Published:Updated:

பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி... சாத்தியமாக்குமா மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி முடிவுகள்?

பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி... சாத்தியமாக்குமா மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி முடிவுகள்?
பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி... சாத்தியமாக்குமா மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி முடிவுகள்?

பார்க்க, பார்க்க சலிக்காத இயற்கைக் காட்சிகள், பிரமிக்க வைக்கும் பேரழகு, குளு, குளு கிளைமேட் என்று நமது உள்ளத்துக்கும், உடலுக்கும் மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்து பழக்கப்பட்ட தமிழகத்தின் சொர்க்கபுரிதான் நீலகிரி மாவட்டம். ஆனால், மலைகள், வனவிலங்குகள் என அனைத்து விதத்திலும் அதற்கு கஷ்டத்தை மட்டுமே கொடுத்து வருகிறோம்.

இவற்றில் பெரும் பாதிப்பு பிளாஸ்டிக் பொருள்களால்தாம். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாத மாவட்டமாக ஆக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது. கேரி பேக்குகள், பேப்பர் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவைக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலா தலங்கள், திருமண மண்டபங்கள் போன்ற பகுதிகளில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளனவா? என்பது குறித்து ரெய்டு நடத்துவது, ஒவ்வொரு பகுதியிலும் டீம் அமைத்து கண்காணிப்பது, அபராதம்  விதிப்பது என்று அதிரடி காட்டி வருகிறது நீலகிரி மாவட்ட நிர்வாகம்.

இந்நிலையில், வருகின்ற 15-ம் தேதி மற்றொரு முக்கியத்துவமான ஓர் அறிவிப்பை வெளியிடும் முயற்சியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் தட்டுகள், தெர்மாகோல், பிளாஸ்டிக் தொப்பிகள், க்ளவ்ஸ்கள், சில்வர் கவர்கள், பெட்ஷீட்கள், வாட்டர் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் (1 லிட்டருக்குக் குறைவான) உள்ளிட்டவைக்கு மாவட்டம் முழுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா, "நம் நாட்டில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட, யுனெஸ்கோவின் உயிர்கோளக் காப்பகம் (BioSphere Reserve) நீலகிரிதான். இந்த இடத்துக்கு என்று ஒரு புனிதத் தன்மை உள்ளது. இங்குள்ள மக்களுக்கு அதன் அருமை தெரியும். அதனால்தான் இங்குள்ள மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளும் அந்தப் புனிதத் தன்மையை மதிக்க வேண்டும்.

ஒரு வீக் எண்ட் முடிந்து, திங்கள்கிழமை தினத்தில், வனப்பகுதிக்குள் சென்று பார்த்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகளவு காணலாம். சுற்றுலாப் பயணிகள் நம் விருந்தினர்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களை நாம் தொல்லை செய்ய முடியாது. அதேபோல, வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது.

அதனால், முதல்கட்டமாக வியாபாரிகளுக்கு உடனடியாக எது சாத்தியமோ, எவற்றுக்கெல்லாம் மாற்று இருக்கிறதோ அவற்றுக்கு மட்டும் தடை விதிக்க உள்ளோம். வியாபாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பொது மக்களிடமும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம். படிப்படியாக பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்க முயற்சிகளை எடுப்போம்" என்றார்.

இதுகுறித்து நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தின் இந்த முடிவு நிச்சயம் வரவேற்கத்தக்கது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்பு உணர்வு மேற்கொள்ளப்பட்டன. நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து கூட இங்கு வந்து விழிப்பு உணர்வு முறைகளைப் பார்த்துச் சென்றனர். அப்படிப்பட்ட நாடுகளில் எல்லாம் தற்போது பிளாஸ்டிக்கை தடை செய்யும்போது, நம்மால் ஏன் முடியாது.

ஆனால், பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வது என்பது மிகவும் கடிமான ஒன்று. மருத்துவத்துறையில் அது மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தண்ணீர் பாட்டில்கள் அவசியம். எனவே, இந்த முடிவு மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும். நொறுக்குத்தீனிகள், தண்ணீர் பாட்டில்கள், நாற்காலிகள் போன்றவற்றுக்கு மாற்று ஏற்பாடுகளை பெரு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் முடிவுகளுக்குச் சுற்றுலாப் பயணிகளும் ஒத்துழைக்க வேண்டும். பிளாஸ்டிக்கு முழுமையான மாற்று கிடைக்கும்வரை, அவற்றை எரிக்காமல் மறுசுழற்றிக்கு விடவேண்டும். பிளாஸ்டிக்கை எரிப்பதால் பாதிப்புகள்தான் அதிகம். அதற்கு பதிலாக பிளாஸ்டிக் சாலைகள்கூட போடலாம். மக்களிடையே, எந்த உத்தரவையும் திணிக்காமல், விழிப்பு உணர்வு மூலம் புரியவைத்தால், பிளாஸ்டிக் தடையை எளிமையாகச் செயல்படுத்தலாம்" என்றார்.

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் செயலாளர், ஜெயச்சந்திரன், "தென்னிந்திய தீபகற்பத்துக்கே தண்ணீர் கொடுப்பது நீலகிரிதான். மாயாறு, பவானி, கபினி உள்ளிட்டவை இங்கிருந்துதான் உருவாகின்றன. அதனால், இதன் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமானது. ஆனால், இதை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடாமல், சுற்றுலாத்துறையில் கவனம் செலுத்தியதால், இங்கு பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்த பிளாஸ்டிக் பொருள்கள் எல்லாம், நீராதாரத்தையே அழித்து வருகின்றன.

அவற்றை தடை செய்யும் முடிவு வரவேற்கத்தக்கதுதான். இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும், அதை கடைபிடித்தால் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கலாம். அதேபோல, சுற்றுலாப் பயணிகளுக்கும், இதன் வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முடிவால் ஏற்கெனவே, பிளாஸ்டிக்கின் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால், அவற்றுக்கான மாற்று என்பது, எளிதில் மக்கக் கூடியதாக இருக்க வேண்டும். யூஸ் அண்ட் த்ரோ டம்ளர்களுக்கு பதிலாக, 10 ரூபாய்க்கு பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, அவற்றுக்கான மாற்று என்பது இயற்கையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  அதேநேரத்தில், மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவு என்பது மண் வளம் மற்றும் வன உயிரினங்களுக்கு நன்மை விளைவிக்கும்" என்றார்

அரசு, பெரு நிறுவனங்கள், மக்கள் என அனைவக்குமே பிளாஸ்டிக் பயன்பாட்டில் பங்கு உள்ளது. அதனால், நீலகிரியைப் பாதுகாக்க எடுக்கும் அனைத்து முடிவுகளையும், வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே, அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி மலைகளின் அரசியைக் கொண்டாடுவோம்.