Published:Updated:

"ஹார்வியால் பேச முடியாது.. ட்ரம்ப் எரிச்சலாவார்..!" கோல்டன் க்ளோப்பில் செத் மேயரின் மரண கலாய்

"ஹார்வியால் பேச முடியாது.. ட்ரம்ப் எரிச்சலாவார்..!" கோல்டன் க்ளோப்பில் செத் மேயரின் மரண கலாய்
"ஹார்வியால் பேச முடியாது.. ட்ரம்ப் எரிச்சலாவார்..!" கோல்டன் க்ளோப்பில் செத் மேயரின் மரண கலாய்

நம்ம ஊர் விருது வழங்கும் விழாவிலேயே இப்போதெல்லாம் அரசியல் பேச்சுகள் தலைகாட்ட தொடங்கிவிட்டன. எப்போதும் விருது வழங்கும் விழா மேடைகளில் அரசியல் பேசும் ஹாலிவுட் இந்த முறை கோல்டன் க்ளோப் விருது விழாவில் உச்சம் தொட்டுள்ளது. சென்ற முறை இதே விழாவில் மெரில் ஸ்ட்ரீப்ன் உரை ட்ரம்பை உறைய வைத்தது. இந்த முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் செத் மேயரின் உரையில் ஒட்டுமொத்த ஹாலிவுட்டும், அமெரிக்க பிரச்னைகளும் பகடிக்கு உள்ளாயின. 

பிக் பாஸ் மேடையில் கமல் பேசிய அரசியல் உள்ளூர் நிலைமையைச் சொல்லியது என்றால் கோல்டன் க்ளோம் தொகுப்பாளர் செத் மேயரின் நிகழ்ச்சித் தொகுப்பு சர்வதேச அரசியலை தெறிக்கவிட்டது. கோல்டன் க்ளோப் பேச்சை ''லேடிஸ் அண்ட் ரிமைனிங் ஜென்டில்மேன்'' என சர்காஸமாக ஆரம்பித்தார். முதலில் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பேச இடமில்லை. ஆனால் மெரிஜுனா கஞ்சா வுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என முதல் வரியிலேயே அமெரிக்காவின் அரசியலுக்கு செக் வைத்தார்.

இங்கு நிறைய ஆண்கள் இருக்கிறீர்கள். கடந்த மூன்று மாதத்தில் எங்காவது உங்கள் பெயர் சத்தமாக ஒலித்துவிடக் கூடாது என நினைத்திருப்பீர்கள். அந்த அளவுக்கு மீ டூ பிரசாரம் வலுத்திருந்தது. இன்று உங்கள் பெயரை பயப்படாமல் சத்தமாகக் கேட்கலாம் என்றார். ஹாலிவுட் ஃபாரின் ப்ரஸ் என்ற வார்த்தைதான் நமது அதிபருக்குப் பிடிக்காத வார்த்தையாக இருக்கலாம். மூன்று வார்த்தைகள் ட்ரம்புக்கு எரிச்சலை தரும் அவை ஹிலரி மெக்ஸிகோ சாலட் அசோஷியேஷனாக இருக்கும்.

இந்த விழாமேடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என நேரடியாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட ஹார்வி வெய்ன்ஸ்டன் இல்லை. வருத்தப்பட வேண்டாம். 20 வருடங்கள் கழித்து இங்கு அவர் வந்தால் கூட அவரை பேசவிடாமல் தடுக்க இந்த மேடை தயாராக இருக்கும் என்று சொல்ல அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. 

செத் மேயர் ஓப்ரா வின்ஃப்ரேவை பார்த்து ''2011ம் ஆண்டு நான் இப்போது உள்ள அதிபர் தகுதியற்றவர் என விமர்சித்தேன். ஆனால் அவர் அதிபராகிவிட்டார். அது உண்மையென்றால் உங்களையும் இப்போது அதிபராக முடியாது என விமர்சிக்கிறேன். நீங்கள் அதிபராகிவிடுங்கள். அதேபோல் ஹென்க்ஸ் நீங்கள் துணை அதிபராக முடியாது என்று கூறுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் அதிபராகிவிடுவார்கள் என்று ட்ரம்பை கலாய்த்தார். 

அதன்பின் தனது வழக்கமான பன்ச் லைன் ஜோக்ஸ்களை ஆரம்பிக்க முதல்வரியை செத் மேயர்ஸ் கூற அடுத்த வரியை பிரபலங்கள் முடித்துவைத்தனர்.

கோல்டன் க்ளோபுக்கு 75 வயதாகிவிட்டது. ஆனால் இன்னமும் நடிகைகள் 32 வயது மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிய நடிகர்கள் வெறும் 5 சதவிகிதம் பேர்தான் ஹாலிவுட்டில் நடிக்கிறார்கள் என்பது செய்தி. ஆனால் வெள்ளைக்காரர்களுக்குக் கணக்குத் தெரிந்த நாளிலிருந்து இந்த எண்ணிக்கை இப்படியேதான் இருக்கிறதோ...

ஏமி ஒரு பன்ச் லைன் என ஆரம்பித்தவுடன் ஏமி போலர் தடுத்து ''பன்ச் லைன் சொல்வது என் வேலையல்ல '' எனக் கூற செத் மேயர்ஸ் மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார். அடுத்த நொடியே ஓ... இன்னோருவர் மன்னிப்பு கேட்கிறார் என்று ஏமி கூறியது மொத்த அரங்கமும் கைதட்டல்களால் நிறைந்தது. பின் சாரு ஜெயராமனின் டைம்ஸ் அப் வேலைகளைப் பாராட்டி தனது உரையை முடித்தார்.

சொல்லி வைத்து அனைவரும் கறுப்பு உடை அணிந்து வந்தது.. விழா மேடையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த பேச்சுகள்.. கிடைத்த வாய்ப்பில் எல்லாம் ட்ரம்ப்பை சாடுவது என கலை அரசியல் அதிர்வலைகளால் நிறைந்து காணப்பட்டது கோல்டன் க்ளோப் மேடை..