Published:Updated:

எம்.ஜி.ஆரின் புதுக்கட்சியும்... லதா அளித்த பயிற்சியும்! - லக லக லக லக... லதா! பகுதி-1

எம்.ஜி.ஆரின் புதுக்கட்சியும்... லதா அளித்த பயிற்சியும்! - லக லக லக லக... லதா! பகுதி-1
எம்.ஜி.ஆரின் புதுக்கட்சியும்... லதா அளித்த பயிற்சியும்! - லக லக லக லக... லதா! பகுதி-1

எம்.ஜி.ஆரின் புதுக்கட்சியும்... லதா அளித்த பயிற்சியும்! - லக லக லக லக... லதா! பகுதி-1

ரசியல் பரமபதத்தில் எந்த தாயம் போட்டால் ஏணி வரும் என்ன விழுந்தால் பாம்பு வரும் என யாராலும் சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கியதும் பெண்கள் மத்தியில் கட்சியைக் கொண்டு செல்ல நினைத்தார். அப்போது அவர் மனத்தில் இருந்தவர் அப்போது அவருடன் பல படங்களில் நடித்துவந்த லதா. ஆனால் தாயக் கட்டைகளின் உருட்டலில் லதாவுக்கான இடம் அரசியலில் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது இளைஞர்களின் அமோக ஆதரவு அவருக்கு இருந்தது. ஆனால், பெண்கள் தம் ஆதரவை எம்.ஜி.ஆருக்கு வெளிப்படையாகக் காட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தனர். வீட்டில் ஆண்களுக்கு கட்டுப்பட்டிருந்த பெண்களின் ஆதரவு தனக்கு ஓட்டுகளாக மாறி ஓட்டுப்பெட்டியில் விழுந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும் என்பதை நன்கு உணர்ந்த எம்,ஜி.ஆர் பெண்களிடம் தனக்கிருந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற அவர்களை துணிச்சல் உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். அ.தி.மு.க-வுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று பெண்கள் துணிந்து சொல்லும்வகையில் எம்.ஜி.ஆர் லதாவின் கதாபாத்திரத்தை முன்மாதிரி கதாபாத்திரமாக்கி அதன் மூலமாக பெண்களுக்குத் துணிச்சலை ஊட்டினார். படங்களில் லதாவின் கேரக்டர்கள் தம் மனதில் பட்டதை வெடுக்கென பேசும்படி அமைக்கப்பட்டன. அது எம்.ஜி.ஆரின் ரசிகைகளுக்குப் பிடித்திருந்தது.

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் பெண்களுக்கு இருந்த உறுதியை வீட்டில் உள்ள மாற்றுக்கருத்துடைய ஆண்களால் சிதைக்க முடியவில்லை. இதனால் கிராமங்களில் பஞ்சாயத்துகள் நடந்தன.. ஊர்மக்கள் தம்பதிகளின் பிணக்குகளைத் தீர்த்து வைத்தன. கணவனுக்குப் பிடித்த நடிகரே தனக்கும் பிடிக்க வேண்டும் என்பதே அன்றைய பல குடும்ப கோர்ட் பிரச்னையாக இருந்தது. தங்களின் விருப்பு வெறுப்புகளை எம்.ஜி.ஆர் ரசிகைகள் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை. சிலர் குடும்பச் சூழ்நிலை கருதி வெளிப்படுத்தாமல் இருந்தார்களே தவிர மாற்றிக்கொள்ளவில்லை. அதே சமயம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தாங்கள் திருமணம் செய்துவந்த பெண்களை எம்.ஜி.ஆர் ரசிகைகளாக மாற்ற முயன்றனர். இதுவும் நடந்தது. தான் ரசிக்காத ஒரு ஆணை எப்படி தன் மனைவி ரசிக்கலாம் என்ற ஆணாதிக்க உணர்வே இதற்கு அடிப்படை காரணம் ஆகும்.

