பிக்கைக் கதை #MotivationStory
உலகிலேயே கைகளில்லாத ஒரே சமையல் கலைஞர்! - நம்பிக்கைக் கதை #MotivationStory

ல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கைதான் நம் இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றுகூட நடக்காது’ என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஹெலன் கெல்லர். இந்த நம்பிக்கை அவருக்கு இருந்ததால்தான் பார்வையில்லாமல், காதுகேட்காத நிலையிலிருந்த அவரால் படித்துப் பட்டம் பெற முடிந்தது; பல சாதனைகளைப் புரிந்து, சரித்திரத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்க முடிந்தது. `எப்படிப்பட்டச் சூழலிலும் நான் வாழ வேண்டும்; வாழ்வேன்’ என்று நினைப்பதேகூட நேர்மறைச் சிந்தனை, நம்பிக்கைதான். இந்த உறுதியான எண்ணம் எப்பேர்ப்பட்ட இன்னல்கள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிவைத் தரும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையால் ஒரு பேராபத்திலிருந்து உயிர்பிழைத்து, சாதனைபுரிந்த ஒரு பெண்ணின் நிஜக் கதை இது.

செப்டம்பர் 25, 2000-ம் ஆண்டு. மாரிசெல் அபாடன் (Maricel Apatan) என்ற அந்த 11 வயது பெண் பிலிப்பைன்ஸில் இருக்கும் ஸாம்போவாங்கா (Zamboanga) என்ற நகரத்தைச் சேர்ந்தவர். அன்றைக்கு அவரும் அவருடைய மாமாவும் தண்ணீர் எடுத்துவருவதற்காகக் கிளம்பிப் போனார்கள். வழியில் நான்கு பேர் அவர்களை வழிமறித்தார்கள். அவர்களின் கைகளில் நீளமான கத்திகளிருந்தன. அவர்களில் ஒருவன், மாரிசெல்லின் மாமாவை மண்டியிட்டுக் கீழே அமரச் சொன்னான். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அவர் கழுத்தில் வெட்டு விழுந்தது. இவ்வளவு நேரம் தன்னோடு பேசிக்கொண்டு வந்த மாமா ஒரு கணத்துக்குள் இறந்துபோனதை நம்ப முடியாமல் பார்த்தார் மாரிசெல்.

அவர்களும் அந்நியர்கள் அல்ல. அவர் வீட்டுப் பக்கத்தில் வசிப்பவர்கள். சிறிய முன்விரோதம்... அவ்வளவுதான். நிலைமை மோசமாக இருந்ததால், ஓடித் தப்பிக்கப் பார்த்தார் மாரிசெல். அவர்கள் விரட்டிப்பிடித்தார்கள். ``ஐயோ... என்னை விட்டுடுங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்... கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்...’’ இதைக் கேட்டாலும் அவர்கள் அந்தப் பெண்ணை விடுவதற்குத் தயாராக இல்லை. அவர்களில் ஒருவன் மாரிசெல்லின் கழுத்தில் வெட்டினான். கீழே விழுந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழக்க ஆரம்பித்தார். ஆனால், உள்ளுக்குள் ஒரு குரல் அழுத்தமாக ஒலித்துக்கொண்டே இருந்தது... `நான் சாகக் கூடாது... நான் சாகக் கூடாது...’

லேசாக நினைவு வந்தபோது, அவரைச் சுற்றி அந்த நான்கு பேரின் கால்களும் தெரிந்தன. மாரிசெல் இறந்ததைப்போல பேச்சு மூச்சில்லாமல் அப்படியே கிடந்தார். சிறிது நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், வீட்டை நோக்கி ஓடினார். `கடவுளே... நான் எப்படியாவது பிழைச்சிடணும்... பிழைச்சுப்பேன்’ எனத் திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லியபடி ஓடினார். சிறிது தூரத்துக்கு மேல் ஓட முடியவில்லை. அப்போதுதான் தன் கரங்களை கவனித்தார். அவரின் மணிக்கட்டுக்குக் கீழே இரு கைப் பகுதிகளும் வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தன. மயக்கம் வருவதுபோல் இருந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு `நான் உயிர் பிழைச்சிடுவேன்’ என்கிற நம்பிக்கையோடு விடாமல் ஓடினார்.

வீட்டை நெருங்கியதும் ``அம்மா... அம்மா...’’ என்று கதறியபடி ஓடி வந்த மகளை, வீட்டுக்குள்ளிருந்து அவரின் அம்மா வந்து தாவி அணைத்துக்கொண்டார். அவர் நிலைமையைப் பார்த்து வீறிட்டார்... கதறினார். வீட்டுக்குள்ளிருந்து ஒரு போர்வையை எடுத்துவந்து, மகளின் உடலைச் சுற்றிப் போர்த்தினார். மார்செல்லை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினார். அதிலும் ஒரு பிரச்னையிருந்தது. அவர்களின் வீட்டிலிருந்து நெடுஞ்சாலைக்குப் போக 12 கிலோமீட்டர் நடக்க வேண்டும். அதற்கே நான்கு மணி நேரம் ஆகிவிடும். ``கண்ணு... உனக்கு ஒண்ணும் இல்லைப்பா... பிழைச்சுக்குவே’’ என்றார் மாரிசெல்லின் தாய்.

``ஆமாம்மா... பிழைச்சுக்குவேன்... எனக்குத் தெரியும்’’ நம்பிக்கையோடு அரை மயக்கத்தில் சொன்னார் மாரிசெல்.

சிலரின் உதவியுடன் அவர்கள் எப்படியோ மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். மணிக்கட்டுக்குக் கீழே வெட்டுப்பட்டுத் தொங்கும் இரு கைகள், கழுத்தில் காயம். மாரிசெல் பிழைப்பார் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கே இல்லை. ஆனாலும், ஆபரேஷன் நடந்தது. ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாரிசெல் காப்பாற்றப்பட்டார். கழுத்தைச் சுற்றி மட்டும் அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டன. கஷ்டப்பட்டு மாரிசெல்லைக் காப்பாற்றிவிட்டாலும், அவரின் கைகளைக் காப்பாற்ற முடியவில்லை. மணிக்கட்டுக்குக் கீழே மொன்னைப் பகுதிகளாக அவை மாறியிருந்தன.

மாரிசெல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நாளுக்கு அடுத்த நாள் அவருக்குப் பிறந்தநாள். 12-வது வயது நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், அவர்களின் சோகம் விடாமல் துரத்தியது. அம்மாவும் அவரும் திரும்பியபோது, வீடு முழுவதுமாக ரௌடிகளால் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தது. அம்மா கலங்கிப்போனார். மருத்துவமனை பில்லைக் கட்டக்கூட கையில் பணமில்லை. பெரும் தொகை தேவைப்பட்டது. ஆனாலும் மாரிசெல் `இந்த நிலையும் மாறும்’ என நம்பினார். அந்த நம்பிக்கை, கடவுளுக்குக் கேட்டது. கடவுள் சில தேவதைகளை அனுப்பிவைத்தார்.

மாரிசெல்லின் தூரத்து உறவினர் ஒருவர் ஆர்ச் பிஷப்பாக இருந்தார். அவர், மருத்துவமனைச் செலவுகளை ஏற்றுக்கொண்டார். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தவும் உதவினார். அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

அதிசயம் என்னவென்றால், அந்தச் சம்பவத்தின்போது கீழே விழுந்துவிடாமல் மாரிசெல் ஓடிக்கொண்டே இருந்ததுதான் அவரைக் காப்பாற்றியது. விரல்களில்லாத தன் மணிக்கட்டைப் பயன்படுத்தியே தன் வேலைகள் எல்லாவற்றையும் செய்யப் பழகிக்கொண்டார். எழுதக் கற்றுக்கொண்டார், கம்ப்யூட்டர் பழகினார், ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் ஒரு பட்டம்கூட வாங்கிவிட்டார். ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் படிப்பில் அவர் பெற்றது தங்க மெடல்!

இன்றைக்கு மாரிசெல் ஒரு சமையற்கலை நிபுணர் (Chef). உலகிலேயே கைகள் இல்லாத சமையல் கலைஞர் இவராகத்தான் இருக்கும். தன் மணிக்கட்டுகளையும் பிற உடல் பகுதிகளையும் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு வெட்டுகிறார், வெள்ளரிக்காய் நறுக்கிறார். கேக்கை டெகரேட் செய்கிறார். அவர் பணிபுரியும் ஹோட்டலுக்கு வருபவர்களுக்கு விதவிதமாகச் சமைத்துப் போடுகிறார்.