எம்.ஜி.ஆரைப் பிடிக்காத ரசிகன் வேறு மாதிரி பேசினான். ஜெயகாந்தன் எழுதிய ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ கதையில் வரும் கணவன் தன் மனைவியின் எம்.ஜி.ஆர் ரசனையைப் பார்த்து ‘‘அவன் பொட்டம்மே... நான் சீமான் மே’’ என்று ஒப்பிட்டுப் பேசி அவளைக் கண்டிப்பான். ஆனாலும் எம்.ஜி.ஆர் பெண்கள் மத்தியில் மாபெரும் ஓட்டு வங்கியாக மாறினார் என்பதே உண்மை.

அண்ணா தி.மு.க ஆரம்பித்தபின் அவர் நடித்த படங்களில் பெரும்பான்மையானவற்றில் அவர் லதாவையே கதாநாயகி ஆக்கினார். தன் படத்தைப் பார்க்கும் தன் ரசிகைகள் துணிந்து தன் கட்சியின் கொள்கை, தி.மு.க-வின் ஆட்சியில் பரவியிருந்த ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஆகியவற்றைப் பற்றி பிறரிடம் துணிந்து விவாதிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்க லதாவின் கதாபாத்திரத்தை எம்.ஜி.ஆர் திறமையாகப் பயன்படுத்தினார். அதை ஓர் உளவியல்ரீதியான பயிற்சி என்றுதான் சொல்ல வேண்டும். திரும்பத் திரும்ப அவர் பெண்கள் கதாபாத்திரங்களை ஒரே மாதிரிதான் சித்திரித்தார்.

எம்.ஜி.ஆர் மக்கள் புரட்சி மூலமாக ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதாகக் காட்டிய நாடோடி மன்னன், அரச கட்டளை, நம் நாடு ஆகிய படங்களில் பானுமதி, சரோஜாதேவி, ஜெயலலிதா போன்ற கதாநாயகிகளை துணிச்சல் மிக்க  பெண்களாகவே படைத்தார். அவர்கள் அநியாயம் செய்யும் ஆண்களைத் தட்டிக் கேட்டனர். திரையில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அறப்போருக்கு உறுதுணையாய் இருந்தனர். தனிக் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், தன் படங்களில் லதாவை பிரசார நோக்கில் பயன்படுத்தினார். முந்தைய படங்களைவிட இந்த உளவியல் முயற்சி அதிகமாகவே இருந்தது. தி.மு.க-வினரை சாமான்யப் பெண்கள் எதிர்த்துப் பேசவும் தேர்தலில் அவர்களுக்கு எதிர்த்து வாக்களிக்கவும் எம்.ஜி.ஆரை நேரடியாக ஆதரிக்கவும் லதாவைக் காட்டி அவர்களைப் பழக்கினார் என்றே சொல்லலாம். திரைப்படங்களில் லதா தி.மு.க எதிர்ப்பு அல்லது வில்லனை எதிர்த்து எம்.ஜி.ஆரை ஆதரித்துப் பேசும்போது பெண்களும் அதை அமோதித்துக் கூடவே பேசினர்.

படங்களில் லதாவின் நேரடி பங்களிப்பு 

லதாவை எம்.ஜி.ஆர் தன் ரசிகைகளுக்கு கட்சி பற்றி பேசவும் விவாதிக்கவும் பயிற்சியளிக்கும் நோக்கில் நடனம் வசனம் போன்றவற்றை சிறப்பாக அமைத்தார். அவற்றின் செயல்பாட்டு வீச்சுக்கு ஒரு எடுத்துக்காட்டை காண்போம். 

‘உரிமைக்குரல்’ படத்தில் ‘‘ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா’’  என்ற பாட்டில் ஓடிவந்த படியே வீடு வீடாகச் சென்று ஆண்களைக் கேலி செய்து ஆடிப்பாடுவார். அவரது ஒவ்வொரு அசைவும் ஒரு நடன ஸ்டெப்பாக இருக்கும். 

அந்தக்கால ஆம்பளங்க போர் புரிவாங்க 

இளிச்சவாயன் பட்டம் வேறு வாங்கிவிட்டீங்க   

என்று பாடி முன்பிருந்த ஆண்கள் வீரர்கள்; இப்போது இருப்பவர்கள் கோழைகள்; அதனால் பெண்களாகிய நாங்கள் கெட்டவை அழிக்க நல்லவனை ஆதரித்து இணைந்து போராடுகிறோம் என்று பாட்டு மூலமாகத்  தெரிவிப்பார். ஆண்களே வில்லனை கெட்டவனை எதிர்க்கும் செயல்பாட்டில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறீர்களே இது நியாயமா அறப்போர் நடத்தும் எம்.ஜி.ஆருடன் நீங்கள் இணைந்து நின்று அவருக்குத் தோள் கொடுக்க வேண்டாமா என்று கேட்பதாக இப்பாட்டும் டான்சும் அமைந்திருக்கும். எம்.ஜி.ஆர் பின்னால் நாம் அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை லதா இந்த பாட்டு மூலமாக நேரடியாகச் சொல்லிவிடுவார்.

அண்ணா தி.மு.க ஆரம்பித்த பிறகு எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக வரும் நம்பியார் நிஜத்தில் தி.மு.கவைச் சேர்ந்த ஒருவரையோ அல்லது தி.மு.க கட்சியையோ பிரதிபலித்தார். அவர் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு மக்கள் கொதித்துப் போய் அவரைத் தண்டிக்க வேண்டும்; அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருத்தை மக்கள் மனதில் விதைக்க வேன்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார்.

‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் லதாவின் அரசியல் ஊக்கமளிப்பு பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அவர் தமிழ்நாட்டு பெண்குலத்தைப் பிரதிபிம்பமாக வந்தார். இப்படத்தில் தஞ்சையைச் சேர்ந்த சோழ மன்னனிடம் இருந்து பாண்டியநாட்டை மீட்கும் விடுதலைப் போரில் பாண்டிய இளவரசனான எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக நிற்கும் கதாபாத்திரத்தில் லதா நடித்தார். சோழ நாட்டு இளவரசன் நம்பியார் என்பது கலைஞர் கருணாநிதியையும் மதுரை என்பது தமிழ்நாட்டு மக்களையும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் [எம்.ஜி.ஆர்] என்பது அ.தி.மு.க-வையும் குறித்தது. 

லதா தன்னை பலவந்தப்படுத்தும் நம்பியாரிடம் ‘‘கொஞ்சம் பொறுத்திரு; இன்னும் கொஞ்ச நாளில் உன் அதிகாரம் பஞ்சாய்ப் பறக்கும், நீ ஒரு கொள்ளைக்காரன்’’ என்று வீர வசனம் பேசுவது விரைவில் ‘‘தேர்தல் வரும். அப்போது தி.மு.க தோற்றுப் போகும்; தி.மு.க ஒரு ஊழல் அரசு’’ என்று சொல்லும்வகையில் அமைந்தது.

அவர் ஆட்சிக்கு வந்ததும் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்ததும் அரசு அலுவலகம் அரசு பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்களைத் தாய்க்குலம் என்றே  ஆண்கள் குறிப்பிடும்படியான காலகட்டமும் வந்தது. 

அவர் பெண்கள்மீது காட்டிய அக்கறை அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஒரு பொதுக்கூட்டத்தில் ‘‘கணவர் சொன்னால்கூட கேட்க மாட்டார்கள்; நான் சொன்னால் பெண்கள் கேட்பார்கள்’’ என்று அவர் தமிழ்நாட்டுப் பெண்களைப் பற்றி பகிரங்கமாகக் கூறும் அளவுக்குப் போனது. அன்றைய பெண்கள் அந்த வாக்குமூலத்துக்குக் கொதித்தெழவில்லை. மாறாக லதாவாக இருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

(தொடரும்)

அடுத்த கட்டுரைக்கு